Site icon இன்மதி

மண்டை ஓட்டு மாலை அணிந்த அர்த்தநாரீஸ்வரர்

For Ilaiyarani, the Tiruvannamalai temple is spiritual solace

Read in : English

மனிதனாக அங்கீகாரம் கோரும் போராட்டம் இந்த நூற்றாண்டுக்குப் புதிது. சட்ட ரீதியாக உரிமைகளைப் பெற்றாலும், சமூகரீதியில் போதிய அங்கீகாரம் இன்றி மனவலியில் அவதிப்படுவோர் அநேகர். ஒதுக்கப்படும்போது, எதிர்க்கத் துணிவற்று, தணிந்துபோவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படித் தணிந்துபோவதால் ஏற்படும் மனக்காயங்களை, குமுறலுடன் கொட்டினார் இளையராணி. விழுப்புரத்தைச் சேர்ந்த அவருக்கு வயது, 38. திருநங்கை, திருநம்பி என்ற பிரிவுக்குள் வகைப்படுத்தாமல், புராணங்களில் கூறப்படும் அர்த்தநாரீஸ்வரர் எனத் தன்னை ஓர் அவதாரமாக அவர் அடையாளப்படுத்துகிறார்.

வாழ்க்கை மீது அபரிமிதமான நம்பிக்கையும், பிரச்சினைகளை எதிர் கொள்ளும் துணிச்சலும் மிக்க அவருடன் இன்மதி.காம் இணைய இதழுக்காக நடத்திய உரையாடலில் தன் மனக்குமுறலைப் பகிர்ந்துகொண்டார்.

கேள்வி: தங்களைத் திருநங்கை என்று அழைக்கலாமா?
இளையராணி: சட்டப்படி இப்போது அப்படித்தான் அழைக்கின்றனர். அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். திருநங்கை என்றோ, திருநம்பி என்றோ என்னை அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. அர்த்தநாரீஸ்வரராக அடையாளப்படுத்திக்கொள்கிறேன். புராணங்களில் சிவன் அம்சத்தைத் திருநங்கை என்றும், விஷ்ணுவின் அம்சத்தைத் திருநம்பி என்றும் அழைக்கின்றனர். நான் அர்த்தநாரீஸ்வரராகவே அடையாளப்படுகிறேன்.

பல இடங்களில் பணிசெய்தேன். வேலைத் தளங்களில் அதிகத் தொந்தரவையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இழி சொற்களைச் சகிக்க வேண்டியிருக்கிறது. பணிக்கோ நன்மையான செயலுக்கோ அங்கீகாரம் கிடைப்பதில்லை

கேள்வி: அன்றாட வாழ்க்கை எப்படி நடக்கிறது…
இளையராணி: பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பை முடித்ததும் வேலை தேடினேன். பல இடங்களில் பணிசெய்தேன். வேலைத் தளங்களில் அதிகத் தொந்தரவையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இழி சொற்களைச் சகிக்க வேண்டியிருக்கிறது. பணிக்கோ நன்மையான செயலுக்கோ அங்கீகாரம் கிடைப்பதில்லை. வேறு வழியில்லை. நானும் வாழ வேண்டியிருக்கிறது. இந்தப் பிறவியை முடிக்க வேண்டும். எனவே தினமும், திருவண்ணாமலை வந்துவிடுவேன்.

யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். கோவில் ராஜகோபுரம் முன் நிற்பேன். என்னைச் சந்திப்போருக்கு நல்வாக்குகளைக் கூறுவேன். மந்திரம் சொல்லிச் சுற்றிப் போடுவேன். கொடுப்பதை வாங்கிக்கொள்வேன். ஒருவர் எவ்வளவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் என் அன்புப் பார்வை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கொடுப்பவர், கொடுக்காதவர் என அளவுகோலை மாற்றுவதில்லை. கிடைப்பதைக் கொண்டு ஜீவனம் செய்கிறேன்.

என் தாயாரையும் காக்கிறேன். சிலர் எதுவும் தர மறுத்துக் கடிந்துகொள்வர். இழி சொற்களை எறிவர். பின்னர் மனம் மாறி, எதையாவது தர முன்வருவர். அவர்களிடம் எந்தச் சன்மானத்தையும் ஏற்க மாட்டேன். இந்தப் பண்பைத் தனித்தன்மையாகப் பேணிவருகிறேன்.

மேலும் படிக்க:

கற்றது தொழில்நுட்பம் கற்றுக்கொடுப்பது பறை

தமிழகத்தில் கல்வி சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

கேள்வி: மந்திரம் சொல்லிச் சுற்றிப் போடுவதாகக் கூறுகிறீர்களே… அது உங்களுக்குப் பயன்படாதா?
இளையராணி: எந்த விதத்திலும் பயன்படாது. எங்களுக்கு வாழ்வில் தொடர்ச்சி எதுவும் இல்லை. அன்றாடம் பொழுதைக் கழிப்பது மட்டுமே முக்கியம். எதிர்காலம் பற்றிய கனவு, குழந்தைகளுக்கு உரிய வாழ்வு என, எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனவே, சுயமரியாதையாக அன்றாடம் வாழ்வது மட்டுமே முக்கியம். எதிர்பார்ப்புகள் இல்லாததால் மந்திரத்தின் தேவை எங்களுக்கு இல்லை.

கேள்வி: விதம் விதமாக ஆடை அலங்காரம் செய்வதில் கவனம் செலுத்துகிறீர்களே?
இளையராணி: உண்மைதான். வருமானத்தில் பெரும்பகுதியை இதற்குதான் செலவழிக்கிறேன். அன்றாடம் பலவித வளையல், காதணிகளை அணிந்து கொள்கிறேன். கவர்ச்சியான பொட்டுகளை வைத்துக்கொள்கிறேன். வித்தியாச உடை அலங்காரம் செய்துகொள்கிறேன்.

எங்களுக்கு உடை தைத்துக் கொடுக்க பொதுவாக, டெய்லர்கள் விரும்புவதில்லை. உடை தைக்க அளவெடுக்கவே தயங்குவர். மிகச் சிலர் மட்டுமே, எங்கள் மீது அக்கறை கொண்டு, கச்சிதமாகத் தைத்துத் தருவர்.

கேள்வி: இந்த நடை உடை பாவனைகள் விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டா?
இளையராணி: அதிகப் பாதிப்பு உண்டு. கடும் சொற்களில் வரும் விமர்சனத்தைக்கூடத் தாங்க வேண்டியிருக்கும். தெருவில் பிச்சை எடுப்பவர்கள் கூட, மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசுவர். அவற்றைத் தாங்கித்தான் ஆக வேண்டும். இந்தப் பிறப்பைப் பயனாக முடிக்க வேண்டுமல்லவா… இது போன்று ஏற்படும் வலியைப் போக்க வேறு வழி ஏதும் தெரியவில்லை. எனவே, சகித்துப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

தலைக்கனம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால் மண்டை ஓடு மணி மாலையை அணிந்துள்ளேன். ஒவ்வொரு செயலையும் மிகவும் சிந்தித்தே செய்கிறேன். மனிதர்களைக் காயப்படுத்தும் சொற்களை நான் பயன்படுத்துவதில்லை. ஏற்றத் தாழ்வுகளுடன் பார்ப்பதும் இல்லை

கேள்வி: நீங்கள் செருப்பு அணிவதில்லையா?
இளையராணி: விதம் விதமாகச் செருப்புகளை வைத்துள்ளேன். திருவண்ணாமலைக்கு வருவதால் அணிவதில்லை. ருத்திராட்ச மாலை, தாமரை மணி மாலை, மண்டை ஓடு மணி மாலைகளைக் கழுத்தில் அணிகிறேன். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மனவலிக்கு ஆறுதல் தருகிறது.

தலைக்கனம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால் மண்டை ஓடு மணி மாலையை அணிந்துள்ளேன். ஒவ்வொரு செயலையும் மிகவும் சிந்தித்தே செய்கிறேன். மனிதர்களைக் காயப்படுத்தும் சொற்களை நான் பயன்படுத்துவதில்லை. ஏற்றத் தாழ்வுகளுடன் பார்ப்பதும் இல்லை.

கேள்வி: சமுதாய வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பாக எதைக் கருதுகிறீர்கள்?
இளையராணி: அர்த்தநாரீஸ்வரராகப் பிறந்ததையே என் பங்களிப்பாகக் கருதுகிறேன். எனக்குச் சந்ததிகள் பிறக்கப் போவதில்லை. அவர்களுக்காக, பூமியில் எதையும் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. சட்டப்படி நானும் சாதாரண மனிதனாக இருந்து திருமணம் முடித்திருந்தால், இரண்டு குழந்தைகள் பெற்றிருப்பேன்.

அவர்களுக்கும் இந்தப் பூமியின் வளங்கள் தேவைப்பட்டிருக்கும். இப்போது, அதற்கான தேவையில்லை. பூமியின் வளங்களை அனுபவிப்பது என்னுடன் முடிந்துவிடும். இதுவே, மனித சமுதாயத்துக்கு நான் செய்யும் பங்களிப்பாகக் கருதுங்கள்.
இவ்வாறு கூறும் இளையராணியின் வாழ்க்கையில் கண்ணீரும், கண்ணியமும் நிறைந்துள்ளன.

Share the Article

Read in : English

Exit mobile version