Site icon இன்மதி

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரமா, சாபமா?

மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த 16.88 லட்சம் பேரில் 8.48 லட்சம் பேர் கிராமப்புறங்களுக்கும், 8.20 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கும் சென்றுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 50% க்கும் அதிகமானோர் வேலை தேடி கிராமப்புறங்களுக்குச் சென்றனர்.(Photo Credit: PIB -Chennai.)

Read in : English

உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் நன்றாக வளர்ந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற நகர்ப்புற அல்லது கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள் நமது முன்னேற்றத்தை தடை செய்யும் வகையில் உள்ளன.

தமிழ்நாடு, வறுமை ஒழிப்பை வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறது. இப்போது அதன் வறுமைநிலை வெறும் 5 சதவீதம் மட்டுமே. அறுபது சதவீத மக்கள் நகர்ப்புற பகுதிகளில் குடியிருக்கும் தமிழ்நாடு, நாட்டிலே மிகவும் நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலம். நாட்டின் மொத்த நகர்ப்புற மக்கள்தொகையில் 11 சதவீதத்தினர் தமிழ்நாட்டில் வாழ்கிறாகள்.

தமிழ்நாடு 248 பில்லியன் டாலர் பொருதாளாரம் கொண்ட ஒரு மாநிலம். அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் 11 சதவீதம் வேளாண்மைத் துறையிலிருந்தும், 33 சதவீதம் உற்பத்தித் துறையிலிருந்தும், 54 சதவீதம் சேவைத் துறையிலிருந்தும் வருகின்றன. இதற்கு அர்த்தம் கைவினைத்திறன் கொண்ட உழைப்பாளர் சக்தி தேவைப்படும் போட்டிச் சந்தைகள் இங்கே இருக்கின்றன என்பதுதான்.

ஒரே அளவு எல்லா மாதிரிகளுக்கும் பொருந்தும் என்று நினைத்துக்கொண்டு அந்தத் திட்டம் 2006-07-லிருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படுகிறது.

ஆனால் தமிழ்நாடு லட்சக்கணக்கான உழைப்பாளர்களை வடக்கிலிருந்தும், வடகிழக்கிலிருந்தும் இறக்குமதி செய்கிறது என்பது ஒரு நகைமுரண். புலம்பெயர்ந்த உழைப்பாளர்களைப் பற்றிய நான்கு தசாப்த கணக்கெடுப்புத் தரவுகள் பின்வரும் செய்திகளைச் சொல்கின்றன: மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்த மொத்தம் 16.88 லட்சம் பேர்களில், 4.84 லட்சம் பேர் வேலைக்காகவும், 40,000 பேர் தொழில் தொடங்கவும், 20,000 பேர் கல்விக்காகவும் வந்துள்ளனர். வேலைக்காகப் புலம்பெயர்ந்த 4.83 லட்சம் பேர்களில் 2.75 லட்சம் பேர் கிராமப்புறங்களுக்கும், 1.95 லட்சம் பேர் நகர்ப்புறங்களுக்கும் சென்றுள்ளனர்.

மொத்தத்தில், தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்த 16.88 லட்சம் பேர்களில், 8.48 லட்சம் பேர் கிராமப்பகுதிகளுக்கும், 8.20 லட்சம் பேர் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் சென்றிருக்கிறார்கள். 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த உழைப்பாளிகள் கிராமப்பகுதிகளுக்கு வேலைதேடிச் சென்றனர். ஒரு வட இந்திய உழைப்பாளி தமிழ்நாட்டுக்கு வேலைதேடி வந்தால், இரண்டு தமிழ்நாட்டு ஆட்கள் வேலைதேடி மாநிலத்தை விட்டுப் புலம்பெயர்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இந்தியாவின் வேளாண்மைப் பொருட்களில் தமிழ்நாடு மிக அதிகமான பங்களிப்பைத் தந்து முன்னணியில் நிற்கிறது: முருங்கைக்காய் (98 சதவீதம்), மரவள்ளிக்கிழங்கு (44.4), தேங்காய் (29.1), புளி (25.3), வாழை (19.4), மஞ்சள் (15), பூக்கள் (16.5), நெல்லிக்காய் (18), ராகி (18), கொள்ளுப்பயிறு (18), சப்போட்டா (17.4).

உற்பத்தித்துறையில் தமிழ்நாடு பருத்தி நூல் தயாரிப்பில் இந்தியாவில் 41 சதவீத உற்பத்தியோடு முன்னணியில் நிற்கிறது. மின்னணு சாதனங்கள், ஹார்டுவேர் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 16 சதவீதம். உணவுப் பதன ஆலைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு நான்காவது பெரிய மாநிலம். கர்நாடகத்தோடும், மகாராஷ்டிரத்தோடும் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் “மிகவும் சமச்சீரான வளர்ச்சி மாதிரி உள்ளது; உற்பத்தித்துறையும், உயர்தொழில்நுட்பச் சேவைத்துறையும் தனித்தனியாக மொத்த மதிப்புச் சேர்ப்பில் (கிராஸ் வால்யூ ஆடட் – ஜிவிஏ) சுமார் நான்கிலொரு பாகத்தை வழங்குகிறது,” என்று ஓர் ஆய்வு மதிப்பிட்டிருக்கிறது.

ஆயினும் மாநிலத்தின் வேளாண்மைத் துறையில் பெரிய பயிர்களின் உற்பத்தியில் பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன; உதாரணத்திற்கு உழைப்பாளர் பற்றாக்குறை, அதிகமான கூலி போன்ற உயர்ந்துவிட்ட உட்பொருள் விலைகள் போன்றவற்றைச் சொல்லலாம். அதைப்போல உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலும் உழைப்பாளர் பற்றாக்குறை இருக்கிறது. பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்கு சுருங்கிக் கொண்டே வருகிறது.

உழைப்பாளர்ச் சந்தைகளைப் பாதிக்கும் ஆகப்பெரிய மடைமாற்றங்களில் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம். கிராமப்புறங்களில் இருக்கும் கைவினைத்திறன் இல்லாத உழைப்பாளர்களுக்கு 100 நாள் வேலை கொடுக்கும் சட்டம் அது. ஒரே அளவு எல்லா மாதிரிகளுக்கும் பொருந்தும் என்று நினைத்துக்கொண்டு அந்தத் திட்டம் 2006-07-லிருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட கைவினைத்திறன் இல்லாத உழைப்பாளர்கள் வேலை செய்கிறார்கள். தமிழ்நாடு போன்ற நகர்ப்புறமயமாக்கப்பட்ட ஒரு மாநிலத்தில், இந்தத் திட்டம் கூலி விநியோக விஷயத்தில் இடைத்தரகர்கள் மத்தியில் ஊழலை உருவாக்கியதைத் தவிர வேறெந்த உருப்படியான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் என்பது ‘மோசடிகளின் தீவனம்’ என்றும் அறியப்படுகிறது. 15 ஆண்டுகளாகவே இது கண்டும் காணாமல் விடப்பட்டிருக்கிறது. சிஏஜி போன்ற தணிக்கை முகமைகள் இதிலுள்ள நிதி மோசடிகளைச் சரிபண்ணுமாறு அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. பெரும்பாலான தொண்டு நிறுவனங்களும் இந்த விஷயத்தில் மௌனமாகவே இருக்கின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் பல துறைகளில் உழைப்பாளர் பற்றாக்குறையையும், கடுமையான கூலியுயர்வையும் ஏற்படுத்தி தப்பிக்க முடியாத பல எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கிவிட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் பிரயோஜனமில்லாத வேலைகளைச் சுட்டிக்காட்டிய பலஆய்வுகள் அதனால் வேளாண்மை செயற்பாடுகளின் மீது ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கங்களையும் சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஆனால் இந்தத் திட்டம் ஏழைகளுக்கு வாங்கும் சக்தியை கொடுப்பதற்கு உதவி புரிகிறது என்பதையும், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் கொடுக்கிறது என்பதையும் ஆய்வுகள் மறந்துவிட்டன. வேறுவார்த்தைகளில் சொன்னால், இந்தத் திட்டத்தால் வயதானவர்களின் நலம் பேணுதல் மையப்படுத்தப் பட்டிருக்கிறது.

மஹேஸ்வரி, எம். செல்வா, கங்வார் எல்.எஸ் (2011) ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தின் பால் உற்பத்தி விவசாயிகள் பற்றி நடத்திய ஆய்வில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தால், நெல் பயிரிடுதல் மற்றும் அறுவடை ஆகிய உச்சக்கட்டங்களில் வேலையாள் பஞ்சம் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டம் அமலான நாளிலிருந்து வேலையாட்களின் கூலி கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் எல்லாம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலை செய்யப் போய்விடுகிறார்கள்; அதனால் நிலமில்லாத அல்லது சிறு பால் விவசாயிகளின் பால்கறக்கும் கால்நடைகளை அந்தக் குடும்பத்து குழந்தைகளோ அல்லது வயதானவர்களோ பார்த்துக் கொள்கிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் பல துறைகளில் உழைப்பாளர் பற்றாக்குறையையும், கடுமையான கூலியுயர்வையும் ஏற்படுத்தி தப்பிக்க முடியாத பல எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கிவிட்டது.

அதைப்போல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ் முடிக்கப்பட்ட நீர்நிலைகளின் வேலைகள் “புதிய அல்லது நிலைத்துநிற்கும்’ வளங்களை உருவாக்கவில்லை என்பதை, திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறான கிராமங்களில் கார்ஸ்வெல், கிரேஸ், டி நெவே, மற்றும் கீர்ட் (2014) ஆகியோர் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் வேலைகள் “கலையம்சம் கொண்டவை; ஆனால் உற்பத்தித்திறன் கொண்டவை அல்ல,” என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

ஒடிசா, கேரளா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் செய்யப்படுவது போல, தமிழகத்தில் திமுக அரசும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை கைவினைத்திறன் இல்லாத நகர்ப்புற உழைப்பாளிகளுக்காக அமல்படுத்திக் கொண்டிருக்கிறது; ஆனால் அது இதுவரை தொழிலாளிகள் மத்தியில் சொல்லிக் கொள்ளும்படியான விளைவை உருவாக்கவில்லை.

இந்தத் திட்டத்தைப் பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான டாக்டர் சி. ரங்கராஜன் தலைமையிலான ஒரு குழு பரிந்துரைத்தது. நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின்கீழ், குறிப்பிட்ட வேலைநாட்கள் என்பது வரையறுக்கப்படவில்லை. எனினும் நிர்ணயிக்கப்பட்ட கூலிகள் வேலையாட்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணக்கூடியவை. காரணம் ஆண்களும், பெண்களும் ஒரே கூலியைப் பெறுகிறார்கள் என்பதுதான்.

இந்தப் புதிய நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில், 14 மாநகராட்சிகள், 7 நகராட்சிகள், 37 ஊராட்சிகள் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு மண்டலத்தில், சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வேலை உத்தரவாதத் திட்டங்கள் உழைப்பாளர் நலனுக்கும், அவர்களின் ஜீவாதாரத்திற்கும் பெரிதாக எதுவும் செய்யவில்லை. கைவினைத்திறன் இல்லாத வேலையாட்கள் வேலை செய்யாமலே கூலிபெறும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டனர். இது இந்தியாவின் மனித வலிமையிலும், கண்ணோட்டத்திலும் ஆகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கோயம்புத்தூர் போன்ற மாநகரத்தில், இந்த நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை மாநகர உழைப்பாளிகள் வரவேற்கவில்லை என்று தெரிகிறது. இதில் சேர்ந்தவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டோர்கள் மட்டுமே. இந்தத் திட்டத்தின் வடிவமைப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. நிதியாண்டு 2021-22-ல் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடி என்பது, புது கவுன்சிலர்களும், இடைத்தரகர்களும், அரசு அதிகாரிகளும் ஊழல் செய்வதற்கான முகாந்திரமாக மாறிவிடும்.

இந்த நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஏற்கனவே அமலில் இருக்கும் ஸ்வர்ண ஜயந்தி ஷஹாரி ரோஜ்கார் யோஜனா, தேசிய நகர்ப்புற வாழ்வாதார மிஷன், பிரதம மந்திரி ஸ்வாநிதி மற்றும் பிற திட்டங்களின் வீச்சையும், இலக்கையும் பாழ்படுத்திவிடும்.

தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக, நகர்ப்புறமாகிவிட்ட இடங்களை ஆராய்ந்தால், பாதிக்கு மேலான மாவட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற கிராமப்புறத் திட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும். நிதி சார்ந்த அழிவையே இந்தத் திட்டம் இறுதியில் கொண்டுவரும். இதுவரை செலவழிக்கப்பட்ட நிதிகள் ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அதை நடைமுறையிலிருந்து நீக்கிவிடுவதற்கும் உரிய நேரம் இதுதான்.

(ஆசிரியர் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Share the Article

Read in : English

Exit mobile version