Read in : English
“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திரன். கேரளா மாநிலத்தின் கொச்சியை அடுத்த முனம்பத்தில் நேற்று முன்தினம் தேச சக்தி என்ற மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மோதி காணாமல் போன மீனவர்கள் 9 பேரில் ஒருவரான கீழ மணக்குடியை சேர்ந்த அருண்குமாரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் அவர்.
“முனம்பத்தில் குமரி மாவட்ட மீனவர்கள் நிறைய பேர் தொழில் செய்கின்றனர். அவர்களில் பலர் அங்கேயே தங்கள் படகுகளிலோ அல்லது அங்குள்ள மீனவர்களுடன் கூட்டு சேர்ந்து படகுகளை வாங்கியோ மீன் பிடித் தொழிலை செய்து வருகின்றனர். அருகில் கொச்சித் துறைமுகம் இருப்பதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும், அதோடு மீன் வளம் மிக்க அரபிக் கடலின் பகுதி அது, அதனால் அதிக மீன் பிடிப்படகுகளும் இருக்கும். ” எனக் கூறும் தமிழ் நாடு மீன் பிடித் தொழிலாளர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட தலைவர் கெ.அலக்ஸாண்டர், கடந்த சில ஆண்டுகளாக படகுகள் கப்பலில் மோதி உயிரிழப்புகள் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் தேச சக்தி என்ற இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஓசியானி என்ற படகில் மோதி தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 3 மீனவர்கள் பலியானதுடன், இன்னும் காணாமல் போன 9 மீனவர்களையும் தேடி வருகின்றனர். காணாமல் போனவர்களில் 7 பேர் குமரி மீனவர்கள். இது போன்றே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று கொச்சி அருகே மீன் பிடிப் படகில் மோதியதில் குமரி மாவட்ட மீனவர்கள் இருவர் பலியாயினர், ஒருவர் காணாமல் போனார். மீதமுள்ள 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர். இச்சம்பவமும் அதிகாலை 2.30 மணியளவில் தான் நடந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர். அது போன்றே, கார்மல் மாதா என்ற படகு தொப்பம்பாடி துறைமுகத்திலிருந்து சென்று, நடுக்கடலில் வலை வீசுவதற்கு ஏதுவாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, பனாமா நாட்டுக் கப்பல் ஒன்று அதன் மீது மோதியதில் படகில் தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களை இரு மணி நேரம் கழித்து, செயின்ட், ஆன்றணி என்ற படகு மீட்டது. வெளிச்சம் இல்லாமல் இருட்டில் வந்த அந்த கப்பல், அப்படியே தப்பி செல்ல முயன்ற போது, கடலோர காவல் படையினர் அதனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
நடுக்கடலில் நடைபெறும் இந்த விபத்துக்கள் அனைத்தும் பின்னிரவு நேரங்களில் தான் நடப்பதாக தூத்தூர் மீனவர் டி.குமார் கூறுகிறார். இவர், முனம்பம் பகுதியில் மீன் பிடித்து அனுபவம்மிக்கவர். “குறிப்பாக, அதிகாலை நேரங்களில் தான் இவ்விபத்துக்கள் பெரும்பாலும் நடக்கின்றன. காலை 5 மணியாகிவிட்டால், வலைகளைப் போடத் தயாராகிவிடுவோம். அதற்காக எதாவது ஒரு இடத்தில் படகை நங்கூரமிட்டிருப்போம்.” எனக் கூறும் அவர், சில நேரங்களில் முன்னரே வந்தால் கூட சில படகுகளில் வரும் மீனவர்கள், மீன் பிடிக்க வேண்டிய இடத்தில் வந்து நங்கூரமிட்டுவிட்டு தூங்கிவிடுவர் எனக் கூறுகிறார்.
பலவேந்திரனோ 4 ஆண்டுகளுக்கு முன்னர், தான் முனம்பத்தில் அனுபவப்பட்ட விபத்தும் கூட அதிகாலை நேரத்தில் நிகழ்ந்தது தான் எனக் கூறுகிறார். “ அன்று நாங்கள் கப்பல் மேற்கு திசை நோக்கி சென்று கொண்டிருந்த போது, நாங்களும் அதே திசையில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் இடம் வந்ததும், நாங்கள் படகை திருப்பிய நேரத்தில் எங்கள் தரப்பில் நடந்த கவனக் குறைவின் காரணமாக அன்று அந்த விபத்து நடந்தது.” எனக் கூறுகிறார் பலவேந்திரன். அவர்கள் சென்ற படகு மோதிய கப்பல் அன்றையதினம் மெதுவாகத் தான் சென்றுள்ளது.
விபத்து நடந்ததும், உடனடியாக அவர்கள் கப்பலை நிறுத்தி, அதில் இருந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அங்கிருந்து சென்றுள்ளனர். “ ஒப்பீட்டளவில் அது ஒரு சிறு விபத்து. ஆனால், இச்சம்பவத்திற்கு பின்னர் நான் படகில் மீன் பிடிக்க செல்வதை நிறுத்திவிட்டேன்” எனக் கூறுகிறார் பலவேந்திரன்.
கப்பல்கள் படகில் மோதி, உயிரிழப்புகள் மற்றும் மீனவர்கள் காணாமல் போனால் மட்டுமே அவை வெளியுலகிற்கு தெரிய வருகின்றன எனக் கூறுகிறார் நீரோடியை சேர்ந்த மீனவரான ஆர்.ஸ்டெல்லஸ். “ இது போன்ற விபத்துக்கள் முனம்பம் பகுதியில் மட்டுமல்ல, அரபிக்கடலின் பல பகுதிகளிலும் நடக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் கவனக்குறைவு தான். அந்த கவனக் குறைவும் கூட, கப்பல் தரப்பில் கொஞ்சம் கூடுதலாகவே இருந்துவிடுகின்றன.” எனக் கூறுகிறார் அவர்.
அதே நேரம் அதிகாலை நேரங்களில் தூக்க கலக்கம் அனைவரையும் ஆழ்த்திவிடுகிறது. கப்பல் மற்றும் படகில் இருக்கும் வெளிச்சங்களை வைத்தே இரவில் எதிரில் படகு அல்லது கப்பல்கள் வருகின்றனவா என கண்டறிந்து அவற்றை இயக்குகின்றனர். “நேற்று முன்தினம் கூட கப்பல் தரப்பிலும் அதை செலுத்தியவர் தூங்கி இருக்க வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறேன்” எனக் கூறுகிறார் ஆர். ஸ்டெல்லஸ்.
பொதுவாக, நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை முக்கியமான நேரமாக கருதுகிறார்கள். அந்த நேரம், கப்பலில் பணிபுரிபவர்களுக்கு தூக்கம் கண்களை தழுவுவது கடினமான நிலையை உருவாக்கிவிடும். “ ஆனால், மோதலை தவிர்க்கும் பொறுப்பு கப்பல் குழுவினருடையது தான். அவர்களிடம் ராடார் உள்ளிட்ட போதுமான வழிகாட்டும் கருவிகள் இருக்கும். அவர்களிடம் இருக்கும் வரைபடங்களிலும், பாதை காட்டிகளிலும் அதிக அளவில் மீன்பிடிக்கப்படும் பகுதிகள் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கும்.” எனக் கூறுகிறார் குமரி மாவட்டத்தை சேர்ந்த கப்பல் கேப்டனான சூசை ஆன்றணி.
அவர் மேலும் கூறுகையில், இன்றைக்கு கப்பல்கள் கடற்கரையை நெருங்கும் வேளையில், அவர்கள் செல்போன்கள் செயல்படத் துவங்குகின்றன. இதனால், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயல்கின்றனர். இதனால், கடற்கரையை நெருங்கும் நேரங்களில் படகுகளுடன் கப்பல்கள் மோதுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்றார்.
கேரள மீன் பிடித் தொழிலாளர் சங்கத்தின் எர்ணாகுளம் மாவட்டத் தலைவர் கே.வி.ராஜிவ் கூறுகையில், “இந்தியாவின் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான கொச்சித் துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்கள் வந்து செல்கின்றன. அதுபோன்றே, இங்கு மீன் பிடிக்கும் கேரளம் மற்றும் தமிழகத்திலிருந்துள்ள படகுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆக மொத்ததில் ஒரு நெருக்கடியான இடமாக இப்பகுதி உருவாகியுள்ளது. அப்படியிருக்க, கப்பல்களும், படகுகளும் நெருக்கடியான இந்த பகுதியில் எப்படி நெருக்கடியான சாலைகளை விழிப்புடன் பயணிப்போமோ அது போன்றே பயணித்தாக வேண்டும். அவரவருக்கான விதிகளை நிச்சயம் கடைபிடித்தாக வேண்டும். என்றாலே கப்பல் விபத்துக்களை தவிர்க்க முடியும்” என்கிறார்.
“கேரளாவில் சில இடங்களில் மீனவர்களுக்கான ரேடியோ வசதியை சிலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த வசதியை, கொச்சி,முனம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலமும், ரேடியோ வசதியை கப்பல் மற்றும் படகுகளில் ஏற்படுத்துவதன் மூலமும், இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பதுடன், இயற்கை சீற்றங்கள் வருவதையும் கூட முன்னரே மீனவர்களுக்கு எச்சரிக்க முடியும்” என்ற ஆலோசனையை முன்வைக்கிறார் மீன் பிடித் தொழிலாளர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட தலைவர் அலெக்ஸாண்டர்.
தேசிய மீனவர் பேரவையின் தலைவரும், பாண்டிச்சேரி முன்னாள் எம்.எல்.ஏவுமான மா.இளங்கோவும் இதனையே வலியுறுத்துகிறார். “ போக்குவரத்து நெருக்கடி மிக்க கடல் பகுதியை கண்காணித்து தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, படகுகள் இருக்கும் பகுதியை ராடார் மூலம் கண்காணித்து கப்பலுக்கு தெரியப்படுத்தலாம். என்றாலே, இது போன்ற விபத்துக்களிலிருந்து மீனவர்களைக் காப்பாற்ற முடியும். ” என்றார் அவர்.
இதனிடையே, இதுகுறித்து கேரள மீன்வளத்துறை அமைச்சர் மேர்சிகுட்டியம்மா தரப்பில் கேட்ட போது, “மீனவர்களை காக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்றும் கூட( நேற்று) ஹெலிகாப்டர் மூலமும், முக்குளிப்பு வீரர்களையும் கூட பயன்படுத்தி காணாமல் போன மீனவர்களை தேடி வருகிறோம். கப்பல் – படகு மோதும் விபத்துக்களை தவிர்க்க நிபுணர்களுடன் ஆலோசித்து தக்க நடவடிக்கையை அரசு எடுக்கும்” என்றார் அவர்.
Read in : English