Read in : English
கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெகுஜன ஊடகமான செய்தி சேனல்களைவிட யூடியூப் தளத்தையே அதிகம் பேர் பார்ப்பதற்கு விருப்பப்படுவதாகக் கூறுகிறது விளம்பர நிறுவன கூட்டமைப்பு.
கோவிட் பெருந்தொற்று பல பத்திரிக்கையாளர்களின் வேலையிழப்புக்கு காரணமாக அமைந்தது.
தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்கள் தனித்தனியாக யூடியூப் சேனல் துவங்கினார்கள். வேறுசிலர் வெகுஜன ஊடகத்தில் வேலைக்குச் சேரும் முயற்சியை கைவிட்டு அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளைக் கொண்டு யூடியூப்பை கலக்கி வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஏசியாநெட் அன்றைய முதல்வர் கருணாகரன் மற்றும் அச்சுதானந்தன் போன்று உருவ ஓற்றுமையுடைவர்களைக் கண்டுபிடித்து அரசியல் நையாண்டி நிகழ்ச்சியைத் தொடங்கியது. அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கவும் 5 நிமிட நிகழ்ச்சி அரை மணி நேரமாக மாற்றப்பட்டது. இப்போது மலையாள பொழுதுபோக்கு சேனல்களும் நையாண்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன.
தலைவர்களை கிண்டல் செய்வதை கட்சி தொண்டர்களும் ரசிக்க ஆரம்பித்தனர். தமிழ் செய்தி தொலைக்காட்சிகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் இந்த அரசியல் நையாண்டி இடம் பெறுகிறது.
“அரசியல் நையாண்டியை பொறுத்தவரை தற்போதைய யூடியூப் தளத்தில் அதிக காணொளிகள் தமிழில் தான் உள்ளன” என்று கூறுகிறார் ‘தமிழ் நியூஸ் போகஸ்’ யூடியூப் சேனலின் நெறியாளர் சிவகுமார் நடராஜன்.
“கொரனோ பாதிப்புகள் உச்சத்தில் இருந்தபோது தமிழகத்தில் முக்கிய ஊடகங்களில் மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் பணி இழக்க நேரிட்டது. புதிய வாய்ப்புகளும் இன்றி ஊரடங்கு தடையால் முடங்கி இருந்தவர்கள், ஏற்கனவே பணி செய்த குழுவினருடன் யூடியூப் சேனல்களை துவங்க ஆரம்பித்தனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட சேனல்கள் அரசியல் தளத்தை மையமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன. அப்போது துவங்கிய அரசியல் வெப்பம் இன்னும் தணியவில்லை” எனக் களநிலவரம் தருகிறார் சிவக்குமார்.
இதில் 100க்கும் மேற்பட்ட சேனல்கள் அரசியல் தளத்தை மையமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன
2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் கிளம்பிய போது கோவையை சேர்ந்த இளைஞர்கள் ‘நக்கலைட்ஸ்’ என்ற யூடியூப் சேனலில் நடத்திய அரசியல் நையாண்டி நிகழ்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழக கட்சிகளின் தலைவர்களை போன்று புனைவு வேடங்களில் நடித்த ஜாக்சன் திவாகரன் பார்வையாளர்களை கவர்ந்தார். ஜாக்சன் தற்போது ‘மாஞ்சா நோட்டீஸ்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
ஆனால் இப்படிப்பட்ட அரசியல் அல்லது அரசியல் நையாண்டி மையமாக கொண்ட யூடியூப் சேனல்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல உண்டு.
பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேயின் சாணக்யா டிவி முடக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அரசியல் சார்பு யூடியூப் சேனல்கள் நடத்துபவர்கள் மாறிமாறி அளிக்கும் புகார்கள் யூடியூப் சேனல் முடக்கத்தில் சென்று முடிகிறது.
“தற்போது யூடியூப் சேனல்களில் தங்கு தடையன்றி உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுவதும், ஆபாசமான கமெண்டுகளும் அதிகரித்து வருகிறது. இதனால் சார்பு சேனல்களை நடத்துபவர்கள் ஒருவருக்கொருவர் புகார் அளிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் சேனல்களை நிர்வாகிப்பவர்கள் கண்ணியமாக் கருத்துகளை வழங்கும் பொறுப்பு உள்ளது” என்று யூடியூபர் ஐயன் கார்த்திகேயன் கூறுகிறார்.
வெகுஜன ஊடகங்களில் திரிக்கப்பட்ட செய்திகளின் பின்புலத்தை கிண்டலுடன் நையாண்டியாகச் சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர் என்கிறார் ‘யூ டூ புரூட்டஸ்’ சேனலை நடத்திவரும் மைனர்.அரசியல் அதிகாரத்தையும், கட்சிகளின் உண்மையான நிலைப்பாட்டையும் நகைச்சுவையாகத் திரைப்படங்கள் வாயிலாக வெளிப்படுத்திய சார்லி சாப்ளினின் பாதையை தான் கடைபிடிப்பதாகக் கூறுகிறார் மைனர்.
“இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளை விடவும் சமுக வலைத்தள காணொளிகளுக்குத்தான் மவுசு அதிகம். மொபைல் போனில் படம் பிடித்து உடனுக்கு உடன் பதிவேற்றப்படுகிறது. அதில் கட்சித் தலைவர்களின் சொதப்பல் இருந்தால் சினிமா முன்னோட்டம் போல் பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறிவிடும்” என்கிறார் ஒரு சினிமா விமர்சகர்.
ஒவ்வொரு ஆண்டும் ஊடக படிப்பைக் கற்று வெளிவரும் இளைஞர்கள் வெகுஜன ஊடகங்களில் பணியில் சேருவதைவிட, யூடியூப் தளத்தையே அதிகம் தேர்வு செய்கின்றனர். தொலைக்காட்சிகள் மற்றும் சினிமா வாய்ப்புகள் சமூக வளைத்தளத்தையே நம்பியுள்ள நிலையில், யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை எகிறிப்போய்விட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஊடக படிப்பைக் கற்று வெளிவரும் இளைஞர்கள் வெகுஜன ஊடகங்களில் பணியில் சேருவதைவிட, யூடியூப் தளத்தையே அதிகம் தேர்வு செய்கின்றனர்
தொலைக்காட்சியில் முகம் பதித்தவர்கள் யூடியூப்பில் பிரபலம் ஆவதை போல், யூடியூப்பில் அரசியல் நையாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களாக உள்ளார்கள் என்பதே இன்றைய யூடியூப்பின் களநிலவரம் என்கிறார் யூடியூபர் சிவா.
வருங்காலங்களில் அனைத்து கட்சியினருக்கும் முக்கியமான வேலையாக இருக்க போவது யூடியூப் சேனல்களை நடத்தும் பத்திரிகையாளர்களைச் சமாளிப்பதுதான்.
3 முதல் 5 லட்சம் பார்வையாளர்களை வைத்திருக்கும் சேனல்கள் சொல்வதை ஆதரிக்கும், எதிர்க்கும் வேலையே தத்தம் கட்சி தொண்டர்கள் செய்ய வேண்டியது இருக்கும் என்பதே நிகழ்கால யதார்த்தம்.
Read in : English