Site icon இன்மதி

வாரிசு – முதலுக்கு மோசமில்லை!

Read in : English

வாரிசு, துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே சம அளவில் இரண்டுக்கும் திரையரங்குகள் கிடைக்குமா என்ற பேச்சு தொடங்கிவிட்டது. திரையரங்குகள் எண்ணிக்கை முடிவானபின்னரும் கூட, யாருடைய படத்திற்கு நள்ளிரவுக் காட்சியும் அதிகாலைக் காட்சியும் வழங்கப்படும் என்று சர்ச்சை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.

அதையும் மீறி திரையிடப்படும் நாளில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்ற ஊகங்கள் சகட்டுமேனிக்கு சமூகவலைதளங்களில் இறக்கை கட்டிப் பறந்தன. இந்த நிலையிலேயே, ஜனவரி 11ஆம் தேதியன்று இரண்டு படங்களும் களமிறங்கியிருக்கின்றன.

பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற வகையில் ஒரு ‘பேமிலி எண்டர்டெயினர்’ ஆக இருக்கும் என்ற படக்குழுவினரின் வாக்குறுதியைத் தாங்கி வெளியாகியிருக்கிறது ‘வாரிசு’. உண்மையில் படம் அப்படித்தான் அமைந்திருக்கிறதா?

குடும்பம் என்பது உறவுகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வாழ்வதை அடிப்படையாக்க் கொண்டது. அப்படிப்பட்ட உறவுகளுக்குள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் பூசல்கள் முளைப்பது சரியாகாது என்பதைச் சொல்கிறது ‘வாரிசு’.

குடும்பத்தை ஒரு நிறுவனம் போன்றும், தனது மகன்கள் ஜெய் (ஸ்ரீகாந்த்) மற்றும் அஜய்யை (ஷாம்) நிறுவன நிர்வாகிகள் போன்றும் நடத்துகிறார் தொழிலதிபர் ராஜேந்திரன் (சரத்குமார்). அதனை ஏற்க மறுத்த மூன்றாவது மகன் விஜய்யை (விஜய்) வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். ஏழு ஆண்டுகள் கழித்து, தந்தை மற்றும் தாயின் (ஜெயசுதா) அறுபதாம் கல்யாணத்தில் பங்கேற்பதற்காகச் சென்னை திரும்புகிறார் விஜய். அப்போது, வீட்டிலும் நிறுவனத்திலும் தந்தையின் கையில் இருந்துவந்த லகான் நழுவியது தெரிய வருகிறது.

பொங்கல் வெளியீடாக வந்திருந்தாலும், ஆற அமர பண்டிகை நாட்களை கொண்டாடிவிட்டு வார இறுதியில் திரையரங்கு வரும் குடும்பங்களையே குறி வைத்திருக்கிறது ‘வாரிசு’

சூழ்நிலை காரணமாக, எந்த நிறுவனத்தில் பணியாற்ற மாட்டேன் என்று விஜய் சொன்னாரோ, அதில் அவரே தலைவர் ஆகிறார். சகோதரர்கள் மற்றும் போட்டி நிறுவன உரிமையாளரான ஜெயபிரகாஷின் (பிரகாஷ்ராஜ்) பகையையும் சம்பாதிக்கிறார். பெற்றோரின் விருப்பத்தை மதித்து தன் குடும்பத்தினரை ஒன்றிணைப்பதோடு, நிறுவனத்தின் சரிவையும் தனியாளாக விஜய் தடுத்து நிறுத்துகிறாரா இல்லையா என்பதே ‘வாரிசு’வின் கதை.

பதில் என்னவென்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. நிச்சயம் இது புதிய கதையல்ல. வழக்கமாக உயர் நடுத்தர வர்க்க குடும்பங்களைக் காட்டும் சீரியல்களில் சொல்லப்படும் விஷயங்கள் இதில் 3 மணி நேர காலத்திற்குள் சொல்லப்பட்டுள்ளது.

முகம் பார்த்து பேச விரும்பாத தந்தையுடன் விஜய்க்கு எப்படி நல்லிணக்கம் உண்டானது என்பதற்கான காரணத்தை தாய் கேட்காமலே போனது உட்பட பல விஷயங்கள் சீரியல்களில் வரும் லாஜிக் மீறல்களை நினைவூட்டுகின்றன. துள்ளல் பாடல்கள், களை கட்டும் ஆட்டம், அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள், பொறி பறக்கும் பஞ்ச் வசனங்கள் என்று திரைக்கதை ஓட்டத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் சினிமாத்தனங்கள் நிறைய இருந்தாலும், முன்பாதியில் வீட்டுக்குள்ளேயே நடக்கும் பல காட்சிகளில் சீரியல்தனம் மட்டுமே நிரம்பி வழிகிறது.

மேலும் படிக்க: துணிவு Vs வாரிசு: வெடிக்கும் சரவெடி!

குடும்பப்பாங்கான படத்தில் விஜய்யை பார்ப்பது புதிய விஷயமல்ல. ஆனால், விஜய்யின் வாண்டுசிண்டு ரசிகர்கள் அதனை ஏற்பார்களா என்ற தயக்கத்தில் ஆங்காங்கே சண்டைக்காட்சிகளையும் ஹீரோயிச பில்டப்களையும் இணைத்திருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி.

ரோகிணி திரையரங்கில் இயக்குனர் வம்சியுடன் தயாரிப்பாளர் தில் ராஜு (Photo credit: Twitter- melvin_mel)

பாடல்களில் இளமை பொங்க விஜய் காட்சியளிப்பதை ஏற்கும் மனம், ஏனோ சண்டைக்காட்சிகளில் மட்டும் ஒன்றுவதில்லை. அதேநேரத்தில் காமெடி, சென்டிமெண்ட் காட்சிகளில் மனிதர் பின்னி பெடலெடுத்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

ராஷ்மிகா மந்தனாவின் குறும்பு நிறைந்த நடிப்பைப் பார்த்தவர்கள், ‘சச்சின்’ ஜெனிலியா போல இதில் அதகளம் செய்திருப்பார் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இரண்டு பாடல்கள், நான்கைந்து காட்சிகளில் அவருக்கு ‘டாட்டா’ காட்டிவிடுகிறது திரைக்கதை. இத்தனைக்கும் படம் தொடங்கி முக்கால் மணி நேரம் கழித்தே அவரது அறிமுகம் நிகழ்கிறது. ராஷ்மிகாவைப் போலவே, சிறப்பு தோற்றத்தில் குஷ்பு வருவதை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சுகிறது.

சரத்குமாரும் ஜெயசுதாவும் ஒரு மேல்தட்டு தம்பதிகளாக இதில் வாழ்ந்திருக்கின்றனர். ஆதிக்கம் நிறைந்த தொழிலதிபராக சரத் மனதில் பதிகிறார் என்றால், தனக்கென்று எந்த ஆசையும் இல்லாத தாய் போலவே திரையில் நிறைந்து நிற்கிறார் ஜெயசுதா.

சரத்குமாரின் நண்பராக வரும் பிரபு, போட்டியாளராக வரும் பிரகாஷ்ராஜ், மகன்களாக வரும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், மூத்த மருமகளாக வரும் சங்கீதா, வீட்டு வேலையாளாக வரும் யோகிபாபு என்று ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நடிகர்கள் திரையில் முதன்மையாகத் தெரிகின்றனர். இவர்கள் தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஒரு காட்சியில் சிறப்புத்தோற்றத்தில் இடம்பிடித்திருக்கிறார். அவரும் விஜய்யும் சேர்ந்துவரும் காட்சியில் ‘லாஜிக்’ கொஞ்சம் கூட இல்லை என்றாலும், திரையில் பார்க்கையில் அது ‘மேஜிக்’ ஆயிருக்கிறது.

முன்பாதியில் குடும்பத்தினர் எழுந்துபோய்விடக் கூடாது என்று சென்டிமெண்ட் காட்சிகளை வைத்த இயக்குநர், பின்பாதி முழுக்க விஜய் ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவே காட்சிகளை வைத்திருக்கிறார்

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் படம் முழுக்க அத்தனை பிரேம்களும் மழையில் நனைந்து உடனே வெயிலில் காய்ந்த தாஜ்மஹால் போல பளிச்சென்று இருக்கிறது. பிளாஷ்பேக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் தாமதமாக இடம்பெற்றிருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது பிரவீன் கேஎல்லின் படத்தொகுப்பு.

நிறுவனத்தின் தலைவர் ஆக விஜய் ஆவதைக் காட்டும் காட்சியில், போருக்குத் தயாராவதைப் போல பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார் தமன். ’ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் காப்பியா என்ற விவாதம் உருவாகக்கூடாது என்ற நோக்கில், அப்பாடலின் பிஜிஎம் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே ‘மொச்சகொட்ட பல்லழகி’ பாடலை உச்சரித்து விடுகிறார் விஜய். அப்பாடலுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான அர்ப்பணமே இது என்று சூசகமாகச் சொல்கிறதோ ‘வாரிசு’ குழு?

வம்சி இதற்கு முன்னர் இயக்கிய மகரிஷி, தோழா, எவடு, பிருந்தாவனம் தெலுங்கு படங்களிலும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட கிளைக்கதைகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். அது, அனைத்து பாத்திரங்களுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பைத் தந்திருக்கும். இதில் சரத் – ஜெயசுதா ஜோடி தவிர்த்து ஸ்ரீகாந்த், ஷாம் உட்பட எவரும் ‘ஸ்கோர்’ செய்ய வாய்ப்பு தரப்படவில்லை. காரணம், விஜய்யின் ஹீரோயிச பில்டப்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருப்பதே.

மேலும் படிக்க: விஜய், அஜித் – தமிழ் திரையுலகில் யார் சூப்பர் ஸ்டார்?

வம்சியின் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வில்லன்கள் கூட உண்டு. ஆனால், அவர்களது இருப்பு திரைக்கதையில் வலுவாக காட்டப்பட்டிருக்கும். இதில் அந்த இடம் பிரகாஷ்ராஜுக்கு கிடைக்கவே இல்லை. அதையும் தாண்டி ஸ்ரீகாந்த், ஷாம் தரப்பு நியாயங்களைச் சொல்ல சில வரி வசனங்கள் உதவியிருப்பது ஆறுதல். அந்த வகையில், வம்சி இப்படத்தில் சறுக்கியிருக்கிறார்.

வாரிசு படம் வருவதற்கு முன்னதாகவே, விஜய்யின் தலைமுடி விக்கா என்ற சர்ச்சை எழுந்தது. பிளாஷ்பேக் காட்சியில் அது நன்கு தெரியவும் செய்தது. விஜய் தண்ணீரில் மூழ்கி எழும் ஒரு ஷாட் படத்தில் இடம்பெற்றிருப்பது, அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான விளக்கமா என்று தெரியவில்லை.

இயக்குநர் வம்சியுடன் இணைந்து ஹரி, அசிஷோர் சாலமோன் இருவரும் ‘வாரிசு’ கதையை எழுதியிருக்கின்றனர். காட்சிகள் புதிதாக இல்லை என்றபோதும், ஒவ்வொரு பாத்திரமும் இன்னொன்றை எப்படி எதிர்கொள்கிறது என்பதை வசனம் வழியே வடிவமைத்த வகையில் அவர்களது பணி சிறப்புக்குரியதாக உள்ளது.

மற்றபடி, வீட்டுக்குள்ளேயே நிகழும் பல காட்சிகள் சீரியல்களை நினைவுபடுத்துவது மறுக்கமுடியாத உண்மை. விஜய் – யோகிபாபு சம்பந்தப்பட்ட நகைச்சுவையே அதனை மறக்கடிக்கிறது.

முன்பாதியில் குடும்பத்தினர் எழுந்துபோய்விடக் கூடாது என்று சென்டிமெண்ட் காட்சிகளை வைத்த இயக்குநர், பின்பாதி முழுக்க விஜய் ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவே காட்சிகளை வைத்திருக்கிறார். சாதாரண மக்களுக்கு அது நிச்சயம் திருப்தி தராது. அதேநேரத்தில், ஏற்ற இறக்கத்துடன் விஜய் குரலை மாற்றி நகைச்சுவை செய்திருப்பது ரசிக்கும்படியாக உள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பொங்கல் வெளியீடாக வந்திருந்தாலும், ஆற அமர பண்டிகை நாட்களை கொண்டாடிவிட்டு வார இறுதியில் திரையரங்கு வரும் குடும்பங்களையே குறி வைத்திருக்கிறது ‘வாரிசு’. ஆங்காங்கே அவர்களைச் சிரிக்க, அழ, மனம் நெகிழ, உற்சாகப்பட வைக்கும் காட்சிகள் உள்ளன என்பதால் முதலுக்கு மோசமில்லை!

Share the Article

Read in : English

Exit mobile version