Site icon இன்மதி

காலண்டர்களில் கடவுளை காட்டிய ஓவியர் கொண்டைய ராஜு!

Read in : English

இந்தியாவில் ஓவியக் கலையை கடவுளாக கண்முன் நிறுத்தி வணக்கத்துக்கு உள்ளாக்கியவர் ஓவியர் கொண்டைய ராஜு. நுட்பமான வண்ணங்களை கலந்து வரைந்த ஓவியங்களை வழிபாட்டு கூடங்களில் வணங்க வைத்தார். பக்தர்கள் மனதில் அழிக்க முடியாத தடங்களை பதித்தார்.

இந்தியாவில் ஓவியக்கலையால் மிகவும் புகழ் பெற்றவர்கள் மிகச் சில ஓவியர்கள் தான். குறிப்பாக ஓவியர் ரவிவர்மா, கொண்டைய ராஜு ஆகியோர் .அதில் முக்கியமானவர்கள். ஓவியர் கொண்டையராஜு கோவில்பட்டியில் வாழ்ந்தவர். சென்னையில் வைத்தியர் குப்புசாமி ராஜு – அலமேலு மங்கம்மாள் தம்பதியருக்கு, 1899ஆம் ஆண்டில் பிறந்தார். சிறுவயதிலே தந்தையை இழந்தார்.

சென்னை, மயிலாப்பூரில் உறவினரான ஓவியர் ரங்கையா ராஜு பராமரிப்பில் வளர்ந்தார். சென்னை, அரசு கவின் கலைக் கல்லூாரியில் ஓவியப்படிப்பில் சேர்ந்து முதன்மை மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

ஓவியக்கலையில் திரைச்சீலை ஓவியம், ஆயில் பெயிண்டிங்கில் நிபுணராக விளங்கினார். பக்தியில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியிடம் சீடராக சேர்ந்தார். பிரம்மச்சரியம் ஏற்று துறவறத்தை கடைபிடித்து வந்தார். அப்போது ஒரு திருப்புமுறை ஏற்பட்டது. ரமண மகரிஷியின் படம் ஒன்றை பெரிய அளவில் வரைந்திருந்தார் ஒரு ஓவியர். அது ரமணருக்கு திருப்தி தரவில்லை. ஓவியர் கொண்டைய ராஜு அதில் இருந்த குறைபாட்டை நீக்கி சிறப்பாக திருத்தினார். அதுவே ஓவிய வாழ்வில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. துறவரத்தை தவிர்த்து ஆசிரமத்திலிருந்து வெளியேறினார்.

டி.டி சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை ஒரிஜினல் ஸ்ரீ மீனலோசனி பால சற்குண சபா நாடகக்குழுவில் திரைச் சீலை ஓவியம் வரைபவராக சேர்ந்தார். அவை நாடக காட்சிகளுக்குத் தனித்தன்மை வழங்கின

அடுத்து டி.டி சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை ஒரிஜினல் ஸ்ரீ மீனலோசனி பால சற்குண சபா நாடகக்குழுவில் திரைச் சீலை ஓவியம் வரைபவராக சேர்ந்தார். இந்த நாடகக் குழு தமிழகம், கேரளம், இலங்கை, மலேசியா நாடுகளில் நாடகம் நிகழ்த்தியது. இந்த நாடகக் குழுவுடன், கொண்டைய ராஜுவின் திரைச்சீலை ஓவியங்களுக்கும் பயணப்பட்டன.

அவை நாடக காட்சிகளுக்குத் தனித்தன்மை வழங்கின. இதனால் பெரும் புகழ் கிடைத்தது. நாடக காட்சிகளுக்கு மட்டுமல்லாது நடிகர், நடிகையர் மேக்கப், உடை அலங்காரம், தந்திரக் காட்சிகள் போன்றவற்றிலும் ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.

மேலும் படிக்க: ராஜா ரவிவர்மா, கடவுளை ஜனநாயகப்படுத்திய ஓவியர்

இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட காலண்டர்கள் அறிமுகமாகியிருந்த காலம். காலண்டரை சுவர் படத்துடன் இணைத்து வெளியிட்டு வந்தனர். இந்த சுவர் படத்துக்கு கருப்பொருளாக புராண கதை காட்சிகளை ஓவியங்களாக அறிமுகப்படுத்தும் கலை உருவானது. இந்திய புராண மரபு கதைகளுக்கு ஓவியத்தில் வடிவம் தந்ததில் சிறப்பு இடம் பிடித்திருந்தார் ராஜா ரவிவர்மா. மும்பையில் அவர் சொந்தமாக வண்ண அச்சு கூடம் நிறுவியிருந்தார். அதில், ஓவியங்களை அச்சிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தார். அந்த நேரத்தில், காலண்டருக்கு படம் வரைந்து புகழ் பெற்றார் ஓவியர் கொண்டைய ராஜு.

(Photo credit: Artefacts – Facebook page)

அவரது கைவண்ணத்தில் மலர்ந்த ஓவியங்களை காலண்டருடன் அச்சிட்டு உற்பத்தி செய்யும் இடமாக மாறியிருந்தது சிவகாசி. அதற்குரிய இயந்திரங்கள், ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. அவற்றில் அச்சிடப்பட்ட புராண கதைகளை மையமாக கொண்ட கடவுள் படங்களுடன் கூடிய காலண்டர்களுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டது. கொண்டைய ராஜு மற்றும் அவரது சீடர்கள் கைவண்ணத்தில் அவை உருவாக்கப்பட்டன. அச்சிடப்பட்ட அந்த படக் காலண்டர்கள் இந்தியா முழுதும் உள்ள வீட்டின் வழிபாட்டு கூடங்களில் தெய்வங்களாக கொண்டு சேர்க்கப்பட்டன.

சிவகாசி லித்தோ அச்சு கூடங்களில் அச்சிட்ட எண்ணற்ற வண்ண ஓவியங்களை வரைந்தது ஓவியர் கெண்டைய ராஜு மற்றும் அவரது சீடர்கள்தான். பிரதான சீடர்கள் டி,எஸ்.சுப்பையா, டி.எஸ்.மீனாட்சி சுந்தரம் மு.ராமலிங்கம். சிஷ்யர்களுடன் ஒரே குடும்பமாக கோவில்பட்டியில் வசித்து வந்தார்.

சிவகாசி லித்தோ அச்சு கூடங்களில் அச்சிட்ட எண்ணற்ற வண்ண ஓவியங்களை வரைந்தது ஓவியர் கெண்டைய ராஜு மற்றும் அவரது சீடர்கள்தான்

ஓவியர் கொண்டைய ராஜு மணிவிழா நவம்பர் 5, 1958இல் அவரது சீடர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. கோவில்பட்டியில், 1965இல் நடந்த பாராட்டு விழாவில் நடிகர் சிவாஜி கணேசன் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.

அப்போது, ‘ நாத்திகனாக இருந்த என்னை, பக்தி வழியில் திருப்பியது கொண்டைய ராஜுவின் ஓவியங்கள் தான்’ என்று பாராட்டி பேசினார். சாதாரணமாக, நான்கு முழம் வேட்டி மற்றும் சட்டை அணிந்து எளிமையாக காட்சி தருவார் கொண்டையா. நாய்கள் மீது மிகவும் பிரியம் வைத்து இருந்தார். பல இன நாய்களை வளர்த்து வந்தார். குருகுல முறையில் சீடர்களுக்கு ஓவிய பயற்சி அளித்து வந்தார். பாராட்டுக்கள் பல பெற்ற இவர், 1976ஆம் ண்டு ஜூலை 27ஆம் தேதி கோவில்பட்டியில் மறைந்தார்.

மேலும் படிக்க: அந்தநாள் ஞாபகம்: 2015 சென்னைப் பெருவெள்ளம் காவு கொண்ட அரிய புத்தகங்கள்!

தில்லியில் இயங்கும் நேஷனல் சென்டர் ஆர்ட்ஸ் மற்றும் இத்தாலியன் எம்பஸி கல்சுரல் இன்ஸ்டிட்யூட் ஆகிய அமைப்புகள், 2005இல் கூட்டாக இணைந்து, இந்தியாவிலேயே முதன் முதலில் லித்தோவுக்கு வண்ணப் படங்கள் வரைந்து தந்தது கேரளாவை சேர்ந்த ஓவியர் ரவிவர்மா மற்றும் கோவில்பட்டி கொண்டைய ராஜு என்பதை உறுதி செய்தன.

இவ்விரு கலைஞர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்கள் வரைந்த ஓவியங்களையும், வாழ்க்கை வரலாற்று நிகழ்வையும் தில்லியில் காட்சிப்படுத்தியிருந்தன. அதற்கு, லித்தோகிராபி என்ற தலைப்பிடப்பட்டிருந்தது.

Share the Article

Read in : English

Exit mobile version