Site icon இன்மதி

வைக்கம் போராட்டத்தை வரலாற்று பின்னணியுடன் பேசும் புத்தகம்!

Read in : English

கேரளா மாநிலம், கோட்டயம் அருகே வைக்கம் என்ற சிற்றுார் கோவிலைச் சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தின் நுாற்றாண்டை நினைவு கூறும் வகையில் கேரள அரசு, ஓராண்டுக்கு நிகழ்வை திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம். இதனால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அழைத்து கவுரவித்துள்ளது.

பொது இடத்தை பாகுபாடின்றி மக்கள் பயன்படுத்த வலியுறுத்தி நடந்தது இந்த போராட்டம். இதை அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கம் நடத்தியது. இதில் அப்போது தமிழக காங்கிரசில் தலைமை வகித்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முழுமையாக பங்களித்தார்.

ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளை அடியோடி நீக்க அரும் பெரும் பணியாற்றியதால் பின்னர் பெரியார் என்ற சிறப்புடன் அழைக்கப்பட்டார். மக்கள் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட அவருக்கு வைக்கம் வீரர் என்ற கௌரவமும் உண்டு.

வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு பற்றி தமிழகத்தில் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதற்கு விடையளிக்கும் வகையில் வைக்கத்தில் நடந்த போராட்டம் குறித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்துள்ளது, வைக்கம் போராட்டம் என்ற புத்தகம்.

வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு பற்றி தமிழகத்தில் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதற்கு விடையளிக்கும் வகையில் வைக்கத்தில் நடந்த போராட்டம் குறித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்துள்ளது, வைக்கம் போராட்டம் என்ற புத்தகம்

போராட்டத்தின் தாக்கம், போக்கு குறித்து, ஆவணங்களை சரி பார்த்து விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் பழ.அதியமான் கடும் உழைப்பில் புத்தகம் மலர்ந்துள்ளது. வைக்கம் போராட்ட முழுமையான உள்ளூர் வரலாறாக உள்ளது.
போராட்டம் நடந்த போது, நாளிதழ்கள் மற்றம் இதழ்களில் வந்த செய்திகள், அந்த காலத்தில் ஆட்சியிலிருந்த திருவிதாங்கூர் அரசின் ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து, சரி பார்த்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வைக்கத்தில் நடந்தது கோவில் நுழைவு போராட்டம் அல்ல. கோவிலை சுற்றியுள்ள தெருக்களை ஜாதி பாகுபாடின்றி மக்கள் பயன்படுத்த ஏதுவாக தடையை தகர்க்க வேண்டி நடத்தப்பட்டது.

மேலும் படிக்க: விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!

இந்த புத்தகத்தின் முதற்பகுதி, போராட்ட காலத்தில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை இதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் பதிவு செய்துள்ளது. போராட்டம் துவங்கிய மார்ச் 30, 1924 முதல் முடிவுற்ற நவம்பர் 23, 1925 வரை தெளிவாக தொடுக்கப்பட்டுள்ளது. போராட்ட காரணிகள், துாண்டுதல், முன்முயற்சி பற்றி எல்லாம் அடுத்த பகுதியில் உள்ளது.

மூன்றாவது பகுதி, போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு பற்றி பேசுகிறது. காந்தி நேரடியாக கலந்துகொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் அலோசகராக இருந்துள்ளது பதிவாகியுள்ளது. நெருக்கடி ஏற்பட்ட போது 1925 மார்ச் மாதம் களத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். திருவிதாங்கூரை ஆட்சி புரிந்த ராணி, காவல்துறை அதிகாரிகளுடன் பேசிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பேராட்டம் நடப்பதற்கு அடிப்படையாக இருந்தது வைதீக பிராமணர்களின் செயல்பாடு. போராட்டத்தை முறியடிக்க அவர்கள் தீவிரமாக முயன்று வந்தனர். அவர்களுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் காந்தி. அந்த விவாதம் முழுமையாக பதிவாகி இருக்கிறது. காந்தியின் நாவன்மை அதில் வெளிப்பட்டுள்ளது. உள்ளது உள்ளவாறே பதிவாகியுள்ளது.

போராட்டத்தில் பெரியாரின் பங்கு பற்றி நான்காவது பகுதியில் உள்ளது. எந்தச் சூழலில் அவர் போராட்டத்தில் பங்கெடுத்தார். எப்படி செயல்பட்டார் என்பது ஆவணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகள் பற்றியும் பேசியுள்ளது.

போராட்டத்தை வழி நடத்த தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து தலைவர்களை அழைக்க முடிவு செய்தது காங்கிரஸ். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார் ஈ.வெ.ராமசாமியை அழைத்தனர்

அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர் மேரி எலிசபத் கிங் என்பவர், வைக்கம் போராட்டத்தை முன்வைத்து, அறவழி போராட்டங்கள் பற்றி ஓர் ஆய்வை நிகழ்த்தியுள்ளார். அதில் உள்ள கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
போராட்டம் குறித்து ராஜாஜி எழுதிய அறிக்கை, எஸ்.ஸ்ரீநிவாச அய்யங்கார் எழுதிய அறிக்கை போன்றவை முழுமையாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. மலையாள மொழி பேசும் திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியில் நடந்த போராட்டத்தில் தமிழர்கள் பெருமளவு பங்கேற்றதன் பின்னணி மிக அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் துவங்கியதும் தினமும் மூன்று பேர், கோவிலுக்கு அருகில் தெருவுக்கு செல்ல தடுக்கப்பட்ட பகுதியில் நின்று போராடுவர். திருவாங்கூர் அரசு அவர்களைக் கைதுசெய்து வந்தது. இப்படி ஒரு வாரம் நடந்தது. பின், போராட்டத்தின் பின்னணியில் இருந்த தலைவர்களைக் கைது செய்ய முடிவுசெய்தது அரசு. தலைவர்கள் டி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோரைக் கைது செய்தது. போராட்டத்தை வழி நடத்த தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், தமிழ்நாட்டில் இருந்து தலைவர்களை அழைக்க முடிவு செய்தது காங்கிரஸ். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார் ஈ.வெ.ராமசாமியை அழைத்தனர். இவ்வாறு போராட்டத்துக்கு சென்ற தடயம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது பங்களிப்பையும், சிறையில் கொடுமை அனுபவித்ததையும் தருகிறது.

மேலும் படிக்க: பாரதியைச் செழுமைப்படுத்திய பாண்டிச்சேரி

ஒவ்வொரு கட்டத்திலும் காந்தியிடம் ஆலோசனை பெற்று போராட்டம் நடத்தியதை ஆவணங்கள் நிரூபிக்கின்றன. அங்கு உண்ணாவிரதப் போராட்டம், தடை தாண்டும் போராட்டம் போன்றவற்றை காந்தி மறுத்துள்ளார். இந்துக்கள் தவிர பிற மதத்தவர் கலந்துகொண்டதையும் காந்தி ஏற்கவில்லை. பஞ்சாபிலிருந்து வந்து போரட்டக்காரர்களுக்கு உணவளித்தவர்களுக்கும் தடை விதித்திருந்தார்.

ஒரு மாபெரும் போராட்டத்தின் உள்ளூர் வரலாற்று ஆவணமாக திகழும் இந்த நுாலை, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகம் தற்போது மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version