Site icon இன்மதி

யாத்திசை திரைப்படம்: புதியபாதை அமைக்கும் சரித்திரப் புனைவு

Read in : English

யாத்திசை (தென்திசை என்று பொருள்) என்ற திரைப்படம் வரலாற்றுப் புனைகதையில் புதியதொரு களத்தை நிர்மாணிக்கும் முயற்சி.

ஒரு வரலாற்றுப் புனைகதையோ அல்லது திரைப்படமோ எப்போதுமே ஒரு வம்சத்தையும், ஒரு மன்னரையும் முன்னிறுத்தி, அவரது சாதனைகள், தியாகங்கள் மற்றும் வீரத்தைப் புகழ்ந்து, அரண்மனைகள், ஆபரணங்கள், போர்கள், பாரம்பரியங்கள், கோயில்கள், கலைகள் மற்றும் பலவற்றின் கம்பீரத்தையும் வசீகரத்தையும் காட்டும்.

தற்போதைய பொன்னியின் செல்வனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் புதிர், திகில் நிறைந்த சோழர் திரைப்படமான பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு படம் வெளியாகியுள்ளது. யாத்திசை என்ற அதன் தலைப்பும் வித்தியாசம்; கருப்பொருளும், கதைசொல்லும் பாணியும் வித்தியாசம். இதில் ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா போன்ற பெரும் நட்சத்திரப்பட்டாளம் இல்லை.

இயக்குநர் மணிரத்னம் போன்ற பெரிய பிரபலமல்ல. படமும் பெரிய பட்ஜெட் இல்லை. கிளாமர், பிராண்ட் என்ற வணிக மந்திரங்கள் இல்லை. ஆனாலும் யாத்திசை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்று, நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பொன்னியின் செல்வனின் பிரம்மாண்டத்தின் முன்பு யாத்திசை எத்திசையிலும் தொடர்ந்து கொடிகட்டிப் பறக்குமா என்பது கேள்விக்குறிதான்.

யாத்திசை  இரண்டு பெரிய சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான மோதலை அல்ல, மாறாக ஒரு பழங்குடிக்கும் ஒரு பெரிய ராஜ்ஜியத்திற்கும் இடையிலான மோதலைச் சித்தரிக்கிறது

கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னனைச் சுற்றி நடக்கும் கதை என்று கேள்விப்பட்டவுடன், “சோழர்களின் பொன்னியின் செல்வனுக்கு எதிராகக் கிளம்பிவிட்ட பாண்டிய மன்னனோ?” என்று நினைக்கத் தோன்றுகிறது. உடனே வலமிடமாகத் திரிந்து தன்வல்லமையைப் பறைசாற்றி உரையாற்றும் பாண்டிய மன்னன் உடலெங்கும் உற்சாகமும் பொன்னாபரணங்களும் ததும்ப ஏற்றமும் சீற்றமும் கொண்டு ஏறுபோல நடைபயில்வான் என்ற எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்குகின்றன.

ஆனால் திரையில் விரிவது சரித்திரப்புனைவு மரபுகளை நொறுக்கிக் கூழாக்கும் காட்சியும்; சத்தமும்தான்.
யாத்திசை (தென்திசை என்று பொருள்) வரலாற்றுப் புனைகதையில் புதியதொரு களத்தை நிர்மாணிக்கும் முயற்சி.
சீசர், நெப்போலியன், சோழர், பாண்டியர், சேரர், முகலாயர், மௌரியர் போன்ற மன்னர்களின் பெருமைகளையே வரலாறு எப்போதும் எடுத்துரைக்கிறது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் 2: ஆதித்த கரிகாலனின் உண்மை கொலையாளியை அம்பலப்படுத்துமா?

ஆனால் அதிகாரத்தின் காலடிகளில் சிக்கி அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கண்ணீர், வியர்வை, இரத்தத்தைச் சரித்திரம் ஒருபோதும் பதிவு செய்ததில்லை. அவர்களின் குரல்களைச் சரித்திரம் செவிமடுத்துக் கேட்டதில்லை.

இவ்வகையில் யாத்திசை மிகவும் வித்தியாசமாக வந்து, பாண்டிய மன்னன் ரணதீரன் (நடிகர் சக்தி மித்திரன்) சேரர், சோழர்களை வென்றதை விவரிக்கும் போது எயினர், பெரும்பள்ளி ஆகிய பழங்குடிகளின் கலாச்சாரத்தை, மொழியை, உணர்வுகளை, அதிகார விழைவை முன்னிறுத்துகிறது. திரைப்படம் பாண்டிய மன்னனைத் தூக்கிப் பிடிக்கவில்லை. அவனது போர்க்குணம் பற்றி புகழ்பாடவில்லை.

இந்தப் படம் இரண்டு பெரிய சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான மோதலை அல்ல, மாறாக ஒரு பழங்குடிக்கும் ஒரு பெரிய ராஜ்ஜியத்திற்கும் இடையிலான மோதலைச் சித்தரிக்கிறது. வலிமைமிக்க பாண்டிய நாட்டுக்கு எதிரான போரில் கோதி (சேயோன்) தனது எயினர் குலத்தை வழிநடத்துகிறான். சேரர்களையும் சோழர்களையும் தோற்கடிக்க எயினர்களின் உதவியைப் பயன்படுத்திய பாண்டிய மன்னன் ரணதீரன் அந்தப் பழங்குடி மக்களை விரட்டி அடிக்கிறான்.

எயினர் குலத்தை வழிநடத்தும் கோதி, பாண்டிய மன்னன் ரணதீரனை வெல்ல காடுகளில் மறைந்திருக்கும் சோழர்களின் உதவியை நாடுகிறான். கோதி விளிம்புநிலை மக்களின் நாயகனாக முன்னிறுத்தப்பட்டாலும், அவனும் அதிகாரத்தை நேசிப்பவனாகக் காட்டப்படுகிறான். அதிகாரமே ஒரு போதைதானே!

எயினர் மக்கள் உரையாடல்களில் சங்கத்தமிழைப் பயன்படுத்தியது மிகவும் துணிச்சலான விசயம். ஆனால் என்ன, தமிழ் ரசிகர்கள் கூட திரையில் ஓடும் நவீனத்தமிழ் துணைத்தலைப்புகளை வாசித்துத்தான் உரையாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது

எயினரிடம் தோல்வியுற்ற ரணதீரன் தனது கோட்டையை மீட்க மற்றொரு பழங்குடியான பெரும்பள்ளியின் உதவியை நாடுகிறான். பெரும்பள்ளியின் தலைவி அரசனுடன் ஓர் ஒப்பந்தம் செய்கிறாள். தான் வழங்கப் போகும் வீரர்களுக்குக் கைமாறாகப் பாண்டிய அரசன் தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெரும்பள்ளித் தலைவி நிபந்தனை விதிக்கிறாள்.

ஆனால் தன் மனைவியின் வாரிசுகளுக்கு அரசுரிமை கிடையாது என்ற நிபந்தனையோடு ரணதீரன் ஒப்புக்கொள்கிறான். போரில் யார் வெல்வார் – கோதியா, ரணதீரனா? அதுதான் கதையின் மையக்கரு.
படம் மூலம் தெரிவிக்கப்படும் சில செய்திகள்:

1. எந்தக் காலத்திலும் ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கான விளிம்புநிலை மக்களின் இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையிலிருந்து புகழையும் சிம்மாசனத்தையும் பெறுகிறார்கள்.

2. அதிகாரவெறி என்பது சமூகத்தின் மேல்மட்டத்து மக்களையும், கீழ்மட்டத்து மக்களையும் விட்டுவைப்பதில்லை. 3. பெண்கள் எப்போதும் ஆண்களின் ஆண்மைத்தனத்தின், போகத்தின் கருவிகளாகத்தான் பயன்படுத்தப்படுகிறார்கள். 4. கடவுள்களும் அரசாங்கங்களும் வரலாம், போகலாம், ஆனால் மதரீதியாக உயர்ந்த சமூகங்கள் எப்போதும் இருக்கும்.

மேலும் படிக்க: ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படம் எப்படி?

பாண்டிய மன்னனாக சக்தி மித்திரன், எயினர் தலைவனாக சேயோன், தேவராடியாராக ராஜலட்சுமி, பூசாரியாக குரு சோமசுந்தரம் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து, கலை இயக்குநர் ரஞ்சித்குமார், படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், ஆடை வடிவமைப்பாளர் சுரேஷ்குமார், சண்டைப் பயிற்சியாளர் ஓம் சிவப்பிரகாஷ், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி ஆகியோரின் சிறப்பான பங்களிப்போடு இயக்குநர் தரணி ராசேந்திரன் வெகுசிறப்பாக இயக்கியிருக்கிறார்.

எயினர் மக்கள் உரையாடல்களில் சங்கத்தமிழைப் பயன்படுத்தியது மிகவும் துணிச்சலான விசயம். ஆனால் என்ன, தமிழ் ரசிகர்கள் கூட திரையில் ஓடும் நவீனத்தமிழ் துணைத்தலைப்புகளை வாசித்துத்தான் உரையாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கொற்றவை சடங்கு, உணவுப் பழக்கம், பண்பாடு, உடை உடுத்தும் முறை, போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்யும் நவகண்டம் ஆகிய பழந்தமிழர்ப் பண்பாட்டின் அடையாளங்கள் திரையில் செவ்வனே சித்தரிக்கப்பட்டுள்ளன.

புதுமுகங்களை நடிக்க வைத்து குறைந்த பட்ஜெட்டில் ஒரு வரலாற்றுப் படத்தை எடுத்திருக்கும் இயக்குநரைப் பாராட்டியே ஆக வேண்டும். சிஜி குறைபாடுகள், சில நீண்ட காட்சிகள் போன்ற தவிர்த்திருக்க வேண்டிய அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் அதிகாரமும், ஆதிக்கமும்தான் பெரிய ராஜ்ஜியங்களை, ஆட்சியாளர்களை உருவாக்குகின்றன என்ற சரித்திர உண்மையை, எக்காலத்திலும் எத்திசையிலும் பொருந்திப்போகும் செய்தியைப் பொட்டில் அடித்தாற்போல் சொன்னதற்காக யாத்திசையைப் பாராட்டலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version