Read in : English
புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த பத்தாண்டுகள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புதுச்சேரியில் 1908 முதல் 1918 வரை பாரதி ஏன் வாசம் செய்தார்? பின்பு அவர் தமிழ்நாட்டிற்கு ஏன் திரும்பி வந்தார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர ஆய்வாளரும் பாரிஸில் குடியிருப்பவருமான ஜே.பி.பிரசாந்த் மோரே இன்மதிக்கு அளித்த நேர்காணலில் விளக்கியுள்ளார்.
ஜே.பி.பிரசாந்த் மோரே இன்மதி வாசகர்களுக்கு பரிச்சயமானவர். ஏற்கனவே சில நேர்காணல்களில் சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஸ் சந்திர போஸின் மரண மர்மத்தைப் பற்றியும், 50-ஆம் நூற்றாண்டின் முதல்பாதியில் இந்தியா முஸ்லீம்களின் மனநிலையைப் பற்றியும், தேசப்பிரிவினையில் தொடங்கிய இந்து-முஸ்லீம் முரண்களையும் பற்றியும் அவர் பேசியிருக்கிறார். மேலும் அவர் தமிழ் மகாகவி பாரதியார் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்து தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அவரை நேர்காணல் செய்த டாக்டர். பத்ரி சேஷாத்ரி, ஓர் ஊடக ஆளுமை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், கல்வி, அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். விஜய் டிவி, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். தந்தி டிவியில் 17 வாரங்களாக ஓடிய க்வாக் தி டாக் என்ற நிகழ்ச்சியை அவர் நடத்தினார்.
கிரிக்இன்ஃபோ டாட்காமின் இணை நிறுவனரும், நியூ மீடியா ஹொரைஸன் தலைவருமான பத்ரி சேஷாத்ரி 1991இல் சென்னை ஐஐடியில் இயந்திர பொறியியலில் பி.டெக் பட்டமும், 1996இல் அமெரிக்காவில் கார்நெல் பல்கலைக்கழகத்தில் அந்தப் பாடப்பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
பாரதி ஆய்வாளர்கள் என்று ஏராளமான பேர் இருக்கிறார்கள். குறிப்பாக, வ.ரா, ஆர்.ஏ. பத்மநாபன், சீனி. விசுவநாதன், ஆ. இரா. வேங்கடாசலபதி மற்றும் பாரதியின் புதல்வி போன்ற பலர் பாரதியைப் பற்றிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஜே.பி. மோரே, பாரதி ஆய்வில் எப்படி தனித்து வெளிப்படுகிறார்? குறிப்பாக புதுச்சேரிக்குப் பாரதியைத் தப்பி ஓடச் செய்த சூழல்கள் என்ன?
பாரதியின் சென்னை வாசம் மொத்தமே ஆறரை ஆண்டுகள் மட்டுமே. முதலில் 1904 முதல் 1908 வரையிலும், பின்பு 1918 முதல் அவர் காலமான 1921ஆம் ஆண்டுவரையிலும் அவர் சென்னையில் தங்கியிருந்தார்
பத்தாண்டு வனவாசத்திற்குப் பின்னர் அவர் தமிழ்நாட்டிற்கு ஏன் திரும்பிவந்தார்? இந்தச் கேள்விகளுக்குப் பதில் சொன்ன மோரே சில விசேஷமான பின்னணி சரித்திர நிகழ்வுகள் பாரதியின் வாழ்வில் தாக்கம் செலுத்தின என்பதை இந்த நேர்காணலில் பதிவு செய்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையாபுரத்தில் பிறந்த சி. சுப்ரமணியம் என்ற சுப்பையா எட்டையாபுர சமஸ்தானத்தில் இளமைப் பருவத்திலே தனது கவித்திறமைக்காக பாரதி பட்டம் பெற்று மரியாதை செய்யப்பட்டார். அவரது வாழ்நாள் முழுவதும், பல தலைமுறைகளாகவும் பாரதி என்ற பட்டப்பெயரே அவரது சொந்தப் பெயராக நிலைத்து நின்றது.
மேலும் படிக்க: பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் கட்டுக்கதைகளா?
திருநெல்வேலிலும், பின்பு பனராஸிலும் மெட்ரிக்குலேஷன் வரை பயின்ற பாரதி, மதுரை சேதுபதி பள்ளியில் சிறிதுகாலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்ரமணிய ஐயரின் அழைப்பை ஏற்று அந்தப் பத்திரிகையில் துணையாசிரியராகப் பணிசெய்தார். 1904-இல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். வயது இருபதைக் கடந்திருந்த நிலையில் பாரதி தேசியவாதியாக பரிணமித்திருந்தார். விவேகபாநு என்னும் இதழில்தான் அவரது முதல் கவிதை தனிமை இரக்கம் வெளியானது.
1905-இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினை நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட அலையையும், தீவிர தேசியவாதத்தையும் கிளப்பிவிட்டிருந்தது. அப்போது பாரதி, வங்கம் வாழியவே என்ற தனது முதல் தேசிய கவிதையை எழுதினார்.
அவரது அதீத தேசியவாத உணர்வால் கதிகலங்கிப் போனார் சுதேசமித்திரன் ஆசிரியர் சுப்ரமணிய ஐயர். அதனால் சுதேசமித்திரனிலிருந்து விலகி, மண்டயம் சீனிவாசாச்சாரியின் ஆதரவில் இந்தியா என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியரானார் பாரதி..
இந்தக் காலகட்டத்தில்தான் இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான வ.உ. சிதம்பரம், பாரதிக்கு அறிமுகமானார். ஆங்கிலேயரின் கப்பல் வணிக எதேச்சதிகாரத்தை முறியடிக்க வ.உ. சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை 1906 அக்டோபரில் ஆரம்பித்தார். அதனால் அவர் கப்பலோட்டிய தமிழன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். இதற்கு ஆதரவளித்த பாரதி, இந்தியா பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதினார்.
ஆனால் உண்மையில் வ.உ. சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே சீவா கப்பல் கம்பெனி என்றொரு நிறுவனம் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டிருந்தது. ஆனால் அது ஆங்கிலேய ஆட்சியின் வன்முறைக் கொள்கையால் அழிந்து போனது.
மேலும் வ.உ. சி, கோரல் மில் வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினார். நாடு முழுவதும் உருவான சுதந்திரப் போராட்ட அலையில் 1908-இல் திருநெல்வேலிக் கலவரம் வெடித்தது. அதனால் திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் ஆஷ்துரை, கலவரத்தைத் தூண்டிய ராஜதுரோகக் குற்றத்திற்காக சிதம்பரம், சுப்ரமணிய சிவா, சுதேசி பத்மநாப ஐயங்கார் ஆகிய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் உட்பட பலரைக் கைதுசெய்து சிறைப்படுத்தினார்.
பாரதியின் தமிழைப் பற்றி பேசிய மோரே பாரதி எப்போதும் தமிழ்நாடு என்றுதான் எழுதுவார். தமிழகம் என்று சொல்வதில்லை; எழுதுவதில்லை. சங்கத் தமிழ் இலக்கியத்தில் தமிழ்நாடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று பாரதிக்கு நன்றாகவே தெரியும்
கலவரத்தில் பலியானவர்களுக்கான நிவாரண நிதியைப் பாரதி தனது இந்தியா பத்திரிகை மூலம் திரட்டினார். பாளையங்கோட்டையில் இருந்த வ.உ. சிதம்பரத்தை, பாரதி தன் மனைவியுடன் வந்து பார்த்துவிட்டுத் திரும்பினார்.
இந்தக் காலகட்டத்தில்தான் பிறரைப் போல தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் பாரதிக்குள் எழுந்தது. திருநெல்வேலிக் கலவரம் அவரை புதுச்சேரிக்கு அனுப்பிவைத்ததில் ஓரளவுதான் பங்கு வகித்தது.
அதே சமயம் குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாகி என்ற இரண்டு வங்காள தீவிரவாத சுதந்திரப் போராளிகள் ஒரு வெள்ளைக்கார நீதிபதியைக் குறிவைத்து வீசிய குண்டில் இரண்டு ஆங்கிலேய பெண்மணிகள் இறந்து போனார்கள். இந்தத் தீவிரவாதச் செயலை நிகழ்த்தியது அனுஷீலன் சமிதி என்னும் ரகசிய இயக்கம். பெண்களின் மரணத்திற்குக் காரணமான இந்தக் குண்டுவெடிப்பைக் காந்தியைப் போலவே பாரதியும் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும் படிக்க: அபூர்வ ஆவணம்: பாரதி மொழிபெயர்த்த கலைச்சொற்களின் கையெழுத்துப் பிரதி
இந்தச் சூழலில் ஆங்கில அரசின் கோபம் மிகவும் அதிகரிக்க நாட்டிலுள்ள அனைத்து சுதந்திரப் போராளிகள் மீதும் வன்முறையும் எதேச்சதிகார கைதுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அப்போது பிரெஞ்சுக் காலனியான புதுச்சேரிதான் சரியான தஞ்சம் என்று நினைத்த மண்டயம் சீனிவாசாச்சாரி, பாரதியை அங்கே அனுப்பிவைத்தார். புதுச்சேரியில் குடியரசு இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த சீனிவாசாச்சாரியின் தந்தை, பாரதியைக் கவனித்துக் கொள்வார் என்றும் அங்கிருந்தே இந்தியா பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தலாம் என்றும் சொன்னார் சீனிவாசாச்சாரி.
அதன்படி, புதுச்சேரி சென்றார் பாரதி. அதே நேரத்தில் ஆங்கிலேய அரசின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்து வங்காளத்திலிருந்து ஓடிவந்த அரவிந்தரும் அங்கே வந்து சேர்ந்தார். 1911-இல் விடுதலையான சிதம்பரம் புதுச்சேரி வந்து பாரதியைச் சந்தித்தார். எனினும் வழக்கறிஞர் பணியைச் செய்யக் கூடாது என்று வ.உ. சிதம்பரத்திற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், அவர் சென்னையில் அரிசிக் கடை நடத்தினார்.
மொத்தத்தில், வ.உ. சிதம்பரம் நடத்திய சுதேச கப்பல் கம்பெனி, 1908 திருநெல்வேலிக் கலவரம், சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை (பின்னர் அது ஆறு ஆண்டாகக் குறைக்கப்பட்டது), வங்காளத்தில் நடந்த குண்டுவெடிப்பு, சுதந்திரப் போராளிகளுக்கு எதிரான ஆங்கிலேய அரசின் தீவிர வேட்டை… இத்தனைப் பின்னணி நிகழ்வுகள் பாரதியை புதுச்சேரிக்கு அனுப்பிவைத்த முக்கிய காரணிகள்.
பாரதியின் தமிழைப் பற்றி பேசிய மோரே ,பாரதி எப்போதும் தமிழ்நாடு என்றுதான் எழுதுவார். தமிழகம் என்று சொல்வதில்லை; எழுதுவதில்லை. சங்கத் தமிழ் இலக்கியத்தில் தமிழ்நாடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று பாரதிக்கு நன்றாகவே தெரியும். தமிழகம் என்பது அகண்ட தமிழ்நாடு என்று பொருள்படும்; அதில் தற்காலத்து கேரளாவும் அடங்கும்; இந்தக் கருத்தைச் சொன்னதே கேரளப் பேராசிரியர் நாராயணன் என்றார்,
பாரதி புதுச்சேரியில் தங்கியிருந்த அந்தப் பத்தாண்டுகள் மிகமிக முக்கியம். பலர் நட்பு கிடைத்தது அவருக்கு அங்கே. படைப்புகளை எழுதிக் குவித்தார். ஆனால் பத்தாண்டு கழித்து, முதலாம் உலகப்போர் முடிந்த தறுவாயில், அதாவது 1918-இல் பாரதி புதுச்சேரியிலிருந்து கிளம்பி தமிழ்நாட்டிற்குத் திரும்பினார். தனக்கெதிரான கைது வாரண்ட் அப்போது காலாவதி ஆகியிருக்கும் என்று அவர் நினைத்தார்.
பாரதியின் சென்னை வாசம் மொத்தமே ஆறரை ஆண்டுகள் மட்டுமே. முதலில் 1904 முதல் 1908 வரையிலும், பின்பு 1918 முதல் அவர் காலமான 1921-ஆம் ஆண்டுவரையிலும் அவர் சென்னையில் தங்கியிருந்தார். 1921-இல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு படுக்கையில் கிடந்து சிறிதுகாலம் கழித்து மரணமடைந்தார்.
மரணத்திற்கு முன்பான காலகட்டத்தில் தேசிய மற்றும் கவிதைச் செயல்பாடுகள் பாரதியிடம் பெரிதாக இருந்ததில்லை. ஆயினும் பாரதி புதுச்சேரியில் தங்கியிருந்த அந்தப் பத்தாண்டுகள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்படுவதற்குரியவை என்று முடித்தார் மோரே.
Read in : English