Site icon இன்மதி

பட்ஜெட் படங்கள்: தமிழ் சினிமாவுக்கு சுவாசம் தருமா?

Read in : English

மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் படங்கள் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழ் திரையுலகம் தோன்றிய நாள் முதலே அப்படியொரு வரலாறு தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு வெளியான டாடா, குட்நைட், போர்தொழில் போன்றவை அதனை அழுத்தம் திருத்தமாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.

சினிமா என்பதே யதார்த்த வாழ்வில் காணாத ஒன்றை நமக்குக் காண்பிப்பது; இயக்குனர் காட்டும் உலகினுள் நம்மைப் புகச் செய்வது; அந்த நேரத்து கவலைகளை, வருத்தங்களை, பிரச்சனைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒரு இரண்டரை மணி நேர காலப் பயணத்தினுள் நம்மைத் திணிப்பது. அதில் சந்தேகமே இல்லை. அதனைச் சாத்தியப்படுத்தவல்லவை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களே.

அதற்கு மாறாக, நம்மையே கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வது போலமைந்த படங்களும் கூட அதே மாயாஜாலத்தை நிகழ்த்தும். நாம் வாழும் உலகமே வேறொன்றாக மாறியதாக பிரமையொன்றை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட படங்கள் மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன..

பீட்சா, காக்காமுட்டை, இன்று நேற்று நாளை, பரியேறும் பெருமாள், டிமாண்டி காலனி, பேரன்பு, அறம், எதிர்நீச்சல் என்று சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு அந்த குறைந்த பட்ஜெட் படங்கள் பட்டியல் நீண்டது. கடந்த ஆண்டு நூறு கோடி வசூலைத் தொட்ட ‘திருச்சிற்றம்பலம்’ கூட சாதாரண பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ‘பீல்குட்’ படம்தான்

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்கள் கோலோச்சிய காலத்தை மாபெரும் கேள்விக்குள்ளாக்கியவர் ரஜினிகாந்த். அவரைத் தொடர்ந்து வந்த விஜயகாந்த், மோகன், ராமராஜன், சரவணன் போன்றவர்கள் திரையில் நாயகன் இப்படித்தான் தோன்ற வேண்டுமென்ற நியதிகளை உடைத்தார்கள். ’நம்மைப் போல இருக்கிறாரே’ என்ற உணர்வை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தினார்கள். அதேபோல, ஸ்ரீதரும், ஏ.பி.நாகராஜனும், பீம்சிங்கும், பந்துலுவும் திருலோகச்சந்தரும், நீலகண்டனும், இன்னும் பல ஜாம்பவான்களும் காட்டிய கதாபாத்திரங்களையும் கதையம்சத்தையும் விட்டு விலகி நடுத்தரக் குடும்பங்களின் வலிகளையும் வேதனைகளையும் பேசின கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்கள். எண்பதுகளில் தேவராஜ் – மோகன், துரை, ஆர்.சி.சக்தி, எம்.ஏ.காஜா, ராமநாராயணன் என்று பெரும்படையே விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வைத் திரைப்படங்களாக மாற்றினார்.

சாதாரண மனிதர்களையும் கதை மாந்தர்களாகப் படைத்தனர். அப்படிப்பட்ட படங்கள் சினிமாவுக்கான கதை சொல்லலையும் சுவாரஸ்யத்தையும் நிறைத்தபோது பெரும்வெற்றிகளைப் பெற்றன. தொண்ணூறுகளுக்கு முன்பே அந்த நிலைமை தலைகீழானாலும், ட்ரெண்ட் என்ற பெயரில் ரொம்பவே சினிமாத்தனத்தை காட்சிகளில் நிறைத்தாலும் திரையில் யதார்த்தம் ஒளிர்வது அரிதாகவே நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. முன்னணி நாயகர்கள், பிரமாண்ட பட்ஜெட் இருந்தும் ‘மொக்கை படம்’ என்ற பாராட்டைப் பெறும் படங்களின் எண்ணிக்கை அதிகமானபோது மீண்டும் சாதாரண மனிதர்களைத் திரையில் காணும் உத்வேகம் வலுப் பெற்றது.

மேலும் படிக்க: நெட்பிளிக்ஸ் சிறிய படங்களை வெளியிடாதா?

அவற்றில் சில படங்கள் யதார்த்தம் போலத் தோற்றமளித்தாலும் வெவ்வேறு வகைமைகளில் அடங்கிப் போயின. அதாகப்பட்டது, குறைந்த பட்ஜெட்டில் வேறொரு உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்லலாம் என்று காட்டின. பீட்சா, காக்காமுட்டை, இன்று நேற்று நாளை, பரியேறும் பெருமாள், டிமாண்டி காலனி, பேரன்பு, அறம், எதிர்நீச்சல் என்று சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு அந்த குறைந்த பட்ஜெட் படங்கள் பட்டியல் நீண்டது.

கடந்த ஆண்டு நூறு கோடி வசூலைத் தொட்ட ‘திருச்சிற்றம்பலம்’ கூட சாதாரண பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ‘பீல்குட்’ படம்தான். அதில் நடித்தவர்களின் சம்பளத்தைக் கழித்துவிட்டால், அதனை எளிதாகக் காண முடியும். இந்த வெற்றிகளே சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் நம்பிக்கை குலையாமல் இருக்க உதவுகின்றன.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் 2, வாரிசு, துணிவு, வாத்தி போன்ற படங்கள் ரூ.100 கோடிக்கும் மேலாக வசூல் செய்து மாபெரும் வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றன. அப்படங்களின் பட்ஜெட் நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். அவற்றின் ஊடே ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘டாடா’ திரைப்படம் ரூ.20 கோடிக்கும் மேலாகத் திரையரங்குகளில் வசூலித்திருக்கிறது. கிட்டத்தட்ட அதே பட்ஜெட்டில் தயாரான ‘குட்நைட்’ நான்கு மடங்கு லாபத்தைச் சம்பாதித்து தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் மட்டுமல்ல பெரும்பாலான மொழிகளில் பிரமாண்ட தயாரிப்புகளே பண்டிகை நாட்கள் அன்று திரைக்கு வருகின்றன. பல நூறு அல்லது ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட்டு மிகச்சில நாட்களில் லாபத்தை அள்ளும் உத்திக்கு ஏற்ற வகையில் அப்படங்களும் உருவாக்கப்படுகின்றன

கடந்த ஜுன் 9ஆம் தேதியன்று வெளியான ‘போர்தொழில்’, தற்போது வரை ரூ.20 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த மூன்று படங்களும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்களைக் களைந்து சம்பந்தப்பட்டவர்களைக் கொஞ்சம் மூச்சுவிட வைத்திருக்கின்றன.

தமிழ் மட்டுமல்ல பெரும்பாலான மொழிகளில் பிரமாண்ட தயாரிப்புகளே பண்டிகை நாட்கள் அன்று திரைக்கு வருகின்றன. பல நூறு அல்லது ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட்டு மிகச்சில நாட்களில் லாபத்தை அள்ளும் உத்திக்கு ஏற்ற வகையில் அப்படங்களும் உருவாக்கப்படுகின்றன. சில படங்கள் வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ முத்திரையுடன் வெளியாகின்றன.

அதனால் பரவலான பார்வையாளர்களை அப்படங்கள் சென்றடைகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதெல்லாம் ‘ஓபனிங்’ பெறவே உதவும். தொடர்ந்து திரையில் ஒரு பட ம் ஓடுவதற்கு உள்ளடக்கம் கெட்டியாக இருக்க வேண்டும். மேற்சொன்ன மூன்று படங்களும் அப்படிப் பார்வையாளர்களை வசீகரித்தவை.

மேலும் படிக்க: தமிழ் சினிமா: மாறிவரும் சண்டைக்காட்சிகள்!

திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவது என்பதே போர் போன்ற தொழிலாகிவிட்டது. ‘போர்தொழில்’ தயாரிப்பாளர்கள் கூட தொடக்கத்தில் அப்படித்தான் நினைத்திருப்பார்கள். இத்தனைக்கும் கார்பரேட் நிறுவனங்கள் அதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அப்படத்தின் வெளியீடு தாமதமானது. இப்போதும் பல சிறு பட்ஜெட் படங்கள் முழுமையாகத் தயாராகியும் வெளியாகாமல் இருப்பதற்கு சேட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை விலை போகாததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

தியேட்டரில் ஓடினால் வாங்கிக் கொள்கிறோம் என்று எதிர்தரப்பு சொல்ல, நீங்கள் வாங்கினால் தைரியமாக தியேட்டர்களில் வெளியிடுவோம் என்று தயாரிப்பு தரப்பு சொல்ல, இந்தக் களேபரத்தில்தான் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய பல படங்கள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றன.

‘டாடா’ படத்தில் ஒரு இளைஞன் தந்தையாகி, தனது குழந்தையைத் தனியனாய் வளர்ப்பது சொல்லப்பட்டது. ’குட்நைட்’ படத்தில் குறட்டைவிடும் இயல்பு கொண்ட ஒருவன் எவ்வாறு தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொண்டு தன்னைத் தேடி வந்த துணையைச் சிரமத்திற்கு உள்ளாக்குகிறான் என்பது சொல்லப்பட்டது. ‘போர் தொழில்’ படத்தில் புத்தக அறிவை மட்டுமே கொண்ட ஒரு இளைஞன் தனது பயத்தையும் மீறி, எதிர்மாறான குணாம்சங்கள் கொண்ட ஒரு மூத்த அதிகாரியுடன் இணைந்து சைக்கோ கொலைகாரன் ஒருவனைப் பிடிப்பது சொல்லப்பட்டுள்ளது.

மூன்றும் வெவ்வேறு வகைமை சார்ந்திருந்தாலும், அவற்றில் பொதுப்படையான அம்சமாக ‘நாடகத்தன்மை’ உள்ளது. அதாவது, ‘டிராமா’ என்ற வகைமையில் படங்கள் வகைப்படுத்தப்படுமே, அது அப்படங்களின் அடிநாதமாக உள்ளது. பார்க்க நாடகம் போல இருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில், ‘நாடகத்தன்மை’ எனும் வகைமையை மிகத்திறமையாகத் திரைக்கதைக்குள் புகுத்துவது அசாதாரணமான காரியம்.

அது நிகழ்ந்தால் மட்டுமே, பார்வையாளர்களால் திரையோடு ஒன்ற முடியும். அதற்குக் கதையில் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளைக் காட்ட வேண்டும். அதில் இருக்கும் பாத்திரங்களை அவர்களைப் போன்றே வடிக்க வேண்டும். கதைத் திருப்பங்கள் காணும்போது, அவர்களே பாதிக்கப்பட்ட உணர்வைத் தூண்ட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, யதார்த்தம் போன்று தோன்றும் காட்சிகளில் தக்க அளவில் சினிமாத்தனத்தை கலக்க வேண்டும். இப்படங்கள் அதனைச் சாதித்திருக்கின்றன.

ஒரு படம் திரையைத் தொடுவதே அரிதென்ற சூழலில், சிறு பட்ஜெட் படங்களை பார்க்க மக்கள் தயாராக இருப்பதும் மிக அவசியம். அதற்கு புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் மனம் வேண்டும்

அதேநேரத்தில், இப்படங்களில் அனைத்து காட்சிகளும் மிகநேர்த்தியாக, கவனமாக, பொறுப்புணர்வோடு உருவாக்கப்பட்டிருந்தன என்பதை மறுக்க முடியாது. செய்நேர்த்தி கொண்ட எந்த கலைப்பொருளும் தன்னகத்தே இருக்கும் கவர்ச்சியை மென்மேலும் அதிகப்படுத்திக் கொள்ளும். இப்படங்களே அதற்கு உதாரணம். கதையம்சத்திலோ, கதாபாத்திர வடிவமைப்பிலோ குறைகள் இல்லாதபோதும் இவற்றுடன் வெளியான சில படங்கள் வெற்றிக்கோட்டைத் தொடாமல் போனதற்கு மேற்சொன்ன அம்சங்களே காரணங்களாக இருக்கும்.

நல்ல உள்ளடக்கமும் வெளியீட்டுக்கு உகந்த சூழ்நிலையும் திரைப்படம் பார்க்கவல்ல மனநிலையும் ஒரு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். மேற்சொன்ன மூன்று படங்களின் வெற்றியை மட்டுமே பார்த்துக்கொண்டு, தொடர்ச்சியாக சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டர்களை நிறைத்துவிடக் கூடாது.

ஆனால், இந்த வாரம் மட்டும் தலைநகரம் 2, பாயும் ஒளி நீ எனக்கு, தண்டட்டி, ரெஜினா, அழகிய கண்ணே, நாயாடி போன்ற படங்களோடு பகத் பாசிலின் கன்னட, மலையாள பைலிங்குவலான ‘தூமம்’ படமும் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஒரு ஆங்கில மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று வெளியாகியிருக்கிறது. மாதக் கடைசியில் பணம் குவிந்திருந்தாலும் அதனைச் செலவழிக்கும் மனப்பாங்கு கம்மி என்ற நியதியைக் கணக்கில் கொண்டால், இப்படங்கள் பெறும் வசூல் கேள்விக்குரியதாகவே அமையும். நம் கணிப்பையும் மீறி இப்படங்கள் கவனம் பெற வேண்டுமென்றால் செய்நேர்த்தி உச்சத்தில் இருக்க வேண்டும். அவை நமக்கு சுவாரஸ்யத்தை அள்ளித் தருவதாகவும் அமைய வேண்டும்.

ஒரு படம் திரையைத் தொடுவதே அரிதென்ற சூழலில், சிறு பட்ஜெட் படங்களை பார்க்க மக்கள் தயாராக இருப்பதும் மிக அவசியம். அதற்கு புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் மனம் வேண்டும். ஓடும் குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவேன் என்பது போன்ற மனப்பாங்கு மறைய வேண்டும். ரசிகர்கள் அப்படியொரு முடிவெடுத்தால், இன்னும் பல சிறு பட்ஜெட் படங்கள் சுவாசம் பெறும். அது தமிழ் திரையில் நல்ல உள்ளடக்கம் தொடரவும் வழி வகுக்கும். அப்படியொரு கனவு எப்போது வசப்படும்?

Share the Article

Read in : English

Exit mobile version