Site icon இன்மதி

சிங்காரச் சென்னை 2.0: திட்டம் சரி, ஆனால் செயற்பாடுகள்..?

Read in : English

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் ஏராளமான விசயங்கள் கருத்தாக்க ரீதியில் சரியாகத்தான் இருக்கின்றன. பூங்காக்களுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. 2022-23ல் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நிறைய அம்சங்களைச் சாத்தியப்படுத்தக்கூடிய வகையிலான வருமான உயர்வைச் சுட்டிக்காட்டுகிறது திட்டம்.

சென்னையை ‘அழகுபடுத்தும்’ இந்தச் சிங்காரச் சென்னை 2.0 திட்டமும், சென்னையை இன்னொரு சிங்கப்பூராக மாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலக்குகளும் முக்கியமான பகுதிகளில் பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

ஈவெரா சாலையில் பூங்கா ரயில்நிலையத்திற்கு எதிரில் ரிப்பன் கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் பிரம்மாண்டமான விக்டோரியா பொது அரங்கை சுற்றுலாத்தலமாக, அருங்காட்சியகமாக மாற்றப் போவதாக பெருநகர சென்னை மாநகராட்சி சொல்லியிருக்கிறது. அதற்காக ரூ.32.6 கோடி செலவழிக்கப்படவிருக்கிறது. மெட்ரோ ரயில் கட்டுமானத்துடன் அந்த முழுப்பகுதியும் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தப்பட்டது; 1887ல் காலனி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அந்த விக்டோரியா ஹால் இப்போது பளிச்சென்று கவர்ச்சியாக நிற்கிறது. மேலும் எவ்வளவு நிதி செலவழிக்கப்படும் என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

சமீபத்திய நிதி ஒதுக்கீட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் இன்னொரு திட்டம் நீர் உறிஞ்சும் பூங்காக்களை அமைப்பது. இது சரியாக நிறைவேற்றப்பட்டால் அந்த ஏரியாவில் பெய்யும் மழைநீர் முழுவதும் வடிகால் பகுதிகளில் மடைமாற்றம் செய்யப்பட்டு வெள்ளம் தவிர்க்கப்படும்.

அந்தப் பூங்காக்களுக்கான ரூ.5.6 கோடி மதிப்புள்ள முன்மொழிவுகள் பெறப்பட்டிருப்பதாக டுஃபிட்கோ நிதி நிறுவனம் 2022 நவம்பரில் சொன்னது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்களுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது

கூழாங்கற்களால் சமதளமான நடைபாதைகளும், யோகாதளமும், அமரும் பெஞ்சுகளும், வர்ண ஓவியங்களும் கொண்ட பூங்காக்களை ரூ.3.57 கோடி செலவில் அமைப்பதற்கான திட்டங்களும், ரூ.4.72 கோடி செலவில் விளையாட்டு மைதானங்களை (கால்பந்து, கைப்பந்து, பாட்மிண்டன் மைதானங்கள்) அமைப்பதற்கான திட்டங்களும் உருவாகியிருப்பதாக டுஃபிட்கோ தெரிவித்திருக்கிறது.

இந்த நிதிகளைப் பயன்படுத்தி குறிப்பிடப்பட்ட பணிகளைச் செய்தாக வேண்டும். ஏனென்றால் மார்ச் மாதத்தோடு இந்த நிதியாண்டு முடிவுக்கு வருகிறது. மாநகரத்தில் இருக்கும் பாலங்களை அழகுபடுத்த ரூ.8.31 கோடியும், சுடுகாடுகளை மேம்படுத்த ரூ.13 கோடியும் செலவழிக்கப்படவிருக்கின்றன.

மேலும் படிக்க: சிங்காரச் சென்னையை உருவாக்க செய்ய வேண்டிய ஐம்பெரும் பணிகள்!

எங்கே தடுமாற்றம்?
அழகுபடுத்துதல் என்பது வெறும் அலங்கார விசயம் தான். சென்னையின் உள்ளார்ந்த பகுதிகளில் அழகுபடுத்துவதற்கான அடிப்படைகள் கிடையாது. நீண்டகாலமாகக் கவனிக்கப்படாமல் கிடக்கும் ஏரியாக்கள் அவை. அங்கே நடைபாதை உட்கட்டமைப்பு இல்லை; பேருந்து வசதிகள் பெருமளவில் இல்லை. நடைபாதைகளையும், பக்கவாட்டு மோட்டார் வாகனப்பாதைகளையும் வணிகநிலையங்கள் ஆக்ரமித்திருக்கின்றன.

கடந்த பத்தாண்டில் இந்த ஏரியாக்களில் கட்டிடங்கள் விதிகளை மீறி தாறுமாறாகக் கட்டப்பட்டிருக்கின்றன. விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. மைலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பழைய பகுதிகள் இட நெருக்கடியாலும், சுற்றுப்புறச்சூழல் மாசுக்களாலும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. 1970களுக்குப் பின்பு உருவான புதிய பகுதிகளான கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், சூளைமேடு, அண்ணாநகர் மேற்கு, முகப்பேர் போன்றவை குடிமைநலக் கவனம் பெறாமல் சீரழிந்து கிடக்கின்றன.

புறநகர்ப் பகுதிகள் இன்னும் மோசம். இரு சக்கர வாகனங்கள், கார்கள் பெருகிவிட்டன என்பது முன்னேற்றத்தின் அறிகுறி அல்ல. அவற்றைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு இந்த மாநகரம் வடிவமைக்கப்படவில்லை.

திமுகவால் ஆளப்படும் பெருநகர சென்னை மாநகராட்சி 2021-22ல் கோவிட்-19 பாதிப்புகளையும், 2021ல் மழையையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் மாநகராட்சியின் எதிர்கால இலக்குகளில் அழகுபடுத்தும் சிந்தனைகள் தான் அதிகமிருக்கின்றன.

சென்னையின் உள்ளார்ந்த பகுதிகளில் நடைபாதை உட்கட்டமைப்பு இல்லை; பேருந்து வசதிகள் பெருமளவில் இல்லை; நடைபாதைகளையும் பக்கவாட்டு மோட்டார் வாகனப்பாதைகளையும் வணிக நிலையங்கள் ஆக்ரமித்திருக்கின்றன

2016லிருந்து இதுவரை உயர்ந்துகொண்டே போகும் மக்கள்தொகையாலும், பல ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் விட்டதாலும் நிலைகுலைந்து கிடக்கும் சென்னை மாநகரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய இலக்குகள் இத்திட்டத்தில் இல்லை.

கடந்த காலத்தில் இன்மதி சுட்டிக்காட்டியது போல, சென்னையில் பெருகிக் கொண்டிருக்கும் மோட்டார் வாகனங்களை வருமான வாய்ப்புகளாக மாற்ற முடியும். சென்னை மற்றும் புறநகர் மாநகராட்சிகளும், நகராட்சிகளும் வாகன உரிமையாளர்களிடம் பொதுவெளி பார்க்கிங் கட்டணங்களை நிரந்தரமாக வசூல் செய்து அதை வருமானமாக மாற்ற முடியும்.

அந்த வருமானத்தை நடைபாதை உட்கட்டமைப்பை உருவாக்கவும், விரிவான பேருந்து சேவைகளை உருவாக்கவும், சாலைக்கு அப்பால் பார்க்கிங் நிலையங்களை உருவாக்கவும், திருமண அரங்குகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், புதிய மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள், நகர்ப்புறச் சோலைகள் ஆகியவற்றை உருவாக்கவும் பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க: சென்னையின் பொதுக்கழிப்பிடப் பிரச்சினை எப்படித் தீர்ப்பது?

ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும், நகர்ப்புற விவகாரங்களின் தேசிய கழகமும் சென்னை காலநிலைக்கு ஏற்றாற்போல் மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் மாநகரம் என்று சொல்லியிருக்கிறது. இதற்குத் தகுந்த வழி மோட்டார் அல்லாத போக்குவரத்துக் கொள்கைதான் என்று நகர்ப்புற விவகாரங்களின் தேசிய கழகம் கூறுகிறது.

இந்தக் கொள்கை அடிக்கடி பேசப்பட்டு வரும் கொள்கைதான். ஆனால் அதன் விளைவுகள் ஏதும் சென்னை தெருக்களில் நிகழ்ந்தது போலத் தெரியவில்லை. 2023-24க்கான பட்டியலில் மாநில அரசு இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நகர்ப்புற விவகாரங்களின் தேசிய கழகம் 2021ல் தனது மதிப்பீட்டு அறிக்கையில் சென்னையின் மோட்டார் அல்லாத போக்குவரத்து கொள்கை பின்வரும் வகைகளில் வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறது: நடைபாதைகளை அதிகரித்தல்; பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்; பொதுப்போக்குவரத்து வாகனங்களின் பங்கை அதிகரித்தல்; தனிப்பட்ட வாகனங்களின் பயணங்களைக் குறைத்தல்.

இந்த அளவுகோல்கள்படி சென்னை பெரிதாக முன்னேறவில்லை என்பது அங்கே குடியிருப்பவர்களுக்கும் விஜயம் செய்பவர்களுக்கும் நன்றாகவே புரியும். உதாரணமாக, சென்னையின் நடைபாதைகளின் இருப்பு வெறும் 17.03 சதவீதம்தான். மாநகராட்சியின் வாக்குறுதிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைத்தான் இது காட்டுகிறது.

சென்னையின் நடைபாதைகளின் இருப்பு வெறும் 17.03 சதவீதம்தான்; மாநகராட்சியின் வாக்குறுதிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைத்தான் இது காட்டுகிறது

2015ல் கொண்டுவந்த தமிழ்நாட்டு ததிட்டத்தின்படி, தெரு வியாபாரிகளை ஒழுங்குப்படுத்தும் விசயத்தில் குடிமை முகமைகள் காலந்தாழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அரசுக்கு வருமான இழப்பு நேர்கிறது. ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் செழிப்பு ஏற்படுகிறது.

ஏரியா சபாக்கள் மூலம் வார்டுகளில் நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை வெளிக்கொணரும் திட்டத்தில் சென்னை கவனம் செலுத்துகிறது. ஊழல் செய்யும் கவுன்சிலர்களையும் செல்வாக்குமிக்கவர்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு ஏரியா சபாக்கள் செயல்படுகின்றன.

ஆனால் நோக்கம் நல்லதாக இருந்தும் பிரயோஜனமில்லை. செயல் அவ்வளவு நல்லதாக வரவில்லை.

உலக காலநிலை மாற்றத்தினால் 2023, 2024 ஆகிய ஆண்டுகள் மிகவும் உஷ்ணமாக இருக்கும் என்று ஆரூடங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலில் முதல்வரும், சென்னை மாநகராட்சியும் செய்ய வேண்டியது இதுதான்: இனிவரும் காலத்தை நன்றாகப் பயன்படுத்தி சிங்காரச் சென்னை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version