Site icon இன்மதி

தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிக கவனம் பெறும் சென்னை!

Read in : English

இந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பெளதீக உள்கட்டமைப்புக்கு கணிசமான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் திறமையான இளம் தொழில்நுட்ப ஊழியர்களை ஈர்க்கின்ற அம்சங்கள் பட்ஜெட்டில் இல்லை. சென்னை ஒரு பாதுகாப்பான, நவீனமான, அணுகக்கூடிய மற்றும் உலகளவில் இணைக்கப்பட்ட பெருநகரமாக நாடு முழுவதும் உள்ள பலரால் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இளம் உழைப்பாளிகள் அதை மிகவும் பழமைவாத மாநகரமாகவும், காஸ்மோபாலிட்டன் நகருக்கான தகுதிகளை வெல்வதில் பெங்களூருவை விட பின்தங்கியிருப்பதாகவும் கருதுகிறார்கள்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்தக் கருத்து சம்பந்தமான சவால்களில் சிலவற்றை ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டார். சென்னைக்கு அதிக புதிய தலைமுறை பணியாளர்களை ஈர்த்தால் அவர்கள் மாநகரைப் பதுமைப்படுத்தி வளர்த்தெடுப்பார்கள்;அதற்காக நகர்ப்புற சூழலைத் தாராளமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் வேண்டும் என்பதையும் அவர் ஒத்துக்கொண்டார்.

“பெங்களூரு மற்றும் ஹைதராபாத் மாநகரங்கள் திறமைகளை ஈர்ப்பதில் சிறந்தவை. எனினும் நமக்கான நேரம் இதுதான்,” என்று அவர் மார்ச் 25 அன்று சென்னையில் நடந்த ஒரு மாநாட்டில் கூறினார்.

இந்த ஆண்டு தமிழகப் பட்ஜெட்டில் சென்னைக்கான பெளதீக உள்கட்டமைப்புக்கு கணிசமான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் திறமையான இளம் தொழில்நுட்ப ஊழியர்களை ஈர்க்கின்ற அம்சங்கள் பட்ஜெட்டில் இல்லை. மாநகரத்தில் மேம்பாலங்கள், சாலைகள் கட்டமைப்பதில் அரசு செலுத்தும் அதீத கவனம் ஒருதலைப்பட்சமானது. அவை வெறும் ஸ்தூல வடிவங்கள் என்பதைத் தாண்டி ஒரு சிறப்பும் கிடையாது என்று சிலர் அவதானித்து சொல்லியிருக்கின்றனர்.

சென்னைக்கு அதிக புதிய தலைமுறை பணியாளர்களை ஈர்த்தால் அவர்கள் மாநகரைப் பதுமைப்படுத்தி வளர்த்தெடுப்பார்கள்;அதற்காக நகர்ப்புற சூழலைத் தாராளமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் வேண்டும் என்பதை நிதி அமைச்சர் ஒத்துக் கொண்டிருக்கிறார்

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா சாலையில் நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்பது இந்த ஆண்டு பட்ஜெட்டின் உயர்தனிச் சிறப்பம்சமாகும். சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் மீது சர்வதேச பொறியியல் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து கட்டப்படும் மேம்பாலம், நவீன பொறியியல் அதிசயமாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார். இது சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த விலையுயர்ந்த திட்டம் அசாதாரணமானது, ஏனெனில் அண்ணா சாலையின் கீழ் அதிகத்திறன் கொண்ட மெட்ரோ ரயில் கட்டமைப்பை உருவாக்கியதின் அசல் நோக்கம் அதிக பொது போக்குவரத்து பயணிகளை ஈர்ப்பதும், மேல்நிலை சாலை போக்குவரத்தைக் குறைப்பதும் ஆகும். அதாவது, சிங்கப்பூர், லண்டன் போல, ஆர்எப்ஐடி, சிசிடிவி போன்ற தொடர்பு இல்லாத தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அண்ணாசாலையைப் பயன்படுத்தும் கார் உரிமையாளர்களிடம் நெரிசல் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் தற்போதைய வரவுசெலவுத் திட்டம் தனியார் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ கூடுதல் சாலை அடுக்கு உருவாக்கப்படும் என்று உறுதியளிக்கிறது.

மேலும் படிக்க: பழைய ஓய்வூதியம்: திட்டம் அரங்கேறுமா?

இதனால் ஏற்படும் செலவினங்கள் பொது மக்களின் தலையில்தான் விழும். சென்னையில் கார் மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு சிறப்பு வரி விதிப்பதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டலாம். இதுகுறித்து தியாகராஜன் யோசிக்கலாம்.

‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் செயற்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற தமிழகத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட வடசென்னைப் பகுதியில் உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் வளர்ச்சியில் உள்ள இடைவெளிகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கத்தைக் கொண்ட இந்தத் திட்டம் இந்தாண்டில் வெளியிடப்பட்ட முக்கியமானதோர் அறிவிப்பு.

சென்னைப் பெருநகர் வளர்ச்சி முகமையின் (சிஎம்டிஏ) நிதியை தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.

வடசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி பிளாக், செவிலியர் பயிற்சிப் பள்ளி மற்றும் விடுதி ஆகியவை ரூ.147 கோடி செலவில் கட்டப்பட உள்ளன. போக்குவரத்துத் துறையில் உள்ள மதிப்புமிக்க நிலச் சொத்துக்களை பணமாக்க விரும்பும் தமிழக அரசின் நோக்கத்தை தியாகராஜன் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.

முதற்கட்டமாக வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய இடங்களில் உள்ள மாநகரப் பேருந்து பணிமனைகள் ரூ.1,600 கோடி முதலீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக தாம்பரம், திருவொற்றியூர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ.1,347 கோடி முதலீட்டில் பேருந்துப் பணிமனைகள் அமைக்கப்பட உள்ளன. ஆனால் ஆகப்பெரும் அளவில் திட்டமிடப்பட்ட இந்த முதலீடுகளால் எந்தெந்த விசயங்களில் மேம்பாடு உருவாகும் என்பதும், போட்ட முதலீடுகள் எப்படி மீட்டெடுக்கப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

மாநகரின் பல பொது சாலைகளில் இலவச பார்க்கிங் செய்யும் வாகன ஓட்டிகளிடமிருந்து அதிக பார்க்கிங் கட்டணத்தைப் பெறுவது வருவாய் சீர்திருத்தத்திற்கான ஒரு முக்கிய பகுதியாகும். ஆனால் இது பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. எளிதில் அணுகக்கூடிய மற்றும் சுத்தமான வாகன நிறுத்துமிடங்களை உருவாக்குவது வருவாயை அதிகரிக்கும் என்று இந்த ஆசிரியர் இன்மதியில் வெளியான முந்தைய கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளார்.

சென்னை புறவட்டச் சாலைத் திட்டத்திற்கு ரூ.1,847 கோடியும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு ரூ.1,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளிததிருக்கிறார்.

சென்னையின் மற்றொரு நீண்டகால கதையான அடையாறு நதி மறுசீரமைப்புத் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது

ஒரு வருடத்திற்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் தியாகராஜன், 2021 ஆம் ஆண்டின் பருவமழை வெள்ளத்தின் கொடூரங்களை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதியை பட்ஜெட்டில் அவர் வெளிப்படுத்தினார். நடப்பு பட்ஜெட்டில், கொரோனா இரண்டாவது அலை, சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம், கடுமையான நிதி நெருக்கடி ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறம்பட கையாண்டுள்ளார் என்று அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.184 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணித் திட்டங்களில் ஒன்பது திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன; இரண்டு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ”நடப்பாண்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.434 கோடி செலவில் 12 வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: தமிழக பட்ஜெட்: தலித் மக்களை மேம்படுத்துமா?

சென்னையின் மற்றொரு நீண்டகால கதையான அடையாறு நதி மறுசீரமைப்புத் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. போட் கிளப் பகுதியில் படகு சவாரி ஆர்வலர்களுக்கு புகலிடமாக உள்ள மாசுபட்ட அடையாறு ஆறு, 44 கிமீ துாரத்திற்கு சீரமைக்கப்பட உள்ளது. பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தரமான சிற்றுண்டிச்சாலை என பொழுதுபோக்கு வசதிகள் கட்டப்பட உள்ளன. இவை அனைத்திற்கும் சுமார் ரூ.1,500 கோடி செலவாகும்; இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டு முயற்சியில் நிறைவேற்றப்படும்.

தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) கழிவறைகள் சீரழிந்தபின்பு புதிய பொதுக் கழிவறைகள் மீண்டும் கொள்கைக் கட்டமைப்புக்குள் வந்துவிட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) பகுதியில் உள்ள கழிவறைகளை புதுப்பித்தல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்காக ரூ.430 கோடி பொது-தனியார் கூட்டு முயற்சியில் செலவிடப்படும். இந்தத் திட்டம் மற்ற மாநகராட்சிகளுக்கும் நீட்டிக்கப்படும். தாம்பரம் மற்றும் ஆவடி ஆகியவை விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள மாநகராட்சிகளாகும்.

தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.50 கோடி செலவில் நகர்ப்புற பிளாசா, கண்காட்சி அரங்குகள், அழகுப்படுத்தப்பட்ட நிலத்தோற்றம், திறந்தவெளி அரங்கம் மற்றும் உணவு மன்றங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை உருவாக்கும் சிஎம்டிஏவின் திட்டம் சென்னையை மையமாகக் கொண்ட மற்றொரு சிறப்பம்சமாகும். மேலும் தமிழுக்காக இன்னுயிர் தந்த தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களுக்காக ஒரு ஞாபகச்சின்னத்தை ஏற்படுத்தும் திட்டமும் தீட்டபட்டிருக்கிறது. தனது ஆட்சியில் எழும்பூரில் உள்ள புதிய சிஎம்டிஏ கட்டிடத்திற்கு தாளமுத்து, நடராஜன் பெயர்களை சூட்டினார் கருணாநிதி.

சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் மற்றும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் தவிர, 2023 ஜனவரியில் 24 நாடுகள் பங்கேற்று 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியின் முதல் பதிப்பு மேலும் ஒரு சாதனையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறைக்குப் புத்துணர்ச்சிதரும் வண்ணம், சென்னையில் ஓர் உலகளாவிய விளையாட்டு நகரத்தை சிஎம்டிஏ அமைக்கவிருக்கிறது. மேலும் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் ரூ.25 கோடியில் நவீன விளையாட்டு வசதிகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

கைகளால் மலம் அள்ளுவதற்கு எதிரான ஒரு முக்கிய முன்முயற்சியாக இது இருந்தாலும், துப்புரவுத் தொழிலாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கும், அரசாங்க உதவியுடன் நவீன இயந்திரங்களை வாங்குவதற்கும் உதவும் திட்டம் சிறிய அலைகளை உருவாக்கியிருக்கிறது.

கடந்த காலத்து வரவு செலவுத் திட்டம் சாதித்தது என்ன என்பதைப் பற்றியும், இனி வரவிருக்கும் ஆண்டுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றியும் பல்வேறு விவரணைகள் தருகின்ற பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு அவசியம்

சென்னை, சித்தூர் மற்றும் பெங்களூரை இணைக்கும் சாலைகள் சந்திக்கும் இடமான காட்டுப்பாக்கம் சந்திப்பு, மவுண்ட் – பூந்தமல்லி, ஆவடி – பூந்தமல்லி சாலைகள் மற்றும் குன்றத்தூர்- பல்லாவரம் சாலை ஆகியவை பெரிய அளவில் சீரமைக்கப்பட்டு வருவதாக தியாகராஜன் 2022ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.

நெரிசலைக் குறைக்க, காட்டுப்பாக்கம் சந்திப்பில் ரூ.322 கோடியில் உயர்மட்ட ரோட்டரியுடன் கூடிய கிரேடு செப்பரேட்டர் கட்டப்படும் என்றும், முதல் கட்டமாக இந்த ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் 2022-ம் ஆண்டு அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

அதேபோல், ”கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அக்கரை வரை நான்கு வழிச்சாலையை ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்த வேண்டியது அவசியம். திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளை அகலப்படுத்த ஏற்கனவே நிதிஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சாலைகள் ரூ.135 கோடி செலவில் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படும்” என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்தகால இலக்குகள் மற்றும் ஒதுக்கீடுகள் எவ்வளவு தூரம் விளைவுகளை உருவாக்கியுள்ளன என்பது குறித்து எந்தத் தகவல்களும் இப்போது இல்லை. ஆதலால் கடந்த காலத்து வரவு செலவுத் திட்டம் சாதித்தது என்ன என்பதைப் பற்றியும், இனி வரவிருக்கும் ஆண்டுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றியும் பல்வேறு விவரணைகள் தருகின்ற ஒரு பட்ஜெட் தமிழகத்திற்கு மிகமிக அவசியம்.

Share the Article

Read in : English

Exit mobile version