Read in : English
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதும் படகுகள் சிறை பிடிக்கப்பட்டு ஆண்டு கணக்கில் இலங்கை கடற்கரையில் கேட்பாரற்று கிடந்து மக்கி பாழாகிப்போவதுமான பிரச்சனைக்கு ஒரு இறுதி தீர்வு காண 5வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை உள்நாட்டு போர் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வருவதற்கு முன்னர் தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது பல நேரங்களில் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கை கடற்படையும் இலங்கை கடலோர காவல் படையும் மீனவர்களை சுட்டுக்கொன்றும், படுகாயப்படுத்தியும் வந்தனர். சுமார் 600 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2000 மீனவர்கள் காயமடைந்தனர்.
1983ம் ஆண்டில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள வெளிக்கடைச் சிறைச்சாலை கலவரத்துக்கு முன்னர், இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழகத்தின் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதும் மிக சாதாரணமாக நடந்து வந்த நிகழ்வாக இருந்தது.
1947ம் ஆண்டில் இந்திய, இலங்கை, இருநாடுகளும் தனித்தனி நாடாக பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்தாலும் கடல் எல்லை பாகுபாடின்றி இருதரப்பினரும் மீன் பிடித்து வந்தனர்
இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழகத்தின் கடற்கரையோரங்களுக்கு தங்கள் படகுகளுடன் வந்து மீன்களை விற்றுவிட்டு இங்கேயே உணவு சாப்பிட்டுவிட்டு திரைப்படங்களைக் கூட பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
அதே போன்று தமிழக மீனவர்களும் இலங்கை வடக்கு மாகாண பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சென்று வருவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வந்தது.
1983ம் ஆண்டுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய மீனவர்கள் இலங்கை கடல் படை தாக்குதலுக்கு உள்ளானார்கள், சுட்டுக்கொல்லப்பட்டனர், படுகாயப்படுத்தப்பட்டனர் . மீனவர்கள் கண், கால், கைகளை இழந்துள்ளனர்.
2009ம் ஆண்டில் இலங்கை உள்நாட்டு போர் ஓய்ந்த பின்னர் நிலைமை மாறும் என்று தமிழக மீனவர்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதன் பின்னரும் அவ்வப்போது மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டனர், படகுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டனர், படகுகள் மாத கணக்கில் இலங்கையில் முட க்கி வைக்கப்பட்டன.
1947ம் ஆண்டில் இந்திய, இலங்கை, இருநாடுகளும் தனித்தனி நாடாக பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்தாலும் கடல் எல்லை பாகுபாடின்றி இருதரப்பினரும் மீன் பிடித்து வந்தனர்
தமிழகத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டம் ஆகிய 6 மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரியும், படகுகளை மீட்டுத் தர கோரியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
2013ம் ஆண்டில் இந்திய , தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல் படையின் அத்துமீறல்கள் மிக அதிகமாகியது. 6 மாவட்ட மீனவர்கள், பல நேரங்களில் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்தனர்.
காரைக்கால், நாகப்பட்டினம், மாவட்ட அளவிலான மீனவ சமுதாய தலைவர்கள் , மத்திய மாநில அரசுகளை அணுகி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் துன்புறுத்தப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்படுவதற்கும், முடக்கி வைக்கப்பட்ட படகுகளை விடுவிக்கச் செய்யவும் மத்திய மாநில அரசுகளை, அமைச்சர்களை அணுகி வந்தனர்.
மாநில அரசு முயற்சியின் பேரில் அவ்வப்போது மீனவர்களும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் படகுகளும் விடுவிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தமிழக மீன்பிடி படகுகள் மீது வன்முறைக் கட்டவிழ்த்துவிடப்படுவதும், படகுகளை தாக்கி உடைப்பதும், மீன்களை சூறையாடுவதும், சில நேரங்களில் துப்பாக்கியால் சுடுவதும் நிகழ்ந்து வந்தது.
அச்சமயத்தில் காரைக்கால் பகுதி மீனவர்களின் கோரிக்கையை, அப்போதைய பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சராக இருந்த புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. வி. நாராயணசாமியிடம் எடுத்து கூறி பிரச்சனைக்கு தீர்வு காண மீனவர்களின் சார்பில் வலியுறுத்தினேன். அத்துடன் எனது தலைமையில் இது குறித்த ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினத்தில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம், காரைக்கால், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய 6 மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி அவர்களை சந்தித்து அவர் மூலமாக மத்திய வெளியுறவு அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்களையும் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களையும் சந்தித்து முறையிட்டோம்.
சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் ஒருவர் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
2014, நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கொழும்புவில் நடைபெற்ற காமன் வெல்த் நாடுகள் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளக்கூடாது என்ற கருத்து பரவலாக தமிழகத்தின் அரசியல் கட்சிகளால் கூறப்பட்டது.
இத்தகைய சூழலில் மத்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தும், 6 மாவட்ட மீனவர் பிரதிநிதிகள், அமைச்சர் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய இலங்கை மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது குறித்து வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
இதே கோரிக்கையை மறுநாள் 2013 நவம்பர் 14ந் தேதி பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை சந்தித்து எங்கள் சங்கமான தேசிய மீனவர் பேரவையின் சார்பில் நிர்வாகிகளும் மற்றும் தமிழக புதுச்சேரி 6 மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் இணைந்து வலியுறுத்தினோம்.
பிரதமரும் மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று காமன் வெல்த் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பார் என்றும் மீனவர் பிரச்சனைக்கு சுமூக உறவு காண பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அறிவித்தார்.
இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
அதே சமயத்தில் தமிழக அரசும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.
அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இரு நாட்டு அரசுகளும் அறிவித்தாலும், குறிப்பிடப்பட்ட தேதியில் பேச்சுவார்த்தை நடைபெற உரிய நடவடிக்கையை எடுக்கப்படாததை கண்டு 6 மாவட்ட மீனவர்கள் புதுச்சேரியில், மீண்டும் கூடி விவாதித்தோம்.
அறிவிக்கப்பட்ட தேதியில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படாவிட்டால் 6 மாவட்ட மீனவர்கள் படகுகளில் வெள்ளை கொடி கட்டிக்கொண்டு இலங்கையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் இது குறித்து சென்னையில் இலங்கை தூதரை சந்திக்கபோவதாகவும் அதன் முடிவாக அறிவித்தோம்.
சென்னையில் இலங்கை துணைத் தூதரை 6 மாவட்ட மீனவர்கள் பிரதிநிதிகளும் நானுமாக சந்தித்து சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
மீனவர்கள் இலங்கையில் குடியேறப்போவதான அறிவிப்பு மற்றும் இலங்கை தூதருடனான சந்திப்பு தமிழக ஊடங்கள் மற்றும் மக்களிடையே மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும், ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள இலங்கை அரசு துணை தூதர் மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே இலங்கை அரசு உயர்மட்டத்தில் தகவல்களை தெரிவித்து தமிழக மீனவர்களின் கருத்துகளை மேலிடத்திற்கு எடுத்துக்கூறி சுமுகமான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்று மாலையே இலங்கையில் முடக்கிவைக்கப்பட்டிருந்த படகுகள் விடுவிக்கப்பட்டன மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய-இலங்கை தமிழ் மீனவர்களுக்கிடையான முதல் பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது
பின்னர் சில மாதங்கள் கழித்து இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்புவில் நடைபெற்றது
மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் சென்னையிலும் 4 வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியிலும் நடைபெற்றது.
இந்த நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரே மீனவ சமுதாய பிரதிநிதியாக கலந்து கொண்ட நானும், தேசிய மீனவர் பேரவை தலைவரும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ வுமான மா. இளங்கோ மற்றும் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட தமிழகத்தின் 5 மாவட்டங்களைச் சார்ந்த மீனவ பிரதிநிதிகள் 12 பேர்கள் புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் 4 பேர் ஆகிய 17 மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மத்திய வெளியுறவு அமைச்சகம், மீன்வள அமைச்சகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், தமிழக, புதுச்சேரி, உயர் அதிகாரிகள் இலங்கை அரசு உயர் அதிகாரிகள் இலங்கை அரசு தூதராக அதிகாரிகள் இப்பேச்சுவார்தைகளில் பார்வையாளர்களாக இடம்பெற்றனர்.
கடைசியாக 4 வது கட்டமாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய மாநில மீன்வளத்துறை அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மீன்வள அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்ற, அமைச்சர்கள் மட்டத்திலான குழுவும், இருநாட்டு உயரதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது.
அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவாத்தை கடைசியாக 2018 ஜனவரியில் நடந்த நிலையில் சமூகமான முடிவு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.
தமிழக மீனவர்களின் ஒரே முதன்மையான கோரிக்கை, “தமிழக மீனவர்களின் இழுவை வலை பயன்பாட்டுக்கு இந்திய அரசு தடை விதிக்கவில்லை ஆதலால் இழுவை வலை மீன்பிடி தொழிலில் மட்டும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
தொழிலை மாற்றி செய்வதற்கு இது வரை எங்களுக்கு அனுபவம் இல்லை. தொழிலை மாற்றி இந்திய ஆழ்கடல் பகுதிக்கு நாங்கள் தொழில் செய்வதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும். அவ்வாறு நாங்கள் செல்வதற்கு 3 ஆண்டுகள் அவகாசம் தேவை அதுவரை இலங்கை கடல் பகுதியில் நாங்கள் மீன் பிடிக்க அனுமதியுங்கள்” என்பது தான் தமிழக மீனவர்களின் கோரிக்கை.
“எங்கள் கடல் வளம் அழிந்து விடுகிறது இழுவை வலையை இலங்கை கடல் பகுதியில் ஒரு நாள் கூட அனுமதிக்க முடியாது” என்பதுதான் இலங்கை அரசு, இலங்கை தமிழ் மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர் பகுதி அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு.
கடைசியாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழர் பகுதி எம். பி யான திரு சுமந்திரன் தலைமையில் மீனவ பிரதிநிதிகள் இந்த நிலைப்பாட்டினை திட்டவட்டமாக தெரிவித்தனர்,.
அதன்பிறகு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது ஆனால் மீனவர்கள் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
அதே சமயத்தில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி முதல் பிடிபட்ட இந்திய படகுகள் இலங்கை கடற்கடையில் முடக்கி வைக்கப்பட்டு பாழாகி போய்விட்டது.
சமீபத்தில் சிலபடகுகள் விடுவிக்கப்பட்டாலும் 2 ஆண்டுகளுக்கு மேலாக கேட்பாரற்று கிடந்த படகுகள் எதற்கும் பயனற்று போய் விட்டன.
இலங்கையில் முடங்கி கிடைக்கும் படகுகளில் 90 சதவீத படகுகள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் பாழாகி விட்டன
இந்தியா மீனவர்களின் சுமார் ரூ. 150 கோடி மதிப்பிலான படகுகள் அழிக்கப்பட்டுவிட்டது.
அதே சமயத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் சில தலைவர்கள் முயற்சியால் மீன்பிடித்தல் தொடர்பான புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற அண்டை நாட்டு படகுகள் எல்லை மீறி மீன்பிடித்தால், மிக அதிகமான அபராதமும் தண்டனையும் வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
உலகத்தின் அனைத்து நாடுகளிலும் அண்டை நாடுகளை சேர்ந்த மீன்பிடி படகுகள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் அவர்களை தவறுதலாக எல்லை தாண்டி வந்ததாக கருதி எச்சரிக்கை செய்து விடுவிக்க வேண்டும் என்று தான் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தெரிவிக்கிறது.
இந்த சூழலில் இந்திய இலங்கை மீனவர்கள் ஒற்றுமையாக மீன் பிடிப்பதற்கு ஒரு சுமுகமான சூழல் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சில நாட்களாக கிடைக்கும் சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் ஒருவர் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைக்க உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கின்றனர்.
கட்டுரையாளர்: மா.இளங்கோ , தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மற்றும் புதுவை முன்னாள் எம்.எல்.ஏ
Read in : English