Read in : English
இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் நிலை என்னவென வரும் 12 ஆம் தியதி தான் தெரியவரும் என இந்திய தூதரக அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆம் தியதியன்று கச்சத் தீவு அருகே இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது சமீபத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன.
இலங்கை அரசு வெளி நாட்டு மீன் பிடிப் படகுகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டம் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கைது செய்து தண்டிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தினடிப்படையில், இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் வெளி நாட்டு மீனவர்களிடம் இந்திய ரூபாய் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், இந்த அபாரதத் தொகையை ஒரு மாதத்திற்குள் கட்டவில்லையெனில், மீனவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அவர்கள் படகுகளை அழிக்கவும் வழிவகை செய்கிறது. இச்சட்டம், நிறைவேற்றப்பட்டவுடனேயே அதுகுறித்த விபரங்கள் இந்திய தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மீனவர் பேரவை தலைவரும் புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏவுமான மா. இளங்கோ கூறுகையில், “இச்சட்டம் கொண்டு வரப்பட்டவுடனேயே அதுகுறித்த தகவல் இந்திய வெளியுறவுத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக அரசின் மூலம் மீனவப்பிரதிநிதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், குறிப்பிட்ட அப்பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதை தவிர்ப்பதே நல்லது” எனக் கூறுகிறார்.
இதனிடையே, கடந்த காலங்களில் தாங்கள் நேரடியாக இந்திய இலங்கை தூதரகங்களுடைய உதவியுடன் மீனவர்களையும், படகுகளையும் மீட்டு வந்த நிலையில், தற்போது அதனை செய்ய இயலாமல் உள்ளதாகக் கூறுகிறார் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் நிறுவனர் யு. அருளானந்தம். அவர் மேலும் கூறுகையில், “ தற்போதைய சூழலில் கடந்த 5 ஆம் தியதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க இலங்கை அரசின் பிரதமர் அலுவலகமோ அல்லது அட்டர்னி ஜெனரல் அலுவலகமோ நினைத்தால் மட்டுமே முடியும் என்ற நிலை ஆகிவிட்டது. கடந்த காலங்களில் இலங்கை இந்திய தூரகங்களின் உதவியுடன் பல மீனவர்களை மீட்டு கொண்டு வந்த நிலையில், இந்த புதிய நடைமுறை எங்கள் கைகளைக் கட்டி போட்டது போல் இருக்கிறது. மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க இலங்கையில் உள்ள சில குழுக்களும் கூட எதிர்ப்பு தெரிவிப்பதால் மீனவர்களின் விடுதலை மேலும் சிக்கலாகிறது” என்றும் கூறுகிறார். அத்துடன், இலங்கை அரசின் புதிய சட்டம் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது எனவும், மீனவர்கள் நீண்ட காலம் தொழிலின்றி இலங்கை சிறையில் வாட வேண்டிய நிலையிலிருப்பதைக் குறித்து எவ்வித கருத்தும் இந்திய அரசு தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது புதிய சட்டத்தின் படி இலங்கை அரசு வழக்குத் தொடரப்போவதாக எழுந்துள்ள ஊகங்கள் குறித்து இன்மதி சார்பில் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரியான பாலசந்திரனிடம் கேட்டபோது , “12 ஆம் தியதி தான் முழு விபரமும் தெரியவரும். அன்று, அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள்,” எனக் கூறினார்.
Read in : English