Read in : English
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 100 வயது ஆகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தனித்தனித்தன்மையுடன் செயல்பட்ட மதராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்படும் இச்சட்டமன்றம் 12.1.1921இல் தொடங்கியது. அதிலிருந்து தமிழக சட்டப்பேரவை வரலாறு தொடங்குகிறது.
அப்போது சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சில் சேம்பர் அறையில் 1921 முதல் 1937ஆம் ஆண்டு வரை சபைக் கூட்டம் நடைபெற்றது.
1937இல் சென்னை மாகாணத்தில் இரு அவைகள் கொண்ட சட்டமன்றங்களை (Bicameral Legistaturess) அறிமுகப்படுத்தப்பட்டன. 14.7.1937 இல் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்றது. அப்போது சட்டமன்ற பேரவைக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் நடைபெற்றது.
செனட் மண்டத்தில் சட்டப்பேரவை கூடிய காலத்தில் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்திலே மேலவை கூடியது.
அதன் பிறகு, 1938ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியிலிருந்து 1939ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி வரை அரசினர் தோட்டத்தில் இருந்த விருந்தினர் மண்டபத்தில் (BanquetHall) (பிற்காலத்தில் இதற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது) சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
1946ஆம் ஆண்டிலிருந்து 1952ஆம் ஆண்டு வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த மண்டபத்தில் மீண்டும் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
1952இல் முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று மேலவை உறுப்பினரான ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைந்தது. புதிய அரசமைப்புச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்தது. எனவே, கோட்டையில் உள்ள பேரவை மண்டபம் போதுமானதாக இல்லை என்பதால், சென்னை அரசினர் தோட்டத்தில் ரூ.10 லட்சம் செலவில் புதிய சட்டமன்றப் பேரவை மண்டபம் கட்டப்பட்டது.
(அதாவது, பழைய சிறுவர் அரங்கமும் கலைவாணர் அரங்கமும் இருந்த இடம்) 3.5.1952லிருந்து 27.12.1956 வரை இந்த இடத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சட்ட மேலவைக் கூட்டம் கோட்டையில் உள்ள மண்டபத்திலேயே நடைபெற்றது.
மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து சட்டப்பேரவை கூட்டம் 1956லிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்திலேயே மீண்டும் நடைபெறத் தொடங்கியது.
1959இல் பேரவைக் கூட்டம் ஊட்டியில் உள்ள அரண்மூர் அரண்மனையில் குறுகிய காலம் நடைபெற்றது. 20.4.1959 முதல் 30.4.1959 வரை பேரவையும் 4.5.1959 முதல் 9.5.1959 வரை மேலவையும் அங்கு கூடியது.
பின்னர் 31.8.1959 முதல் சட்டப்பேரவையும் மேலவையும் கோட்டையில் உள்ள மண்டபத்திலேயே நடைபெற்றன.
2004ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில், 1914 முதல் செயல்பட்டு வந்த ராணி மேரி கல்லூரியை அருகில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள இடத்துக்கு மாற்றி விட்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய சட்டமன்றத்தை மாற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.
பிறகு, கோட்டூர்புரம் பகுதியில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சட்டமன்றம் அமைப்பதற்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அதுவும் நிறைவேறவில்லை.
திமுக ஆட்சியில் 2010ஆம் ஆண்டில் ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தக் கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால், கோட்டையில் உள்ள பழைய இடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, 2020இல் கொரோனா தொற்று காரணமாக போதிய தனிமனித இடைவெளியுடன் கோட்டையில் உள்ள பேரவை அரங்கில் கூட்டம் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக வாலாஜா சாலையில் தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகச் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற இடங்களின் நூற்றாண்டு வரலாறு தொடர்கிறது.
Read in : English