Read in : English
பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டு அது விவாதப் பொருளாகியுள்ள சூழ்நிலையில், 38 ஆண்டுகளுக்கு முன் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விஜயா போலீஸ்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்போது புத்தகமாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயா 17 வயதில் போலீசாரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளானதாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த 6 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.

“அத்தியூர் விஜயா”புத்தகத்தை எழுதியவர் ஜோதி நரசிம்மன்
கடந்த 38 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை ‘அத்தியூர் விஜயா’ என்ற தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார் விழுப்புரத்தில் உள்ள பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜோதி நரசிம்மன்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் விடுதலையாகி இருப்பதால் அவர்களது பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்று கூறும் ஜோதி நரசிம்மன், விஜயாவையும் அவரது போராட்டத்தையும் நேரடியாக அறிந்தவர்.
இந்தப் புத்தகத்தில் விஜயாவின் சட்டப் போராட்டத்தை மட்டுமல்லாமல், இருளர் பழங்குடியினரின் வாழ்நிலை, அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், இருளர் பழங்குடியினர் மீது போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்குகள் உள்பட விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ஜோதி நரசிம்மன்.
செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா. பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர். 29.7.1993இல் ஒரு திருட்டு வழக்கில் வெள்ளையன் என்பவரைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறு பேர், வெள்ளையனின் உறவினரான விஜயாவை கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக புகார் எழுந்தது. அப்போது விஜயாவுக்கு வயது 17.
இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய அப்போதைய திண்டிவனம் சார் ஆட்சியர் ஜவகர் ஐஏஎஸ். உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்தப் புகாரில் முகாந்திரம் உள்ளது என்று கண்டறிந்ததை அடுத்து, அனந்தபுரம் காவல் நிலையத்தில் புதுச்சேரி போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
செஞ்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் இரா.செல்வராஜ் தலைமையில், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த வ.சு. சம்பந்தம், பேராசிரியர் பிரபா கல்விமணி, அருட்சகோதரி லூசினா உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து இந்த பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை உறுதிசெய்து 29.9.1993இல் புதுச்சேரியில் அறிக்கை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து அப்போதைய விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.ஜெகதீசன் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் 7.2.1994இல் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். விஜயா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதை உறுதி செய்ததோடு, விஜயாவுக்கு கருணைத் தொகை வழங்கவும் அவர் அந்த அறிக்கையில் சிபாரிசு செய்தார்.
இவ்விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, 31.8.1994 அன்று அத்தியூர் விஜயா வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணைக்கு மாற்றியும், விஜயாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் கருணைத் தொகையும் வழங்க உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.
இவ்வழக்கினை புலன் விசாரணை செய்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. குற்றம்சாட்டப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 6 போலீசாருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை எதிர்த்து போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ப்பட்டது.
ஆயுள் தண்டனை பெற்ற புதுச்சேரி போலீசார் 6.11.2006இல், அதாவது தண்டனைப் பெற்று சில மாதங்களில் பிணையில் வெளிவந்தனர். பிணையில் வெளிவந்த காவலர் முனுசாமி விபத்தில் இறந்து போனார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்த நீதிபதி சொக்கலிங்கம், நீதிபதி வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட புதுச்சேரி போலீசாரை விடுதலை செய்து 2008இல் தீர்ப்பளித்தது.
“இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்த வழக்கில் வாபஸ் பெறுவதற்காக விஜயாவுக்கு ரூ.3 லட்சம் வரை தருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டபோது, தனக்குப் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்கள் இருந்த நிலையிலும் அதை வாங்க மறுத்த விஜயா தனது நிலையில் உறுதியாக இருந்தார்” என்கிறார் இருளர் இன மக்களுக்காக பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணி.
இந்த வழக்கில் வாபஸ் பெறுவதற்காக விஜயாவுக்கு ரூ.3 லட்சம் வரை தருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டபோது, தனக்குப் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்கள் இருந்த நிலையிலும் அதை வாங்க மறுத்த விஜயா தனது நிலையில் உறுதியாக இருந்தார்” என்கிறார் இருளர் இன மக்களுக்காக பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணி
“கண்டுபிடிக்க முடியாத ஒரு திருட்டு வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத விஜயாவின் அப்பா மாசியை ஒரு பொய் திருட்டு வழக்கில் திருப்தி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரை ஜாமீனில் எடுக்க நானும் அருட்சகோதரி லூசினா உள்ளிட்டவர்கள் சென்று ஜாமீனில் எடுத்து வந்தோம்.
மாசி குறித்த ஆட்கொணர் மனு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வந்த போது மாசிக்கு ஆதரவாக இருந்தவர்கள் மனித உரிமைப் போராளிகள் கே.ஜி. கண்ணபிரானும் பாலகோபாலும். தகுந்த முகாந்திரமில்லாமல் ஏதாவது ஒரு வழக்கில் குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் விளிம்பு நிலை மக்களை அந்த வழக்கில் போலியாகச் சேர்ப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான், 1996இல் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தைத் தொடங்கினோம்” என்கிறார் பிரபா கல்விமணி.
“அத்தியூர் விஜயா 2014இல் மரணமடைந்து விட்டார். அவரது நினைவாக, வழக்குகளில் உறுதியாக இருந்தது போராடிய இருளர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கும இருளர்களுக்காக பாடுபடும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கும் அத்தியூர் விஜயா பெயரில் விருது வழங்கப்படுகிறது” என்கிறார் அவர்.
“அத்தியூர் விஜயாவிடம் அத்து மீறி நடந்த காவலர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
அத்தியூர் விஜயா 2014இல் மரணமடைந்து விட்டார். அவரது நினைவாக, வழக்குகளில் உறுதியாக இருந்தது போராடிய இருளர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கும இருளர்களுக்காக பாடுபடும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கும் அத்தியூர் விஜயா பெயரில் விருது வழங்கப்படுகிறது
ஆனால் அவர்களும் நம்மூர் காவலர்களுடன் சேர்ந்து வழக்கின் விசாரணையை திசை திருப்ப முயன்றனர். இருப்பினும் அவர்களது கூட்டு சதி முறியடிக்கப்பட்டு முதல் கட்டத்தில் அவர்களுக்கு விசாரணை நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து பெரிய சீனியர் வக்கீல்களை வைத்து வாதாடி மிகுந்த பொருட் செலவில் சிறைத்தண்டனையிலிருந்து மீண்டுவிட்டனர்.
இருப்பினும் அத்தியூர் விஜயாவின் போராட்ட உணர்வுகளை அவர்களால் மழுங்கடிக்க முடியவில்லை. மாறாக, கடைசி வரை தனது இருளர் சமூகத்திற்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் மூலம் தனது போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இன்று அவர் நம்முடன் இல்லை என்றாலும் ஜோதி நரசிம்மன் எழுதியுள்ள இந்த புத்தகம் அத்தியூர் விஜயாவின் வீரப்போராட்டத்தை நினைவு கொள்வதற்கு உதவி செய்யும்” என்று அத்தியூர் விஜயா பற்றிய புத்தக முகவுரையில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு.
“சிதம்பரம் பத்மினி (1993), கம்மாபுரம் பார்வதி (1993), அத்தியூர் விஜயா(1993), ரீட்டாமேரி (2001). அந்த நான்கு பெண்மணிகளில் மூவர் சீருடைப் படையினரால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.
பார்வதியின் கணவர் காவல்நிலைய லாக்கப்பில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த நான்கு பேரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து, சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சட்டப் போராட்டத்தின் மூலம் நீதிமன்றங்களில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக் கொணர்ந்தனர்” என்பதையும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதி நரசிம்மன் எழுதிய ‘அத்தியூர் விஜயா’ என்ற இந்தப் புத்தகம் வருகிற 27ஆம் தேதி விழுப்புரத்தில் வெளியிடப்படுகிறது.
போலீசாரால் பொய் திருட்டு வழக்குத் தொடரப்பட்டு போலீஸ் சித்திரவதைக்கு ஆளான பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த முருகன் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறார். தற்போதும் வறுமைச் சூழ்நிலையில் வாழ்ந்து வரும் அத்தியூர் விஜயாவின் தாய் தங்கம்மாள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
Read in : English