Site icon இன்மதி

பழைய ஓய்வூதியம்: திட்டம் அரங்கேறுமா?

Read in : English

தெற்கு ரயில்வே ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஆர்.இளங்கோவன், பழைய மற்றும் புதிய ஓய்வூதியக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறித்த தனது கருத்துக்களை inmathi.com சார்பில் பேட்டி கண்ட மூத்த பத்திரிகையாளர் ஜி.அனந்தகிருஷ்ணனுடன் பகிர்ந்து கொண்டார்.

அகவிலைப்படி மற்றும் குடும்ப ஓய்வூதியம் கொண்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பாராட்டிய இளங்கோவன், புதிய ஓய்வூதியத் திட்டம் போதுமானதாக இல்லை என்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற எந்த அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.

“மனிதன் பொருளாதார உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபட்டுச் சமூகத்திற்குச் சேவை செய்வதோடு, ‘மனிதர்களையும்’ உருவாக்குகிறான். நீண்டகால கடின உழைப்புக்குப் பிறகு, அதாவது 60 வயதில், அவன் தனது சேவைகளிலிருந்து விலகிக் கொள்கிறான். இந்த நிலையில், முதுமையில் அவனது வாழ்க்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் சமூகத்திற்கு ஒரு கடமை இருக்கிறது. அதற்காகவே ஓய்வூதியம் என்ற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றார் இளங்கோவன்.

“1871ஆம் ஆண்டில் அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு முதல் ஓய்வூதியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பணிக்காலம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒருவர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த நேரத்தில், ரயில்வே நிர்வாகம் பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி திட்டத்தைக் கொண்டிருந்தது. இதன்கீழ் ஓர் ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, மற்றொரு 10 சதவீதத்தை அரசாங்கமே செலுத்தியது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகை, ஊழியரின் பணிக்கால முடிவில் வட்டியுடன் கணக்கிடப்பட்டு ஊழியருக்கு மொத்தமாக வழங்கப்பட்டது. பணிக்கொடையைப் போலவே சிறப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற மற்றொரு ஓய்வூதியத் திட்டமும் இருந்தது.

1964ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓர் ஊழியர் காலமானதும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒருவருக்கு (விதவை, விவாகரத்தானவர் அல்லது மாற்றுத்திறனாளி மகன்) ஓய்வூதியம் வழங்கப்படுகிறது

மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை முதலில் சோவியத் ரஷ்யாவில் 1917 நவம்பர் புரட்சிக்குப் பிறகு தொடங்கியது. லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க சமத்துவ அரசாங்கம் எல்லோருக்குமான ஓய்வூதியம் என்று இன்றும் நினைவுகூரப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மாதிரியைப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ நாடுகள் தொழிலாளர்களின் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு அஞ்சி ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தின.

இந்தியாவில் 1957ஆம் ஆண்டுதான் ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது; 1972ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான விதிகள் இயற்றப்பட்டன.

மேலும் படிக்க: ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரமா, சாபமா?

இந்தியாவில் யுனிவர்சல் பென்ஷன் என்று எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே” என்று கூறினார் இளங்கோவன்.

ஆர்.இளங்கோவன்- தலைவர்- தெற்கு ரயில்வே ஓய்வூதியர்கள் சங்கம்

“இந்தப் பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்த ஓர் ஊழியருக்கு அவரது கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்திற்குச் சமமான முழு ஓய்வூதியம் கிடைக்கும். பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரண்டு முறை உயரும் அகவிலைப்படி ஓய்வூதியத்தில் இருக்கிறது. 1964ஆம் ஆண்டில் குடும்ப ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன்கீழ் ஓர் ஊழியர் காலமானதும், ஓய்வூதியம் அவரது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒருவருக்கு (விதவை, விவாகரத்தானவர் அல்லது மாற்றுத்திறனாளி மகன்) வழங்கப்படுகிறது.

பழைய முறையில் ஓய்வூதியம் என்பது குறைந்தபட்சம் ரூ.9,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு சிறப்பு வசதியும் உண்டு; ஓய்வுபெற்ற ஊழியர் கணக்கிடப்பட்ட தனது மொத்த ஓய்வூதியத் தொகையில் 40 சதவீதத்தை ஒட்டுமொத்தமாகப் பெறலாம். மிச்சமிருக்கும் 60 சதவீதத் தொகையிலிருந்து அவருக்கு மாதாமாதம் ஓய்வுத் தொகை வழங்கப்படும். ஆனால் அத்தோடு கொடுக்கப்படும் அகவிலைப்படி, 60 சதவீதத்தின்படி கணக்கிடப்படுவதில்லை; 100 சதவீத ஓய்வூதியத்தின் படியே கணக்கிடப்படுகிறது.

ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு ஓய்வூதியமும் வழங்கப்படும். ஓய்வூதியதாரர் 80 வயதை அடைந்தால், அவருக்கு கூடுதலாக 20 சதவீதம் ஓய்வூதியம் கொடுக்கப்படும்; 85 வயதில் 30 சதவீதம் கூடுதலாகவும், 90 வயதில் 40 சதவீதம் கூடுதலாகவும், 95 வயதில் 45 சதவீதம் கூடுதலாகவும், 100 வயதில் 100 சதவீதம் கூடுதலாகவும் ஓய்வூதியம் கிடைக்கும்; அதாவது அவர்களின் அசல் ஓய்வூதியம் இரட்டிப்பாகும்.

1990ல் சோவியத் யூனியன் சிதைந்து, சோசலிசம் ஒரு தோல்வியாகக் கருதப்பட்ட பிறகு, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவவாதிகள் ஊக்கமடைந்தனர். பின்னர் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் அவர்கள் கைவைக்கத் தொடங்கினர்” என்று தெரிவித்தார் இளங்கோவன்.

“இந்தியாவில் பங்களிப்பு சாராத பழைய ஓய்வூதியத் திட்டம் ’வரையறுக்கப்பட்ட பயன்கொண்ட’ பங்களிப்புத் திட்டமாக மாறியது. 1995ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தைக் (ஈபிஎஸ்) கொண்டு வந்தது. ஓய்வூதியர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகக் கணக்கிடும் பழைய முறையை ஈபிஎஸ் தூக்கி எறிந்தது. அதற்குப் பதிலாக ஓய்வூதியக் கணக்கீட்டுக்கான புதிய முறையைக் கொண்டு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது மனைவிக்குப் பாதி ஓய்வூதியம் கிடைக்கும்;  அதன்பிறகு, அரசுக்கு ஓய்வூதியப் பொறுப்பு இல்லை

உங்கள் சம்பளம் எதுவாக இருந்தாலும், ரூ.6,500 மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது (2014 ஆம் ஆண்டில் உச்சவரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது). அதிலிருந்து ஓய்வூதியத்திற்காக 8.33 சதவீதம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது. இவ்வாறு பல ஆண்டுகளாகத் திரட்டப்பட்ட மொத்தத் தொகை, ஓய்வூதியம் பெறத்தக்க பணி ஆண்டுகளின் எண்ணிக்கையால் பெருக்கப்பட்டு 70 ஆக வகுக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் எண்தான் உங்கள் ஓய்வூதியத் தொகையாக இருக்கும். இதுதான் இபிஎஸ்ஸின் பார்முலா. தவிர, புதிய ஓய்வூதியத்தில் அகவிலைப்படி கிடையாது. கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதமாகக் கணக்கிடப்படும் பழைய ஓய்வூதியத்திற்கு அருகில் புதிய ஓய்வூதியம் கொஞ்சங்கூட வரவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில், குடும்ப ஓய்வூதியத்திற்கு இடமில்லை; அதாவது, ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது மனைவிக்குப் பாதி ஓய்வூதியம் கிடைக்கும். அதன்பிறகு, அரசுக்கு ஓய்வூதியப் பொறுப்பு இல்லை.

எனவே, இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஒருவர் சேமித்த பணத்தின் மீதித்தொகை அரசுக்குச் சென்று விடும். தவிர, பழைய முறையில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.9,000க்கு ஈபிஎஸ்ஸில் இடமில்லை. எனவே, ஈபிஎஸ் உங்களுக்கு ஓய்வூதியமாக சொற்பத் தொகையை மட்டுமே வழங்குகிறது என்பது மிகவும் தெளிவாகிறது” என்றார் இளங்கோவன்.

“மும்பையில் ஒரு பெண் ஊழியருக்கு ஈபிஎஸ் கீழ் ரூ .23 மட்டுமே கிடைக்கிறது. (நினைவில் கொள்ளுங்கள், வெறும் 23 ரூபாய் மட்டுமே). நாட்டில் 68 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் இந்தத் திட்டத்தின்படி அதிகபட்சம் ரூ .3,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.

மேலும் படிக்க: அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் நியமன முறை நியாயமானதா?

ஈபிஎஸ் திட்டத்தில் அதிகமான ஓய்வூதியத்தைப் பெற வசதி உள்ளது, இதன்படி, முதலாளியின் சம்மதத்தின் பேரில், உங்கள் உண்மையான சம்பளத்தில் இருந்து 8.33 சதவீதத்தைப் பிடித்தம் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே ஓய்வு பெற்றவர்கள், ஈபிஎஸ் திட்டத்தின் கீழ், பணியில் இருந்த காலத்தில் பிடித்தம் செய்திருக்க வேண்டிய தொகையை இப்போது மொத்தமாகச் செலுத்தி அதிக ஓய்வூதியம் பெற முடியும். பணியிலிருந்தபோது நீங்கள் வாங்கிய சம்பளம் ரூ.60,000மாக இருந்தாலும், ஓய்வூதியத் திட்டத்தில் வெறும் ரூ.6,500 அல்லது ரூ.15,000ல் மட்டும்தான் 8.33 சதவீதம் பிடிக்கப்பட்டிருக்கும். ஆதலால் இப்போது அந்த குறையைச் சரி செய்து அதிக ஓய்வூதியம் பெறலாம்.

ஆனால், அதற்குச் சில சில ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும்; மீண்டும் உங்கள் முதலாளியை நீங்கள் அணுக வேண்டியிருக்கும். இதெல்லாம் சாத்தியமற்றதாகத் தெரிகிறது” என்றார் இளங்கோவன்.

பாஜக அரசு காங்கிரசை விட சில படிகள் முன்னேறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, 2004 ஏப்ரல் 1ல் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது. ‘வரையறுக்கப்பட்ட சலுகைகள்’ இல்லாத, அதிக பங்களிப்புத் தன்மை கொண்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது; அரசு 10 சதவீதத்தைப் பங்களிக்கிறது. இவ்வாறு சேமிக்கப்படும் பணம் பங்குகள், தனியார் பத்திரங்கள் (அதானி பத்திரங்கள்), கடன் நிதிகளில் முதலீடு செய்யப்படுகிறது.

கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளும் பல கட்சிகள் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. தமிழகத்தில், திமுக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், நிதிஅமைச்சர் பிடிஆர் நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக, ஓய்வூதிய தொகையை, மத்திய அரசிடம் ஒப்படைக்க விரும்புகிறார்

ஆனால் இந்த முதலீடுகளின் மீதான வருமானம் நிச்சயமற்றது. பி.எஃப் சட்டம் 20 (ஜி) இதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) என்று அழைக்கப்படும் புதிய ஓய்வூதியத் திட்டம் தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானது” என்று இளங்கோவன் கூறினார்.

YouTube player

 

சிபிஎஸ்ஸின் அபாயங்களைத் தமிழக அரசு ஊழியர்கள் அறிந்திருப்பதாகவும், மாநில அரசாங்கம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போல பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இளங்கோவன் சுட்டிக்காட்டினார்.

“கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளும் பல கட்சிகள் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. தமிழகத்தில், தி.மு.க., பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், நிதி அமைச்சர் பிடிஆர் நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக, ஓய்வூதிய தொகையை, மத்திய அரசிடம் ஒப்படைக்க விரும்புகிறார்” என்று இளங்கோவன் கூறினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், சுனாமி அலைகளைப் போல புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் இளங்கோவன்.

Share the Article

Read in : English

Exit mobile version