Read in : English
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஆறாவது தம்பதியினர் செட்டிக்குளத்தைச் சேர்ந்த செளந்தரராஜனும், சந்தானலஷ்மியும்.
மூன்றாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி சந்தானலஷ்மி, தனது பன்னிரெண்டாம் வயதில், தன் தந்தையார் தம்மப்பட்டி கே. எஸ். பொன்னுசாமியிடம் பிடிவாதம் பிடித்து நாகஸ்வரம் கற்க தொடங்கினார். அது பற்றி கூறும் போது, ”நான் கற்க ஆரம்பித்த காலத்தில் பெண்கள் குடும்பத்தை விட்டு வெளி ஆட்களிடம் சென்று கற்பது என்பது அவ்வளவு வழக்கத்தில் இல்லை. ஆதலால் வேறு யாரிடமாவது சென்று கற்கும் வாய்ப்பை நான் பெறவில்லை.”, என்றார்.
ஐந்து தலைமுறைகளாக நாகஸ்வர வித்வான்களாக விளங்கும் மரபில், தன் காலத்தில் பிரபலமாக விளங்கிய வித்வான் செட்டிக்குளம் சிங்காரத்தின் மகனான வித்வான் செளந்தர்ராஜன். தன் பதிமூன்றாவது வயதில் பூவாளூர் இராமலிங்கம் சகோதரர்களிடம் தன் குருகுல வாசத்தை தொடங்கினார். மூன்று வருடங்களுக்குப் பின் அவர் மகன் கலைமாமணி பூவாளூர் நாகராஜனிடம் தன் பயிற்சியைத் தொடர்ந்தார். அதன்பின் இன்னும் மூன்று வருடங்கள் நாகஸ்வர மேதை சுவாமிமலை கோடிசுந்தரனாரிடம் குருகுல முறையில் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். முறைப்பெண்ணான தன் மாமன் மகள் சந்தானலஷ்மியை விரும்பி பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் முடித்தார்.
இந்த இசைத் தம்பதியினர் கடந்த 37 வருடங்களாக இணைபிரியாமல், இந்தியாவில் பல மாநிலங்களில் இசைத்து தங்கள் இசைப் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தங்கள் இசைப்பயணத்தைப் பற்றி கூறுகையில் செளந்தர்ராஜன் / சந்தானலஷ்மி தம்பதியினர், தங்களுக்கு திருமணமாகிய மூன்றாவது நாளில் திருமுருக கிருபானந்த வாரியார் முன் வாசிக்கக் கிடைத்த வாய்ப்பையும், அவரின் ஆசியையும் 40 வருடங்கள் பின்னரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். இவர்களுக்கு கல்யாணம் ஆன புதிதிலேயே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலின் பஞ்சபிரகார விழாவில் தொடர்ந்து பதினாறு மணி நேரம் வாசித்துள்ளனர். மாலை 7 மணிக்கு சாமி புறப்பாடில் தொடங்கி , ஏழு இடங்களில் அமர்ந்து கச்சேரி செய்து பின் மறு நாள் காலை 11 மணிக்கு சாமி இறங்கும் வரை வாசித்த சவாலான அனுபவத்தை தங்கள் இசை வாழ்வின் உச்சங்களுள் ஒன்றாகக் கருதுகின்றனர்.
பிசியோதரப்பி படித்து மருத்துவராக இருக்கும் இவர்கள் மகனும் நாகஸ்வரம் பயின்று, பல கச்சேரிகளை வெளிநாடுகளில் செய்வதோடு பல்வேறு ஊடகங்களிலும் வாசித்து, இக்குடும்பத்தின் இசைப் பாரம்பரியத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் நாகஸ்வரத்துறையில் ஈடுபடுவதற்கான சூழல் எப்படியிருக்கிறது என்று கேட்டதற்கு விதுஷி சந்தானலஷ்மி “நான் கற்ற போது இருந்த நிலை மாறி, தற்போது எல்லா மாவட்டத்திலுள்ள இசைப்பள்ளிகளிலும் பெண்கள் பயில்கிறார்கள் என்றாலும் இன்னும் அதிகமாக பெண்களுக்கு பயிற்றுவிக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.”, என்கிறார். நவசக்தி என்ற இத்தொடரின் பெயரே தனக்கு மகிழ்ச்சை அளிப்பதாகவும், இத்தகைய நிகழ்ச்சிகள் இன்னும் நிறைய பெண்களை ஊக்குவிக்கும் என்றும் கூறுகிறார்.
”எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னணியில் இருப்பது போல், நாகஸ்வரத் துறையிலும் பெண்கள் கற்று, நன்றாக வாசித்து பெயர் பெற வேண்டும் என்பதே எங்கள் இருவரின் விருப்பம்.”, என்கிறார்கள் ஜோடியாய்.
வருகிற நவராத்திரி நவசக்தி நாகஸ்வர விழாவில் கே.என்.மணிகண்டனும் ஏ.எஸ்.சங்கரும் இந்த ஜோடிக்குத் தவில் வாசித்துக் கச்சேரியைச் சிறப்பிக்கவுள்ளனர்.
Read in : English