Site icon இன்மதி

இசை மரகதங்கள் தந்த கீரவாணி

Read in : English

சிறு மழைத்துளி நம் ஸ்பரிசம் தொட்டதும் ஏதேதோ நினைவுகள் எழும். எங்கெங்கோ மனம் சென்றுவரும். இடம், காலம் என்ற வரையறைகளைத் தாண்டிச் செல்லும் அந்த பயணம், மனதின் அடியில் படிந்திருக்கும் விருப்பங்களைக் கண்டெடுக்கும். ஏதேனும் ஒரு கலைவடிவம் இது போன்ற மாயாஜாலத்தை எளிதாகச் செய்துவிடும். குறிப்பாக, எளிய மக்களைப் பொறுத்தவரை, அது திரையிசை என்பதாகவே இருக்கிறது.

அப்படி நாளும் நம்மை மெய்மறக்கச் செய்யும் சில பாடல்கள், காலவோட்டத்தில் நம் ரசனை வட்டத்தில் இருந்து விடுபட்டுவிடும். சம்பந்தப்பட்ட கலைஞர்களோ, படைப்புகளோ அல்லது அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளோ மீண்டும் நினைவூட்டும்போது, நீர்பரப்பில் எழும் வட்டங்களாய் நம் ரசனையின் எல்லை வரை பாவும்.

‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை வென்றதன் மூலமாக, அதன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ், பின்னணிப் பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச், காலபைரவா மற்றும் அப்பாடலுக்கு நடனம் வடிவமைத்த பிரேம் ரக்‌ஷித் உட்படப் பல கலைஞர்களின் முந்தைய படைப்புகளும் அப்படித்தான் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகின்றன. அந்த வகையில், மரகதமணி கீரவாணி தமிழில் இசையமைத்த பாடல்களும் மீண்டும் நம் நினைவலைகளில் பாய்ந்தோடுகின்றன.

மரகதம் போன்ற பாடல்கள்!
1990இல் தெலுங்கில் ‘மனசு மாமத’ படம் மூலமாக அறிமுகமான கீரவாணி, அதற்கடுத்த ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’ படம் வழியே தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

’புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் இளையராஜாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, வேறு இசையமைப்பாளர்களோடு பணியாற்றும் விருப்பத்தில் இருந்தார் பாலச்சந்தர். அந்த நேரத்தில், அவரது கவிதாலயா நிறுவனம் சார்பாக ’சிகரம்’, ‘நீ பாதி நான் பாதி’ என்ற இரு படங்கள் தயாரிப்பில் இருந்தன. இசையமைப்பாளர் வேடத்தில் நடித்ததோடு, ‘சிகரம்’ படத்திற்கு இசையும் அமைத்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ’அழகன்’ படத்தில் உண்டான ஈர்ப்பின் காரணமாக, ‘வசந்த் இயக்கிய ‘நீ பாதி நான் பாதி’யில் கீரவாணியை இசையமைக்க வைத்தார் பாலச்சந்தர்.

அழகனும் நீ பாதி நான் பாதியும் புத்துணர்வூட்டும் விதமாக இருந்தன; அதன் ஒரு சோறு பதமாக ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடலும், ‘நிவேதா’ பாடலும் இன்றும் நம் நினைவில் இருக்கின்றன

அழகனும் நீ பாதி நான் பாதியும் புத்துணர்வூட்டும் விதமாக இருந்தன; அனைத்துமே ஹிட் ரகம். அதன் ஒரு சோறு பதமாக ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடலும், ‘நிவேதா’ பாடலும் இன்றும் நம் நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவிதமாக அமைந்தது பெரிதில்லை; அப்போது, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு பழகிப் போயிருந்த திரையிசை ரசிகர்களின் கவனத்தைக் கவர்வதாகவும் அமைந்தன. அவை ஒருகாலகட்டத்திற்கு மட்டுமேயான இசையாக இல்லை; இன்றும் புதிதாகவே இருக்கின்றன.

திரையுலகத்தில் நிகழும் அற்புதங்களைக் கணிப்பவர்கள், கவனிப்பவர்கள் அப்படித்தான் மரகதமணியின் இசையைக் கொண்டாடினார்கள். அழகனில் ‘தத்தித்தோம்’, ‘சாதிமல்லிப் பூச்சரமே’, ‘நெஞ்சமடி நெஞ்சம்’, ’துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப் பாட்டு’, ‘கோழி கூவும் நேரமாச்சு’ என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு தடத்தில் பயணிக்கச் செய்பவை.

மேலும் படிக்க: வெற்றிக்கொடி நாட்டிய நாட்டு நாட்டு!

போலவே, நீ பாதி நான் பாதியில் ‘காலம் உள்ளவரை நீ பாதி’, ‘யாரைக் கேட்டு ஈரக்காற்று பூவைக் கிள்ளும்’ , ’புதிய பூக்களைப் பார்த்து’, ‘தேவன் தீர்ப்பென்றும் புதிதானது’ பாடல்கள் மெலடி மெட்டுகளாக அமைந்ததில் ஆச்சர்யமில்லை; இதில் ஜனகராஜ், டிஸ்கோ சாந்தி ஆடுவதாக நகைச்சுவை பாணியில் அமைந்த ’பொண்டாட்டி கூப்பிடும்போது’ பாடலும் கூட இன்றும் கொண்டாடத்தக்கது. வழக்கமாக, இது போன்ற பாடல்கள் படம் வெளியான காலகட்டத்தில் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் கணேஷ், கலை இயக்குனர் மகி மற்றும் நடன இயக்குனர் கலாவின் அற்புதமான ஒருங்கிணைப்பு இருந்தபோதும், அக்காலத்தில் இப்படம் பெரிதாகக் கொண்டாடப்படாமல் போனதற்குச் சாதாரண ரசிகர்களை ஈர்க்காத இதன் திரைக்கதையமைப்பே காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இதே காலகட்டத்தில் ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’ என்ற மூன்று படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைத்தார் கீரவாணி.

வி.சி.குகநாதன் இயக்கிய ‘பாட்டொன்று கேட்டேன்’ படத்தில் ’யார் எந்தன் ராகம் அறிந்தவன்’ பாடல் மெலடி மெட்டாக வசீகரிக்கும். இதில் வரும் இடையிசை திரைக்கதையில் வரும் திருப்பங்களுக்கேற்ப பரபரப்பூட்டுவதாக இருக்கும். கேட்கும்போதே, இது கிளைமேக்ஸில் வரும் பாடல் என்று யூகித்துவிட முடியும். இதே படத்தில் இடம்பெற்ற ‘பச்சத்தண்ணியில குளிக்காத’ பாடலைக் கேட்டதும், தியேட்டரில் ரசிகர்கள் எழுந்து ஆட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்பது புரிகிறது.

சசி மோகன் இயக்கிய ‘சிவந்த மலர்’ படத்தில் ‘எதுவரை போகும் ஆகாயம்’ பாடல் கேட்டவுடன் மனதோடு ஒட்டிக்கொள்ளும். போலவே ‘எரியுதே இது நிலவு இது நிலவு’ பாடல் உற்சாகம் கூட்டும்.

இதே வரிசையில், தன்னை ஒரு வெற்றிகரமான நாயகனாக நிறுவிக்கொள்வதற்காகவே அர்ஜுன் இயக்கிய ‘சேவகன்’, ‘பிரதாப்’ படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் இடம்பெற்ற ‘நன்றி சொல்லிப் பாடுவேன்’, ‘என் கண்ணனுக்கு காதல் வந்ததும்’ பாடல்கள் நம் மனம் மயக்கும் மெட்டுகளாக அமைந்தவை.

ஜனகராஜ், டிஸ்கோ சாந்தி ஆடுவதாக நகைச்சுவை பாணியில் அமைந்த ’பொண்டாட்டி கூப்பிடும்போது’ பாடலும் கூட இன்றும் கொண்டாடத்தக்கது; வழக்கமாக, இது போன்ற பாடல்கள் படம் வெளியான காலகட்டத்தில் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்

கே.பாலச்சந்தரின் ’வானமே எல்லை’ படமும் கூட ரசிகர்களை ஈர்த்த பாடல்களைக் கொண்டவைதான். அவற்றில் ‘கம்பங்காடு’ பாடல் இன்றும் இன்ஸ்டாரீல் வடிவில் உலவி வருகிறது. அதேபோல, அவர் இயக்கிய ‘ஜாதிமல்லி’யில் ‘கம்பன் எங்கே போனான்’ பாடலும் நம்மை ஈர்த்தது. போலவே, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ படத்தில் வந்த ‘விழாமலே இருக்க முடியுமா’வும், ‘கொண்டாட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னோடுதான் கனாவிலே’ பாடலும் வானொலி, தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ரசிகர்களால் அனுபவித்து சிலாகிக்கப்பட்டவை.

இவை அனைத்துமே தமிழில் மரகதமணி தந்த முத்துகளில் சில.

மேலும் படிக்க: தேவா: ரஜினி ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்!

தேசிய அங்கீகாரம்!
தொண்ணூறுகளில் இசையமைப்பாளராக கீரவாணி அறிமுகமானபோது, அங்கு கே.வி.மகாதேவன், ராஜன் நாகேந்திரா, ஜே.வி.ராகவலு, ரமேஷ் நாயுடு, சக்கரவர்த்தி, ராஜ்-கோட்டி என்று பெரும்படையோடு இளையராஜாவும் பப்பி லஹரியும் எல்லை தாண்டிச் சென்று ஹிட்களை தந்து கொண்டிருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அறுபதுகளைச் சேர்ந்தவர்கள். அதனால், இளைய தலைமுறைக்கேற்ற இசையைத் தரும் புதுரத்தம் தேவைப்பட்டது. கீரவாணியின் நுழைவு அதற்கேற்றாற்போல அமைந்தது.

தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் பெரிதாகக் கொண்டாடப்பட்ட மரகதமணி, எம்.எம்.கீரவாணி என்ற சுருக்கமான பெயருடன் அங்கு உலா வந்தார். இந்தியில் ‘க்ரீம்’ என்ற பெயரில் இசையமைத்தார். அங்கும் அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகக் காரணமானது மகேஷ் பட் இயக்கிய ‘கிரிமினல்’. தமிழில் இப்படம் ‘எல்லாமே என் காதலி’ என்ற பெயரில் ‘டப்’ ஆனது.

இதில் வரும் ‘உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ’ பாடல் மெலடி விரும்பிகளின் எவர்க்ரீன் பாடல். தனிமையில் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ தனது துணையை நினைத்து பிரிவால் வருந்தும்போது, ஊடலால் அவதியுறும்போது திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும். அதேநேரத்தில், இதில் இடம்பெற்ற ’பார்ட்டி பார்ட்டி ஓரம் கட்டு’, ‘ஜம்மா ஜம்மா’ உள்ளிட்ட பாடல்கள் அன்றைய தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப காரநெடி கொண்டவை.

அந்த காலகட்டத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல தமிழ், தெலுங்கு படங்கள் இந்தியில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெற்றி பெற்றன. அப்போது கீரவாணி பெற்ற வெற்றிகள் கவனிக்கத்தக்கவை, ஆய்வு செய்யத்தக்கவை. காரணம், தமிழில் இளையராஜாவும் ரஹ்மானும் தந்த இசை வடிவங்களின் கலவையாகவே கீரவாணியின் இசை இருந்தது. பாடலின் முன்னிசைக்கு கீரவாணி தரும் முக்கியத்துவம் இளையராஜாவின் பாணியை ஒட்டியதாகவே இருக்கும்.

பாடலின் முன்னிசைக்கு கீரவாணி தரும் முக்கியத்துவம் இளையராஜாவின் பாணியை ஒட்டியதாகவே இருக்கும்

தான் கூட்டணி சேரும் இயக்குனர்களுக்கும் அவர்கள் உருவாக்கும் காட்சியமைப்புக்கும் ஏற்ப இசையமைக்கும் திறமையும் அவரிடம் இருந்தது. அதனாலேயே, தொழில்நுட்பக் கருவிகளின் அதிர்வுகளோடு மனம் மயக்கும் மெல்லிசையைத் தர முடிந்தது. அவற்றில் கர்நாடக இசை மற்றும் நாட்டுப்புற இசை வடிவங்களின் மேற்புற வடிவத்தைப் பொருத்த முடிந்தது.
பரதன் இயக்கிய ‘தேவராகம்’ படம், இதற்கான சரியான உதாரணமாக இருக்கும். கீரவாணி தந்த இசை ஆல்பங்களில் பொக்கிஷம் என்றும் இதனைச் சொல்லலாம்.

‘சின்னச் சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ’, ’யா யாயா யாதவா’, ’தாழம்பூ தலை முடித்து’, ‘அழகிய கார்த்திகை தீபங்கள் ஆடும்’, ’கருவண்ண வண்டுகள்’ என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக மனதை வருடும்; ஆறாத ரணங்களைக் குணமாக்கும்; தூங்காமல் அலைவுறும் மனதைத் தாலாட்டும். அது போன்ற அனுபவத்தை, தமிழில் ஆக்கப்பட்ட ‘மகதீரா’வும் ‘பாகுபலி’யும் தரவில்லை.

2000க்கு பிறகு மணி சர்மா, தேவிஸ்ரீபிரசாத், தமன், அனூப் ரூபென்ஸ், மிக்கி ஜே மேயர் என்று பல திறமையாளர்கள் தெலுங்கில் அறிமுகமாகினர்; அவர்களது ஓட்டமும் கீரவாணியின் தளத்திலேயே இருந்தன. அப்போது வெற்றிகளுக்காகத் திக்குமுக்காடியவரைக் காத்தவை ராஜமவுலியின் படங்கள் தான். அதற்கான நன்றியைத் தெரிவிக்கும்விதமான இசையைத் தந்து வருகிறார் கீரவாணி; ஆர்ஆர்ஆர் வரை அது தொடர்கிறது.

அந்த வகையில், நாட்டு நாட்டு பெற்றிருக்கும் சர்வதேசக் கவனிப்பை கீரவாணியின் முப்பத்து நான்கு ஆண்டு கால உழைப்பிற்கான அங்கீகாரமாகவே கருதத் தோன்றுகிறது. எளிமையான இசையைத் தருவதற்காகக் கடும் உழைப்பைக் கொட்டும் அவரது இயல்பு தொடரட்டும்!

Share the Article

Read in : English

Exit mobile version