Read in : English
ஒரு காலத்தில் கல்யாண வீடுகளிலும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்னும் முழங்கிய இசைத் தட்டுகளும் அந்த இசைத் தட்டுகளை இசைத்த கிராமபோன் பெட்டிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து மறைந்து எங்கோ ஒரு சில வீடுகளில் வெறும் அலங்காரப் பொருளாக மாறிவிட்டன.
காலவெள்ளோட்டதில் மறைந்துபோன கிராமபோன் இசைத்தட்டுகளை தேடிப்பிடித்து, அதன் வரலாற்றை பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் குறும்பட பயிற்சியாளரும் `’நிழல்’ திரைப்பட இதழை கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருபவருமான ‘`நிழல்’ ப. திருநாவுக்கரசு.
பேசும்படம் வந்து திரைப்படப் பாடல்கள் இசைத்தட்டுகளாக வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னேயே, அதாவது 1899லிருந்தே தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் தமிழ் இசைத் தட்டுகள் அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் தொடக்க காலங்களில் நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கத்தின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது இசைத்தட்டுகளில் பாட்டுக் கேட்பது. பேசும்படம் வந்த பிறகு, திரைப்படப் பாடல்கள் இசைத் தட்டுகளை பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டன.
தமிழ்நாட்டில் ஓடியன், புராட்காஸ்ட், தாஸாபோன், கொலம்பியா, எச்எம்வி, சரஸ்வதி ஸ்டோர்ஸ் போன்று பல்வேறு கிராமபோன் இசைத்தட்டு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. தொடக்க காலத்தில் எந்த இடத்தில் இசைத்தட்டுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டாலும்கூட, கல்கத்தாவில்தான் அதை இசைத்தட்டுகளில் பதிவு செய்ய முடியும். தமிழகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டவை கல்கத்தாவில் இசைத்தட்டுகளில் பதிவு செய்து பொதுமக்களின் விற்பனைக்கு வந்தது.
1935இல்தான் ஒலிப்பதிவுடன் இசைத்தட்டுகளைப் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியது சரஸ்வதி ஸ்டோரை நடத்திய ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மற்றும் இருவர்தான். அந்த தொடக்கக் காலத்தில் 78 ஆர்பிஎம் என்•கிற பெரிய இசைதட்டுகள்தான் பயன்பாட்டின் இருந்தன. பிற்காலத்தில் 1975வாக்கில்தான் பிளாஸ்டிக் இசைத்தட்டுகள் பயன்பாட்டுக்கு வந்தன. தமிழில் சுமார் 1 லட்சம் இசைத்தட்டுகள் வரை வெளிவந்திருக்கும் வணிகரீதியாக
விற்பனையில் வெற்றி பெற்ற 50 ஆயிரம் இசைத்தட்டுகள் மீண்டும் மீண்டும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. இந்த இசைத் தட்டுகளின் விற்பனை 1940களின் வரை அமோகமாக இருந்தது என்று சொல்ல வேண்டும். தமிழ் இசைப் பாடல்கள் மட்டுமல்ல, நாட்டுப்புற பாடல்கள், நாடகங்கள், காமிக்…என்று பலதரப்பட்டவை இசைத்தட்டுகளாக வெளிவந்தன.
“தமிழ்நாட்டில் நடந்து வந்த மூன்று மணி நேரம் நடக்கும் இசைக் கச்சேரிகளில் கர்நாடக சங்கீதப் பாட்டுகள் பாடப்படும். தமிழ் பாட்டு••கள் ஒன்றிரண்டு இருந்தாலே அதிகம். அது துக்கடா என்று அழைக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களுக்குப் புரியும் வகையில் தமிழ் இசைப் பாடல்கள் இடம் பெற்ற இசைத் தட்டுகள் தமிழ்நாட்டில் மக்களிடம் வரவேற்பு பெற்றன. கிராமபோன் இசைத் தட்டுகளை விற்பதற்காக பத்திரிகைகளில் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அத்துடன், கிராமபோன் ரிக்கார்டுகளின் பாடல்கள் தனிப்புத்தகங்களாகவும் வெளியிடப்பட்டன. அந்த அளவுக்கு மக்களை ஈர்த்த கிராமபோன் ரிக்கார்டுகளின் மோகம் வானொலியின் வருகைக்குப் பிறகு குறைய ஆரம்பித்தது. டேப் ரிக்கார்டர், தொலைக்காட்சியின் வருகைக்குப் பின் கிராமபோன் இசைத்தட்டுகள் மறையத் தொடங்கிவிட்டன. 1982க்குப் பிறகு இசைத்தட்டுகளின் பயன்பாடு பெரிதும் குறைந்துவிட்டது” என்கிறார் திருநாவுக்கரசு.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட மௌன படங்களில் பலவற்றையும் அதையடுத்து வந்த பேசும்படங்களில் பலவற்றையும் நமது அலட்சியத்தால் பாதுகாக்கத் தவறிவிட்டோம். இதற்கு கிராமபோன் இசைத்தட்டுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சென்னையில் வி.ஏ.கே. ரங்காராவ் ஏராளமான கிராமபோன் ரிக்கார்டுகளைச் சேகரித்து வைத்திருந்தார். திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இசைத் தட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். இதுபோல பல்வேறு தனிநபர்கள் சேகரிப்பிலும் இசைத்தட்டுகள் உள்ளன. கொலம்பியா இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்ட பழைய இசைத் தட்டுகள் லண்டன் கல்லூரி நூலகத்தில் இசைத்தட்டுகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. திருநாவுக்கரசும் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக பல பழமைவாய்ந்த இசைத் தட்டுகளைத் தேடி வருகிறார்.
1906இல் கோயமுத்தூர் தாயி என்ற தேவதாசி பாடிய தமிழிசைப் பாடல்கள் அடங்கிய அபூர்வ கிராமபோன் இசைத்தட்டு அவரது சேகரிப்பில் உள்ளது. கும்பகோணம் தாயி, திருவிடைமருதூர் தாயி, டி.எஸ். ரங்கம்மாள், ஈ.வி. சாதாரதாம்பாள் என்று இப்பட்டியல் தொடரும். சுமார் 30 தேவதாசிகளின் பாடல்கள் இசைத்தட்டுகளாக வந்திருக்கின்றன. இந்த இசைத்தட்டுகளில் தேவாரம், திருவாசகம், பிள்ளைத்தமிழ், நடராஜர் பதம், சிருங்கார பதங்கள் போன்றவற்றைப் பாடி இருக்கிறார்கள்.
இவரது சேகரிப்பில் உள்ள திருச்செந்தூர் சண்முகவடிவின் தமிழ்ப் பாடல்களைக் கேட்டால் அசல் கே.பி. சுந்தராம்பாள் பாடுவது போன்றே உள்ளது. ஆனால், சுந்தராம்பாள் காலத்துக்கு முந்தையவர் அவர். முருகன் பாடல்களைப் பக்தி ரசம் சொட்டச் சொட்டப் பாடுகிறார் உறையூர் காதர் பாட்சா. காங்கிரஸ் கட்சி மாகாண ஆட்சித் தேர்தலில் நின்றபோது பிரச்சாரத்துக்காக, காங்கிரசுக்கு ஏன் ஓட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மூன்று நிமிட பேச்சு இசைத்தட்டில் வந்தது. இந்த இசைத்தட்டு குறித்தும் இசைத்தட்டு அனுபவங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன்.
கே.பி. சுந்தராம்பாளின் வெண்கலக்குரல் பாடல்கள், எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் கல்கியின் தமிழிசைப் பாடல்கள், என்.சி. வசந்த கோகிலத்தின் இனிய குரலில் சுத்தானந்த பாரதியின் பாடல்கள், மதுரை பொன்னுசாமி பிள்ளை, செம்பனார் கோவில் ராமசாமி பிள்ளை, டி.என். ராஜரத்தினம் பிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை போன்றோரின் நாகஸ்வர இசை, எஸ்.வி. சுப்பையா பாகவதர், வேலுப்பிள்ளை, கிட்டுப் பிள்ளை, ராமசாமி பத்தர், செல்லப்பா, விஸ்வநாததாஸ் ஆகியோரின் நாடகப் பாடல்கள், பரமக்குடி சிவபாக்கியத்தின் நாட்டுப்புற பாடல்கள், குடுகுடுப்பைக்காரன் பாட்டு, எஸ்.ஆர். கமலத்தின் லாவணி, ரோட்டில் பைப்புச் சண்டை, பாட்டி வைப்பாட்டி காமிக், மிமிக்ரை..போன்ற அவரது சேகரிப்புகளின் பின்னே அவரது உழைப்பு விளங்கும்.
நாதஸ்வர சக்சகரவர்த்தி டி.என். ராஜரத்தினத்தின் நாகஸ்வர இசை அடங்கிய இசைத்தட்டுகள் 30க்கு மேல் வந்துள்ளன. எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைத்தட்டுகள் நூற்றுக்கு மேல் இருக்கும். அரியக்குடி ராமானுஜம் அய்யங்காரின் தெலுங்கு சாஹித்திய இசைத்தட்டுகளைவிட பரமக்குடி பி.எஸ். சிவபாக்கியத்தின் வண்ணான் வந்தானே போன்ற பாடல்களைக் கொண்ட இசைத் தட்டு பிரபலமாக இருந்தது. பகத்சிங் தூக்கில் போடப்பட்டபோது கே.பி. சுந்தராம்பாள் பாடிய இசைத் தட்டை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது.
சென்னை வானொலி தொடங்கும் முன், ராஜா முத்தையா செட்டியார் 1925லிருந்து 1934 வரை வானொலி நடத்தினார். அந்த வானொலியில் இசைத்தட்டுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. பாரதியாரின் பாருக்குள்ள நல்ல நாடு பாடல்தான் இசைத்தட்டில் முதலில் வந்த பாரதியார் பாட்டு. 1924இல் வந்த பிராட்கேஸ்ட் நிறுவனத்தின் வெளியிடாக வந்த இந்த இசைத்தட்டில் பாரதியார் பாட்டுகளை விளாத்திக்குளம் சாமி பாடியிருக்கிறார்.
Ðசுதேசமித்திரன் பத்திரிகையின் பொன்விழாவையொட்டி வெளியிடப்பட்ட இசைத்தட்டில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடியுள்ளார். அந்த இசைத்தட்டின் மறுபுறம் முசிறி சுப்பிரமணிய அய்யர் பாட்டு இருக்கிறது. அந்த காலத்தில் நாடகங்களில் நடித்தவரும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான மதுரையைச் சேர்ந்த கே.பி. ஜானகியம்மாள் பாடிய இசைத்தட்டில், “’எல்லா ஊழல்களுக்கும் காரணம் கோயில்தான்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது இப்படி இசைத்தட்டு தொடர்பான ஆச்சரியமான பல தகவல்களை அடுக்கிக்கொண்டே போகிறார்.
இசைத்தட்டுகளை வாங்கி சேகரித்து வைத்ததுடன் அவரது பணி முடிந்துவிடவில்லை. தமிழ் சமூக வரலாற்றின் ஒர் அங்கமாக இருக்கும் இசைத்தட்டுகளின் வரலாறு குறித்து புத்தகமாக எழுதி வருகிறார். இந்த வரலாற்றுப் பதிவுகள் குறித்த கோட்பாடுகள் பகுதியை அமெரிக்காவில் உள்ள மிச்சிக்கன் பல்கலைக்கழக காட்சி ஊடகத் துறைப் பேராசிரியர் சொர்ணவேல் எழுதி வருகிறார். இந்தப் புத்தகத்துடன் அந்தக் கால 50 இசைத் தட்டுகளின் பாட்டுகளை ஒரு பென் டிரைவ்வில் போட்டு புத்தகத்துடன் கொடுக்க வேண்டும் என்பது எங்களது ஆசை என்கிறார் திருநாவுக்கரசு.
இதற்கிடையே, ‘திரை இசையில் தமிழ் இசை’ என்ற புத்தகத்தை வரும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் திருநாவுக்கரசு. `”தமிழ் திரைப்படங்கள் தமிழ் இசையை ஜனநாயகப்படுத்தியுள்ளன. தமிழ் திரைப்பட பாடல்களில் தமிழ் இசை ராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதைப்பற்றியதுதான் இந்தப்புத்தகம். ஆயிரம் திரைப்படங்களிலிருந்து மூவாயிரம் பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தமிழ் இசை ராகங்கள் அதில் என்னென்ன இடம் பெற்றுள்ளன என்பது குறித்த விவரங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகின்றன” என்று கூறும் அவர், பரிபாடலில் இசை இயக்குநராக என்ன தகுதிகள் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்.
கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு, வீணை அதன் பேர் தனம், நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை, மதுரை மாரியப்ப சுவாமிகள், மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோர் பற்றிய வரலாற்று பதிவுகளை ஏற்கெனவே புத்தகங்களாக்கியுள்ளார் திருநாவுக்கரசு.
Read in : English