Read in : English

நான் ஏன் பாரதியை விரும்புகிறேன்: வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்குத் தமிழ்க் கட்டுரைப் போட்டி!

இந்த நிமிஷத்தில் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் அறிவொளி  சற்ரே மங்கியிருந்ததையும் அறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் சத்தியம் இல்லை. நாளை வரப்போவது சத்தியம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பேரை மாற்றி அழையுங்கள் என்று பாரதியார் 1916ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதினார். தற்போது தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆட்சி மொழியாகிவிட்டது. தமிழர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

பாரதியார் கவிஞர் மட்டுமல்ல பத்திரிகையாளரும்கூட. அவரது கவிதைகளைப் போல அவரது எழுத்துகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாரதியாரும் தனது இளமைக் காலத்தில் கவிதைப் போட்டி ஒன்றுக்கு தனது கவிதையை அனுப்பி வைத்தார். ஆனால், முதல் பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், முதல் பரிசு பெற்ற கவிதை என்ன என்பது யாருடைய நினைவிலும் இல்லை. ஆனால், அந்தக் கவிதைப் போட்டிக்கு பாரதியார் அனுப்பி இரண்டாம் பரிசு பெற்ற கவிதை செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடல் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றைக்கும் மக்கள்  மனதில் நிற்கிறது.

பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக பாரதி பெயரால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக தமிழக அரசு வெளியிட இருக்கிறது. 37 லட்சம் பள்ளி மாணவ, மாணவியர்க்கு இந்தப் புத்தகம் வழங்கப்பட இருக்கிறது.  புகழ்பெற்ற ஓவியங்களுடன் பாரதியின் கவிதைகள் சித்திரக்கதை நூலாகவும் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாரதியை நினைவு கொள்ளும் வகையில் கவிதைப் போட்டிகள், கட்டுரைகள் போட்டிகள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடக்கும். பொது வெளிகளிலும் நடக்கும். தற்போதும் பாரதியாரின் நினைவாக கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் வாழ்ந்து வரும் மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். 20 வயதும் அதற்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். நான் ஏன் பாரதியை விரும்புகிறேன்! என்ற தலைப்பில் தமிழில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும். கட்டுரைகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் இமெயில் (globalcompetitions2022@gmail.com) மூலம் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரைகள் யூனிகோடு எழுத்துருவில் இருக்க வேண்டும்.

கலைமகள் இதழும் ராஜலட்சுமி குரூப் நிறுவனங்களும் இணைந்து வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கான இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் 10 கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசு உண்டு. போட்டியில் பங்கேற்கும அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. கி.வா.ஜ. ஆகியோர்ஆசிரியர்களாக இருந்த, 90 ஆண்டுகளாக வெளிவரும் கலைமகள் இதழில், பெரியசாமி தூரனால் சேகரிக்கப்பட்ட பாரதியாரின் படைப்புகள் 1940களில் கலைமகளில் வெளியானது. எட்டயபுரம் மகாராஜாவுக்கு பாரதியார் எழுதிய கவிதையின் கையெழுத்துப் பிரதியை பாரதியின் சகோதரர் விசுவநாதன் கலைமகளுக்குக் கொடுத்தார். பாரதியின் கையெழுத்தில் அப்படியே அந்தக் கவிதை 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் கலைமகளில் பிரசுரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997இல் சென்னையில் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, அதன் நிறுவனத் தலைவர் எஸ். மேகநாதனின் முயற்சியால் தற்போது பல்வேறு கல்வி நிலையங்களுடன் இயங்கி வருகிறது.

Read in : English