Site icon இன்மதி

ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படம் எப்படி?

Read in : English

ராகவா லாரன்ஸ் நடித்து பெரிய வரவேற்பைப் பெறாத சிவலிங்கா, மொட்ட சிவா, கெட்ட சிவா படங்களின் வரிசையில் ருத்ரன் படமும் சேர்ந்து இருக்கிறது. கமர்ஷியல் படத்தில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் சொல்ல வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை என்றாலும் கூட, அதனைச் சிறப்புறச் செய்யும்போது நல்ல வரவேற்பு கிடைக்கும்.

திரை மொழியின் வழியாக, நுட்பமாக, எளிதாக, மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாக அதனை வடிவமைத்தால் இன்னும் சிறப்பு. அப்படிப்பட்ட படங்கள் அரிதினும் அரிது. மாறாக, பெரும்பாலான நேரங்களில் நமக்குக் கிடைப்பதென்னவோ பழைய புளித்துப் போன கலவை தான்.

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ருத்ரன்’ படத்தைக் குறித்துப் பேசுகையில், இப்படிப்பட்ட வார்த்தைகள் எதற்கு? அதற்குக் காரணம் இருக்கிறது.

இந்தக் கதையை வைத்துக்கொண்டு அற்புதமான ‘த்ரில்லர்’ ஒன்றைத் தந்திருக்கலாம். சினிமாத்தனம் என்று தெரியாத வகையில் ‘யதார்த்தம்’ போன்று தோன்றும் ட்ரீட்மெண்டை திரைக்கதையில் நிறைத்திருக்கலாம்

ருத்ரன் படத்தின் கதை வழக்கமான ஒன்று. ஒரு நாயகனுக்கும் வில்லனுக்கும் மோதல் வர ஒரு காரணம் வேண்டும். தனிப்பட்ட வகையில் இருவருக்குமான காயமாக அது அமைய வேண்டும். அதற்கேற்ப, நாயகனின் குடும்பத்தைச் சிதைக்கிறார் வில்லன் என்பதுதான் ‘ருத்ரன்’ படத்தின் அடிநாதம்.

அடிபட்ட நாயகன் என்ன செய்வார்? பழி வாங்கத் துடிப்பார். மனதுக்குள் ருத்ர தாண்டவத்தை நிகழ்த்திப் பார்ப்பார். இதிலும் அப்படியொரு பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். அவரது பெயர் தான் ருத்ரன் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

மேலும் படிக்க: ’விடுதலை’ பேசும் அரசியல் யாருக்கானது?

வெளிநாடுகளில் இருக்கும் மகன்கள், மகள்களை எண்ணியவாறே இந்தியாவிலுள்ள பெருநகரங்களில் வாழும் முதியோர்களின் வீடு உள்ளிட்ட உடைமைகள் சில கயவர்களால் கையாடப்படுகின்றன; அப்பெரியவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும், அதனை இயற்கை மரணமாகப் பதிவு செய்து வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.

அந்த பிரச்சினையைப் பேசுவது மட்டுமே ‘ருத்ரன்’ படத்தின் சிறப்பு. ‘ஸ்பாய்லர்’ என்றபோதும், ’ருத்ரன்’ குறித்துப் பேச அது மட்டுமே இருக்கிறது.

உண்மையைச் சொன்னால், இந்தக் கதையை வைத்துக்கொண்டு அற்புதமான ‘த்ரில்லர்’ ஒன்றைத் தந்திருக்கலாம். சினிமாத்தனம் என்று தெரியாத வகையில் ‘யதார்த்தம்’ போன்று தோன்றும் ட்ரீட்மெண்டை திரைக்கதையில் நிறைத்திருக்கலாம். அதனைத் தவிர்த்திருப்பதால், ‘ஏன் இந்த சோதனை’ என்று நாம் தவிக்க வேண்டியிருக்கிறது.

எண்பது, தொண்ணூறுகளில் வந்த கமர்ஷியல் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அதெல்லாமே ‘ருத்ரனில்’ இருக்கிறது. ‘லொள்ளு சபா’ பாணியில் கிண்டலடித்து எதையெல்லாம் ‘இன்ஸ்டாரீல்ஸ்’களாகவும் ’டிக்டாக்’ வீடியோக்களாகவும் இன்றைய தலைமுறை பதிவு செய்கிறதோ, அவையனைத்தும் கூட உள்ளன. அதனால், ‘ருத்ரன்’ படத்தின் அடுத்தடுத்த காட்சி எவ்வாறு நகரும் என்று முன்கூட்டியே சொல்லிவிடலாம்.

(Photo credit: Twitter)

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை என்று ‘டைட்டில்’ பெயர்களைப் பார்த்துவிட்டு தியேட்டருக்குள் நுழைந்தால், ‘ருத்ரன்’ தருவது ஏமாற்றமே. என்ன, சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை சில காட்சிகளைக் காப்பாற்றியிருக்கிறது. திருமாறனின் கதை, திரைக்கதை, வசனத்தில் புதிதென்று எதுவும் இல்லை.

இன்றைய தலைமுறையை ஈர்த்த ‘ஜோர்தாலே’, ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் ரீமிக்ஸ் ஆகியன இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. படம் தரும் அயர்ச்சிக்கு அவை மருந்திடவில்லை. இறுதியாக வரும் சண்டைக்காட்சியோடு சேர்ந்து ஒலிக்கும் பாடல், அப்படியே ‘காஞ்சனா’ பட கிளைமேக்ஸை நினைவூட்டுகிறது.

இவற்றை கோடிட்டுக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது படத்தின் ட்ரெய்லர். அதனைப் பார்க்கும் எவரும் பிரமாண்டமான கமர்ஷியல் படம் என்று ருத்ரன் குறித்து நினைக்க வாய்ப்பிருக்கிறது. உண்மையில், ஒரு நல்ல கமர்ஷியல் படம் தரும் திருப்தியில் சிறிதளவு கூட ருத்ரனில் கிடைக்கவில்லை.

‘கில்லி’, ‘அயன்’ போன்ற கமர்ஷியல் படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தியவை. அவற்றைவிடப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட, விளம்பரப்படுத்தப்பட்ட பல படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. அவ்விரண்டு படங்களும் பார்வையாளர்களுக்குத் தந்த திருப்தியை இதர படங்கள் தராத காரணத்தாலேயே தோல்வியைத் தழுவின.

அப்படிப்பட்ட கமர்ஷியல் படங்களைத் தர, உள்ளடக்கத்தில் சிறப்பான அம்சங்களை நிறைக்க வேண்டும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும்; அதனைச் செய்யாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படைப்பாக விளம்பரப்படுத்துவது நிச்சயம் ஏமாற்று வேலை தான்.

’அமர்க்களம்’ படம் வழியாகத் தமிழில் நடன இயக்குநராக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். ’பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.

இரண்டாம் நாயகன் போன்று அவர் தோன்றிய படம் கே.பாலச்சந்தரின் ‘பார்த்தாலே பரவசம்’. அதன்பிறகு ‘அற்புதம்’, ‘ஸ்டைல்’ என்று இரு தமிழ் படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, தெலுங்கில் படம் இயக்கும் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார். சிறு இடைவெளிக்குப் பிறகு ‘முனி’, ‘காஞ்சனா’ படங்களின் வழியே மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

எவரும் பிரமாண்டமான கமர்ஷியல் படம் என்று ருத்ரன் குறித்து நினைக்க வாய்ப்பிருக்கிறது. உண்மையில், ஒரு நல்ல கமர்ஷியல் படம் தரும் திருப்தியில் சிறிதளவு கூட ருத்ரனில் கிடைக்கவில்லை

பேய்க்கதை என்பதைத் தாண்டி வித்தியாசமான பாத்திரங்கள், காட்சிகள், பாடல்கள், ஒலி வடிவமைப்பு என்று காஞ்சனா படங்கள் அமைந்தன. அவற்றில் பேயோட்டுவதாக வரும் காட்சிகள் கூடக் கொஞ்சம் புதிதாகவும் புதிராகவும் இருந்தன. நாயகன் உடலில் பேய் இருப்பதாகக் காட்டியதால், வில்லனோடு மோதுகையில் அதீத ஆக்‌ஷன் திரையில் தென்பட்டாலும் யாரும் முகம் சுளிக்கவில்லை. ‘போட்டு பொழந்திருப்பா..’ என்று ரசிகர்கள் கத்தும் அளவுக்குக் கதையும் அதற்கு இடம் தந்தது. ‘டெம்ப்ளேட்’ அம்சங்கள் இருந்தபோதும், அந்த வடிவம் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது.

படம் முழுக்கக் குழந்தைத்தனம் என்ற போர்வையில் கொனஷ்டைகள் செய்வார் நாயகன்; அவர் அடிக்கும் காமெடியில் காம நெடி அதிகமிருக்கும்; நாயகியைப் பார்த்தவுடன் காதலில் விழுந்துவிடுவார்; ‘என்னைக் காதலித்தே தீர வேண்டும்’ என்று லவ் டார்ச்சர் தருவார்; ஒரு சுபயோக வேளையில் இருவரும் காதலில் இணைவார்கள்; அந்த காதலைக் குலைக்க ஒரு வில்லன் வருவார்; அதன் பின்னணியில் ஒரு பேய்க்கதை இருக்கும்; உடனே, பழிக்குப் பழியாக கொடூரமான முறையில் வில்லன்களைச் சாய்ப்பார்; ரத்தச் சகதிக்கு நடுவே, நானே கடவுளின் அவதாரம் என்பார்.

மேலும் படிக்க: சிம்பு நடித்துள்ள பத்து தல: பொருந்தாத ரீமேக் முயற்சி

முடிவில், கெட்ட சக்தியை வீழ்த்தும் நல்ல சக்தியாக நாயகன் திகழ்வதுடன் படம் முடிவடையும். பாடல்கள் என்றால், நாயகன் தரையில் கால் படாமல் ‘ஹை ஸ்பீடில்’ ஆடுவார்; புவியீர்ப்பு விசை என்ன விலை என்பது போல, சண்டைக்காட்சிகளில் பளு தூக்கும் எந்திரமாக மாறுவார்; காஞ்சனா சீரிஸ் படங்களில் இவையனைத்தும் உண்டு. மிக முக்கியமாக, அப்படங்களைப் பார்க்கையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயத்துடன் சிரிக்கத் தயாராக இருந்தனர்.

அதே தொனியில், பி.வாசுவின் இயக்கத்தில் ’சிவலிங்கா’ படத்தில் நடித்தார் லாரன்ஸ். மேற்சொன்ன கதையில் இருந்து பேயை அகற்றிவிட்டால், நமக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ கிடைக்கும். இரண்டுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது ‘ருத்ரன்’. இந்த படத்தில் பேய் என்று எதுவும் இல்லாத காரணத்தால், ராகவா லாரன்ஸின் அதீத ஆக்‌ஷன் அவதாரம் திரைக்கதையில் தனித்து துருத்திக் கொண்டு நிற்கிறது.

அது மட்டுமல்லாமல், இக்கதையில் நாயகி, பெற்ற தாய் தந்தை, உடனிருக்கும் நண்பன், அவரது துணை, நிறுவன மேலாளர் என்று எல்லோரையும் பாலியல் சார்ந்து கிண்டலடிக்கிறார் ருத்ரன். காஞ்சனா படங்களிலும் இது இருக்கும். அவற்றில் கோவை சரளா போன்றவர்கள் ஏற்ற பாத்திரங்களின் ’பிளாஷ்பேக்’ ஆகவும், ஆழ்மன விருப்பங்கள் ஆகவும் அக்காட்சிகள் காட்டப்பட்டிருக்கும்; இதில் அப்படிப்பட்ட காரணங்கள் இல்லை என்பதால், அவை அபத்தமாக மாறியிருக்கின்றன.

உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்ட கதைகளில் ரஜினி ஒருகாலத்தில் நடித்திருக்கிறார். ஆனால், தியேட்டரில் எத்தனை பேர் ரசிப்பார்கள் என்ற அவரது கணக்கு தோல்வியுறவே இல்லை. ரசிகர்கள் அவருக்குத் தந்த வரவேற்பு, அவற்றைக் கிண்டலடித்தவர்களின் சத்தத்தைக் காட்டிலும் அதிகம். ரஜினி பெற்ற வெற்றி, நிச்சயமாக லாரன்ஸுக்கு வாய்க்காது. ஏன், ரஜினியே கூட அதனை மீண்டும் நிகழ்த்த முடியாது; அவர் அதனை உணர்ந்த காரணத்தாலேயே, வெவ்வேறு விதமான கதைக்களங்களில் தன்னைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படிப்பட்ட முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு துவண்டு போன சிம்பு, ‘மாநாடு தொடங்கி வேறொரு பாதைக்கு மாறியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் அப்படியொரு மாற்றத்தை எதிர்கொண்டாக வேண்டும். அதற்கான விலையே ‘ருத்ரன்’ திரைப்படம்!

Share the Article

Read in : English

Exit mobile version