தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?
பொங்கலை ஒட்டி ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் சிறுவர்கள் இருவர் பிரதமர் மோடியின் மாண்பைக் குறைக்கும் வகையில் பேசியதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதற்குப் பின்னர்தான் அது என்ன காட்சி என்ற ஆர்வம் தூண்டப்பட்டது. அந்தக் காட்சி வைரலானது. மன்னரும் அமைச்சரும் உரையாடுவது போல் சித்திரிக்கப்பட்டிருந்த அந்தக் காட்சியில் இரண்டு சிறுவர்கள் பணமதிப்பிழப்பு, கறுப்புப் பண ஒழிப்பு பற்றி எல்லாம் பேசினார்கள். காட்சியில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடாவிடினும் மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது போல் இருந்தது. அதைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பகிர்ந்திருந்தார். ஆகவே, சாமானியர் பலரும் பார்த்து மகிழ்ந்த அந்தக் காட்சி அரசியல் தலைவர்களது பார்வைக்கும் சென்றது.