Read in : English
பாரதியின் வாழ்க்கை கட்டுக்கதைகளால் நிரம்பியது. ஒவ்வொருவரும் ஒரு பாரதி கதையைக் கேட்டுவிட்டு ‘இதுஉண்மையா?’ என்று குறுஞ்செய்தி அனுப்புவார்கள். எனக்குத் தெரிந்தவரை அதன் உண்மைத் தன்மைக்கு சான்றுகளைத்தேடி அவர்களுக்குப் பதிலளித்திருக்கிறேன். சொல்லப்போனால் வரலாற்றில் உண்மையைவிட கட்டுக்கதைகளுக்கு வலிமை அதிகம்.
அது மின்னல் வேகத்தில் மிகச்சாமான்ய மனிதன்வரை போய்ச்சேர்ந்துவிடும். இதில் செளகர்யம் என்னவென்றால் கட்டுக்கதையாக பட்டுத்தெரிக்கும் பாரதிப் பற்றிய பல கதைகள் நிஜத்தினைப் போலவேமின்னிமறையும் சாயை கொண்டவை.
ஒரு முறை பாரதி திருநெல்வேலியில் இருந்து சென்னையை நோக்கி குடும்பசகிதமாக ரயில் பயணம் மேற்கொண்டிருந்தார். ரயிலில் மிகஅதிகமானக் கூட்டநெரிசல். பாரதிக்கு கால்நீட்டி படுக்கும் அளவுக்கு இடம் இருந்தது. ஆகவே ஜம்மென்று கால்களை நீட்டி, உறங்கிக்கொண்டு வந்தார். வழியில் ஒவ்வொரு ஊராக நிறுத்தத்திற்குத்தக்க ரயில் நின்று வந்தது. குறிப்பிட்ட ஒரு நிறுத்தம் வந்ததும் ரயிலில் ஜனங்கள் திமுதிமு என்று உள்ளே புகுந்தனர். பலருக்கும் கால் வைக்கக்கூட கதியில்லை. ஊர் நாட்டில் எள்ளுப் போட்டால்கூட உள்ளே இறங்காத நெரிசல் என்பார்களே அந்தளவுக்குகூட்டம்.
ஏறிய ஒருவர்பாரதியை திரும்பி பார்த்தார். கால்நீட்டி மிகசெளகர்யமாக பாரதி படுத்துக் கிடந்தநிலை அந்தப் பயணியை பாடாய்படுத்தியது. உடனே நீதிமானாக நியாயம் கேட்டார். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதற்கு சான்றாக, பாரதியை தடதடவென தட்டிஎழுப்பினார். மிகஅயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த அவர் எழவில்லை. மீண்டும் கூச்சல் அதிகமானது. நீதிமான் நிறுத்தவில்லை கூச்சலை. மீண்டும் பாரதி குடும்பத்தினரை கடிந்து கொண்டார்.
சொல்லப்போனால் வரலாற்றில் உண்மையைவிட கட்டுக்கதைகளுக்கு வலிமை அதிகம். அது மின்னல் வேகத்தில் மிகச்சாமான்ய மனிதன்வரை போய்ச்சேர்ந்துவிடும்
அப்போதும் பாரதி சரீரத்தில் சலனம் இல்லை. விடுவாரா பயணி? இந்த முறை ஆகமட்டும் பாரதியைப் போட்டுக் குலுக்கினார். பாரதிக்கு எரிச்சல் தாளவில்லை. அவரது சுட்டும் விழிச்சுடரால் உற்று பார்த்தவர், நீதிமானின் முகத்தில் காறி உமிழ்ந்தார். அவரது முகம் முழுக்க எச்சில். பேசமுடியாமல் விழித்த அந்த ஆசாமி ஆடிப்போய் பாரதியைப் பார்த்தார்.
மேலும் படிக்க:
பத்திரிகை நிருபர்களுக்கு பாரதியார் 1908இல் சொன்னது, இப்போதும் பொருத்தமானது!
பாரதியைப் போற்றும் திமுக, தூற்றும் திக
இந்தக் கதை உண்மை. ஆனால் எனது பாணியில் எழுதி இருக்கிறேன். இந்தக் கதையை உண்மையாக்கும் பாரதி வரிகள் உள்ளன.
‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ளலாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடுபாப்பா- அவர்
முகத்தில் உமிந்துவிடு பாப்பா”
பாரதி சும்மா பாப்பாவுக்கு உரைக்கவில்லை. முதலில் நடத்தி காட்டினார். பின் அந்த அனுபவத்தைக் கொண்டு பாப்பாவுக்குப் பாட்டு பாடினார். புதுவையில் பாட்டு பிறப்பதற்கு முன்பே அவர் பாதகஞ் செய்பவர் முகத்தில் உமிழ்ந்துவிட்டார்.
அதேபோலத்தான் இன்னொரு வரி. ‘கண்ணன் என் காதலன்’ பாட்டில் வருகிறது. சிருங்கார ரஸம் தரும் சொற்றொடர்.
‘தூண்டிற்புழுவினைப்போல் – வெளியே
சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக- எனது
நெஞ்சந்துடித்ததடீ’
இந்தப் பாடலில் வரும் ‘தூண்டிற்புழுவினைப்போல்’ பாரதி எப்போதாவது துடித்துள்ளாரா? அவர் வாழ்வில் நெருப்பில் விழுந்த புழுவாக அவர் துடித்துள்ளார். அதற்கு சான்று தருகிறது ‘சித்தக்கடல்’ படைப்பு.
பாரதியின் உரைநடையின் உச்சமான பகுதி எதில் உள்ளது என யாரேனும் ஆய்வு நடத்தினால் நிச்சயம் அதில் ‘சித்தக்கடல்’ இடம் பெறும். பேரலையைப்போல அந்தப் படைப்பில் பாரதியின் சொற்கள் குமுறுகின்றன. தமிழில் இதற்கு இணையாக வேகம்கொண்ட நடை பாரதிக்கு முன்பு வேறு இல்லை.
ஒன்றாம் தேதி. ஜூலை மாதம். 1915 ஆம் ஆண்டு. பாரதி கழனிகள் சூழ் தென்புதுவையில் வசித்த காலம். அவரது மகளுக்கு கடுமையானக் காய்ச்சல். மாதம் இரண்டு ஆகியும் குறைந்தபாடில்லை. தன மகள் வளர்ந்து மேடைகளில் வீரத்தமிழச்சியாக தன் வசனங்களை முழங்குவாள் எனக்கனவு கண்ட மகாகவியின் கனவில் மண்விழப்போகும் தருணம். சகுந்தலா காய்ச்சல் மிகுதியால் பேசமுடியாமல் தவிக்கிறாள். நா குழறுகிறது. செல்லம்மாள் செய்வது அறியாது தவிக்கிறார். சகுந்தலா படுத்தப் படுக்கையாகக் கிடக்கிறாள்.
மருத்துவரை அழைக்க பணம் இல்லை. உதவி செய்ய ஆளில்லை. தேர்ந்த எழுத்துகளை படைக்கும் எழுத்தாளனை சோதிக்கிறாள் பராசக்தி. தீர்த்தகரையினில் தெற்கு மூலையில் உட்கார்ந்த இருந்தபாரதிக்கு பார்த்த இடத்தில் எல்லாம் அவள் பாவை தோன்றுகிறது. எழுதுகிறார் பாரதி,
“பராசக்தீ. இந்த உலகத்தின் ஆத்மாநீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? முதலாவது, எனக்கு என் மீது வெற்றிவர வேண்டும். குழந்தைக்கு ஜுரம். நினது திருவருளால் குணமாய்விட்டது. இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளிடம் புழுத் துடிப்பதைபோலத் துடித்தோம்” என்கிறார்.
ஒரு தகப்பனாக பாரதி தூண்டிற் புழுவினைப்போல் முதலில் தன் மகளின் துயர் கண்டு துடித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் கண்ணன் பாட்டில் தூண்டில் புழு உவமையைக் காட்சியாக கொண்டு கொடுத்தார்.
பாரதி வாழ்க்கை கதைகளால் நிரம்பியது. அந்தக்கதைகள் சாகாவரம் பெற்றவை. அதை முழுமையாக தமிழுலகம் கேட்டு ரசிக்க வேண்டும் என்று தான் `பாரதி விஜயம்’ என்ற நூலைக் கொண்டு வந்தேன்
பாரதி வாழ்க்கை கதைகளால் நிரம்பியது. அந்தக் கதைகள் சாகாவரம் பெற்றவை. அதை முழுமையாக தமிழுலகம் கேட்டுரசிக்க வேண்டும்என்று தான் `பாரதி விஜயம்’ என்ற நூலைக் கொண்டு வந்தேன். அந்தப் புத்தகத்தில் இப்படி ஆயிரம் பக்கங்கள் வரை கதைகள் பொங்கிவழிகின்றன. இரு பாகமாக அந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.
பாரதி பத்திரிகை பணிக்காகத்தான் முதன் முதலாக சென்னைக்கு வந்து சேர்கிறார். 1904இல் அவர் சென்னையில் இருந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணிக்கு அமர்ந்தார். ஆனால் அந்தப் பணியை மட்டுமே அவர் பார்க்கவில்லை. அவருக்கு அரசியல்தான் பிரதானம். அந்நியனை ஒழிப்பதே அவரது ஆவல். ஆகவே மாலைதோறும் அவர் மக்களைச் சந்தித்து அரசியல் சொற்பொழிவை நடத்த ஆசைப்பட்டார். அவருக்கு மேடைப்போட்டு பேச சொல்ல ஆரம்ப நாள்களில் யாரும் இல்லை. ஆகவே அவரது நண்பர் சுதேந்திரநாத் ஆர்யாவுடன் சேர்ந்து அன்றைய ‘மூர்’ மார்க்கெட்டின் முன்நின்று மக்களைப் பார்த்து பாடினார்.
இடையிடையே பேசினார். நேரடியாக வீதியில் இறங்கி ஆங்கிலேயனை எதிர்த்து பேசிய முதல் தமிழ்க் கவிஞன் பாரதிதான். அந்த வழக்கம் அதன் முன்புவரை இல்லை. இனிமையாக பாட்டுப் பாடுவதே தமிழ்ப் பண்டிதர்களின் வழக்கமாக இருந்தது. ‘புதியன விரும்பு’ எனப் பாரதி சும்மா சொல்லவில்லை. அவர் வீதியில் மேடைப்போடும் கலாச்சாரத்தை புதியன விரும்பிச் செய்தார்.
இந்தத் தெருக்கூட்டத்தை கேட்க அன்றைய நாள்களில் பல இளைஞர்கள் ‘மூர்’ பக்கம் கூடுவர். அவ்வாறு பாரதி பேசும்போது எல்லாம் வந்து தவறாமல் கூட்டத்தை கேட்பவராக இருந்தார் ஒரு இளைஞர். அவர் பெயர், நாமக்கல் என். நாகராஜ அய்யங்கார். இவர் தன் கல்லூரி படிப்புக்காக சென்னை வந்தவர். இவர் மூலமாகத்தான் பாரதியின் அறிமுகம் அந்தக் காலத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளைக்கு கிடைத்தது.
பாரதியின் நெஞ்சுரம்மிக்க உரைகளைக் கேட்ட நாகராஜ அய்யங்கார், அதனை தன் நண்பர் ராமலிங்கம் பிள்ளையிடம் எடுத்துக் கூறினார். ‘மூர்’மார்க்கெட் வீதியில் பாரதியால் பாடப்பட்டபாட்டு, அய்யங்கார் மூலம் ரயில் ஏறிப்போய் நாமக்கல் வீதிகளில் ஒலித்தது. அந்தளவுக்கு ஈர்ப்பு மிகுந்த வரிகளால் பாரதி இளைஞர்களை சுவீகரித்தார். அந்த வல்லமையை பராசக்தி அவருக்கு கொடையாகக் கொட்டிக் கொடுத்திருந்தாள்.
பாரதிக்கு கூனல் பிடிக்காது. குறுகல் பிடிக்காது. நேர்பட பேச வேண்டும். நிமிர்ந்த நன்னடை போடவேண்டும். இதை அவர் தவறாமல் கடைப்பிடித்து வந்தார். ஒருநாள் புதுவையில் ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் குடியிருந்த சமயம். ஒரு பொடியன் தோளில் பையை மாட்டிக்கொண்டுபள்ளிக்குப் போனான். முன்பின் அவனைத் தெரியாது. அது பிரச்சினை இல்லை. அவனைப் பார்த்தார் பாரதியார். “தம்பி! நேர்படப் பார்; ஏன் குனிந்து கொள்ளுகிறாய்? நடக்கையில் குனிந்து நடக்கிறாய். நிமிர்ந்து நட.
அதோ சேவல் தனக்கு நிகர் ஒருவரும் இல்லை எனத் தனது மார்பைக் காட்டிக் கூவுவதைப்பார். நாம் மனிதர்கள் அல்லவா? கேவலம் கோழியினும் தாழ்ந்து வாழ்வதா? இனி உன் நடையைத் திருத்திக்கொள்” என்றார். அந்தப் பொடியன் வளர்ந்து ஒருநாள் பெரியவனானான். அவன்பெயர் தி.ந. சந்திரன்.
பாரதி சொன்ன கதையை அப்படியே எழுதினான். ஆனால் அப்போது அதைப் படிக்கத்தான் பாரதி உயிருடன் இல்லை. ஆனால் அவர் சொன்ன அறவுரை உயிரோடு உள்ளது. ‘நிமிர்ந்து நில்’ என்ற சொல் உயிருடன் உள்ளது. அவர் இந்தப்பார் மீது தன் எழுத்துகளால் உயிருடன் இருக்கிறார்.
Read in : English