Read in : English
மாமல்லபுரம் கோவில் பொதுவிருந்தில் உணவு உண்ண நரிக்குறவர் இனப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்டது. இது, சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அந்த பெண்ணுடன் அமர்ந்து விருந்துண்டார்.
தொடர்ந்து, தீபாவளி அன்று அந்த பெண் வீட்டுக்கு சென்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த பெண் உட்பட, நரிக்கறவர் சமூத்தினர் சிலருக்கு வீட்டுமனை பட்டா உட்பட சில சலுகைகள் வழங்க, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதில் சில நிறைவேற்றப்பட்டன.
இந்த பிரச்னையின் பேசுபொருள் அத்துடன் முடிந்தது. முதல்வர், அமைச்சரின் செயல்கள் மனிதாபிமான அடிப்படையில் அமைந்ததால் பெரும் பாராட்டை பெற்றன. அரசின் நெகிழ்வை அது வெளிப்படுத்தியது.
நாடோடி சமூகமாக வாழும் நரிக்குறவர் மக்களின் பிரச்னை பற்றி பார்ப்போம்.
நரிக்குறவர் என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற பழங்குடியின மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தவராக கருதப்படுகின்றனர். கர்நாடகாவில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பாரம்பரியமாக உண்டிகோலால் பறவைகளை வேட்டையாடுவது, நரி பிடிப்பது, பச்சைக்குத்துவது போன்றவற்றை செய்து வாழ்ந்தனர்.
இப்போது, பாசி மணி தயாரிப்பது மற்றும் விற்பது போன்ற மாற்றுத் தொழில் செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தோ ஆரிய மொழியான வாக்கிரி பூலி மொழி பேசுகின்றனர்.பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி போன்ற சிறு பொருட்களை விற்று பிழைக்கின்றனர். ஹக்கிபிக்கி இனத்தில், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள் உண்டு.
இவர்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்க்க நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சரவை முடிவு செய்தும், அது தெடார்பான மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோதே இந்த பிரச்னை துவங்கியது. ஆனால் முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
நரிக்குறவர் என அழைக்கப்படும் மக்களினத்தின் அசல் இனப் பெயர் வக்ரிவாலா. குருவிக்கரர், நக்கலே மற்றும் அக்கிபிக்கி என்றும் அழைப்பர். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில், நரிக்குறவர் என தவறாகப் பெயரிடப்பட்டது
குறவர் என்போர், பழந்தமிழ் இலக்கியமான சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிஞ்சித் திணையில் அதாவது மலைப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள்.
ஆனால் நரிக்குறவர் சமூகத்தவர் மத்திய மாகாணங்களை பூர்வீகமாக கொண்ட நாடோடிகள். இவர்கள் துப்பாக்கியால் வேட்டையாடுகின்றனர். ஆனால் குறவர்கள் வில் அம்புகளால் வேட்டையாடுவது, தேன் சேகரிப்பது, மூங்கில் கூடை முடைவது போன்ற தொழில்களை செய்து வருகின்றனர்.குறவர்களுக்கும், அக்கிபிக்கிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
நாடோடி கலாசாரத்தால் தமிழ், இந்தி, மராத்தி கலவை மொழியை பேச்சு வழக்காக கொண்டுள்ளனர். கிட்டு சிரோமனி என்பவர், திருக்குறள் வாக்ரி பூலி மொழி மொழியில் முதன்முறையாக, திருக்குறளை உருவாக்கியுள்ளார்.
நரிக்குறவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு பெறாதவர்கள். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர்கள்.
வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒருமுறை பாரம்பரிய மருந்தை தருவர்.
நரிக்குறவர் சமூக பெண்கள், வண்ணமயமான பாவாடை மற்றும் கழுத்து மணிகளை அணிவர். ஆண்கள் நீளமாக முடி வளர்ப்பர். சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கிய வழிபாட்டு முறை எருமைப் பலியிடல் ஆகும்.
பச்சை குத்துவதும் இவர்களின் தொழில்களில் ஒன்றாக இருந்தது.இந்த சமூகத்தில் முதியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். முதியோர் வகுக்கும் கட்டுப்பாட்டை அனைவரும் ஏற்கின்றனர். திருமணத்தில் ஆண்களே, பெண்கள் குடும்பத்திற்கு பரிசப்பணம் தரவேண்டும் என்ற நியதி உள்ளது.
இப்படி எல்லாம் சிறப்புகள் பெற்றிருந்தாலும், இந்த மக்கள் வறுமையின் விளிம்பில் தவிக்கின்றனர். வாழ நிரந்த இடம் கிடையாது. பிழைக்க முறையான தொழில் இல்லை. இதனால், படிப்பறிவு மிகவும் குறைவாக உள்ளது. தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் பழங்குடிகளான இவர்கள், பழங்குடி பட்டியினத்திலும் இல்லை. இவை எல்லாம் இவர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் பழங்குடிகளான இவர்கள், பழங்குடி பட்டியினத்திலும் இல்லை
இந்த ஆரம்ப தடைகள் தகர்ந்தால்தான், இவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தனை தடைகள் இருந்தாலும், இந்த இன மக்களில் ஒருவரை கூட சோர்வுடன் காண முடியாது. பஸ், ரயில் நிலையங்களில், பொது விழாக்களில் இவர்கள் சுறுசுறுப்புடன், சிறிய பொருட்களை வியாபாரம் செய்தபடி இருப்பதை காணலாம்.
தமிழக அரசு இந்த இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் கோரிக்கையை அணுகிய விதம் நெகிழ்வு தந்தது. அதே நேரம், மிகவும் பின்தங்கியுள்ளவர்களின் வாழ்வு மலர, ஆழமான திட்டங்களை வகுக்க வேண்டும்.
Read in : English