Site icon இன்மதி

ஆளுநர் ரவி அதிரடி: திமுக அரசு பதிலடி!

Read in : English

தமிழ்நாட்டில் பாஜகவினுடைய ஆகப்பெரிய சொத்து ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு அமைந்த அரசியலமைப்பு பதவி அவருக்குக் கெளரவத்தை அளித்திருக்கிறது. மரியாதைக்குரிய அந்தப் பதவிதான் உரக்கக் கூவிக் கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு ஒருபடி மேலே ஆளுநர் ரவியை வைத்திருக்கிறது.

மற்றவர்களை விட திமுகவையும் திமுக அரசையும் ஆளுநர் ரவிதான் பலமாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் திமுகவின் சாபம், அவரது செயல்திட்டம் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் சட்டங்களைத் தடுத்து அரசின் அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவது மட்டுமல்ல; திராவிடச் சித்தாந்தத்திற்கு எதிரான கருத்தியல் சிந்தனையைக் கட்டமைப்பதும்தான்.

ஆளுநர் ரவியின் தலையீடுகள் கூர்மையானவை; குறிப்பானவை. அவர் தனது அரசியலமைப்பு அதிகார வரம்பைத் தாண்டுகிறார் என்பது திமுகவின் எதிர்ப்புணர்வுக்குத் தீனிபோடக் கூடும். ஆனால் திராவிடச் சித்தாந்தத்திற்கு எதிராக இந்துத்துவா கருத்தியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அல்லது குறைந்தபட்சம், அரசியல் சொல்லாடல்களில் பாஜக ரக தேசியவாதத்தைப் பேசுபொருளாக்கி அதைப் பிரபலமடையச் செய்ய வேண்டும்; இதுதான் பாஜகவின் ஆகப்பெரும் திட்டம். திராவிட மாடலின் அருமை பெருமைகளைப் பற்றிய பெருமித முழக்கங்களை நீர்த்துவிடச் செய்வதற்கு ஆளுநர் ரவி தன்னாலானதைச் செய்து கொண்டிருக்கிறார்.

அரசியல் சொல்லாடல்களில் பாஜக ரக தேசியவாதத்தைப் பேசுபொருளாக்கி அதைப் பிரபலமடையச் செய்ய வேண்டும்; இதுதான் பாஜகவின் ஆகப்பெரும் நீண்டகாலத் திட்டம்

தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரிலிருக்கும் நாடு என்பது தனக்குள் அடங்கிய, தன்னைத்தானே முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்டமைப்பைச் சூசகமாகச் சொல்கிறது. மற்ற மாநிலங்கள் வெறும் பிரதேசங்களாக, பிராந்தியங்களாக, இந்தியா என்றழைக்கப்படும் பாரத தேசத்தின் துணைப் பிரிவுகளாக இருக்கும் போது, தமிழ்நாடு மட்டும் ஒரு நாடு என்ற அர்த்தத் தொனியில் ஒலிக்கிறது.

அதனால் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார். (முறைப்படி சட்டரீதியான ஒப்புதல் பெற்ற வார்த்தை தமிழ்நாடு. ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டத்தின் பெயர் ’மெட்ராஸ் மாநில (பெயர் மாற்றம்) சட்டம், 1968’. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை).

மேலும் படிக்க: பழனிசாமியின் ஆளுநர் சந்திப்பு: அதிமுக முடிவு என்ன?

ஆனாலும் திருவள்ளுவர் பாஜக கட்டமைப்பில் இயங்கும் இந்திய இந்துப் பிரபஞ்சத்தில் ஓரங்கம் என்று அந்தக் கட்சி அவரை ஏற்றுக் கொள்கிறது. ஆளுநர் ரவியும் அதை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்.

இந்து மதத்தில் எவ்வளவு பிரிவுகள் இருந்தாலும் அதுதான் இந்தியா முழுமைக்குமான ஒரு சித்தாந்தம் என்பதுதான் சங்கிகளின் கொள்கை. வேதங்களும் சமஸ்கிருதமும்தான் அதன் அடிநாதம். இந்து மதத்தில் தமிழின் இடம் இன்னும் தெளிவில்லாமல்தான் இருக்கிறது. எனினும் சமஸ்கிருதம் அல்லது வேதங்கள் தமிழ் மதவழிப்பாட்டு மரபுகளின் மூலம் அல்லது அந்த மரபுகளை விட உயர்ந்தவை என்று பாஜக வெளிப்படையாகச் சொல்ல விரும்புவதில்லை. ஆனால் இந்து மதத்திற்கு அப்பாற்பட்டது தமிழ் என்று பாஜக நிச்சயமாய் நினைப்பதில்லை.

பெரியார், சமூகநலன் ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட மாடலை, அசாதாரணமான தனித்துவமான தமிழ் அடையாளத்தை, இன்னும் பிற விஷயங்களைப் பேசும் முழுத் திராவிட கருத்தியல் சித்தாந்தத்தை பாஜக முற்றிலும் ஒழிக்க நினைக்கிறது. அந்தச் செயல்பாட்டை கனகச்சிதமாகச் செய்து முடிக்க ஆளுநர் ரவியை விட்டால் பாஜகவுக்கு மிகக்சிறந்த மனிதர் யாருமில்லை.

ஆளுநர் இங்கே இருப்பது திமுகவைச் சீண்டிப்பார்க்கத்தான். இதுவரை திமுக, உயர் அரசு மட்டத்திலேதான் சாதுரியமாக ஜாக்கிரதையாக ஆளுநரிடம் நேருக்குநேர் மோதாமல் செயல்பட்டிருக்கிறது. நீட் பிரச்சினை உள்ளாட்சித் தேர்தலில் பரப்புரைக் கருத்தாக்கப்பட்டது. ஆனாலும் ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக வீதிக்கு வந்து போராடவில்லை.

திராவிட கருத்தியல் சித்தாந்தத்தை பாஜக முற்றிலும் ஒழிக்க நினைக்கிறது. அந்தச் செயல்பாட்டை கனகச்சிதமாகச் செய்து முடிக்க ஆளுநர் ரவியை விட்டால் பாஜகவுக்கு மிகக்சிறந்த மனிதர் யாருமில்லை

அதன் தோழமைக் கட்சிகள் அந்த வேலையைப் பார்த்தன. ஆளுநர் மாளிகை நோக்கி கருப்புப் பதாகைகள் ஏந்தியபடி அந்தக் கட்சிகள் ஊர்வலம் சென்றன. ஆனால் திமுக அந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே நின்றது.

இந்த வாரம் சட்டசபையில் அரசு-ஆளுநர் பனிப்போர் உச்சம் தொட்டபின்பு ஆளுநருக்கு எதிராகப் பதற்றம் உருவாக்கும் முறையில் கொதித்தெழ வேண்டாம் என்று திமுக சட்டசபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க: தமிழக அரசுடன் மீண்டும் மோதும் ஆளுநர்: துணைவேந்தர்களை அழைத்து மாநாடு நடத்துகிறார்!

(மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், 1990களின் தொடக்கத்தில், அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக அஇதிமுகவினர் போராடியதால் ஏற்பட்ட அசம்பாவித சம்பங்கள் மீண்டும் தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்திருக்கக்கூடும்).

சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் துரிதகதியில் நிறைவேறியிருக்கிறது. உறுதியான தீர்மானம்; ஆளுநருக்கு எதிரான கருத்தை ஆணித்தரமாகப் பதிவுசெய்ய தீர்மானம் அது. டில்லிக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டுபோவதைத் தாண்டி திமுக மேற்கொண்டு எதுவும் செய்துவிடாது.

ஆளுநர் போர்க்களத்தில் குதித்துவிட்டார்; ஆனால் அவர் யுத்தத்தில் இன்னும் வெற்றி பெறவில்லை. அவர் தொடுத்திருக்கும் கணைகளினால் தனது அமைதியை இழந்து கொதித்து திமுக எதிர்வினையாற்றினால் மட்டுமே ஆளுநரால் ஜெயிக்க முடியும்.

இது இந்து தேசியவாதத்திற்கும் திராவிடவியலுக்கும் இடையிலான மோதல் பிரச்சினையை, மாநில பாஜகவை விட, தேசிய பாஜகவை விட, மிகக் கெட்டிக்காரத்தனமாக இந்த மோதல் பிரச்சினைக்கு ரத்தமும் சதையும் ஊட்டி உருவேற்றி வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி.

அதுதான் ஆகப்பெரிய யுத்தம். வெற்றி தோல்வியை உடனடியாகத் தீர்மானிக்கக் கூடிய துரிதமான யுத்தமாக இது இல்லாமல் போகலாம். ஆனால் ஒருவரை ஒருவர் கழுத்தை நெரித்து போராடிக் கொண்டே இருக்கும் ஒரு நீண்டகால யுத்தமாக அது உருமாறலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version