Site icon இன்மதி

மாமன்னன் திரைப்படம்: புதிய திசையில் ரஹ்மானின் இசை

Read in : English

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான மாமன்னன் திரைப்படப் பாடல்கள் கடைக்கோடி ரசிகனையும் கவர்ந்திழுப்பதாக அது அமைந்திருக்கிறதா? திரைத்துறையில் குறிப்பிட்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணையும்போது திரைப்பட வியாபாரம் சம்பந்தப்பட்டவர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உருவாகும்.

சில நேரங்களில் அதுவரையிலான கணிப்பை மீறி வெவ்வேறு திசைகளில் செயல்பட்டு வரும் கலைஞர்கள் ஒன்றிணையும்போது, அதற்கான வரவேற்பு மிகப்பெரியதாக மாறும். மாரி செல்வராஜ் படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உடன் வடிவேலு நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் அப்படித்தான் நோக்கப்பட்டது. அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார் என்றானபிறகு அது பன்மடங்கானது.

‘மாமன்னன்’ என்ற பெயரை முதன்முதலாக அறிந்தபோது, படம் தரும் காட்சியனுபவமும் வேறொரு தளத்தில் இருக்குமென்ற எண்ணம் வலுப்பட்டது. தற்போது மாமன்னன் படப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பரியேறும்பெருமாள், கர்ணன் படங்கள் வழியாகத் தனது படைப்புகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் எழுச்சியையும் பேசும் என்று உணர்த்தியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அரசியல் பின்னணி கொண்ட திரைப் பிரபலமான உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் இணைந்து ஒரு படம் தரப் போகிறார் என்றபோது, எவ்விதச் சமரசமும் இல்லாமல் அவர் தனது பாணியைத் தொடர முடியுமா என்ற கேள்வி பிறந்தது. அந்த நேரத்தில், உதயநிதி அமைச்சராகப் பதவி ஏற்கவில்லை.

‘இது முழுக்க முழுக்க மாரி செல்வராஜ் படம் தான்’ என்ற உறுதிப்பாட்டுக்கு ரசிகர்கள் வந்திருக்கின்றனர். அந்த அளவுக்கு யதார்த்தமும் எழுச்சியை விரும்பும் நோக்கமும் கொண்ட வரிகளைத் தாங்கி நிற்கின்றன பாடல்கள்

இந்தப் படத்தில் ‘மாமன்னன்’ ஆக வருவது வடிவேலுதான் என்று ஓராண்டுக்கு முந்தைய பேட்டிகளிலேயே தெளிவுபடுத்திவிட்டார் உதயநிதி. அதனால், அவர் உட்பட அனைத்து நடிகர்களும் வடிவேலுவைப் பிரதானப்படுத்திய கதையொன்றில் இளமை வீச்சுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பது தெளிவானது. அதேநேரத்தில் இப்படம் மேற்கு மாவட்ட அரசியலைப் பேசுகிறது என்றும், அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபாலின் அனுபவங்களைத் தொட்டுச் செல்கிறது என்றும் பேச்சுகள் எழுந்தன.

தற்போது திமுக ஆட்சி நடந்துவரும் நிலையில், உதயநிதி படத்தில் இக்கூறுகள் இடம்பெறுவது சாத்தியமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. படம் வெளியாகும்போது அதற்கான பதில்கள் தெரியலாம்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் 2: பாடல்களில் பழந்தமிழ் இசை இருக்கிறதா?

தற்போது வெளியான பாடல்கள் மூலம், ‘இது முழுக்க முழுக்க மாரி செல்வராஜ் படம் தான்’ என்ற உறுதிப்பாட்டுக்கு ரசிகர்கள் வந்திருக்கின்றனர். அந்த அளவுக்கு யதார்த்தமும் எழுச்சியை விரும்பும் நோக்கமும் கொண்ட வரிகளைத் தாங்கி நிற்கின்றன பாடல்கள். சமூகத்தின் அடித்தட்டில் வாழும் மக்களின் நூற்றாண்டு கால ஏக்கங்களை நம் மனதுக்குக் கடத்தும் வல்லமை கொண்டதாகத் திகழ்கின்றன.

’நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சி வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி’ என்ற பாடல் தொடங்கும் இடம் ஐம்பதுகளில் வெளியான நாடகத்தனமான படங்களை நினைவூட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக, தனியாக வாழும் என்னால் என்ன செய்ய முடியும் என்கிற தாயின் ஏக்கம் பாடலில் வெளிப்படுகிறது. தனக்கான ஒண்டிவீரன் இல்லையே என்று அந்தப் பெண் குரல் கம்ம, ‘எங்க ஒண்டிவீரன் நீதாண்டி’ என்ற முழக்கத்துடன் அப்பெண்ணின் அதுவரையிலான வாழ்வை மகத்துவப்படுத்துவதாக அடுத்து வரும் பாடல் வரிகள் நீள்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து நசுங்கிப்போன வாழ்க்கையைத் தனதென்று ஏற்றுக்கொண்ட எந்தவொரு பெண் உடனும் இக்குரலைப் பொருத்திப் பார்க்க முடியும்.

(Photo credit: YouTube)

கல்பனா ராகவேந்தர் உட்பட நான்கு பாடகிகள் பாடியிருக்கும் இப்பாடல் எப்படிப்பட்ட காட்சியாக்கத்தைத் திரையில் கொண்டிருக்கும் என்று விவரிக்க இயலவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. திரையரங்குகளில் இந்தப் பாடல் முடியும்போது ஒரு கொண்டாட்டம் நிகழ்ந்து அடங்கிய பூரிப்பை ரசிகர்கள் பெறுவார்கள்.

விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் குரல்களில் ஒலிக்கும் ‘நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே’ பாடல் முதன்முறை கேட்கும்போதே மனதில் நிறைகிறது. காதலில் திளைக்கும் மனங்களின் ‘ஓடிப்பிடி’ விளையாட்டை மனக்கண்ணில் உருவாக்குகிறது. இப்பாடலின் இடையிசையில் ரஹ்மான் தனது வழக்கத்தை மீறியிருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஏனோ இந்த பாடலைக் கேட்டவுடன், ‘அவதாரம்’ படத்தில் வரும் ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ’ பாடல் நினைவிலாடுகிறது.

’ஏ உச்சந்தலை ஓட்டுக்குள்ள நச்சரவம் பூந்ததென்ன பூந்துவிட்ட நச்சரவம் கூத்துக்கட்டி வாழ்ந்ததென்ன’ என்ற பாடல் நமக்குத் தருவது நிச்சயம் புதுவகையான அனுபவம் தான். ’என் பூ விழுந்த கண்ணிரண்ட மண்ணுருவி தின்னதென்ன’, ’என் பாக்குவெட்டி பல்லுக்குள்ள கொட்டடிக்கும் சத்தமென்ன’ என்று இதுவரை நாம் நோக்காத திசையில் வார்த்தைகளைக் கோர்த்து ஆச்சர்யமூட்டுகிறார் யுகபாரதி.

நம்மூர் ஒப்பாரியுடன் ஐரோப்பிய ஓபராவை கலந்தால் என்ன கிடைக்குமென்ற யோசனைக்கு இப்பாடல் நிச்சயம் விடையளிக்கும். மெலிதான ஒலித்தலுடன் தொடங்கி, நம்மை உணர்வெழுச்சிக்கு ஆட்படுத்தும் வரிகளை அழுத்தி உச்சரித்து, இறுதியில் மண்ணோடு கலந்த நீர்ப்பெருக்காய் முடிகிறது. ஆனால், பாடல் முடிந்தபிறகு நம் மனதில் ஒரு தீராத ஓலம் உச்சமெடுத்து ஒலிக்கிறது; நம்மை மீளாத் துக்கத்தில் ஆழ்த்துகிறது. படத்தில் காட்சிக்கோர்வைகளின் பின்னே ஒலிக்கும் வகையில் அமைந்தாலும் கூட, ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக கனத்த மௌனத்தை உருவாக்குவதாக அமையுமென்று நம்பலாம்.

’மன்னா மாமன்னா’ பாடலில் ‘கேட்குதா புது ஓசை’ என்று கேள்வி எழுப்புகிறார் அறிவு. அவரது ராப் பாடல் கட்டமைப்பு நமக்கு வழமையாகிவிட்டது என்றாலும், ’வாழ்வின் ஓசை அது பறை ஓசை’ என்று தொடர்ச்சியாக வார்த்தைகளைக் கோர்த்திருக்கும் விதம் ’வாவ்’ சொல்ல வைக்கிறது.

கமர்ஷியல் படங்களில் ஹீரோயிசம் வெளிப்படுகிற இடங்களில் அல்லது பலவித நிகழ்வுகளை மாண்டேஜ் ஆக காட்டும் சூழலில் ஒரு பாடல் திரையில் ஒலிக்கும். கிட்டத்தட்ட அப்படியொன்றாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது ‘ஏ ஏ வீரனே வேட்டையாடு’ பாடல். ’செயல் செய்திடும் களம் நம்மிடம்’ என்ற வார்த்தைகளை ஏ.ஆர்.அமீன் உச்சரிப்பது அச்சுஅசலாக ரஹ்மானே பாடிய உணர்வை உருவாக்குகிறது. ’படையப்பா’வின் ‘வெற்றிக்கொடி கட்டு’ உட்பட ரஹ்மானின் பல பாடல்கள் தந்த உத்வேகத்தை இது நினைவூட்டுகிறது.

’தந்தானாதானா’ என்ற சந்தத்தோடு ஒலிக்கும் வடிவேலுவின் குரலே ‘ராசா கண்ணு’ பாடல் ஒரு வித்தியாசமான அனுபவம் தருமென்பதை உறுதி செய்துவிடுகிறது. அதற்கேற்றாற்போல ‘மலையிலதான் தீ பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்குது ராசா’ என்று பாடல் நீள்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பல்லாண்டு கால வேதனைகளையும் வலிகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.

பாடல்களைக் கேட்டு முடித்ததும், மாமன்னன் தரும் காட்சியனுபவம் நம்மை வேறொரு தளத்தில் இருத்தும் என்ற எண்ணம் பிறக்கிறது. அந்த வகையில், தன் இசை மூலமாக இதுவரை சென்ற திசையில் இருந்து விலகி வேறொரு திசைக்கு நம்மை ரஹ்மான் இழுத்துச் செல்லக்கூடும்

வயதில் மூத்த ஆணோ, பெண்ணோ குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல பாடல் நகர்கிறது. ’பட்ட காயம் எத்தனையோ ராசா.. அதை சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா’ என்பது போன்ற மிக எளிமையான வரிகள் சாதாரண மக்களின் பேச்சு வழக்கைப் பிரதி எடுத்திருப்பதோடு அந்த மனக்காயங்கள் எப்படிப்பட்டதென்று பாடல் கேட்பவரை உணர வைக்கிறது.

மேற்சொன்ன ஆறு பாடல்களும் திரைக்கதையில் வரும் நிகழ்வுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்தப் படத்தையும் பார்த்தால் நமக்குள் ஒரு கனவுலகம் தோன்றுமே, அதற்கு உருவம் படைக்க முயற்சித்திருக்கிறது ரஹ்மான் பாடியிருக்கும் ‘ஜிகு ஜிகு ரயில்’ பாடல். அடக்குமுறைக்கு உள்ளாகி இந்த வாழ்வு மாறாதா என்று ஏக்கங்களுடன் திரியும் எவரும் இந்த பாடலில் வரும் ‘எள்ளும் நெல்லும் ஒண்ணா வாழும் உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்’ என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன் ஆறுதல் கொள்வர்.

மேலும் படிக்க: சிம்பு நடித்துள்ள பத்து தல: பொருந்தாத ரீமேக் முயற்சி

ஏழு பாடல்களும் ஏழு வண்ணங்களாக வெவ்வேறு விதமான அனுபவங்களைத் தருகின்றன. இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் 1 & 2, பத்து தல என்று சமீப ஆண்டுகளாக ஹிட் ஆல்பங்களை தந்தாலும், அவற்றில் இருந்து ரொம்பவே வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது ‘மாமன்னன்’.

புதுமைகளை ஏற்கிற, தன்னைப் புதுப்பித்துக்கொள்ளத் தயாராக இருக்கிற, புதிய தலைமுறையோடு இணக்கத்துடன் கைகோர்க்கிற ஒருவராகத் திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரால் இன்றைய சாதனையாளர்களோடு இணக்கம் பாராட்ட முடிகிறது. முந்தைய தலைமுறையினர் தடைகளை மீறிச் சாதித்ததைச் சிலாகிக்க முடிகிறது.

ஜனநாயகத்தின் மீதான அவரது நம்பிக்கை, மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க வைத்திருக்கிறது. அந்த இலகுத்தன்மைதான், மாரி செல்வராஜ் படைத்த கதாபாத்திரங்களின் ஒன்றாக அவரை உணர வைத்திருக்க வேண்டும். அது நிகழ்ந்திருந்தால் மட்டுமே, ‘எல்லாம் மாறும்’ என்று உரக்கச் சொல்ல முடியும்.

இந்த ஆல்பம் தந்த உற்சாகத்தைப் பின்னணி இசையிலும் ரஹ்மான் நிறைத்திருப்பார் என்றே தோன்றுகிறது. சில படங்களில் சோகமான காட்சிகளில் பெருங்குரலெடுத்து ஓலமிடுவதைப் பின்னணி இசையாக மாற்றியிருக்கிறார் ரஹ்மான். ‘உச்சந்தலை ஓட்டுக்குள்ள’ பாடலை அப்படியொன்றாக அவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதே நமது விருப்பம். அவ்வாறு செய்யும்போது, எந்தப் பாடலாக இருந்தாலும் அதன் ஆன்மாவின் வீச்சு மட்டுப்படும்.

பாடல்களைக் கேட்டு முடித்ததும், மாமன்னன் தரும் காட்சியனுபவம் நம்மை வேறொரு தளத்தில் இருத்தும் என்ற எண்ணம் பிறக்கிறது. அந்த வகையில், தன் இசை மூலமாக இதுவரை சென்ற திசையில் இருந்து விலகி வேறொரு திசைக்கு நம்மை ரஹ்மான் இழுத்துச் செல்லக்கூடும். இன்னும் சில நாட்கள் அதற்காகக் காத்திருப்போம்!

YouTube player

Share the Article

Read in : English

Exit mobile version