Site icon இன்மதி

முதலில் ஓணம் பண்டிகை கொண்டாடியது கேரளத்திலா, தமிழ்நாட்டிலா?

Read in : English

 

(இந்தக் கட்டுரை முதலில் செப்டம்பர் 7, 2022 அன்று வெளியிடப்பட்டது)

உலகம் முழுதும் வாழும் கேரள மக்கள் சாதி, மதங்களைக் கடந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் ஓணம் கொண்டாடும் மலையாளிகளுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில்தான் ஓணம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகை தமிழ்நாட்டில் அன்று மிகவும் புகழ் பெற்றிருந்த மதுரை மாநகரில் கொண்டாடப்பட்டதைச் சங்கக் தமிழ் இலக்கியம் பதிவுசெய்துள்ளது. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மாங்குடி மருதனார் எழுதிய ‘மதுரைக் காஞ்சி’மதுரையில் ஓணம் கொண்டாடப்பட்டதை

“கணங்கொள் அவுணர் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நல்நாள்”

என்று குறிப்பிடுகிறது. ஓணம் குறித்த முதல் இலக்கியப் பதிவு இதுதான். ‘மதுரைக் காஞ்சி’ எழுதப்பட்டபோது மலையாள மொழி இல்லை என்பதால் இதற்கு முந்தைய பதிவு மலையாளத்தில் இருக்க வாய்ப்பு எதுவும் இல்லை.

அவுணர்கள் என்று குறிப்பிடப்படும் கூட்டத்தை அழித்த மாயோன் பிறந்த நாள் என்று ‘மதுரைக்காஞ்சி’பாடுகிறது. இந்த நாளில் யானைகளை மோதவிட்டு அதை மக்கள் கண்டு ரசித்தனர் என்பதை மாங்குடி மருதனார்

“கரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்

கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட

நெடுங்கரைக் காழகம் நிலம்பரம் உறுப்ப” என்று பாடுகிறார்.

‘மதுரைக் காஞ்சி’ புகழ்பெற்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பற்றி கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்டது. தொல்பொருள் சான்றுகள் தவிர தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கருத்துகளை வைத்தே அப்போதைய தென்னிந்தியாவின் பண்பாடும் வரலாறும் அறியப்பட வேண்டும். இப்போதைய கேரளம் ‘சேர நாடு’ என்று அழைக்கப்படும் தமிழ் பேசும் பகுதியாகவே குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழர்களை விட மலையாளிகள் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

தமிழ் மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற கரிகாலனின் பேரனே புகழ்பெற்ற சேர மன்னன் ‘சேரன் செங்குட்டுவன்’ என்று தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இவனது வழிவந்த சேர மன்னர்களே கேரளத்தை நெடுங்காலம் ஆண்டுவந்தனர்.

மதுரை நகரில் ஓணம் கொண்டாடப்பட்டிருப்பதால் இந்த விழா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய தமிழ்நாட்டின் ஒரு பகுதியான பாண்டிய நாட்டின் பண்பாட்டில் ஒன்றாக இருந்திருக்கிறது. (Photo credit: Yupi Harris – Flickr)

இந்த இடத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ‘பணத்தோட்டம்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்குக் கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற பாடல் ‘பேசுவது கிளியா? பெண்ணரசி மொழியா?” என்பது. இதில் படத்தின் நாயகி எம்.ஜி.ஆரை ‘சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா? என்று பாடுவதாக இருக்கும். இது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்ததும் கண்ணதாசனிடம் அவர் “என்ன கவிஞர். நான் சேரனுக்கு உறவா?” என்று கேட்டதாகக் கண்ணதாசனின் மகன் கலைவாணன் தனது கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்.

தன்னை ஒரு ‘மலையாளி’என்று கண்ணதாசன் மறைமுகமாக எழுதியிருப்பதாக எம்.ஜி.ஆர் நினைத்ததால் கவிஞரிடம் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். இதற்கு விளக்கமளித்த கண்ணதாசன் “அடுத்த அடி செந்தமிழர் நிலவா என்று வருவதைக் கவனியுங்கள். சேரன் என்பவன் தமிழ் மன்னன்தான்”என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சங்க காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே கேரளம் இருந்திருக்கிறது. ஆனால், கேரளத்தில் ஓணம் கொண்டாடப்பட்டதாகச் சங்க இலக்கியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. சேர நாடு பற்றிக் கூறப்படும் செய்திகளில் ஓணம் பண்டிகை சொல்லப்படவில்லை

சங்க காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே கேரளம் இருந்திருக்கிறது. ஆனால், கேரளத்தில் ஓணம் கொண்டாடப்பட்டதாகச் சங்க இலக்கியத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. சேர நாடு பற்றிக் கூறப்படும் செய்திகளில் ஓணம் பண்டிகை சொல்லப்படவில்லை. பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட ‘பதிற்றுப் பத்து’ ஓணம் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. சேர நாட்டைச் சேர்ந்தவரான இளங்கோ அடிகள் ஓணம் சேரநாட்டில் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரத்தில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

மதுரை நகரில் ஓணம் கொண்டாடப்பட்டிருப்பதால் இந்த விழா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய தமிழ்நாட்டின் ஒரு பகுதியான பாண்டிய நாட்டின் பண்பாட்டில் ஒன்றாக இருந்திருக்கிறது. பாண்டியரின் பண்டிகையே தற்போது கேரள மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது என்று கருதலாம்.

‘மதுரைக் காஞ்சி’ ஓணத்தைப் பற்றிப் பாடும்போது மாபலி பற்றியோ வாமன அவதாரம் குறித்தோ எதுவும் கூறவில்லை. இதற்கு மாறாக முல்லை நிலக் கடவுள் மாயோன் பிறந்த நாள் ஓணம் என்று பாடுகிறது.

மேலும் படிக்க:  தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை

இதில் இன்னொரு செய்தியும் தெரிகிறது. தற்போதைய ‘கிருஷ்ண ஜெயந்தி’ நாள் மாயோன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படவில்லை என்பதும் ‘மதுரைக் காஞ்சி’யில் இருந்து தெரிகிறது. ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைவரான சீமான் கிருஷ்ண ஜெயந்தியை மாயோன் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்துச் சொன்னது சங்கத் தமிழ் இலக்கியத்துடன் பொருந்திவரவில்லை. தமிழர்களின் முல்லை நிலத் தெய்வமான மாயோனுக்கும் விஷ்ணுவின் அவதாரமாக வணங்கப்படும் கிருஷ்ணருக்கும் தொடர்பு எதுவும் இருப்பதாகத் தமிழ் இலக்கியங்கள் பேசவில்லை.

சீமான் கிருஷ்ண ஜெயந்தியை மாயோன் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்துச் சொன்னது சங்கத் தமிழ் இலக்கியத்துடன் பொருந்திவரவில்லை

மாயோனின் பிறந்த நாள் ஓணம் என்றே மதுரைக் காஞ்சி சொல்வதால் மாயோனுக்கும் கிருஷ்ணருக்கும் முடிச்சுபோடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. சங்க இலக்கியத்தில் இந்துத்துவா கருத்துகளைத் தேடுவது ‘கால் பிளேட் பிரியாணியில் கறித்துண்டு தேடுவதுபோல்’ வீண் முயற்சியாகவே தெரிகிறது.

“மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை

செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை- நாம்

காணும் இந்த உலகில் எதும் தனிமையில்லை”

என்று பாடியிருப்பார் கண்ணதாசன்.

“உலகில் எல்லாப் பொருள்களும் ஒன்றுடன் ஒன்று காலத்தாலும் இடத்தாலும் தொடர்பு கொண்டிருக்கிறது. எந்தத் தொடர்பும் இல்லாமல் தனிமையில் எதுவும் இல்லை” என்பது ஜெர்மானிய தத்துவஞானி ஃப்ரீட்ரிக் ஹெகலின் இயக்கவியல் விதிகளில் ஒன்று. இந்த இயக்கவியல் விதிப்படி எதையும் புரிந்துகொள்ளக் காலத்தாலும் இடத்தாலும் அதன் உள் தொடர்புகளையும் பொதுத்தொடர்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது எந்த விஷயத்தையும் புரிந்துகொள்ள அதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வகையில் தென் இந்தியாவின் பண்பாடு, வரலாறு, மக்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள குறிப்பாகத் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ளச் சங்கத் தமிழ் இலக்கியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version