Site icon இன்மதி

விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!

Read in : English

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் வி.என். சாமி தனது 92வது வயதில் விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் என்ற தலைப்பில் 720 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் 130க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்களும் விடுதலைப் போராட்டத்தில் அவர்களது பங்களிப்புகள் குறித்த வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அகில இந்திய அளவில் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அத்துடன், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட {ஜி. சுப்பிரமணிய ஐயர், சிங்காரவேலர், ராஜாஜி, பெரியார், வ.வே.சு. ஐயர், பாரதியார், திருவிக, வரதராஜுலு நாயுடு, மணிக்கொடி சீனிவாசன், வ.ரா., டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், கல்கி, எஸ். சதானந்த், ம.பொ.சி., ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, எம். கல்யாணசுந்தரம் உள்பட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான தமிழகப் பத்திரிகையாளர்களின் வரலாறும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்களையும் தனது வயதையும் பொருட்படுத்தாமல் தேடிச் சேகரித்ததுடன், ஏற்கெனவே தேடி அலைந்து சேகரித்த ஆவணங்களிலிருந்தும் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டு கால உழைப்பில் உருவாகியுள்ள இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு வி.என்.சாமியின் கடும் உழைப்பு தெரியவரும். Ðமொபைல் மூலம் இப்புத்தகத்துக்கான கட்டுரைகளை எழுதி புத்தக உருவாக்கத்துக்கு அனுப்பிவிடுவார். பக்கம் வடிவமைக்கப்பட்ட பிறகு புரூப் பார்ப்பதும் அவர்தான்.

கடந்த இரண்டு ஆண்டு கால உழைப்பில் உருவாகியுள்ள இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு வி.என்.சாமியின் கடும் உழைப்பு தெரியவரும்

‘’இந்தப் புத்தக உருவாக்கத்துக்கும் அது வெளிவருவதற்கும் பல்வேறு நண்பர்களும் அமைப்புகளும் உதவியுள்ளன என்பதையும் அதனால்தான் இந்தப் இவ்வளவு பெரிய புத்தகம் வெளிவருவது சாத்தியமாகியுள்ளது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் வி.என். சாமி.

தஞ்சாவூர் மானம்பூச்சாவடியில் 1931ஆம் ஆண்டில் பிறந்தவர் வி.என்.சாமி. வாண்டு நாகசாமி சாமியய்யா என்பது அவரது முழுப் பெயர். வாண்டு என்பது குடும்பப் பெயர். நாகசாமி என்பது அவரது அப்பா பெயர் சாமியய்யா என்பது அவரது பெயர். பள்ளியில் சாமியய்யா என்ற பெயர் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டதால் சாமி என்ற பெயரையே வைத்துக் கொண்டுவிட்டார். பத்திரிகையாளர் மத்தியில் குறிப்பாக மூத்த பத்திரிகையாளர்கள் மத்தியில் வி.என். சாமி என்றால்தான் நன்கு தெரியும்.

மேலும் படிக்க: குற்றம் புரிந்த மனிதர்களும் குற்றம் புரியா அதிகாரியும்

தஞ்சாவூர் வீரராகவ உயர்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி வரை படித்த அவர் தமிழ் டைப்ரைட்டிங்கும் சுருக்கெழுத்தும் (ஷாட் ஹேண்ட்) கற்றுக் கொண்டார். தஞ்சைப் பகுதியில் பெரியாரின் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வந்தவர் திருவாரூரைச் சேர்ந்த வி.எஸ்.பி. யாகூப். பெரியாரின் பேச்சை சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டு அதை முழுமையாக எழுதிக் கொடுத்ததை வாசித்துப் பார்த்த அவர், நீதிக் கட்சியைச் சேர்ந்த என்.ஆர். சாமியப்ப முதலியாரிடம் சொல்லி வி.என்.சாமியை பெரியாரிடம் கொண்டு போய் சேர்த்தார்.

~அதையடுத்து, 19 வயதில் நான் பெரியாரின் உதவியாளராக ஆனேன். பெரியாருடன் பயணம் செல்ல வேண்டும். கூட்டத்தில் அவர் பேசுவதை எழுதி பெரியாரிடம் தர வேண்டும். பெரியார் அதைப் படித்துப் பார்த்துவிட்டு தேவையானால் திருத்தங்கள் செய்து தருவார். அதை பிரசுரத்துக்காக விடுதலைக் இதழுக்குக் தர வேண்டும் இதுதான் வேலை. மாதம் ரூ.15 சம்பளம். மூன்று மாதத்துக்கு ஒரு முறை சேர்த்து ரூ.50 ஆகத் தருவார். அந்தப் பணத்தை செலவழிக்காமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று என்னிடம் கூறுவார்.

என் கணக்கில் பற்று எழுதிக் கொண்டு வி.என். சாமிக்கு ரூ.50 கொடுக்கவும் என்று விடுதலை மேனேஜர் கோதண்டபாணிக்கு எழுதிக் கொடுப்பார். இப்படி 1951ஆம் ஆண்டு வரை பெரியாரிடம் உதவியாளராக வேலை செய்தேன்” என்கிறார் வி.என்.சாமி.

பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளரின் பிஏவாக மாதம் ரூ.80 சம்பளத்தில் வேலைக்குப் பெரியார் சிபாரிசு செய்தார். Ðபத்திரிகை வேலையில் சேருவதில் ஆர்வமாக இருந்த நான் அந்த வேலையில் சேரவில்லை.

அதன் பிறகு, சிறிது காலம் தருமபுரம் ஆதீனத்தில் அந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட சொத்தை வாங்குவதற்கான ஆவணங்களை டைப் செய்வதற்காக அங்கு ஆறு மாதங்களுக்கு மேல் இருந்தபோது, அங்கு வந்த கருமுத்து சுந்தரம் செட்டியார் அவரை மதுரையில் புதிதாகத் தொடங்கபட்ட தமிழ்நாடு பத்திரிகையில் நிருபராகச் சேர்த்துவிட்டார். அப்போது அவருக்கு நூறு ரூபாய் சம்பளம். 15 ரூபாய் டிராவலிங் அலவன்ஸ்.

“தமிழ்நாடு பத்திரிகையில் நிருபராக வேலை செய்தேன். பத்திரிகையாளர் ஊதியக் குழு சம்பள அறிக்கைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. அதன் நிர்வாகத்தில் இருந்த மாணிக்கம் செட்டியார், என்னை டைப்பிஸ்டாக மாற்றி உத்தரவிட்டார். சென்னை பத்திரிகையாளர் சங்கச் செயலாளராக இருந்த எல். மீனாட்சி சுந்தரத்தின் ஆலோசனையின் பேரில் அண்டர் புரட்டஸ்ட் என்று எழுதி கையெழுத்திட்டு அந்த மாறுதல் ஆணையை வாங்கிக் கொண்டேன்.

அதையடுத்து எனது திருமணத்துக்காக ஒரு வாரம் விடுமுறை கேட்டேன். இரண்டு நாள்தான் தருவேன் என்றார்கள். அதை மறுத்து விடுமுறை எடுத்தேன். என்னை இடைநீக்கம் செய்தார்கள். அப்போது, மதுரையிலும் பத்திரிகையாளர் சங்கம் அமைக்க ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து, நான் தமிழ்நாடு பத்திரிகையிலிருந்து நிரந்தரமாக விலக்கப்பட்டேன்” என்று அவர் தனது பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி அணிந்துரையுடன் வெளியான புகழ் பெற்ற கடற்போர்கள் என்ற இவரது நூல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருது பெற்றது

பின்னர் சுதேசமித்திரன், லிபரேட்டர் பத்திரிகையை நடத்திய ஏ. கிருஷ்ணசாமியின் எங்கள் நாடு, தினச்செய்தி ஆகிய பத்திரிகைகளில் நிருபராக வேலை செய்திருக்கிறார். பின்னர் 1968இல் தினமணியில் நிருபராக வேலைக்குச் சேர்ந்து அங்கு தலைமை நிருபராக இருந்து 1989ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஆனாலும், பிறகு தினமணியில் அரசியல் நிகழ்வுகள் குறித்து பிரபலங்கள் என்ர தலைப்பில் திங்கள்கிழமைதோறும் அரசியல் கட்டுரைகளை எழுதினார். துக்ளக் பத்திரிகையில் நீதிமன்றங்களில் துக்ளக் என்ற தலைப்பில் அபூர்வமான நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி தொடர்ந்து எழுதினார்.

மேலும் படிக்க: ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?: தந்தை பெரியாரின் இதழியல் பார்வை

மூத்த பத்திரிகையாளரான வி.என்.சாமி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். விடுதலைப் போரில் முஸ்லிம்கள், விடுதலைப் போரில் புரட்சிப் பெண்கள், விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்டிரர், விடுதலைப் போரில் வெளிநாட்டுப் பெண்கள், விடுதலைப் போரில் வீரதீரச் செயல்கள், கொடி காக்க உயிர்கொடுத்த தியாகிகள் போன்று பல நூல்களை எழுதியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி அணிந்துரையுடன் வெளியான புகழ் பெற்ற கடற்போர்கள் என்ற இவரது நூல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருது பெற்றது. 2019இல் சீதக்காதி அறக்கட்டளை விருதும் 2020இல் தமிழக அரசின் திருவிக விருதும் பெற்றவர்.

விடுதலைப் போரில் இஸ்லாமிய அறிஞர்களும் மேதைகளும், விடுதலைப்போரில் மௌலிகளும் மௌலானாக்களும் என்ற புத்தகங்களை எழுதி முடித்துள்ள வி.என். சாமி, தற்போது இந்திய விடுதலை இயக்க வரலாற்றை விரிவாக எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளார். பத்திரிகைப் பணியிலிருந்து ஓய்வு பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலானாலும்கூட, இந்த வயதிலும் வி.என்.சாமியின் எழுத்துக்கு ஓய்வு இல்லை.

Share the Article

Read in : English

Exit mobile version