Site icon இன்மதி

தமிழகத்தில் கல்வி சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள்!

காட்சியை விளக்குவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ள படம்

Read in : English

கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியரில் பலருக்கு கல்வி சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. கட்டணம் செலுத்த இயலாத பல மாணவ, மாணவியரின் படிப்பு சான்றிதழ்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடக்கி வைத்துள்ளன.

கொரோனா தொற்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த போது பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடும்பங்களில் வருவாயின்மை, மாணவ, மாணவியருக்கு கல்வியில் தொடர்ச்சியின்மை, தொழில்துறை உற்பத்தி இழப்பு என பல சிரமங்கள் ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பை முடித்த மாணவ, மாணவியரில் பலர் இப்போது பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

வறுமையால் அவதிப்படும் அந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளன.

படித்த பள்ளிகளை அணுகி, சான்றிதழ் வாங்க முயன்ற பலருக்கு, ‘நிலுவை கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்கள் தருவோம்’ என பள்ளி நிர்வாகங்கள் கைவிரித்து விட்டன

கொரோனா ஊரடங்குக்கு பின், வேலைவாய்ப்பின்மையால் பொருளாதாரத்தில் நலிவுற்ற பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. குழந்தைகள் படிப்பை தொடர இயலவில்லை. படிப்பை தொடர விரும்பிய பலருக்கும், உரிய சான்றிதழ் கிடைக்கவில்லை. தனியார் பள்ளியில் படித்த பலர் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:

நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஈழத்தமிழ் அகதி மாணவி தவிப்பு! 

பிஎச்டி பட்டம் பெறும் இருளர் பழங்குடி மாணவர்!

படித்த பள்ளிகளை அணுகி, சான்றிதழ் வாங்க முயன்ற பலருக்கு, ‘நிலுவை கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்கள் தருவோம்’ என பள்ளி நிர்வாகங்கள் கைவிரித்து விட்டன.

திருவண்ணாமலை நகரில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்த மாணவர் குடும்ப வறுமையால், இடம் பெயரும் நிலை ஏற்பட்டது. அந்த குடும்பம் காஞ்சிபுரம் அருகே மாங்கால் கூட்டு ரோடு பகுதியில் குடியேறியது. பிளஸ் 2 இறுதி தேர்வை, அந்த மாணவன், திருவண்ணாமலை தனியார் பள்ளியில் எழுதியிருந்தான். இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.

கல்வி சான்றிதழ்கள் வாங்க சென்ற போது, இடி என ஒரு தகவலை சொன்னது பள்ளி நிர்வாகம். அதன்படி, அந்த மாணவர் பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய் கட்டண நிலுவையை செலுத்தினால் மட்டுமே, சான்றிதழ்களை வழங்குவதாக தெரிவித்தது. வறுமை சூழலை எடுத்துக் கூறியும், சான்றிதழ் வழங்க பள்ளி நிர்வாகம் முன் வரவில்லை. பலமுறை அலைந்து திரிந்து, விரக்தி அடைந்த அந்த மாணவர் வேறு வழியில்லாமல் தவித்தார்.

காஞ்சிபுரம் மாங்கால் கூட்டு ரோடு பகுதியில் ஒரு சிறிய உணவுக் கடையில் அந்த மாணவனின் அம்மா வேலை செய்து வருகிறார். சான்றிதழ்கள் ஏதும் இல்லாததால், முறையான பணியைத் தேட முடியாமல், கூலி வேலைகள் செய்து வந்தான் அந்த மாணவன். கிட்டத்தட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை.

இந்த விவரம், தூசி மாமண்டூர் பகுதி சமூக செயல்பாட்டாளர் முத்துகுமாரசாமி கவனத்துக்கு வந்தது. தீவிர முயற்சி எடுத்து, தனியார் பள்ளி நிர்வாகியை சந்தித்தார். உரிய சான்றிதழை கொடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டார்.

பள்ளி நிர்வாகம் அவரது வேண்டுகோளை புறக்கணித்தது. பணம் செலுத்தினால் மட்டுமே, சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்தது.

நீண்ட போராட்டத்துக்கு பின், சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் கடந்த வாரம் கொடுத்தது. அந்த கசப்பான அனுபவம் பற்றி முத்துக்குமாரசாமி கூறுகையில், ‘மிகவும் ஏழ்மை நிலையில் வாடும் குடும்பம் அது. தனியார் பள்ளி நிர்வாகத்தை அணுகி, நிலைமையை விளக்கி, சான்றிதழ்களை வழங்கும்படி கேட்டேன். பணம் பெறுவதில்தான் குறியாக இருந்தனர். கடைசியில், பேரம் பேசி, 10 ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டனர். கொடுத்தபின்தான், சான்றிதழ்களை வாங்க முடிந்தது‘ என்று வேதனை தெரிவித்தார்.

இது போல் தமிழகம் முழுதும் பல்லாயிரம் பேர் அவதிப்படுவதாக தெரிவித்தார் முத்துகுமாரசாமி. இந்த பிரச்சினையில் தமிழக அரசு கல்வித்துறை தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பல்லாயிரம் மாணவ, மாணவியர் சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தனியார் பள்ளிகள் அடாவடியால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதை தீர்க்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் பல்லாயிரம் மாணவ, மாணவியர் சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தனியார் பள்ளிகள் அடாவடியால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதை தீர்க்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய, கணினியில் தகவல்களை உள்ளிட்டு, கல்வித்துறை கண்காணிக்கும் வழக்கம் உள்ளது. அதே கணினி தகவல் பதிவில், பள்ளி கல்வியை முடிக்கும் மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டதை உறுதி செய்ய உத்தரவிட்டால், இந்த பிரச்சினை சுலபமாக தீர்க்கப்படும்.

முறைப்படி சான்றிதழ் வழங்க மறுக்கும் கல்வி நிறுவனங்களை வழிக்கு கொண்டு வர இந்த நடைமுறையே போதுமானது.முறைகேடாக சான்றிதழ்களை முடக்கியுள்ளதாக அறிந்தால் அந்த பள்ளி நிர்வாகங்கள் மீது, பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்கள் நலனைக் காக்க வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version