Read in : English
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் சமூக சமத்துவ படைக் கட்சியின் தலைவருமான ப. சிவகாமி தமிழின் முதல் தலித் பெண்ணியல் எழுத்தாளர். ஆறு புதினங்களும் 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
inmathi.com சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஜி.அனந்தகிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணலில் வரவிருக்கும் தமிழக பட்ஜெட் தலித்துகள் அல்லது ஆதி திராவிடர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், தலித்துகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு முறையாகப் பயன்படுத்தப் படுவதில்லை என்பதையும் எடுத்துரைத்தார் சிவகாமி.
ஆதிதிராவிடர் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.14,500 கோடி ஒதுக்கப்பட்டாலும், அதில் 83 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது.
இதற்கான காரணங்களைs சிவகாமியிடம் கேட்டபோது, 2022-23 நிதியாண்டில் ரூ.14,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்த நிதி 48 துறைகளுக்கு வினியோகிக்கப் பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில நேரங்களில் ஆதிதிராவிடர் நலன் தொடர்பாக சில புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணைக்காகக் காத்திருப்பது வழக்கம். அரசாணை வர ஆறு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம். நிதியும் தாமதமாக வழங்கப்படும். அதற்குள் நிதியாண்டு முடிந்துவிடும்.
கல்வராயன் மலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் தமிழக நிதித்துறை நிதியை வழங்கவில்லை. சிவகாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக இருந்தபோது, இது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நிதி மடைமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஆதிதி ராவிடர் நலத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை; தலித்துகளின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோ, உறுதியோ இல்லை
ஒரு திட்டத்தின் கீழ் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ.3,300 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், அந்த நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை எஸ்சி/எஸ்டி ஆணையம் கண்டறிந்ததை ஊடகங்கள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் சிவகாமி கூறினார்.
“உண்மையில், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான திட்டத்தின் கீழ் நிதியைப் பயன்படுத்தாததன் பின்னணியில் ஒரு வலுவான காரணி உள்ளது. தனிநபர் அடிப்படையிலான திட்டம் என்பதால், தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் நிதி வழங்கப்படுகிறது. ஆனால், இத்திட்டம் முறையாக விளம்பரப்படுத்தப்படாததால், போதிய விண்ணப்பங்களை ஈர்க்க முடியவில்லை.
ஆதி திராவிடர் நலத்துறை, திட்டங்களைச் செயல்படுத்தும் ஓர் ஒருங்கிணைப்பு முகமையாக இருப்பதால், மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறது. ஆனால் மற்ற துறைகளைச் சேர்ந்த துணைச் செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் யாரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதே கள நிலவரம். சம்பந்தப்பட்ட திட்டங்களின் செயலாக்கம் மற்றும் நிதிநிலை குறித்த தரவுகளைக் கொண்டு வரப் போதுமான தகுதி இல்லாத பிரிவு அதிகாரிகள் மட்டுமே கூட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். கவனக்குறைவு மற்றும் அக்கறையின்மை ஆகியவை இந்த பரிதாபமான நிலைக்கு காரணமாக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: உலகளவில் வெறுக்கப்படுவதை மோடி உணரவில்லை!
தலித் முன்னேற்றத்திற்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையா என்று கேட்டதற்கு, ஆம் என்று பதிலளித்தார் சிவகாமி. ’எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலைமையா?’ என்றபோது ‘நிச்சயமாக’ என்றார்.
“எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஆதி திராவிடர் நலத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. தலித்துகளின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோ, உறுதியோ இல்லை” என்றார் சிவகாமி.
”திட்டங்களின் பயன்கள் உண்மையில் ஆதிதிராவிடர்களை சென்றடைகிறதா? ஏதேனும் கண்காணிப்பு முறை உள்ளதா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த சிவகாமி, ”பயனாளிகளைத் திட்டங்களின் பயன்கள் சென்றடைகிறதா என்பதை அறிய பதிவேடு பராமரிக்கப்படுவதில்லை. அதிகாரிகளால் செய்ய முடிந்ததெல்லாம் யூகிப்பது மட்டுமே” என்றார்.
“ஆதி திராவிடர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் போது, 60 சதவீதம் நேரடியாகவும், 40 சதவீதம் பொதுக்கணக்கின் கீழும் செலவிடப்படும்.
பட்ஜெட்டில் பெரும்பங்கு நிதியைப் பெறும் துறை விவசாயம். சில தரவுகளின்படி, தலித்துகளில் 11 சதவீதம் பேர் மட்டுமே நிலம் வைத்துள்ளனர்; 89 சதவீதம் பேர் நிலமற்ற விவசாயிகள். எனவே, 89 சதவீத தலித் விவசாயிகளுக்கு மானியம், உரம், விதைகள், மின்சாரம் அளித்து, பேரிடர் காலங்களில் கடன்களைத் தள்ளுபடி செய்து அவர்களின் வேளாண்மையை அரசு ஊக்குவிக்கிறதா என்று தெரியவில்லை.
25 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஐந்து ஐந்தாண்டுத் திட்டங்கள் தலித்துகளுக்கு அவ்வளவாகப் பயனளிக்கவில்லை
ஆனால், நிலமற்ற தலித் விவசாயிகளுக்கு உதவுவதில் ஒரு சிக்கல் உள்ளது. பொதுவாக அரசின் உதவித் திட்டங்கள் ‘நன்செய்’ நிலங்களில் உழும் விவசாயிகளுக்கு மட்டுமே இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான தலித் விவசாயிகள் ‘புன்செய்’ நிலங்களில் மட்டுமே பயிர் சாகுபடி செய்கின்றனர்” என்றார்.
தமிழ்நாடு மின்சார வாரியத் திட்டங்களால் ஆதி திராவிடர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த சிவகாமி, மின்சார நிறுவனத்திற்கென்று சொந்த பட்ஜெட் உண்டு என்றார்.
மேலும் படிக்க: ராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சுணக்கமா?
“கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பட்ஜெட் ரூ.3,34,000 கோடியாக இருந்தது. கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு மிச்சமிருந்த இந்தத் தொகை. நிலம் வைத்திருக்கும் தலித் விவசாயிகளுக்கு பம்ப்செட் போன்றவற்றுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்த மானியம் வழங்கப்படுவதால் தலித்துகள் பொதுவாக 20 சதவீத மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தலித்துகளின் மின்நுகர்வு குறித்த குறிப்பிட்ட தரவுகள் எதுவும் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இல்லை.
அதிக பயனாளிகள் உள்ள பகுதிகளில் குளிரூட்டும் நிலையம் அமைத்தால் அரசின் இலவசக் கால்நடைத் திட்டத்தில் ஆதி திராவிடர்கள் பயனடைவதை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் பால்பண்ணையில் தலித்துகளின் பங்களிப்பை ஊக்குவிக்க முடியும்” என்றார் சிவகாமி.
அதே நேரத்தில், 25 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஐந்து ஐந்தாண்டுத் திட்டங்கள் தலித்துகளுக்கு அவ்வளவாகப் பயனளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார் சிவகாமி.
“ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பு மேலிருந்து கீழேவரும் ஓர் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. “இந்தக் கட்டமைப்பில், நன்மைகள் கீழிறங்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு நன்மைகள் பரவாதா?” என்று கேட்டவர்களும் உண்டு. பின்னர், கள யதார்த்தம் வெகு தொலைவில் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
எனவே, தலித்துகளுக்கு 20 சதவீதப் பயன்கள் போய்ச்சேரும்படியான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு, அவர்களுக்கான சிறப்பு உதவியை அறிமுகப்படுத்தியது. ஆனால், மத்திய அரசின் நிதியை தலித்துகளுக்காக மாநில அரசு பயன்படுத்தாமல் மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது என்பது நிதர்சனம்.
தலித் நலனுக்கான முன்மாதிரி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மிகவும் சிறப்பாக உள்ளது. தலித்துகளின் நிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க அந்த மாநிலங்கள் நில அபகரிப்புத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. தலித்துகளுக்கான திட்டங்கள், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள், தனிநபர் அடிப்படையிலான திட்டங்கள் என்ற பிரிவுகளில் அங்கே உள்ளன.
இருபதாண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலங்கள் தலித் நலன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன” என்று அவர் கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பொதுவிநியோகத் திட்டம் குறித்துப் பேசிய சிவகாமி, “ஆதரவற்றோர் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவது சரிதான். ஆனால் கிராமங்களில் உள்ள வசதி படைத்தவர்கள் கூட இலவச அரிசியைப் பெற்று அதைத் தங்கள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துகின்றனர்.
உண்மையில், இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் பெருமளவில் செலவழிக்கிறது, இது கிட்டத்தட்ட ஓர் அடிப்படை உரிமையாக மாறிவிட்டது. ஆனால், பொது விநியோகத் திட்டத்திற்காக மலிவான விலையில் அரிசியை விற்கும் விவசாயிகள் பொருளாதாரரீதியாகச் சுரண்டப்பட்டு வறுமையில் வாடுகின்றனர்.
மாநிலம் முழுவதும் தரிசு நிலங்களைக் கண்டறிந்து ஏழை விவசாயிகளுக்கு, குறிப்பாக தலித்துகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம்
பொதுவிநியோகத் திட்டமும், ‘அம்மா உணவகங்களும்’ அரசின் கஜானாவுக்கு தீராத ஒரு பாரமாக உள்ளன. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்லுநர்கள் கூட மக்கள்நலத் திட்டங்களை ஆதரித்ததால் அவற்றை ஒரேயடியாக ரத்து செய்ய முடியாது. ஆனால் பொது விநியோகத் திட்டத்தை ஆதரவற்ற மூத்த குடிமக்கள், ஏழ்மையில் வாடும் விதவைகள் போன்ற மிகவும் ஏழ்மையான பிரிவினருக்கு மட்டுமே பயன்படுத்தினால் போதும். அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் தரிசு நிலங்களைக் கண்டறிந்து ஏழை விவசாயிகளுக்கு, குறிப்பாக தலித்துகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம்.
தரிசு நிலங்களில் விவசாயத்தை பெரிய அளவில் ஊக்குவிப்பதன் மூலமும், பொது விநியோகத் திட்டத்தின் வரம்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் அரிசி தேவையில்லை என்ற நிலையை உருவாக்கலாம். அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்ய முடியும்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என்ற தலித் பெண் சமூக சேவகி நிலமற்ற பல தொழிலாளர்களுக்கு பல ஏக்கர் நிலத்தை மறுபங்கீடு செய்து முன்னுதாரணமாக திகழ்கிறார். எனவே, நிலமற்ற விவசாயிகளுக்கு அரசு நிலங்களை பகிர்ந்தளிக்கலாம். இது விவசாயs சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆதி திராவிடர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தலித்துகளின் கல்விக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இன்னும் 20 சதவீத தலித் ஆண்களும், 34 சதவீத தலித் பெண்களும் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். ஆதி திராவிட மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து அரசு பள்ளிகளுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததால் பல அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன, தற்போதுள்ள பள்ளிகளில் மோசமான உள்கட்டமைப்பு உள்ளது; பெரும்பாலான பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 5,000 மாணவர்கள் மேல்நிலைக்கல்வித் தேர்வுகளை எழுத முடியவில்லை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குடும்ப நிர்பந்தம் பல தலித் மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துகிறது” என்று கூறினார் சிவகாமி.
வாக்கு வங்கி நிர்பந்தங்களைப் பற்றிக் கவலைப்படாத அரசு, ஆதி திராவிடர்களின் மேம்பாட்டில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்றும், தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் ஆணவக் கொலைகள் போன்ற கொடுமைகளைத் தடுக்க அரசுக்கு மன உறுதி இருக்க வேண்டும் என்றும் சிவகாமி கூறினார்.
தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட அரசுதான் இன்று நமக்குத் தேவை என்று தன் பேச்சை நிறைவு செய்தார் சிவகாமி.
Read in : English