Site icon இன்மதி

சிம்பு நடித்துள்ள பத்து தல: பொருந்தாத ரீமேக் முயற்சி

Read in : English

சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வெற்றி பெற்ற திரைப்படத்தைத் தழுவி இன்னொரு மொழியில் ஆக்கப்படும் படங்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்று உறுதியளிக்க முடியாது. காரணம், பல குறைகளை மீறி மூலப்படத்தில் இருக்கும் மிகச்சில அம்சங்கள் அந்த வெற்றியைக் கொணர்ந்திருக்கும்.

பொருத்தமான நடிகர் நடிகைகளின் தேர்வு, ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, வித்தியாசமான கதை சொல்லல், படம் வெளியான சூழலில் அதற்கிருந்த எதிர்பார்ப்பு, வழக்கத்திற்கு மாறான காட்சி அனுபவம் என்று அவை பலவாறாக இருக்கும். இன்னொரு மொழியில் ‘ரீமேக்’ செய்யப்படும்போது அவையெல்லாம் அமையுமென்று எதிர்பார்க்க முடியாது.

சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், அனு சித்தாரா, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘பத்து தல’ படம் பார்த்தபோது, அதனை உணர முடிந்தது. 2017இல் வெளியான ‘முஃப்தி’ எனும் கன்னடப்படத்தின் ரீமேக் இது.

‘அண்டர்கவர் போலீஸ்’ கதைகள் எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே புழக்கத்தில் இருந்தவை தான். ஆனாலும், கமலில் ‘காக்கி சட்டை’ அந்த வகையறாவில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அப்படியொரு ‘அண்டர்கவர் போலீஸ்’ ஒரு மணல் மாஃபியாவில் சேர்கிறார். படிப்படியாகத் தன்னை வேலைக்கு வைத்திருக்கும் ரவுடியிடம் நல்ல பெயர் பெற்று, அந்த மாஃபியாவின் தலைவரைச் சென்றடைகிறார்.

அவருடனான சந்திப்பை எதிர்பார்த்தே, அந்த போலீஸ்காரரும் காத்திருக்கிறார். ஏனென்றால், அவர்தான் முன்னாள் முதலமைச்சரைக் கடத்திச் சென்றதாக போலீஸ் தரப்பு சந்தேகப்படுகிறது. இத்தனைக்கும் கடத்தல் சம்பவத்தின்போது அவர் முதலமைச்சர் பதவியில் இருந்தார் என்பதே இந்த ‘அண்டர்கவர் ஆபரேஷன்’ நிகழக் காரணம்.

தமிழ் திரையுலகில் கன்னியாகுமரி வட்டாரப் பேச்சு அதிகம் ஒலித்ததில்லை; அதனைச் சாத்தியப்படுத்திய படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘பத்து தல’

ஊருக்கே கெட்டவராகத் தோற்றமளிக்கும் மணல் மாஃபியா தலைவரை அந்த போலீஸ்காரர் நெருங்கிச் சென்று பார்த்தால், அவரது வேறொரு முகம் தெரிய வருகிறது. மணல் கொள்ளை, அரிய தனிமங்களைத் தரும் சுரங்க ஏலம், ஆளும் கட்சியைக் கட்டுக்குள் வைத்திருத்தல், அதன் வழியே மக்களை அண்டும் தீங்கினைத் தடுத்தல் என்று நீளும் அவரது ஆக்டோபஸ் கரங்களின் மகிமையும் புரிய வருகிறது.

வில்லனாகத் தெரிந்தவரே மனிதப் புனிதராகத் தென்படுகிறார். இத்தனையும் திரையில் நிகழும்போது, வில்லன் சும்மா இருப்பாரா? அந்த மனிதரைக் கொல்ல வில்லன் களமிறங்குகிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதோடு ‘பத்து தல’ முடிவடைகிறது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டு அரசியலை விமர்சிக்கிறதா ‘செங்களம்’?

இந்த கதையில் சுரங்க அதிபர் ஏஜிஆர் எனும் ஏ.ஜி.ராவணனாக வருகிறார் சிம்பு. சக்தி எனும் போலீஸ் அதிகாரியாக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். ஏஜிஆரின் மணற்கொள்ளையை எதிர்க்கும் தாசில்தார் ஆக பிரியா பவானிசங்கர், ஏஜிஆரின் தங்கையாக அனு சித்தாரா, ஏஜிஆரைக் கொல்லத் துடிக்கும் எதிரி நாஞ்சிலார் ஆக கௌதம் மேனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர்த்து அடியாட்கள் என்று சுமார் மூன்று டஜன் பேர் வருகின்றனர். பல காட்சிகளில் பின்னணியில் நடமாடுபவர்கள் என்று கொத்துகொத்தாக மனிதத் தலைகள் தென்படுகின்றன.

தமிழ் திரையுலகில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சென்னை வட்டாரத் தமிழ் ஒலித்த அளவுக்குக் கடைக்கோடியான கன்னியாகுமரி வட்டாரப் பேச்சு கேட்கக் கிடைத்ததில்லை. வெகு அரிதாக அதனைச் சாத்தியப்படுத்திய படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘பத்து தல’. அதையே படத்தின் சிறப்பாகவும் கூறலாம். அதற்காக, வசனகர்த்தா ஆர்.எஸ். ராமகிருஷ்ணனைப் பாராட்டியே தீர வேண்டும்.

தனது பெயரை ‘ஆத்மன்’ எஸ்டிஆர் என்று இடச் சொன்னபிறகு, சிம்புவின் திரை இருப்பிலும் மாற்றத்தைக் காண முடிகிறது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களில் வழக்கமான கமர்ஷியல் நாயகன் பாத்திரங்கள் என்றபோதும், அவரது நடிப்பில் அலட்டலோ, அதிகப்படியான பாவனைகளோ, தன்னை முன்னிறுத்தும் முயற்சிகளோ துளியும் இல்லை.

‘பத்து தல’யில் மிகையான பில்டப்கள் அவரது பாத்திரத்தைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டபோதும், அவரது நடிப்பில் அது தென்படவே இல்லை. வசனங்களை ‘மியூட்’ செய்துவிட்டு பார்த்தால், அவரது தோற்றம் தோரணையான சாது போன்றே தெரியும்; அதுவே கொஞ்சம் புதிதாக உணர வைக்கிறது.

‘நாம அண்டர்கவர் போலீஸ்னா ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா’ என்ற சந்தேகத்துடனே கௌதம் கார்த்திக் நடித்தாரா என்று தெரியவில்லை. திரையில் அவரது இருப்பு துருத்திக்கொண்டு தென்படுகிறது. இடைவேளைக்குப் பிறகு அவருக்கான முக்கியத்துவம் அருகி, இறுதிக்காட்சியில் அது சுத்தமாக இல்லை என்றாகிவிடுகிறது.

தனது பெயரை ‘ஆத்மன்’ எஸ்டிஆர் என்று இடச் சொன்னபிறகு, சிம்புவின் திரை இருப்பிலும் மாற்றத்தைக் காண முடிகிறது…‘பத்து தல’யில் மிகையான பில்டப்கள் அவரது பாத்திரத்தைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டபோதும், அவரது நடிப்பில் அது தென்படவே இல்லை

இந்த கதையில் பிரியா பவானிசங்கர், சென்றாயன் சம்பந்தப்பட்ட காட்சிகள், அனு சித்தாரா மற்றும் சிறுமி ஹர்ஷிதா வருமிடங்கள் சாதாரண ரசிகர்களைக் கவரும் தன்மை கொண்டவை. கௌதம் மேனன் தோன்றும் காட்சிகள் முழுக்க வில்லத்தனம் பொங்கி வழிகிறது. இந்த படத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சமூக ஆர்வலர் வேடத்தில் நடித்திருக்கிறார். மக்களுக்குத் தெரிந்த முகம் என்ற அம்சமே அவரது இருப்பை நியாயப்படுத்துகிறது.

அடுத்தடுத்த காட்சிகளை ரசிகர்கள் யூகிக்க முடியும் எனும்போது, காட்சிகள் தரமாகப் பதிவு செய்யப்படுவதே அந்த எண்ணத்தை மறக்கடிக்கும். பரூக் ஜே.பாஷாவின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு அதனைச் சாத்தியப்படுத்துகிறது. ‘டண்டனக்கா தனக்குநக்கா’ என்று ஒலிக்கும் பின்னணி இசை சிம்பு வரும் காட்சிகளில் நிரம்பி வழியும் ஹீரோயிசத்தை முன்கூட்டியே நமக்கு உணர்த்துகிறது. ஆனால், பாடல்கள் தான் சட்டென்று நம் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக இல்லை.

மேலும் படிக்க: இசை மரகதங்கள் தந்த கீரவாணி

பிரவீன் கே.எல். படத்தொகுப்பு, மிலன் கலை வடிவமைப்பு அனைத்தும், ‘முஃப்தி’ என்ற மூலப்படத்தைப் பிரதியெடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சியில் வன்முறை அதீதமாக வெளிப்படுகிறது என்றபோதும், அது படமெடுக்கப்பட்ட விதத்திற்காக சண்டைப்பயிற்சியாளர் சக்தி சரவணனைப் பாராட்டலாம்.

ஏற்கனவே ஒரு முன்னுதாரணம் இருக்கும்போது, அச்சு அசலாக அப்படியே படமாக்குவது சிரமமில்லை; அதேநேரத்தில், அது ரொம்பவே எளிதான காரியம் என்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஒன்றைப் போல இன்னொன்றை பிரதியெடுக்கக் கடும் உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அந்த வகையில், இயக்குநர் கிருஷ்ணா ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், அதற்கு ரசிகர்கள் மத்தியில் பலன் தென்படுகிறதா என்றால் உதட்டைப் பிதுக்க வேண்டியிருக்கிறது.

சுரங்க ஏலம் மூலம் அரிய வகை தனிமங்களைத் தோண்டிக் குவிப்பதென்பது மணற் கொள்ளையை விடவும் பெரிய விவாதத்தை உண்டாக்கும் ஒரு விஷயம். போலவே, தடுப்பூசிகள் மூலமாக மூன்றாம் உலக நாடுகளில் கொடும் நோய்களை ஏற்படுத்துவதென்பது வளர்ச்சியடைந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக விளங்குகிறது. இவற்றின் பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்பது இன்னும் சர்ச்சையைக் கிளப்பும்.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ‘முஃப்தி’ வெளியானபோது அதுவே நிகழ்ந்தது. யூகிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்டிருந்தபோதும், அப்படம் வெற்றி பெற இது போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதே காரணமாக இருந்தது.

கவனிக்க. ‘முஃப்தி’ வெளியானபோது கோவிட்-19 பரவல் நம்மை அண்டவில்லை. அதேநேரத்தில், கர்நாடக மாநில அரசியலைப் புரட்டிப் போடும் விதமாக சுரங்க ஊழல் குற்றச்சாட்டு பேசுபொருளாக இருந்தது. போதாக்குறைக்கு சிவராஜ்குமார் நாயகனாக நடித்த படங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில், அவர் வில்லனாக நடிப்பதாக ஒரு பிம்பம் ஊடகத்தின் வழியே கட்டமைக்கப்பட்டது. மேற்சொன்ன விஷயங்களே ‘முஃப்தி’யை பார்த்து ரசிகர்கள் புத்துணர்வு பெறக் காரணமாக இருந்தன. ஆனால், ‘பத்து தல’யில் அவையனைத்தும் ‘க்ளிஷே’க்களாக தெரிகின்றன.

‘பத்து தல’ வெளித்தோற்றத்தில் ஒரு ’கேங்க்ஸ்டர் டிராமா’ போலத் தென்பட்டாலும் உள்ளடக்கத்தில் மாஸ் மசாலா படமாகவே உள்ளது

’சாமி’ படத்திற்குப் பிறகு அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்தும் ‘கிங் மேக்கர்’ என்ற சொல் வெகுவாகப் புழங்கி வருகிறது. அப்படியொரு மனிதரையே ‘பத்து தல’ முன்வைக்கிறது. காலம்காலமாகத் தொடரும் நாயக பிம்பம் அப்பாத்திரத்தின் மீதும் ஏற்றப்பட்டுள்ளது. ‘இங்க நல்லது செய்றதுக்கே ஒரு கெட்ட முகம் தேவைப்படுது’ என்பது போன்ற வசனங்களும் அதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையெல்லாம் சேர்ந்து, பத்து தல படத்தைப் பத்தோடு பதினொன்றாக ஆக்கியுள்ளது.

அனைத்தையும் தாண்டி, ராவணன் என்ற பாத்திரத்தை மையப்படுத்திய கதை என்பதாலேயே ‘பத்து தல’ என்ற பெயர் வைத்திருக்கின்றனர். அந்த டைட்டில் கதையில் எந்தவித எழுச்சிக்கும் காரணமாகவில்லை.

துண்டு துண்டாக இருக்கும் காட்சிகளை ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் காட்சியனுபவமே ‘கேங்க்ஸ்டர்’ படங்களை, ‘த்ரில்லர்’ படங்களைக் காணத் தூண்டும். வழக்கமான மசாலா படங்களுக்கு நூல் பிடித்தாற் போல கதை சொல்ல வேண்டும்.

‘பத்து தல’ வெளித்தோற்றத்தில் ஒரு ’கேங்க்ஸ்டர் டிராமா’ போலத் தென்பட்டாலும் உள்ளடக்கத்தில் மாஸ் மசாலா படமாகவே உள்ளது. அது நல்லதா கெட்டதா என்பது ரசிகர்களின் ஆதரவிற்குப் பிறகே தெரியவரும்.

Share the Article

Read in : English

Exit mobile version