Read in : English
பேச்சு வழக்கில், ‘இவரு பெரிய சூரனா..’ என்ற சொற்றொடரை உபயோகிப்பது, தமிழகம் முழுதும் சாதாரண நடைமுறை. சிலரை, ‘வீராதி வீரன்… சூராதி சூரன்…’ என புகழ்ந்து உரைப்பதும் வழக்கத்தில் உள்ளது.
பொதுவாக, ‘சூரன்’ என்ற சொல்லை, ‘அறிவில் சிறந்தவன்’ என பொருள் கொள்கிறது விக்சனரி என்ற தமிழ் அகராதி. நாய், சிங்கம், சேவல், கரடி, சூரியன், நெருப்பு என்ற பொருள்களையும் அது தருகிறது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை தொடர்ந்து, தமிழகத்தில், ‘சஷ்டிவிரதம்’ என்ற நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. முருகன் கோவில்களில் இது விழாவாக நடக்கும். இறுதிநாள் விழாவில், ‘சூரசம்ஹாரம்’ என்ற நிகழ்வாக நடக்கும். பேச்சு வழக்கில், ‘சூரன்பாடு’ என்பர் கிராம மக்கள்.

திருச்செத்தூரில் சூர சம்ஹாரம்
இந்த விழா தமிழகத்தில் சில கோவில்களில் மிகச் சிறப்பு பெறும். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம், கழுகுமலை கோவிலில், சூரர் ஆட்டம் சிறப்பாக நடக்கும்.
விழாக்கால மாலை வண்ணமயமாக முகிழ்க்கும். பலமுக அலங்காரத்துடன் ஆடி வருவர் சூரர்கள். பச்சை முகம், ஆனை முகம், பல்லிளிச்சான், குட்டி சூரன், வல்லகை என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கும். அதற்கு ஏற்ப சூரர் வடிவங்கள் அமைந்திருக்கும்.
இவை, உருப்பெருக்கியில் காணும் பூச்சி முகங்களை நினைவூட்டும்.
ஆனைமுகம் கொண்ட சூரர், கருப்பு நிறத்திலும், பல்லிளிச்சான் மஞ்சள் நிறத்திலும் காட்சி தருவர். கடைக்குட்டி, வல்லகை போன்றவை முறையே வெண்மை நிறத்தில் ஜொலிக்கும்.
சூரர் உருவங்களை, மிகுந்த கவனமுடன் நேர்த்தியாக வடிவமைப்பர், கலைஞர்கள். ஒழுங்கமைக்கப்பட்ட மரச் சட்டங்களில், வண்ணத் துணிகளை சுற்றி, மண் பாண்டங்களையும் பயன்படுத்துவர். உருவத்துக்கு ஏற்ப இயற்கை வண்ணம் பூசுவர்.
பெரிய உற்பத்திக்கான செயல்பாடு போல் அந்த பணி நடக்கும்.
சூரர் வடிவத்தை, எளிதில் துாக்கி ஆடிவிட முடியாது. அது, கூடு வடிவில், ‘ஆலி’ போல் அமைந்து இருக்கும். நடுவில் உள்ளடங்கி, சதுர வடிவில் மரசட்டங்களால் கட்டம் கட்டியிருப்பர். ஆடுபவர், அதற்குள் நுழைந்து, தம் பிடித்தவாறு துாக்கி நிற்க வேண்டும்.
அதற்கு போதிய உடல் பலம் வேண்டும். உடல் நலத்தை முறையாக வலிமையுடன் பேணுபவரால் மட்டுமே இதை செய்ய முடியும். அதற்காக, தனித்த உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பர்
ஆடும் காலத்தில் கவனம் சிதறாமல் இருக்க கூடுதலாக தவம் மேற்கொள்வர். உடலையும், மனதையும் முறையாக இணைத்து செயல்படும் முறை இது. இதற்காக, பிரத்யேக கவனிப்புகள் இருக்கும். அதை, விரத காலம் என்பர்.
சூரர் உருவத்தை துாக்கி ஆடும் போது மூச்சு திணறல் ஏற்படும். அதை தவிர்க்கும் வகையில், காற்று புகும் வகையில் சூரர் உருவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். கையால் பிடித்துக் கொள்ள வசதியாக, மூங்கில் தப்பை வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும்.
இன்று, ஒரு கணினியை வடிவமைக்கும் கவனமும், தொழில் நுட்பமும், அன்று ஒரு சூரர் உருவத்தை வடிவமைப்பதில் செலுத்திவந்தனர் கலைஞர்கள்.
ஆட்டம் நிகழ்த்தும் கலைஞர், உள் நுழைய வசதியாக, சூரர் உருவத்தை இருவர் சாய்த்துப் பிடித்திருப்பர். மிக நுட்பமாக உடலை வளைத்து, சூரருக்குள் நுழைந்து, பலத்தை சமன் செய்து எம்பி நிமிர்ந்து நிற்பார். சூரர் உருவ பளுவுக்கு ஏற்ப, உடலைத் தகவமைத்த பின், ஆடத் துவங்குவார். சூழலுக்கு ஏற்ப வேகமெடுக்கும் ஆட்டம்.
ஆடும் கலைஞர் எந்த நிலையிலும் தன்னிலை இழந்துவிடக்கூடாது; அணிந்திருக்கும் சூரர் வடிவம் சாய்ந்து விடக்கூாடது. அதற்கான பொறுப்பு ஆடும் கலைஞர் மீது சாய்க்கப்பட்டிருக்கும். சூரர் சாய்ந்தால் பெரும் அவப்பெயர் ஏற்படும்.
அத்துடன் அந்த ஆண்டு சமூக செயல்பாடு முற்றாக முடங்கும் வாய்ப்பும் ஏற்படம். ஏல்லாம், அவ நம்பிக்கையாக துருத்தி நிற்கும். அது அந்த பகுதி முழுக்க பரவி பதைபதைப்பை ஏற்படுத்தும். அது சார்ந்தே நிகழ்வுகளை சிந்திப்பர் மக்கள்.
எனவே, நம்பிக்கை சிதைவை தடுக்கும் வகையில், சமூக பொறுப்புடன் சுமந்து ஆட வேண்டிய கட்டாயம் இருக்கும்.
ஆடும் நபரின் உருவம், எண்ணம் மறைந்து, நம்பிக்கையாக, குதுாகலமாக செயல்மட்டும் வெளிப்பட வேண்டும். ஆட்டத்தின் போது, கால்களின் லயத்தை காண முடியாது. நெரிசல் நிறைந்த மனித தலைகளுக்கு மத்தியில், வண்ண உருவ அசைவு மட்டுமே கவனத்தை ஈர்க்கும். இதைக்கண்டு, குதுாகலிப்பர் சிறுவர்கள்.
விழா நாட்களில் தினமும் ஆடிவருவர் சூரர்கள். எந்த வடிவ சூரர் எந்த நாளில் வருவர் என்பது பற்றி, முன் கூட்டியே, அறிதல் பந்தயம் கட்டி மகிழ்வர் சிறுவர்கள்.
பல்லிளிச்சான், ஆனைமுக சூரர்களைத்தான் சிறுவர்களுக்கு பிடிக்கும். காரணம் அதன் வண்ணமும், தோற்றமும் தான். பெண்கள், ‘வல்லவத்தா’ என்ற வல்லகை சூரரை நேசிப்பர்.
சம்ஹாரத்திற்கு முந்தைய நாள், குட்டி சூரரை, தலை நசுக்கி வதைக்கும் நிகழ்ச்சி நடக்கும். விழாவைக் காண திரளும் கூட்டத்தில், வியர்வை கசகசப்பில், பட்டுச்சேலை சரசரக்க, எட்டிப் பார்த்தபடி, குழந்தைகளை தலைக்கு மேல் தாங்கிப் பிடித்து, நிகழ்வைக் காட்டுவர் பெண்கள்.
இப்படி வண்ணமயான சூரர் விழா, தமிழகமெங்கும் ஒரு காலத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இப்போது அது சடங்குகளால் நிறைந்து நிற்கிறது.
பாரம்பரிய நிகழ்வு என்பது, பாரம்பரியத்தை அப்படியே பிரதிபலிப்பதில்லையே. அது, கால மாற்றத்தை உள்வாங்கியே நிகழ்கிறது. எண்ணமும், தேவையும், நம்பிக்கையும் தேடலும் கொண்டாட்ட வடிவத்தை மாற்றுகின்றன
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் காலத்தில், இந்த விழா நடத்தப்படுகிறது. அதன் பின்னணியில் உள்ள சடங்குகளும், விரதங்களும் அதை சார்ந்து அமைந்தே வியப்பூட்டும். அதை, குதுாகலம் என்று மட்டுமே கணிக்க முடியாது. சம்ஹாரம் என்ற நிகழ்வு முடியும் தருவாய் வித்தியாசமாக இருக்கும்.
அதை என் அனுபவத்தில் இருந்து பதிவு செய்கிறேன்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூர், தோப்பூர் சுப்ரமணிய சுவாமி கோவில் சூரர் சம்ஹாரம் நிகழ்ச்சி பற்றி, 1970களில் அறிவேன். விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் வசித்த, சிறு குன்றுள்ள கிராமம் அது. சம்ஹாரம் நடக்கும் நாளன்று மாலை, அக்கம் பக்கத்து கிராமத்தவர் எல்லாம் அங்கு திரள்வர்.
விதம் விதமான முகம் கொண்ட தும்பிகளும், பூச்சிகளும் வெட்ட வெளியில் பறந்து கொண்டிருக்கும். சூரியன் அடைய, சூரன் வதை முடியும். உடனடியாக வதைபட்ட சூரன் உருவத்துக்கு தீ மூட்டும் நிகழ்வு நடக்கும்.
அதற்காகவே காத்திருக்கும் விவசாய தொழிலாளர்கள், எரியும் கொள்ளிக்கட்டைகளை பிடுங்கியபடி, வயல்வெளிகளில் ஓடுவர். அங்கு பறந்து திரியும் தும்பி போன்ற பூச்சிகளை நோக்கி வீசுவர். இதை, பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பார்த்திருக்கிறேன்.
இதன் பின்னணி என்ன?
பருவ நிலைக்கு ஏற்ப, வேளாண் உற்பத்தி நடக்கிறது. மழை தீவிரம் அடையும் போது, மண் செழிக்கிறது. அப்போது உயிரினங்கள் திளைத்து கிளை பரப்புகின்றன. தும்பி போன்ற சிறகியினங்கள் பெருக்கம் தீவிரம் அடையும்.
சூழலில் அவற்றின் தாக்கம் அதிகமாகும். அறியாமையை மூளையில் அணிந்த மனிதன் என்ற பிரத்யேக உயிரினம், இதை பாதகமாக எடுத்துக்கொள்கிறது. வாழும் சமநிலை கெடுவதாக கணித்து, பூச்சியினங்களுக்கு எதிராக படை திரட்டிய நிகழ்வாகவே, சூரர் சம்ஹாரம் நிகழ்வை கணிக்க முடிந்தது.
இன்று, பூச்சியினங்களுக்கு எதிராக, பயங்கரக் கொல்லிகளை பயன்படுத்தி, அவற்றை அழித்து அறியாமையில் உழல்கிறான் மாமனிதன். அவை சூழலை சமன்படுத்தும் உயிரினங்கள் என அறிந்தும் ஏற்க மறுக்கிறது மாமனிதம். சூழல்களை சமன் செய்ய வரும் உயிரினங்களை வன்மத்தோடு அழிக்க, காலம் காலமாக உத்திகளை தேடிக் கொண்டிருக்கிறது, மனித இனம்.
இன்று, பூச்சுக்கொல்லியாய், அன்று வண்ண ஆட்டங்களாய்
இன்றைய பூச்சிக்கொல்லிகளின் தாக்கம், மருத்துவமனைகளாக வடிவமைகிறது.
அன்றைய வண்ண ஆட்டம், சடங்காகவும் சாத்திரமாகவும், மூட நம்பிக்கையாக மனித இனத்தின் மீது படிந்து அழுத்துகிறது.
உயிர் பிரிந்த படிமத்தையும், தொன்மத்தையும் தேடுகிறது நவீன அறிவு.
Read in : English