Read in : English
தண்டட்டி ஒரு வித்தியாசமான திரைப்படம். ஒரு திரைப்படத்தை உருவாக்க நாவல் அளவுக்குக் கதை வேண்டியதில்லை, சிறுகதை போதும் என்று சொல்வார்கள். என்ன, ஒரு வார்த்தையைக் கூட அகற்ற முடியாதபடி செறிவுடன் அது இருக்க வேண்டும். அப்படி ஒரு பிரேமை கூட தவிர்க்க முடியாத அளவுக்கு நேர்த்தியான திரைப்படத்தைக் காணும் அனுபவம் அரிதினும் அரிது. சுத்தமான தங்கத்தைப் பார்ப்பது போன்றது. ஆனால், அணிகலன்கள் செய்யத் தங்கத்துடன் வெள்ளி, தாமிரம், துத்தநாகம் என்று பல உலோகங்கள் கலப்பதே இயல்பு.
அப்படித்தான் பெரும்பாலான திரைப்படங்கள் சில பல குறைகளோடு தயாராகின்றன. ரோகிணி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ராம் சங்கையா இயக்கியிருக்கும் ‘தண்டட்டி’யும் அப்படியொன்றாகத்தான் ஜொலிக்கிறதா அல்லது 24 காரட் தங்கமாக மின்னுகிறதா?
மிக நேர்மையான, யாருக்கும் அஞ்சாத, தன்னிலை தவறாத ஒரு போலீஸ்காரராக இருக்கிறார் சுப்பிரமணி. இன்னும் பத்து நாட்களில் ஓய்வு எனும் நிலையில், ஒரு திருடனைப் பிடிக்க இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியைப் பயன்படுத்தியது விசாரணைக் குழுவின் முன்பு அவரை ஆஜர்படுத்தச் செய்கிறது. அப்போது, சிறிய எச்சரிக்கையுடன் அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்படுகிறார். அதற்குப் பிறகும், காவல்நிலையத்தை நாடி வருபவர்களின் குறைகளைத் தீர்க்கவே முயற்சிக்கிறார். அப்படித்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுவன் தனது பாட்டியைக் காணவில்லை என்று அவரை நாடுகிறான்.
அந்தச் சிறுவன் வசிக்கும் ஊரின் பெயர் கிடாரிப்பட்டி. போலீஸ் அந்த ஊருக்குள் நுழையக்கூடாது என்பதை அங்கு வசிக்கும் மக்கள் ஒரு விதியாகவே கடைப்பிடிக்கின்றனர். போலீசாரை அவர்கள் விரட்டியடித்த சம்பவங்களும் உண்டு.
அதனாலேயே இன்ஸ்பெக்டர், சக கான்ஸ்டபிள்கள் சுப்பிரமணியை எச்சரிக்கின்றனர். அதையும் மீறி அந்த சிறுவனுக்கு அவர் உதவத் தயாராகிறார். அவனோடு கிடாரிப்பட்டிக்குப் பயணிக்கிறார். செல்லும் வழியில் அந்தப் பாட்டியின் பெயர் தங்கப்பொண்ணு என்றும், அவரது மகன், மகள்கள் பற்றியும் அறிகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்கப்பொண்ணுவை ஏமாற்றிச் சிக்கலில் சிக்க வைத்தவர்கள்.
கிட்டத்தட்ட ‘டைட்டானிக்’ பட ரோஸ் போல, இக்கதையில் வரும் தங்கப்பொண்ணுவும் தன் காதலை மனதுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார். அந்த படத்தில் வரும் நெக்லஸ் போல, இதில் தண்டட்டி இடம்பெற்றிருக்கிறது
அப்பெண்ணின் மனது என்ன நினைக்கிறது என்பது குறித்த அக்கறை சிறிதும் இல்லாதவர்கள். அனைத்தையும் சொன்ன அந்தச் சிறுவன், பாட்டியின் உடல்நிலை மோசமான சூழலில் பணத் தேவைக்காக அவரது தண்டட்டியைக் கேட்டதையும், அதனைத் தர மறுத்ததையும் சொல்கிறான். காரணம், அது அவரது காதலன் ஆசைஆசையாய் வாங்கித் தந்தது. தனது சகோதரர்களால் ஆணவக்கொலைக்கு ஆளான அக்காதலனின் நினைவாகவே அதனை அவர் காதில் அணிந்திருக்கிறார்.
தண்டட்டியின் பின்னிருக்கும் கதையை அறிந்தபிறகும், அந்தச் சிறுவனுக்குப் பாட்டியின் மீதான பாசம் குறையவில்லை. அந்தப் பேரனின் எதிர்பார்ப்பிற்கேற்ப, தங்கப்பொண்ணுவைக் கண்டுபிடிக்கிறார் சுப்பிரமணி. ஆனால், நோய்வாய்ப்ப்பட்ட உடலோடு பல நாட்கள் பட்டினியாக இருந்த காரணத்தால் அவர் மரணமடைகிறார். அதையடுத்து, தங்கப்பொண்ணுவின் ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்தச் சிறுவனின் வேண்டுகோளை ஏற்று, அவனுடனே கிடாரிப்பட்டிக்குச் செல்கிறார் சுப்பிரமணி.
மேலும் படிக்க: பட்ஜெட் படங்கள்: தமிழ் சினிமாவுக்கு சுவாசம் தருமா?
ஆனால், அந்த பெண்மணியின் சொந்தங்கள் தண்டட்டி மீதே கண் வைக்கின்றன. அதற்கடுத்த நாள் காலையில், அந்த தண்டட்டி காணாமல் போகிறது. யார் அதனை எடுத்திருப்பார்கள் என்ற சந்தேகத்துடன் ஊரே ஒருவரையொருவர் கலவரமாகப் பார்க்கிறது. முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கும் அம்மனிதர்களுக்கு நடுவே தங்கப்பொண்ணுவின் தண்டட்டி மீண்டும் கிடைத்ததா என்று சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
இந்த படத்தைப் பொருத்தவரை, தண்டட்டி என்பது ஆணவக்கொலையில் பறிபோன உயிரை நினைவூட்டும் அடையாளம். புதைந்துபோன சமூகநீதிக்கான நினைவுச்சின்னம். என்னதான் பிள்ளைகள் பெற்றாலும், அப்பெண்ணின் மனதில் இருந்த காதல் அழியவில்லை என்பதற்கான அத்தாட்சி
வயதான பெண்மணிகள் அணிகின்ற காதணியே ‘தண்டட்டி’. காதில் இருக்கும் துளையை மேலும் பெரிதுபடுத்துவதற்கான ஒரு உத்தியே தண்டட்டி அணிவது. சமணர் காலத்தில் அதுவொரு கௌரவமாகக் கருதப்பட்டது. பாம்படம், தண்டட்டி என்று வடிவத்திற்கேற்ப வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த அணிகலனைச் செய்ய அதிகளவு தங்கம் பயன்படுத்தப்படும்.
இது பற்றி இன்மதி தளத்தில் ஸ்ரீகுமார் அர்ஜுனன் எழுதிய ஒரு விரிவான கட்டுரையே வெளியாகியிருக்கிறது. அந்த அளவுக்கு தண்டட்டியின் வரலாறு இப்படத்தில் விவரிக்கப்படவில்லை என்றபோதும், இன்றும் வயதில் மூத்த கிழவிகள் அதனைப் பெருமிதத்துடன் அணிந்து திரிவதைக் காட்டுகிறது இத்திரைப்படம்.
இந்த படத்தைப் பொருத்தவரை, தண்டட்டி என்பது ஆணவக்கொலையில் பறிபோன உயிரை நினைவூட்டும் அடையாளம். புதைந்துபோன சமூகநீதிக்கான நினைவுச்சின்னம். என்னதான் பிள்ளைகள் பெற்றாலும், அப்பெண்ணின் மனதில் இருந்த காதல் அழியவில்லை என்பதற்கான அத்தாட்சி. அதன் பிரதிபலிப்பாகவே, சாதி மீறித் திருமணம் செய்துகொண்ட ஜோடிக்கு அந்தப் பெண்மணி உதவி செய்ததாகக் கதையில் ஒரு திருப்பம் இடம்பெறுகிறது. அது, ஆணவக் கொலைகளை மீறியும் காதல் உயிர்ப்போடு இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ படத்தில் ஆணவக்கொலை எனும் கொடூரம் அப்பட்டமாகக் காட்டப்பட்டிருக்கும். சாதீயப் பெருமிதங்களால் இளம் காதலர்களின் கனவு சின்னாபின்னாமானது சொல்லப்பட்டிருக்கும். அதில் வரும் நாயகியின் பெயர் ஐஸ்வர்யா என்றால், இதில் தங்கப்பொண்ணு அந்த நிலைக்கு ஆளாகிறார். ஐஸ்வர்யாவுக்கு வயதானால் கிட்டத்தட்ட தங்கப்பொண்ணு போலத்தான் தனது வாழ்வை நிறைவு செய்திருப்பார் எனும் அளவுக்கு ‘தண்டட்டி’யின் கதையமைப்பு உள்ளது.
மிகச்சில பேர் பார்க்கும் கலைப்படங்களைவிட ஊரே திரண்டு ரசிக்கும் கமர்ஷியல் படங்களின் தாக்கம் பெரிது. அந்த வகையில், காதலே இந்த பூமியில் நிலைத்திருக்கும் என்பதைச் சாதீய சமூகம் நோக்கிய அறைகூவலாக முன்வைத்திருக்கிறது ‘தண்டட்டி’
அதனால், காதல் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற தொடர்ச்சி என்று கூட இதனைச் சொல்லலாம். ஆனால், அப்படத்தில் தொலைந்துபோன சமத்துவமும் சமூகநீதியும் இப்படத்தில் உயிர்த்தெழுவதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா.
முழுக்க சாதீய ஆதிக்கம் கொண்ட ஒரு ஊரில் அரசின் சட்ட திட்டங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. இதிலும் அப்படித்தான் போலீசாரை ஊருக்குள் விடமாட்டோம் என்று விறைப்பு காட்டுகின்றனர் மக்கள். அதன் பின்னும் கூட சாதீயப் பெருமைகளே வரிசை கட்டி நிற்கின்றன.
’தண்டட்டி’யை எப்படி வார்த்தெடுத்து உருவாக்குவார்களோ, அப்படித்தான் இதில் வரும் பாத்திரங்களும் அச்சில் வார்த்தவை போன்று உருவாக்கப்பட்டிருக்கின்றன. தங்கப்பொண்ணு, சுப்பிரமணி மட்டுமல்லாமல் கோளாறு கிழவி, திருடன் தவளைவாயன், பஞ்சாயத்து தலைவர், ஆவலாதி சொல்லும் சம்பந்தி, ஒப்பாரியால் விமர்சிக்கும் கிழவிகள், சாராயத்தால் உயிரை விடும் மனிதர்கள் என்று பல வித்தியாசமான மனிதர்கள் இப்படத்தில் உலாவுகின்றனர். இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் என்பது போல தங்கப்பொண்ணுவின் மகள்கள், மகன், மருமகள் என்று சொந்தங்களும் வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்டவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.
சுப்பிரமணியாக வரும் பசுபதியும் தங்கப்பொண்ணுவாக வரும் ரோகிணியும் இந்தப் படத்தைக் கடைக்கோடிக்கும் எடுத்துச் செல்ல உதவியிருக்கின்றனர். அதேநேரத்தில் விவேக் பிரசன்னா முதற்கொண்டு படத்தில் ஒப்பாரி பாடும் கிழவிகள் வரை ஒவ்வொருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, வீரமணி கணேசனின் கலை வடிவமைப்பு ஆகியன நம்மை ஒரு கிராமத்திற்குள் அழைத்துச் சென்ற உணர்வை உருவாக்கியிருக்கின்றன. அதற்கேற்ப, ஒரு வாழ்வை நேரில் பார்க்கும் உணர்வைத் தன் படத்தொகுப்பின் வழியே தருகிறார் சிவா நந்தீஸ்வரன். கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ‘காக்கி பய கலங்க’ பாடல் காவல் துறையின் மீதான விமர்சனமாக மாறியிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சியோடு நம்மை ஒன்றவைக்கும் மாயாஜாலத்தை வெகுசாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறது சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை.
மேலும் படிக்க: மாமன்னன் திரைப்படம்: புதிய திசையில் ரஹ்மானின் இசை
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும், உள்ளடக்கத்தில் ரசிகர்கள் பிரமாண்டத்தை உணர வேண்டும். இயக்குநர் ராம் சங்கையா அதனைச் சாதித்திருக்கிறார். அவரது அடுத்தடுத்த படைப்புகளிலும் இதே போன்று சமூக அக்கறையும் விரிவான பார்வையும் நீடிக்க வேண்டும்.
’லாஜிக் பார்த்தால் மேஜிக்கை அனுபவிக்க முடியாது’ என்பது திரையுலகப் பொன்மொழி. அது இப்படத்திற்கும் பொருந்தும். அதுவே, ‘தண்டட்டி’யை கலைப்படம் என்ற பீடத்தில் இருந்து கமர்ஷியல் படம் எனும் பீடத்திற்கு இடம் மாற்றுகிறது. என்ன சொன்னாலும், மிகச்சில பேர் பார்க்கும் கலைப்படங்களைவிட ஊரே திரண்டு ரசிக்கும் கமர்ஷியல் படங்களின் தாக்கம் பெரிது. அந்த வகையில், காதலே இந்த பூமியில் நிலைத்திருக்கும் என்பதைச் சாதீய சமூகம் நோக்கிய அறைகூவலாக முன்வைத்திருக்கிறது ‘தண்டட்டி’.
Read in : English