Read in : English
இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள செங்களம் திரைப்படம் தமிழ்நாட்டு அரசியலை விமர்சிக்கும் படமாக உருவெடுத்துள்ளது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளை, அதிகாரப்பூர்வமற்று பகிரப்படும் தகவல்களை, கிசுகிசுக்களைப் புனைவுகளாக மாற்றுவதென்பது ரசிகர்களை எளிதாகக் கவரும் உத்தி.
அதேநேரத்தில் சில மனிதர்களின் வாழ்க்கை வரலாறு போல முழுமையாக விவரிக்கவும் நம் சமூகம் இடம் கொடுக்காது. இவ்விரண்டையும் உணர்ந்து, சரியான விகிதத்தில் புனைவில் உண்மைகளைக் கலப்பது அப்படைப்பை வெற்றி பெறச் செய்யும். க்ரைம், ஆக்ஷன், த்ரில்லர் வகையறாக்களைவிட அரசியல் களம் பற்றிப் பேசும் படைப்புகளில் அது மிகவும் அவசியம்; அதுவே சுவாரஸ்யத்தை எகிற வைக்கவும் உதவும். ’செங்களம்’ பார்க்கத் தொடங்கியவுடன், நம்மைத் தீண்டி வேட்கைக்கு உள்ளாக்குவது இந்த உத்திதான்.
விருதுநகர் வட்டாரத்திலுள்ள முட்காட்டில் ஒரு பெண்மணி நடந்து போகிறார். அவருடன் ராஜபாளையம் வகை நாயொன்றும் செல்கிறது. அதன் கழுத்தில் ஒரு தூக்குச்சட்டி தொங்குகிறது. காட்டுக்குள் செல்லும் அவரை மூன்று இளைஞர்கள் சூழ்கின்றனர். அம்மூவரும் அப்பெண்மணியின் மகன்கள். மூன்று பேரைக் கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் அவர்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறார் அந்த தாய்.
சிறிது நேரத்திற்குப் பிறகு காட்டைவிட்டு வெளியேறிச் சாலைக்கு வரும்போது, ஒரு கான்ஸ்டபிள் அந்த பெண்மணியைப் பார்க்கிறார்; யார் என்று விசாரிக்கிறார். அப்போது, அவரது மகன்கள் அந்த போலீஸ்காரரைத் தாக்கி இழுத்துச் செல்கின்றனர்.
மிகச்சில நிமிடங்களில் முடிந்துவிடக் கூடிய இக்காட்சிகள் ஜவ்வாக இழுக்கும்போது நம்மைச் சோர்வு தொற்றுகிறது. அதனை அகற்றி வீசியெறியும்விதமாக அடுத்தடுத்த காட்சிகள் திரையில் விரிந்து, ஒரு அரசியல் சதுரங்கத்தை கண் முன்னே காட்டுகின்றன.
அரசியல் என்பது ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு போராட்டக் களம் என்பதே செங்களம் திரைப்படத்தின் சாராம்சம்
சூர்யகலா என்ற பெண், விருதுநகர் நகராட்சித் தலைவராக இருக்கும் ராஜமாணிக்கத்தின் இரண்டாவது மனைவி. ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை அண்டவிடாமல், அந்நகராட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ராஜமாணிக்கம். அதற்கு முன்பாக, அவரது தந்தை சிவஞானமும் தாத்தா சத்தியமூர்த்தியும் அப்பதவியை வகித்திருக்கின்றனர்.
என்னதான் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தாலும், நகரில் தங்கள் செல்வாக்கைக் கிஞ்சித்தும் செயல்படுத்த முடியாத ஆற்றாமையில் உள்ளூர் எம்.எல்.ஏ கணேசமூர்த்தியும் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவி செல்லப்பாவும் துடிக்கின்றனர்.
மேலும் படிக்க: ஃபார்ஸி: கள்ளநோட்டு கதையில் விஜய் சேதுபதி!
வெளியே அரசியல் எதிரிகள் என்றால், வீட்டில் சகோதரர் நடேசனும் சகோதரி மரகதமும் ராஜமாணிக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு எரிச்சலுறுகின்றனர். இந்தச் சூழலில், தேனிலவுக்குச் செல்லும் ராஜமாணிக்கத்தின் கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் ராஜமாணிக்கம் மரணமடைய, சூர்யகலா மட்டும் உயிர் பிழைக்கிறார். அதன்பிறகு, ராஜமாணிக்கம் வகித்த கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது.
சூர்யகலாவை வேட்பாளர் ஆக்கலாம் என்று சிவஞானம் யோசிக்க, மரகதமும் அவரது கணவரும் அதனை எதிர்க்கின்றனர். அதனால், எப்படி அறிவிப்பது என்று தயங்குகிறார் சிவஞானம். மாமனார் யோசனையில் ஆழ்ந்துவிட்டதை அறியும் சூர்யகலா, தனது அரசியல் பிரவேசத்திற்கு உதவியாக ஒரு ஆள் வேண்டும் என்று பள்ளித்தோழி நாச்சியாரை அவரது வீட்டிற்குச் சென்று அழைத்து வருகிறார். கூடவே, அவரது சகோதரர் ராயரும் வருகிறார். அவர்களது வருகையும் அரசியல் நுட்பங்களும் சிவஞானத்தையே திகைக்கச் செய்கிறது.
அவர்களது அரசியல் பிரவேசத்தைத் தடுக்க்ம் வகையில் நடேசனைத் தேர்தலில் நிறுத்தலாம் என்று அவர் முடிவு செய்வதற்குள், சூர்யகலாவே வேட்பாளர் என்று சொல்லும் நிலைமையை உருவாக்குகிறார் நாச்சியார். அதன்பிறகு, விருதுநகர் நகராட்சியின் தலைவராகிறார் சூர்யகலா. அவர் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பவராக விளங்குகிறார் நாச்சியார். ராயர் அதற்கு உதவிகரமாக இருக்கிறார். எல்லாமே சுமூகமாகச் சென்றுகொண்டிருக்கும் சூழலில், சூர்யகலா கனவிலும் எதிர்பார்த்திராத காரியமொன்று நிகழ்கிறது; அவரது வாழ்வே தலைகீழாக மாறுகிறது.
அதற்குப் பழிவாங்கும் வகையில்தான், ராயர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து மூன்று கொலைகளைச் செய்துவிட்டு தலைமறைவாகத் திரிகிறார். ராயர் யாரைக் கொல்கிறார்? கொலைகளைச் செய்ய என்ன காரணம்? அதன் பின்னிருக்கும் சதி என்னவென்பதை 9 அத்தியாயங்களில் சொல்கிறது ‘செங்களம்’. அரசியல் என்பது ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு போராட்டக் களம் என்பதே செங்களம் திரைப்படத்தின் சாராம்சம்.
இந்தக் கதையில் சூர்யகலாவாக வாணி போஜனும் நாச்சியாராக ஷாலி நிவேகாஸும் நடித்துள்ளனர். ராயராக கலையரசன் தோன்றுகிறார். இவர்கள் தவிர்த்து சரத் லோகித்சவா, விஜி சந்திரசேகர், வேல.ராமமூர்த்தி, பகவதி பெருமாள், பக்ஸ், முத்துகுமார், அர்ஜெய், டேனியல் போப், லகுபரன், பிரேம்குமார், பவன், கஜராஜ், பூஜா வைத்தியநாதன், மானசா ராதாகிருஷ்ணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். சுமார் இரண்டு டஜன் பேர் பிரதான பாத்திரங்களாக வருவதால், பின்னணியில் வரும் கும்பலில் சில நூறு பேர் இருக்கின்றனர். அவர்களது திறம்பட்ட நடிப்பே இதனைக் காணச் செய்கிறது.
வாணி போஜன் அமைதியாக வந்து போகிறார் என்றால், கலையரசன் ஆக்ரோஷமாக வலம் வருகிறார்; இருவரையும் ஆட்டுவிக்கும் நாச்சியாராக வரும் ஷாலி நிவேகாஸ் தனது அலட்டலான நடிப்பால் ரசிகர்களை எளிதாகக் கவர்கிறார்.
மினுமினுப்புக்கும் ஒளிவீச்சுக்கும் இடம் கொடுக்காமல், யதார்த்தமாக கண்ணால் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த முனைந்திருக்கிறது வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு. காட்சிகளில் புதைந்திருக்கும் வீரியத்தை உணர்த்த உதவியிருக்கிறது தரண்குமாரின் பின்னணி இசை. ஒரு விஷயத்தை நறுக்கு தெறித்தாற்போலச் சொல்லாமல் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட படத்தொகுப்பாளர் பிஜு டான்பாஸ்கோவினால் ‘செங்களம்’ சீரியல் அனுபவத்தைத் தருகிறது.
சில பாத்திரங்கள் கடந்த கால தமிழ்நாட்டு அரசியலை விமர்சனத்திற்குள்ளாக்கும் வகையில் அமையப் பெற்றிருப்பதுதான், ‘செங்களம்’ மீதான கவனத்தை அதிகப்படுத்தியிருக்கிறது
சமகாலத்தையும் கடந்த காலத்தையும் பிரிக்க இன்று, அன்று ஒருநாள் என்ற இரு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனால், கதையின் முக்கிய முடிச்சைத் தொட்டு மற்றனைத்தும் முன்பின்னாகச் சொல்லப்படுகிறது.
பொதுவாகவே, ஒரு கதையில் ஏதேனும் ஒரு முக்கியமான நிகழ்வைச் சொல்லவே ‘அன்று ஒருநாள்’ என்று குறிப்பிடப்படுவது வழக்கம். ஆனால், இந்தக் கதையில் பல நிகழ்வுகள் ‘அன்னிக்கு மட்டும் அப்படி நடக்கலேன்னா..’ என்று இதர பாத்திரங்கள் சிந்திக்கும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளன.
அந்நிகழ்வுகளின் தன்மை பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் அவை சித்தரிக்கப்பட்ட விதம் மிக மெதுவாக நகரும் விதமாகவே உள்ளன. அதேபோல, பார்வையாளர்களுக்கு எழும் சில கேள்விகளுக்கு இயக்குநர் பதில் சொல்லாமல் விட்டிருப்பது அடுத்த பாகம் நிச்சயமாக உண்டு என்று கோடிட்டுக் காட்டும் வகையில் இருக்கிறது. அதனால் திரைக்கதையில் விழும் இடைவெளி, தொய்வினை மீறி இப்படைப்பு சுவாரஸ்யமாக அமையப்பெறுவது இதில் இடம்பெற்ற கதாபாத்திர வடிவமைப்பினால் மட்டுமே.
மேலும் படிக்க: வாத்தி – ஆசிரியர் அவதாரத்தில் தனுஷ்!
சொல்லப்போனால், சில பாத்திரங்கள் கடந்த கால தமிழ்நாட்டு அரசியலை விமர்சனத்திற்குள்ளாக்கும் வகையில் அமையப் பெற்றிருப்பதுதான், ‘செங்களம்’ மீதான கவனத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
தமிழில் என்னுயிர்த்தோழன், அமைதிப்படை, மக்களாட்சி, இருவர் என்று பல புனைவுகள் சமகால அரசியலை விமர்சித்திருக்கின்றன; வசனங்களில், காட்சிகளில் சில அரசியல் தலைவர்களின் சாயலைப் பூசிக்கொண்டன. அவையெல்லாம் கமர்ஷியல் வெற்றிகளுக்காகவும் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டவை.
ஒரு நகராட்சியின் தலைவர் பதவியைக் குறிவைக்கும், அந்நகரத்து மக்களின் வாக்குகளைக் கவரவும் நிகழும் போட்டியைப் பேசுகிறது ‘செங்களம்’. ஆனால், சுயேட்சையாக இல்லாமல் அந்த நகராட்சிக்காகவே ஒரு கட்சியை சிவஞானத்தின் குடும்பம் நடத்திவருவதாகச் சொல்லும்போது வேறொரு தளத்திற்குக் கதை நகர்கிறது.
கணவரின் மரணத்திற்குப் பிறகு சூர்யகலா எனும் நபர் அவர் வகித்த பதவியை அடைய ஆசைப்படுவதாகவும், மாமனார் சிவஞானம் அதற்குத் தடையாக இருப்பதும் இதில் காட்டப்படுகிறது; அதனை எதிர்கொள்வதற்காகச் சிறு வயதிலேயே தன்னிடம் அரசியல் அறிவை வெளிக்காட்டிய தோழி நாச்சியாரை சூர்யகலா துணையாக வைத்துக்கொள்வது, பார்வையாளர்கள் மத்தியில் ‘ஜெயலலிதா – சசிகலா அரசியல் வாழ்க்கையின் சாயல் செங்களத்தில் படிந்திருக்கிறதோ’ என்ற ஐயத்தை உண்டாக்குவதாக உள்ளது.
’ரெண்டு பேரும் உடன்பிறவா சகோதரிகள்னு ஊரே சொன்னதே’, ‘எப்பவும் ஆட்சியிலயும் அரசியல்லயும் அறிவாளிங்க எல்லாம் ராஜகுரு, ராஜமாதாங்கற பேர்ல பின்னாலயே இருக்காங்க’ என்பது போன்ற வசனங்கள் அதனை அடிக்கோடிடுகின்றன. ஆனால், சூர்யகலாவுக்கு அரசியலின் அடிப்படையே தெரியாதது போலவும் நாச்சியார் என்பவரே அதனைப் பாலபாடமாகச் சொல்லித் தருவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தான் அந்த தலைவர்களின் ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையை விதைப்பதாக உள்ளது. ‘சிந்திக்கத் தெரியாதவங்க எல்லாம் பதவியில உட்காரலாம்; சிந்திக்கத் தெரிஞ்சவங்க கைகட்டி நிக்கணுமா’ என்ற வசனம் அதனைத் தீவிரப்படுத்துகிறது.
ஒரு பாமரனின் பார்வையில் கண்ணில் படும் விஷயங்கள் இவை. இவற்றைத் தாண்டி ‘செங்களம்’ கதையில் சாதாரண கண்களுக்குப் புலப்படாத கருத்தியல் ஒளிந்திருக்கவும் வாய்ப்புண்டு. இந்தவொரு அம்சமும் கதாபாத்திரங்களின் உள்மனக் கொதிப்பைப் பூடகமாகச் சொல்லும் காட்சியமைப்பும்தான் இந்த சீரிஸை பார்ப்பதற்கான காரணமாக விளங்குகின்றன.
யாரை ஆதரிக்கிறது, எதையெல்லாம் எதிர்க்கிறது என்பதைத் தாண்டி, ஊடகம் வழியே ஒரு செய்தியை எதிர்கொள்ளும்போது அதன் பின்னணியை அறிவது முக்கியம் என்பதைச் சொன்ன வகையில், தமிழ்நாட்டு அரசியலின் கடந்த காலத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகிறது ‘செங்களம்’. ஒரு படைப்பின் வெற்றி அதுதானே!
Read in : English