Read in : English
தில்லியில் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி விட்டு வந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அழைத்து மாநாட்டை நடத்த இருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் India’s Role in emerging New World Order, India to be World Leader by 2047 ஆகிய தலைப்புகளில் யோசனைகளையும் செயல் திட்டங்களையும் யோசனைகளைகக் கொண்டது. துணை வேந்தர்களுடன் பேராசிரியர்களும் இணைப் பேராசிரியர்களும் கலந்து கொள்வார்கள். பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் பேராசிரியர் ஜகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள் என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
பேராசிரியர் ஜகதீஷ் குமார், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோது, ஆர்எஸ்எஸ் நோக்கத்தை செயல்படுத்துவதற்காக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற புகார்கள் எழுந்தன
பேராசிரியர் ஜகதீஷ் குமார், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோது, ஆர்எஸ்எஸ் நோக்கத்தை செயல்படுத்துவதற்காக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற புகார்கள் எழுந்தன. 2016இல் மாணவர் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டவர்கள் மீது தேசதுரோக வழக்குத் தொடரக் காரணமாக இருந்தவர் இவர்.
இவர் துணைவேந்தராக இருந்தபோது 2020இல், பல்கலைக்கழக, மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். மாணவர் நஜீப் அகமது காணமல் போனார். இந்த நிலையில், அவர் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் சென்னை ஐஐடியில் பிடெக், எம்டெக், டி.டெக் படித்தார். முனைவர் ஆய்வு பட்டப் படிப்பின் போது ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய விஜில் என்ற அமைப்பின் தீவிர செயல்பாட்டாளராக இருந்தவர் அவர். அத்துடன், அண்ணா பல்கலைக்கழக, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழுவின் ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோஹோ காப்பரேஷன் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, மென்பொருள் துறையில் கொடிகட்டிப் பறக்கும் கோடீஸ்வரர். 2020இல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றது அப்போது சர்ச்சைகளை எழுப்பியது. தற்போது இவர்கள் இருவரும் இந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஆளுநரால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே, நீட் தேர்வு குறித்து தமிழக அரசு முதலில் அனுப்பிய மசோதாவைத் திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசு அந்த மசோதாவை குடியசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் உள்ளார். இதுபோல, தமிழக அரசு ஏற்கெனவே அனுப்பிய 11 மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு செய்யாமல் வைத்திருக்கிறார். இதனால்தான், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. அத்துடன், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்துக்கு நிபுணர் குழு அளித்த மூன்று பேரின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு, ஏற்கெனவே பதவிக் காலம் முடிந்த துணைவேந்தர் சுதா சேஷய்யனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீடித்துள்ளார். புதிய துணைவேந்தர் தேர்வுக் குழு மூலம் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில கல்லூரி முதல்வர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது அப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஜோஹோ காப்பரேஷன் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, மென்பொருள் துறையில் கொடிகட்டிப் பறக்கும் கோடீஸ்வரர். 2020இல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றது அப்போது சர்ச்சைகளை எழுப்பியது.
மாநிலத்தின் கொள்கை முடிவு மாநில அமைச்சரவையில் தான் உருவாகும். ஆளுநர் தன் சொந்த விருப்பத்தை மாநில மக்கள் மீது திணிக்க முடியாது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவது மாநில அரசின் பணியாகும். மாநில அரசுப் பல்கலைக் கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களுக்கு நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்று தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வகுப்பு நடத்த முடியாது.
அத்தகையதொரு மாநாட்டிற்கான ஏற்பாட்டை ஆளுநர் மாளிகை செய்துள்ளது தீங்கிளைக்கும் செயல் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை மறுதலிக்கும் செயலாகும். மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு இணை வேந்தராக பொறுப்பு வகிக்கும் மாநில உயர்கல்வி அமைச்சர் பங்கேற்பு இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு நிகரான அதிகார மையமாக ஆளுநர் மாளிகை செயல்படுவதின் வெளிப்பாடே. என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகை அழைத்திருக்கும் மாநாட்டை துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில உயர்கல்வி அமைச்சர் பங்கேற்பு இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு நிகரான அதிகார மையமாக ஆளுநர் மாளிகை செயல்படுவதின் வெளிப்பாடே
மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை பறித்துக் கொள்ள எந்த அதிகாரத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 246யின் கீழ் ஏழாவது அட்டவணையின் பட்டியல் ஒன்றின் வரிசை 66 ஒன்றிய அரசாங்கத்திற்கு தரவில்லை. இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி பல்கலைக்கழக நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அதிகாரத்தையும் ஒன்றிய அரசாங்கம் தனதாக்கிக் கொள்ள இயலாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இரட்டை ஆட்சி முறையை மாநிலத்தில் மீண்டும் நிறுவ ஆளுநர் முயல்கிறார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தனியார் பல்கலைக்கழக வேந்தர்களையும் துணைவேந்தர்களையும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தார். 2020ஆம் ஆண்டு ஜனவரியில் மாநிலப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மேற்கு வங்க ஆளுநர் அழைத்தார். ஆனால். அவர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
Read in : English