Read in : English
நவம்பர் ஒன்று முதல் திரையரங்குகளில் நூறு சதவீதப் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் எனத் தமிழக அரசு அனுமதி கொடுத்துவிட்டது. நவம்பர் 4 தீபாவளி அன்று சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ரஜினி காந்த் நடித்திருக்கும் அண்ணாத்த திரைக்கு வருகிறது.
இந்தியத் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான, தாதே சாஹேப் பால்கேவை அண்மையில் ரஜினி காந்த் பெற்றிருக்கிறார்.
தாதா சாஹேப் பால்கே விருது பெற்றவுடன் வரும் படம் என்ற வகையில் ரஜினியின் அண்ணாத்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே, ரஜினி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக இது மாறியிருக்கிறது. அரசியலுக்கு வராவிட்டாலும் அண்ணாத்த வந்திருக்கிறதே என்று சந்தோஷப்படுகிறார்கள் அவர்கள்.
தீபாவளி ரேஸில் ரஜினி இருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் ரஜினி மட்டும் இருந்துவிட்டால் அது பெருமைக்குரியதா?
தீபாவளிக் களம் ரஜினிக்குச் சாதகமாகவே உள்ளது. ஏனெனில், பெரிய போட்டி இல்லை. ரஜினியின் அண்ணாத்தயுடன் களமிறங்கும் படங்கள் என சிம்பு நடித்த மாநாடு, விஷால் நடித்த எனிமி ஆகியவை சொல்லப்பட்டன.
இதில் மாநாடு தீபாவளி அன்று வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. இப்போது எனிமி திரைப்படத்துக்கும் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. அதன் தயாரிப்பாளர் வினோத் குமார், தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படத்துடன் தங்கள் படமான எனிமியும் வெளிவரத் தயாரிப்பாளர் சங்கம் உதவ வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஒருவேளை எனிமி தீபாவளி நாளில் திரைக்கு வரவில்லை என்றால், அண்ணாத்தயுடன் போட்டியில் இருக்கும் ஒரே படமாக அருண் விஜய் நடித்திருக்கும் வா டீல் படம் மாறியுள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படமும் வந்தாலும் வராவிட்டாலும் இதை எல்லாம் ரஜினிக்குப் போட்டியாகச் சொல்வதை அருண் விஜயே ஏற்றுக்கொள்ள மாட்டார்.
ஆக, இப்போதைக்கு அண்ணாத்த மட்டுமே அனைத்துத் திரையரங்குகளிலும் வெளியாகும் சூழல் ஏற்படக்கூடும். இப்படி ஒரு படம் மட்டும் வெளிவருவது திரையுலகுக்கு நல்லதன்று என்று எனிமி திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
ரஜினி காந்ததின் நீண்ட நெடிய திரைப்பயணத்தை எண்ணிப் பார்க்கும்போது, இப்படித் தனியாக நின்றுதான் வெற்றிபெற வேண்டுமா என்னும் கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில், 1975 இல் அறிமுகமான, எழுபது வயதான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தீபாவளி அன்று வெளியான முதல் திரைப்படம் மூன்று முடிச்சு. அது 1976இல். இந்தப் படத்தில் ரஜினி பெற்ற சம்பளம் வெறும் 2,000 ரூபாய் தான். அதே படத்தில் நடித்த கமல் ஹாசன் 30,000 ரூபாய் சம்பளமாகப் பெற்றிருக்கிறார்.
பாலசந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு படத்தில் ரஜினி காந்த் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அடுத்த தீபாவளிக்கு வெளியான ஆறு புஷ்பங்கள் திரைப்படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக ரஜினி மாறியிருந்தார். அந்தப் படத்தின் மற்றொரு நாயகனான விஜய குமாரின் மகன் அருண் விஜய் களத்தில் இருக்கும்போது ரஜினியும் களத்தில் இருக்கிறார் என்றால், ரஜினி காந்த் எத்தனை ஆண்டுகள் நின்று விளையாடுகிறார் என்பது புரியும்.
அடுத்த ஆண்டான 1978இல் ரஜினி நடித்த மூன்று படங்கள் தீபாவளி நாளில் வெளியாகியிருந்தன. அதில் தப்புத்தாளங்கள், தாய்மீது சத்தியம் ஆகிய படங்களில் அவர் ஹீரோ. அவள் அப்படித்தான் படத்தில் வில்லன் வேடம். ஆனால், ஹீரோவைவிட கைதட்டல் அதிகமாகப் பெற்ற வில்லன் வேடம். மூன்று முடிச்சில் தொடங்கி ரஜினி காந்த் நடித்த படம் ஒவ்வொரு தீபாவளிக்கும் வெளிவருவது 1995 வரை வாடிக்கையாக இருந்தது.
இப்படித்தான் ரஜினி என்னும் நடிகர் மெல்ல மெல்ல நட்சத்திரமான வரைபடம் உச்சிக்குப் போனது.
இடையில் 1982இலும் 1990இலும் மட்டுமே தீபாவளிக்கு ரஜினியின் படம் திரைக்கு வரவில்லை. 1990இல் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி படம் வெளிவராத தீபாவளி நாள் துக்க நாளே என்று வால்போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். அடுத்த ஆண்டு 1991இல் ரஜினி ரசிகர்களின் தீபாவளி விருந்தாக வந்தது தளபதி திரைப்படம். 1995இல் ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய முத்து படமே ரஜினி நடித்து தீபாவளி நாளன்று வெளியான கடைசிப் படம்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீபாவளி நாளன்று ரஜினி நடித்த படம் ஒன்று திரைக்கு வருகிறது.
ஆகவே, நாற்பதாண்டுகளாக ரஜினியை ரசித்துவரும் அவருடைய ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கிறார்கள். அவர்கள் குடும்பம், பிள்ளை, குட்டி என்று செட்டிலானபோதும், அண்ணாத்த திரைப்படத்தைத் திரையரங்கில் காண குடும்பம் குடும்பமாக வருவார்கள் என ரஜினி தரப்பினர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் ரஜினி என்னும் குதிரையில் பந்தயம் கட்டி பணத்தை மூட்டை கட்ட தீபாவளி ரேஸில் அண்ணாத்தவைக் களமிறக்குகிறது சன் பிக்சர்ஸ்.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ரஜினியின் படங்கள் தீபாவளி ரேஸில் கலந்துகொண்டு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெற்றிவாகை சூடின. தீபாவளி நாளில் வெளியாகி தோல்விபெற்ற ரஜினி படங்களாக மாவீரன், கொடிபறக்குது, பாண்டியன் போன்றவற்றைச் சொல்லலாம்.
மற்றபடி ரஜினியின் தீபாவளிப் படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
பொல்லாதவன், தங்க மகன், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன் போல அண்ணாத்த பெரிய வெற்றியைச் சேர்க்குமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
அப்போது எல்லாப் பெரிய படங்களும் திரையரங்குகளில் மட்டும் வெளிவரும். அதில் ரசிகர்களைக் கவர்ந்த படம் வெற்றிபெறும். பெரிய நடிகர்களின் படங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் அருகே உள்ள எந்த தியேட்டரில் டிக்கெட் கிடைக்குமோ அங்கே சென்று படம் பார்ப்பார்கள் ரசிகர்கள். இதனால் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற பேதமின்றி எல்லாப் படங்களும் ஓரளவு வசூலைப் பார்க்கும் நிலை இருந்தது.
அதே வேளையில் ஒரே நடிகர் நடித்த இரண்டு மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிபெற்ற வரலாறும் உண்டு. நடிகர் சத்யராஜ் நடித்த பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் என்ற இரண்டு படங்கள் 1987 தீபாவளி நாளில் வெளியாயின. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் மணிவண்ணன். இரண்டும் வெற்றிப் படங்கள்.
அந்தத் தீபாவளி நாளில் தான் ரஜினி சொந்தமாகத் தயாரித்த மாவீரன் வெளியாகி படுதோல்வியடைந்தது. அதே நாளில் விஜய காந்த் நாயகனாக நடித்த தர்ம தேவதை, தழுவாத கைகள் என்ற இரண்டு படங்களும் திரைக்கு வந்தன. கமல் ஹாசன் நடித்த பாலசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் இந்தத் தீபாவளிக்குத் தான் வெளியானது.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட திரைப்பட வளாகங்கள் இருந்தன. சென்னையில் சத்யம் காம்ப்ளெக்ஸ், கோவையில் கேஜி காம்ப்ளெக்ஸ் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
ஒரே ஊரில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளை நடத்திவந்தவர்களும் இருந்தார்கள். அப்படியான வளாகங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்கை வைத்திருந்தவர்களும் ஒரே படப் பெட்டியை வாங்கி இரண்டு மூன்று தியேட்டர்களில் படத்தைத் திரையிடுவார்கள். எடுத்துக்காட்டாக, 1991இல் வெளியான தளபதி தென்காசி போன்ற இடைநிலை நகரத்திலேயே மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இதன் மூலம் அதிக தொகை கொடுத்து வாங்கிய படப் பெட்டியைக் கொண்டு குறுகிய நாள்களில் ஓரளவு பணத்தைப் பார்த்துவிட முடியும் என்ற நிலைமை இருந்தது. படத்தைப் படச்சுருளில் பிரிண்ட் போட்டு அனுப்பிய காலத்தில் இந்த உத்தி பயன்பட்டது. அதுதான் இப்போது பூதாகரமாகியுள்ளது. அதுவும் இப்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் எத்தனை திரையரங்குகளில் வேண்டுமானாலும் படத்தைத் திரையிடும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. எனவே, பெரிய வணிக வளாகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒரே படத்தைப் போட்டுச் சில நாள்களில் அதிகமான பார்வையாளர்களை வரவழைத்துப் பணம்பார்க்க நினைக்கின்றனர்.
ஒரே நாடு ஒரே மொழி என்பது போல் ஒரே பண்டிகை ஒரே படம் என்னும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தப் போக்கு ஆபத்தானது என்றபோதும் இதுதான் தொடர்கிறது.
ரஜினி காந்துக்கு இன்னும் ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறது என்றால், என்ன நடந்திருக்க வேண்டும். பல படங்களிடையே ரஜினி படம் வெளியாகி இருக்க வேண்டும். அப்படி வெளியான படங்களில் ரஜினியின் படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அப்போது ரஜினியின் படம் வெற்றி எனக் கொண்டாடலாம்.
ஆனால், அப்படியில்லாமல் எந்தப் போட்டியும் இல்லாமல், எல்லாத் திரைகளிலும் ரஜினியின் படத்தை மட்டுமே வெளியிட்டு வசூலைப் பார்த்துவிட்டு ரஜினியின் மவுசு இன்னும் குறையவில்லை என்னும் பெயரைப் பெறுவது ரஜினிக்குப் பெருமை சேர்க்கவா செய்யும்?
இப்படி வெற்றிபெற்றாலே அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை எனும்போது, ஒருவேளை படம் தோற்றுவிட்டால் ரஜினியின் திரைப் பயணத்தில் அண்ணாத்த கறையாகிவிடாதா?
Read in : English