Read in : English
கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன் பிடி படகில் மீனவர்கள் 14 பேர் நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கொச்சி கடற்பகுதியிலிருந்து 14 நாட்டிகல் மைல் தொலைவில் சேற்றுவா கழிமுகத்தின் மேற்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியில், அவர்கள் படகினை நங்கூரமிட்டு வலைகளை வீசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த தேச சக்தி என்ற சரக்குக் கப்பல் நின்று கொண்டிருந்த ஓஷியானி படகின் மீது மோதியுள்ளது.அத்துடன், அந்த கப்பல் நிறுத்தாமல் அப்பகுதியை விட்டு சென்றுள்ளது. கப்பல் இடித்த வேகத்தில் படகானது முழுவதும் உடைந்து நொறுங்கியது. இதனைத் தொடர்ந்து, உடைந்து போன படகின் பாகங்களை பிடித்தபடியே கடலில் தத்தளித்த இரு மீனவர்களை அப்பகுதியில் படகில் மீன் பிடிக்க வந்த பிற மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நரேன் சர்க்கார் மற்றும் எட்வின் ஆகியோரை மீட்டு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று பேரின் உடல்கள் கடலில் மிதந்ததை தொடர்ந்து அவற்றை கடலோர காவல் படையினர் மீட்டனர். மீதமுள்ளவர்களை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்தவர்கள் குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மணிக்குடி,யுகநாதன், யாகூப் ஆகியோர் மரணமடைந்துள்ளனர். மீதமுள்ள 9 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே, காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் படியும், இடித்து விட்டு நிற்காமல் சென்ற கப்பலை கண்டுபிடிக்கவும் கேரள முதல்வர் பினறாயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
Read in : English