Site icon இன்மதி

அரசுத் துறைகளில் ஒப்பந்த ஊழியர் நியமன முறை நியாயமானதா?

Read in : English

அரசுத் துறைகள் பலவற்றில் புதிய நியமனங்களை நிறுத்தி, ஒப்பந்த முறைப்படி அரசு ஊழியர்கள் சேர்ப்பது பல காலத்துக்கு முன்பே துவங்கி விட்டது. உயிர் காக்கும் செவிலியர் முதல், முக்கியப் பணிகள் பலவற்றிலும் ஒப்பந்த ஊதிய முறையில் வேலை செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அது தொடர்பான அறிவிப்புகளும் கவர்ச்சியான பெயர்களின் வெளியாகி வருகின்றன. இந்த வகை பணி நியமனம் செய்யப்படுவோராலே அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. படிக்கும் போதே அரசுப் பணியில் சேர்வது குறித்த கனவுகளுடன் உள்ள இளைஞர்கள் நாட்டில் அதிகம் பேர் உள்ளனர்.

இன்று அரசின் வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்தால், பெரும்பாலான செலவு, அந்தந்த துறையில் வேலை செய்பவர்களின் சம்பளம் மற்றும் அகவிலைபடி, ஓய்வு ஊதியம் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கவே சென்று விடுகிறது. இந்த நிலையில் அரசை நடத்தும் செலவு என்ன? அது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? அரசில் உயர் பதவியில் உள்ளவர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கும் அதிக சலுகைகள் வழங்கப்படுவது ஏன்? அடிமட்டத்தில் பொறுப்பை நிறைவேற்றும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது ஏன்?

அரசில் எந்த துறையில் எவ்வளவு பேர் பதவியில் இருக்க வேண்டும்? அதில் எத்தனை பேர் நிரந்தரமாக்கப்பட வேண்டும்? எவ்வளவு பேர் ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம் என்பதை நிர்ணயிப்பது யார்? தனியார் துறையில் உள்ளது போல் கொடுக்கும் சம்பளத்திற்கான வேலையை அரசு ஊழியர்கள் செய்கிறார்களா? இதை கவனிப்பது யார்?  அரசுத் திட்டங்களுக்கு செலவிடும் நிதி பற்றி மக்கள் எவ்வாறு அறிய முடியும்? அரசு இயக்கம் சார்ந்து இந்தக் கேள்விகள் எழுகின்றன.

உயிர் காக்கும் செவிலியர் முதல் முக்கிய பணிகள் பலவற்றிலும் ஒப்பந்த ஊதிய முறையில் வேலை செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க: 

தெரு வியாபாரம்: சென்னையில் மீண்டும் ஒரு பரமபத ஆட்டம்

தமிழ்நாடு பட்ஜெட்: வளர்ச்சிப் போக்கை முடக்கும் நிதி அடிப்படைவாதம் வேண்டாம்!

இது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது, சென்னை சமன்வயா என்ற தொண்டு நிறுவனம். சமூக சேவை நிறுவனங்களுக்கு ஆலோசனையும் வழங்கிவருகிறது. இந்த நிறுவன இயக்குநர் ராமசுப்ரமணியன் மேற்குறிப்பிட்ட கேள்விகள் தொடர்பாக அளித்த பதில்:

ராமசுப்ரமணியன்- சமன்வயா நிறுவன இயக்குநர்

சமூகத்தில் மக்கள் இது போன்று இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். அரசுத் துறைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்க பல அமைப்புகள் இருந்தாலும், இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் எளிதில் கிடைக்காது. பொதுவாகவே, அரசு வேலை கிடைத்துவிட்டால், வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம், பல விதங்களில் சம்பாதிக்கலாம். சலுகைகளை அனுபவிக்கலாம். தேவையான பணிகளை முடித்துக் கொள்ளலாம் என்ற சிந்தனை சமூகத்தில் நிச்சயமாக இருக்கிறது. இதனாலேயே, ஒவ்வொரு அரசு வேலைக்கும், ஆயிரக்கணக்கானோர் போட்டி போடுகின்றனர். மந்திரி, எம்.எல்.ஏ., என செல்வாக்குள்ள யாரையாவது பிடித்து, அந்த வேலையை வாங்க முயற்சிக்கின்றனர்.

அரசு எந்தெந்த துறையில் நேரடியாக இயங்க வேண்டும்; எந்தெந்தத் துறையை தனியாரிடம்விட வேண்டும், என்பது மற்றொரு கேள்வி. அமெரிக்காவில் சிறைச்சாலைகள் கூட தனியார் வசம் உள்ளன. சீனாவில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் அரசின் நேரடி பார்வையில் இயங்குகின்றன. இரண்டும் வெவ்வேறு பொருளாதார சித்தாந்தத் துருவங்களில் இயங்குபவை.

அரசில் உயர் பதவியில் உள்ளவர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கும் அதிக சலுகைகள் வழங்கப்படுவது ஏன்? அடிமட்டத்தில் பொறுப்பை நிறைவேற்றும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது ஏன்?  

அமெரிக்க அரசு சிறைச்சாலையை லாபம் சம்பாதிக்க பயன்படுத்துவதை தவறாக நினைக்கவில்லை. மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு, சர்வதேச சந்தையில் போட்டியிட்டு லாபம் சம்பாதிப்பதை பெருமையாக நினைக்கிறது சீனா.சரி, நம் பொருளாதார சித்தாந்தம் என்ன? இந்தியா போன்று மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில், எந்தெந்தத் துறைகளில்  அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதில் எங்கெல்லாம் தனியார் மயம், எங்கு அரசு வேலை இருக்க வேண்டும். எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். எவ்வளவு பேருக்கு எந்தெந்தத் துறைகளில் வேலை கொடுக்க அரசால் முடியும். அதற்கான நீண்டகால செலவுகளை அரசு எவ்வாறு நிர்வாகிக்கும் போன்ற கேள்விகள் முக்கியமானவை.

இன்றுள்ள நிலையில் அனைத்துத் துறைகளும் தொடர்ந்து இயங்க வேண்டுமா? என்றோ சிலரை வேலையில் அமர்த்திய காரணத்தால் இயங்கும் அரசு துறைகள் எத்தனை? அவற்றை இழுத்து மூடாமல் தொடரக் காரணம் என்ன? இந்தத் துறைகளில் உள்ள பணியாளர்களை வேறு துறைகளில் ஏன் சேர்க்க கூடாது? இது போன்ற கேள்விகள் எழுந்தால் மட்டுமே தீர்வுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

கட்சி சார்பில்லாத அரசியலில் இவை சிக்கலற்ற கேள்விகள். இவற்றில் விருப்பு வெறுப்புக்கோ, சுலபமான விடைக்கோ இடமில்லை. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் பிரசாரத்திற்கு அடிமையாக இருந்தால் இது போன்ற கேள்விகள் சிக்கலானவை. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோல் எந்தக் கேள்வியும் எழ வாய்ப்பு இல்லை.

Share the Article

Read in : English

Exit mobile version