Read in : English
நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று என்றவுடன் முதலில் பதறியவர்கள் பிக் பாஸ் பார்வையாளர்களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில், பிக் பாஸ் சீசன்-5 நடுவழியில் என்னவாகுமோ என்றே அவர்கள் பதைபதைத்துப் போனார்கள்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு அறிவார்த்த முகத்தை கமல் ஹாசன் வழங்கியிருந்தார் என்பதால் அவர் இல்லாமல் பிக் பாஸை நினைத்துப் பார்க்க முடியாது என்பதே பார்வையாளர்களின் எண்ணம்.
என்னதான் அநியாய லூட்டியடித்தாலும், தனி நபர் அந்தரங்க விஷயங்கள் கடைவிரிக்கப்பட்டாலும் அதற்கு ஈடுசெய்வதுபோல் புத்தகப் பரிந்துரை போன்ற ஒன்றைச் செய்து அறிவுக்கும் வேலை கொடுக்கும் வகையில் பிக் பாஸை நடத்திச் சென்றார் உலக நாயகன். இதுவிஷயத்தில் இயல்பாகவே, கமல் ஹாசனிடம் குடிகொண்டிருக்கும் அறிவுத் தேடல் அவருக்குக் கைகொடுக்கிறது.
ஆகவே, பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் வெறும் பொழுதுபோக்கு, அரட்டை என்பதைத் தாண்டி, ஓரளவுக்குச் சமூக பிரக்ஞையுடன் நடத்துகிறார் என்றே பல பார்வையாளர்கள் நம்புகிறார்கள்
அப்படித்தான் கமல், பிக் பாஸின் நான்கு சீசன்களை வெற்றிகரமாக நடத்திவிட்டு அதே உற்சாகத்துடன் பிக் பாஸின் ஐந்தாம் சீசனில் அடியெடுத்து வைத்தார்.
வழக்கம் போன்ற அதே உற்சாகத்துடன் சீசன் ஐந்தையும் ஐம்பது நாள்களைக் கடந்து கொண்டு சென்ற கமலுக்கு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்காலிகமாக நேரடியாகப் பங்கேற்க முடியாமல் செய்துவிட்டது.
கமல் ஹாசன் குணமாகி வரும் வரை பிக் பாஸை நடத்தப்போவது யார் என்னும் ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் பெருகின. கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சிம்பு, அர்ஜுன், விஜய் சேதுபதி என்று பல பெயர்கள் அடிபட்டன. ஆனால், இவர்களில் எவருமே கமலின் இடத்துக்கு வராத நிலையில் யாருமே எதிர்பாராமல் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குகிறார் என்பதால் விஜய் டிவியை நன்கு புரிந்து வைத்திருந்தவர்களுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருக்க இல்லை.
ஆனால், ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளர் என்பதறிந்த பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம்தான். ரம்யாவேகூட நான் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கல என்று கூறித்தான் நிகழ்ச்சிக்குள் வந்தார். தோழி என்று கமல் அறிமுகப்படுத்தியபோதும், ரம்யா தன்னை ஒரு சீடராகக் கருதுவதாகவும் கமலை, குரு என்றும் கூறினார். ஏனெனில், ரம்யாவுக்கும் கமல் ஷோவை நடத்திய விதம் தெரியும். தன்னால் அந்த அளவுக்கு நடத்த முடியுமா என்ற எண்ணம் ரம்யாவுக்கு எழாமல் இருந்திருக்காது. அதேவிதமான எண்ணம் பார்வையாளர்களுக்கும் இருந்திருக்கும்.
ரம்யா கிருஷ்ணன் சிறந்த நடிகை. ரஜினியின் படையப்பாவில் நீலாம்பரியாக வந்து தமிழர்களின் நெஞ்சில் அட்டணக்கால் போட்டு அமர்ந்துகொண்டவர். பாகுபலியில் ராஜ மாதாவாக ரசிகர்களைத் திக்குமுக்காடவைத்தவர். சன் தொலைக்காட்சியில் தங்க வேட்டை ரியாலிட்டி ஷோ நடத்திய அனுபவம் உள்ளவர்.
தெலுங்கு பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நாகார்ஜுனா வெளிநாடு சென்றிருந்தபோது, வார இறுதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் அவருக்கு ஏற்கெனவே உள்ளது. எனவே, கமலுக்கு மாற்றாக இடைக்கால ஏற்பாடாக ரம்யா கிருஷ்ணனை பிக் பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கலாம்.
பிக் பாஸைப் பொறுத்தவரை ரம்யாவின் ஒவ்வொரு செயலும் கமலோடு ஒப்பிடப்படுகிறது. அதனாலேயே அவர் கமல் அளவுக்கு இல்லை என்ற பேச்சு எளிதாக வந்துவிடுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வேறு யாரைப் போட்டிருந்தாலும் இதுபோன்ற ஒப்பீடு இருந்து கொண்டே இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது.
பிக் பாஸைப் பொறுத்தவரை ரம்யாவின் ஒவ்வொரு செயலும் கமலோடு ஒப்பிடப்படுகிறது. அதனாலேயே அவர் கமல் அளவுக்கு இல்லை என்ற பேச்சு எளிதாக வந்துவிடுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வேறு யாரைப் போட்டிருந்தாலும் இதுபோன்ற ஒப்பீடு இருந்து கொண்டே இருக்கும்
தமிழில் கமல் அளவுக்கு பிக் பாஸை நடத்தும் திறமைசாலிப் பெண்கள் இல்லையா? ஒரு பெண்ணை பிக் பாஸாக ஏற்றுக்கொள்ள பார்வையாளர்கள் தயாராகவில்லையா? ஏன் பிக் பாஸாக ஒரு பெண் இருக்கக் கூடாது? சரி, ஒரு பெண் பிக் பாஸாக இருக்க வேண்டுமென்றால் அவர் யாராக இருக்கலாம்? இப்படியான கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.
ஒரு பிக் பாஸ் எப்படி இருக்க வேண்டும்?
அவர் எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் எதையும் சமாளிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். பல் துறை வித்தகராக இருப்பவரே பிக் பாஸாக இருக்க இயலும். சமூகம், அரசியல், பண்பாடு ஆகியவை குறித்த பார்வை கொண்டவராக அவர் இருக்க வேண்டும். அதே வேளையில், மக்கள் அபிமானம் பெற்றவராகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் பிரபலமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
மக்கள் அபிமானம் பெற்றவராகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் பிரபலமாகவும் இருக்க வேண்டும். அத்துடன் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும்
தமிழில் தொகுப்புப் பணியில் ஈடுபடும் ஒருவர்கூட பிக் பாஸாக இருக்க இயலாதா? கமல் பிக் பாஸாக நான்கு சீசன்களைக் கடந்து ஐந்தாவது சீசன் வரை வந்து விட்டார். அவரது இடத்தில், அவருக்கு இணையான பெண் என யாரைச் சுட்டிக்காட்ட முடியும்? கமலுடைய தோழிகள் யாரும் பிக் பாஸாக இருக்க முடியுமா என்று பார்க்கலாம்.
கமல் பிக் பாஸாக நான்கு சீசன்களைக் கடந்து ஐந்தாவது சீசன் வரை வந்து விட்டார். அவரது இடத்தில், அவருக்கு இணையான பெண் என யாரைச் சுட்டிக்காட்ட முடியும்?
அரசியல் களத்தில் கமலுடன் பயணிக்கும் ஸ்ரீபிரியா பிக் பாஸாக இருக்கத் தகுதியானவர்தானா? ஸ்ரீபிரியாவுக்கும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ தொடர்பான மோதல் எழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அப்படிக் கேள்வி எழுப்பிய ஸ்ரீபிரியா தானே ஒரு பாஸாக எப்படி நடந்துகொள்ள இயலும்? ஆகவே, அவர் பிக் பாஸாக இருக்க இயலாது.
கமலுடன் ஜோடி சேர்ந்து ஆடிப்பாடிய குஷ்பூவை பிக் பாஸாக நினைத்துப் பார்க்க முடியுமா? அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி பெண்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனாலும் அவரை பிக் பாஸாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. சுஹாசினி பிக் பாஸாக இருந்தால் எப்படி இருக்கும்? அவரது அறிவார்த்த அலட்டல் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்குமா?.
சின்னத் திரையில் பல்லாண்டுகளாகப் பவனிவரும் ராதிகாவை பிக் பாஸாகக் கருத இயலுமா? தொலைக்காட்சித் தொடரில் அவரை ரசிக்க முடிந்த பார்வையாளர்களால் நிச்சயமாக அவரை பிக் பாஸாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இப்படி பலர் குறித்து பல கேள்விகள் எழும்.
அப்படியென்றால் பெண் ஒருவர் பிக் பாஸாக இருக்க வேண்டுமென்றால் அவர் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பங்குபெறாத புதுமுகமாக இருக்க வேண்டும். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முதலில் தொகுப்புப் பணியில் ஈடுபடுபவராக இருந்தால் அவர் பற்றிய முன் முடிவுக்கு வராமல் அவரை எடைபோட முடியும். கலை, இலக்கியம், சினிமா ஆகியவற்றில் அப்படி ஒரு பெண் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவேயில்லையா? அப்படிச் சொல்லிவிட முடியாது.
திறமைசாலிப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் எல்லாத் தரப்பினராலும் விரும்பப்படும், பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய வகையில் நிகழ்ச்சியை சுவாரசியமாகக் கொண்டு செல்லக்கூடிய பாப்புலாரான பெண் தான் வேண்டும்.
ஆண் ஆதிக்க சமூகத்தில், தலைமைப் பொறுப்பையும் செல்வாக்கையும் ஆண்கள் செலுத்திய அரசியலில், ஜெயலலிதா என்கிற ஆளுமை உருவாகியதும் கட்சித் தலைமையையும் ஆட்சித் தலைமையையும் ஏற்று அசைக்க முடியாத தலைவியாக இருந்ததும் வரலாறு. இதுபோல எதிர்காலத்தில் பெண் பிக் பாஸ் வரலாம்.
பாப்புலாரிட்டியை வைத்துதான் பிக் பாஸ் நிகழ்ச்சியே நடக்கிறது. பல கோடி ரூபாய் வர்த்தகத்தை நம்பி நடக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே கமலை மையமாகக் கொண்டது. கமல் போன்ற பிரமாண்டமான திரைப்பட நடிகரை, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கொண்டு வந்ததே அவரது பாப்புலாரிட்டிதான்.
பெரும்பாலான திரைப்படங்களில் ஆண், பெண் இருபாலாரும் இருந்தாலும்கூட வணிகரீதியான வெற்றியைத் தரக்கூடிய கதாநாயகன்தான் பிரதானம். அதேபோலதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.
வணிகரீதியான வெற்றியைத் தரக் கூடிய பாப்புலரான கமலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றாக யாரும் இடம் பிடித்துவிடுவது என்பது எளிதான காரியம் அல்ல.தற்காலிக பிக் பாஸாக ரம்யா கிருஷ்ணன் வந்திருக்கிறார். இது இடைக்கால ஏற்பாடுதான்.
மீண்டும், அடுத்த சீசனில் கமல் வர முடியாமல் போனால்தான் அடுத்த பிக் பாஸ் யார், அதுவும் ஒரு பெண்ணாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழும். அதுவரை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களின் நான், கமல் ஹாசன் தான்.
Read in : English