Site icon இன்மதி

எரிச்சலூட்டுகிறதா ’நம்ம சென்னை’ செயலி?

Read in : English

பெருநகர சென்னை மாநகராட்சி சில நேரங்களில் கடுமையான நீதிமன்றக் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. அதற்குக் காரணமானவற்றில் ஒன்று எச்.லட்சுமி வெர்சஸ் ஆணையர் (2018) வழக்கு. ஊழல் செய்து ஒரு மருத்துவமனை பொதுநிலத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அந்த வழக்கில் அனைத்து விஜிலென்ஸ் ஊழியர்களையும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநகராட்சியில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நிர்வாகத்தில் நிலவும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் அடுத்த பதவி வரும் வரை தங்கள் பதவிக்காலத்தை ஓட்டிவிடுகின்றனர் என்று நீதிமன்றம் காட்டமாகக் கருத்து தெரிவித்தது. இப்போது பெருநகர சென்னை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவுன்சிலைக் கொண்டுள்ளது. கொள்கைகளை உருவாக்குவது நிர்வாகிகள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தின் பல கருத்துக்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இணைந்து செயல்படும் தற்போதைய ஆட்சியோடு சம்பந்தப்பட்டவை.

கவுன்சிலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விசயம் பொதுமக்கள் புகார் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ’நம்ம சென்னை’ செயலிதான்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்தச் செயலியில் பதிவு செய்யப்படும் புகார்கள் குறித்து பல மோதல்கள் நடந்துள்ளன. ஆக்கிரமிப்பு, மோசமான உணவுத் தரம், கொசுத்தொல்லை, உடைந்த சாலைகள், தெருவிளக்குகள் காணாமல் போனது உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு அல்லது குறைபாடுகளுக்குக் காரணமானவர்களிடம் புகார்தாரர்களின் அடையாளம் மற்றும் தகவல்கள் கசிந்து விடுகின்றன. அதனால் இந்த மோதல்கள் ஏற்படுகின்றன.

கவுன்சிலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விசயம்,  பொதுமக்கள் புகார் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ’நம்ம சென்னை’ செயலி

புகார்தாரருக்கு போலீஸ் சம்மன்
சமீபத்தில் மயிலாப்பூர் அன்புராஜ் சிக்கன் ஸ்டால் என்ற கடைக்கு, அந்தக் கடையின் உணவுத்தரம் குறித்து புகார் அளித்தவர் பற்றிய தகவல்களைக் கசியவிட்டனர் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள். உணவுக் கடை நடத்துனருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் கூறி, அப்பகுதி காவல் ஆய்வாளர் எம்.ரவி புகார்தாரருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டு மே மாதம் இதேபோன்று ஒரு பிரச்சினை ஏற்பட்டது. கொசுத் தொல்லை குறித்து புகார் அளித்ததற்காக, அண்ணா பல்கலைக்கழக பயோமெட்டீரியல்ஸ் ஆராய்ச்சியாளர் பிரீத்தி ராமதாஸும் அவரது தாயாரும், “பெருநகர சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் பத்து பேர் கொண்ட குழுவால்” மிரட்டப்பட்டனர். புகார் அளித்தவரின் வீட்டிற்கு வந்த அந்த நபர்கள், செயலியில் புகார் அளிக்க வேண்டாம் என குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க: சிங்காரச் சென்னை 2.0: திட்டம் சரி, ஆனால் செயற்பாடுகள்..?

மயிலாப்பூர் விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்த முறை பெருநகர சென்னை காவல்துறையே களத்தில் இறங்கியிருப்பது இந்தப் பிரச்சினைக்கு வேறு பரிமாணத்தைத் தருகிறது, புகார் அளிப்பது தொடர்பாகத் தனிப்பட்ட குடிமக்களை அச்சுறுத்தும் முயற்சி அதிகரித்து வருவதாகs சமூக ஊடகங்களில் கருத்துகள் எழுந்துள்ளன. 2018 ஜனவரியில் அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் அறிமுகப்படுத்தப்பட்ட ’நம்ம சென்னை’ செயலி, சென்னைக்கான ‘ஸ்மார்ட் முன்முயற்சிகள்’ பட்டியலில் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சில சந்தர்ப்பங்களில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் குடிமக்களின் குறைகளுக்குப் பயன்படுத்துவதும் அச்சுறுத்தலுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சம்பவத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்றனர் பில்டர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரத்தில் குற்றவாளிகளால் அவர் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், நேர்மையற்ற அதிகாரிகள் செய்யும் மோசடிகளை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்.

கோடம்பாக்கத்தில் அனுமதியின்றி ஒரு கட்டிடம் கட்டுவது தொடர்பாக, அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் தாக்கல் செய்யாத ஆர்டிஐ மனுக்களுக்கு ‘நடவடிக்கை’ எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சியிடம் இருந்து ‘பதில்’ வந்ததால், அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். உண்மை என்னவென்றால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே பெரிய வீடு கட்டிக் கொண்டிருந்த ஒரு தொழிலதிபரிடம் பணம் பறிப்பதற்காக அபார்ட்மென்ட் பிளாக் செயலாளர் பெயரில் மோசடியான ஆர்டிஐ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் பத்து பேர் கொண்ட குழுவால் கொசுத் தொல்லை குறித்து புகார் அளித்தவர் குடும்பத்தினர் மிரட்டப்பட்டனர்

தோற்கடிக்கப்படும் தொழில்நுட்பம்
’நம்ம சென்னை’ செயலி, தரவுகள் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு வெளிப்படைத்தன்மையை உருவாக்குகிறது என்பதால்தான் சர்ச்சை எழுந்திருக்கிறது. .

உள்ளூர் கவுன்சிலருக்கோ அல்லது மாநகராட்சி மண்டல ஊழியர்களுக்கோ ஆலோசனை சொல்லும் அதிகாரம் இல்லை என்பதால், ஆர்டிஐ புகார்கள் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்பது விதி. அதனால்தான் புகார்களை மூடி மறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. தரவுகளின் இரகசியம் மீறல் தொடர்பான சட்ட விதிகள் இல்லாதது அதிகாரிகளுக்குத் தைரியத்தை அளிக்கிறது. புகார்தாரர்களின் விவரங்களைக் கசிய விட்டதற்காக அவர்கள் மீது வழக்குகள் போடப்படுவதில்லை. .

மேலும் படிக்க: சிக்கனமான பயணம்: சென்னையில் சாத்தியமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 சம்பந்தமாக இன்னும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. அந்த மசோதாவின் படி, சென்னை மாநகராட்சியும், அதன் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளும் ‘தரவு நம்பிக்கைக்குரியவராக’ கருதப்படுவார்கள்.

“தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கான நோக்கத்தையும் வழிமுறைகளையும் தனியாகவோ அல்லது பிற நபர்களுடனோ இணைந்து தீர்மானிக்கும்” கடமை அவர்களுக்கு இருக்கிறது. செயலாக்கத்திற்கான தரவை வைத்திருப்பவர்களுக்கும் முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தின் கீழ் பொறுப்பு உள்ளது.

நேர்மையற்ற ஊழல் அதிகாரிகள் தனிப்பட்ட தகவல்களைக் குற்றவாளிகளுக்கு கசியவிடுவது பெரிய குற்றம். அந்தக் குற்றத்திற்குத் தண்டனைகள் விதிக்கப்படும். ஒன்றிய அரசின் சட்டம் வரும் வரை திமுக அரசு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தரவுகளின் தனியுரிமையைக் காக்கவும், அந்த உரிமையை மீறுதல் மற்றும் சட்டவிரோதமாகத் தரவுகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கவும், திமுக அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.

அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தினமும் சிறு வணிகர்களிடமிருந்து அதிக அளவில் போகும் லஞ்சத்தைக் கருத்தில் கொண்டால், மயிலாப்பூர் காவல்துறை ஆர்டிஐ புகார்தாரர்க்கு அனுப்பிய சம்மன்கள் சிறுவணிகர்கள் சம்பந்தப்பட்ட ஊழலின் தடயங்களை வெளிப்படுத்தியுள்ளன

புதிய விதிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பொது நலன் பிரிவுகளின் கீழ் வரும் தனியார் தரவுகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் (நியாயமான பாதுகாப்பு வழக்கங்கள், நடைமுறைகள், மற்றும் முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்) விதிகள் 2011 காலாவதியாகி விட்டன. மேலும் தீயநோக்கம் கொண்ட தரவுக் கசிவுகளைத் தடுக்க பயனுள்ள தீர்வுகளை அந்த விதிகள் பரிந்துரைக்கவில்லை.

அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தினமும் சிறு வணிகர்களிடமிருந்து அதிக அளவில் போகும் லஞ்சத்தைக் கருத்தில் கொண்டால், மயிலாப்பூர் காவல்துறை ஆர்டிஐ புகார்தாரர்க்கு அனுப்பிய சம்மன்கள் சிறுவணிகர்கள் சம்பந்தப்பட்ட ஊழலின் தடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஊழலைக் கட்டுப்பாடில்லாமல் செல்ல அனுமதிப்பதன் மூலமும், சராசரி குடிமகன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகக் குண்டர் அச்சுறுத்தல் என்ற துணை கலாச்சாரத்தை அனுமதிப்பதன் மூலமும் திமுக அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்படுகிறது. இது அரசால் தாங்கிக் கொள்ள முடிகிற விசயம் அல்ல.

’நம்ம சென்னை’ செயலி மூலம் பதிவு செய்யப்படும் புகார்களை அந்தந்த வார்டுகளில் வரைபடமாக்கி மாநகராட்சி இணையதளத்தில் டேஷ்போர்டாக காண்பிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். அதனால், அந்தப் புகார்களைத் தாமதமின்றி கையாண்டு வெளிப்படைத்தன்மையொடு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் ஆளாவார்கள்.

கடந்த ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலுக்கு முன்பாக, உள்ளூர் செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தல், வீடு கட்ட லஞ்சம் வசூலித்தல், சில்லறை வணிகர்களின் பாதுகாப்பு என்று சொல்லி அவர்களிடமிருந்து நிதி வசூலித்தல், சராசரிக் குடிமகனை அச்சுறுத்தல் உள்ளிட்ட அநியாயங்கள் இந்த ஜனநாயகப் பிரதிநிதித்துவ முறையைச் சீரழித்து விடுமோ என்ற பயம் நிலவியது. பல பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கவுன்சிலர்கள் போலவே செயல்பட்ட கடந்தகால அனுபவங்கள் பொதுமக்களை எரிச்சலடைய வைத்தன.

இப்போது ’ நம்ம சென்னை’ செயலியின் பயன்பாடு கூட அபாயகரமானதாக மாறி வருகிறது. தமிழக அரசும், காவல் துறையும் கால தாமதமின்றி இது போன்ற அராஜகங்களை முறியடிக்க வேண்டும்!

Share the Article

Read in : English

Exit mobile version