Read in : English
ஒரு காலத்தில் தமிழ்நாட்டுச் சமூகத்திலும் பண்பாட்டிலும் மிகவும் புகழ்பெற்றிருந்த தொன்மையான தாள இசைக் கருவி பறை. பல்வேறு காரணங்களால் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்திருந்தது பறை இசை. இந்தச் சூழ்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த முத்தமிழ் பாரதி என்னும் இளைஞர் பறை இசையின் பெருமையை மீட்டெடுக்க முயன்றுவருகிறார். பறையை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும்போது, அதன் பண்பாட்டுப் பெருமையை மீட்க முடியும் என அவர் நம்புகிறார்.
ஆகவே, தொன்மையான இந்தத் தாள இசைக் கருவியை இசைப்பது எப்படி என்று மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்துவருகிறார். 2018ஆம் ஆண்டில் இந்தப் பயிற்சியை அவர் தொடங்கியிருக்கிறார். அவர், இதுவரை 500க்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பாரதி, பறை இசை மன அழுத்தத்திற்கான மருந்தாகப் பயன்படும் எனக் கருதுகிறார்.
பறை இசையின் அடிப்படைப் பாடங்களை ஒருவர் 15 நாள்களிலேயே கற்றுக்கொள்ள முடியும். சொந்தமாக ஒரு பறை வாங்குவதற்கு உங்களுக்கு வசதி இல்லை என்றால், பறையை வாங்கத் தேவையில்லை. பாரதி தன்னிடமிருக்கும் பறைகளில் ஒன்றை இரவலாகத் தருகிறார். அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில் முழு மூச்சுடன் பறை இசையைக் கற்றுக்கொள்வதில் இறங்கினால், கண்டிப்பாக ஒரு பறையை வாங்கித்தான் ஆக வேண்டும்.
ஒரு பறையின் விலை ரூபாய் 1600 ஆகும். பறை இசைக்க இரண்டு குச்சிகள் தேவைப்படுகின்றன. குச்சிகளில் ஒன்று மற்றொன்றைவிட ஒல்லியாகவும் நீளமாகவும் இருக்கும். நடனங்களின்போதும், திருவிழாக்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், இறுதிச் சடங்குகளிலும் பறை இசைக்கப்படுகிறது.
காரைக்குடியைச் சேர்ந்த முத்தமிழ் பாரதி என்னும் இளைஞர் பறையின் பெருமையை மீட்டெடுக்க முயன்றுவருகிறார்
பி.டெக்., எம்.பி.ஏ. முடித்திருக்கும் பாரதிக்குச் சிறுவயதிலேயே பறை மீது ஈர்ப்பும் பிடிப்பும் இருந்தன. ஆகவே, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, அவர் பறை இசையையும் கற்றுக்கொண்டார். அவர் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பட்டயப் படிப்பாக ‘பறையாட்டக்கலை’ யைப் படித்திருக்கிறார். காரைக்குடியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் தன் வீட்டுக்கு வெளியே பறையை இசைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போதுதான் மாணவர்களுக்குப் பறை இசைப் பயிற்சி கொடுக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் அருகிலுள்ள வீடுகளில் வசித்துவந்த சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். அந்த முயற்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவரிடம் வந்து பறை இசையைக் கற்றுக்கொண்டார்கள்.
மேலும் படிக்க:
பள்ளி மாணவர்களுக்கு கிராமியக் கலைகளைக் கற்றுத்தரும் பட்டதாரி இளைஞர்!
அறிவு நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது: கலை விமர்சகர் இந்திரன் நேர்காணல்
“சிறுவர்களுக்குப் பறை மிகவும் பிடித்திருக்கிறது. பறை இசையை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்பொழுதுதான் முதல்முறையாக அவர்களுக்குப் பறையை இசைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், பறை இசைப்பதற்குக் கடினமான கருவி இல்லை என்பதால் அவர்களுக்கு அதை நிரம்பப் பிடித்துவிட்டது. ஆகவே, கற்றுக்கொள்வதில் பேரார்வம் காட்டினார்கள். அதனால் என்னுடைய வேலையை எளிதாகிவிட்டது” என்கிறார் பாரதி.
மூன்று வகையான பறை இருக்கிறது. வயதுக்குப் பொருத்தமான அளவு கொண்ட பறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், பறையின் அளவு அதை இசைப்பவரது வயதைப் பொருத்தது. சிறுவர்களுக்கு உரியது 9 அங்குலம், பெண்கள் பொதுவாக 11.5 அங்குலம் கொண்ட பறையைப் பயன்படுத்துவார்கள். ஆண்கள் பயன்படுத்துவதுதான் இருப்பதிலேயே பெரியது. அது 12 அங்குலத்தைக் கொண்டிருக்கும். பறை மாட்டுத் தோலிலிருந்து செய்யப்படுகிறது, அதைச் செய்வதற்கு மூன்று நான்கு நாள்கள் ஆகும். “திண்டுக்கல்லில் மரபான பறையைச் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மட்டும்தான் நான் பறையை வாங்குவேன்” என்று பாரதி கூறினார்.
பாரதிக்குச் சிறுவயதிலேயே பறை மீது ஈர்ப்பும் பிடிப்பும் இருந்தன. ஆகவே, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, அவர் பறை இசையையும் கற்றுக்கொண்டார்
பறையின் அதிர்வு ஒருவருடைய கவனக் குவிப்பில் முக்கியப் பங்காற்றுகிறது என்று பாரதி நம்புகிறார். “எளிய தாள முறைகளிலும் அசைவுகளிலும் வெளிப்படும் பறையின் அதிர்வுகள் ஒருவருடைய, குறிப்பாக மாணவர்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் உதவுகிறது. என்னுடைய மாணவர்கள் பலர் பறை இசைக்கத் தொடங்கிய பிறகு தங்களது படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள். இது அவர்களிடம் ஓர் ஒழுங்கையும் முறைப்படுத்துதலையும் உருவாக்கியிருக்கிறது என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
உலகம் முழுவதும் உள்ள பல பழங்குடி தொல்குடி இனத்தவரிடம் பறையைப் போன்ற இசைக்கருவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் பாரதி. “பறையைப் போன்ற இசைக்கருவிகளை ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் வாழும் தொல்குடியினர் இசைக்கிறார்கள்.
நம்முடைய தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் பண்டைய காலத்தில் மக்கள் தகவல் பரிமாற்றத்திற்கும் விளைநிலத்தைப் பாதுகாப்பதற்கும் பறையைப் பயன்படுத்தினார்கள் என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்கள் பறையைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றன. இவற்றிலிருந்து பறையின் முக்கியத்துவம் நமக்குத் தெரியவருகிறது” என்று கூறுகிறார் இந்த 28 வயது இளைஞர்.
சமூகத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்குப் பறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறேன்- முத்தமிழ் பாரதி
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, இணையம் வழியே பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறார். ஏனெனில் இளைஞர்கள் பறையின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். “நான் சமீபத்தில் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன், பறை இசைப்பது எப்படி என்று இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை மாணவர்களுக்கு நடத்தினேன். அவர்கள் மிக வேகமாக தாளத்தைக் கற்றுக்கொண்டார். அதைப் பார்த்து நான் வியந்துபோய்விட்டேன்.” என்று அவர் கூறினார்.
இன்னும் தொடர்ந்து அநேக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் போகிறார் பாரதி. “பறை இசைக்கருவி ஏற்கெனவே பெற்றிருந்த முக்கியத்துவத்தை மீட்டெடுக்க என்னால் முடிந்த அளவிற்கு முயல்வேன். இந்தச் சமூகத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்குப் பறையை ஒரு கருவியாகவும் பயன்படுத்துகிறேன். பறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைக் கற்க பலரும் முன்வர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்” என்று பாரதி கூறியபோது, அவரது முகத்தில் பறை பற்றிய பெருமிதம் பரவியது.
Read in : English