Read in : English
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்குள் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவுள்ள தமிழ்ப் படங்கள் குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. அதுவும் வசூல் உத்தரவாதம் தரும் இரு நடிகர்களான அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால் அனல் பறக்கிறது.
வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் தமன் இசையமைப்பில் நடிகர் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது; இதுவரை ஐந்து கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போது துணிவு படத்தின் பாடலும் வெளியாகிறது. ஆக, இப்போதே ரசிகர்களுக்குள் உற்சாகமானதொரு போட்டி அவர்களின் அபிமானக் களமான டிவிட்டரில் தொடங்கிவிட்டது.
இப்படியான போட்டி எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிறது. எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி முழுநேரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பின்னரும் சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருந்தார்; அப்போது, அவர் யாருக்கும் போட்டியாகக் கருதப்படவில்லை. தொடக்க காலத்தில் அவருடன் ரஜினி நடித்த நான் வாழ வைப்பேன் படம் வெளியானபோது ரசிகர்களுக்குள் செல்லச் சண்டைகள் எழுந்திருக்கின்றன, அவ்வளவுதான்.
எண்பதுகளுக்கு முன்னர் ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என நிறுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு முந்தைய தலைமுறையான எம்ஜிஆரும் சிவாஜியும் கூண்டுக்கிளி என்ற ஒரே படத்தில் மட்டுமே சேர்ந்து நடித்திருந்தார்கள் என்னும் சூழலில் ரஜினியும் கமலும் இணைந்து பல படங்களில் நடித்தது ஆரோக்கியமான விஷயமாகவே கருதப்பட்டது.
எம்ஜிஆரும் சிவாஜியும் கூண்டுக்கிளி என்ற ஒரே படத்தில் மட்டுமே சேர்ந்து நடித்திருந்தார்கள் என்னும் சூழலில் ரஜினியும் கமலும் இணைந்து பல படங்களில் நடித்தது ஆரோக்கியமான விஷயமாகவே கருதப்பட்டது
இருவரும் தனித்தனியாக ஜொலிக்கத் தொடங்கிய பின்னர் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஆனால், இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும்போது ரசிகர்களுக்கிடையே எந்தப் படம் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் எழுந்தடங்கும்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு கறை என்றே விமர்சகர்களால் குறிப்பிடப்படும் சகலகலா வல்லவன் படம் 1982ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது; அப்போது, ரஜினிகாந்த் நடித்த எங்கேயோ கேட்ட குரல் படமும் வெளியானது. அந்தப் படம் விமர்சனரீதியாக வரவேற்பைப் பெற்றதோடு, வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. இரண்டையும் எஸ்.பி.முத்துராமன்தான் இயக்கியிருந்தார். இப்போது அப்படியான சூழல் உருவாக வாய்ப்பேயில்லை.
மேலும் படிக்க: வன்முறை என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
ரஜினி கமல் படங்கள் மோதிக்கொள்வது என்பது கிட்டத்தட்ட பன்னிரண்டு முறை தொடர்ந்தது. இந்த வரிசையில் இறுதியாக, 2005 சித்திரைத் திருநாளில் ரஜினி நடித்த சந்திரமுகியும் கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸும் வெளியாயின. சந்திரமுகி பெரிய வெற்றியைப் பெற்றது; பாபாவின் கடுந்தோல்வியிலிருந்து எழுந்து வந்தார் ரஜினிகாந்த். அந்த அளவு வெற்றி பெறவில்லை மும்பை எக்ஸ்பிரஸ். அதன் பின்னர் இருவரும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவில்லை.
மிகச்சமீபத்தில் விக்ரம் பெரிய வெற்றியைப் பெற்றதால், இன்னும் எதிர்பார்ப்புக்குரிய நடிகர் என்னும் பட்டியலில் கமல்ஹாசன் இருக்கிறார். ரஜினியின் அண்ணாத்த பெரிய மாஸ் ஹிட் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு கௌரவமான வெற்றி என்பதாகவே திரைத்துறையினர் சொல்கிறார்கள். ஆக, அவரும் இன்னும் களத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்.
ரஜினி கமல் வந்த பிறகு எம்ஜிஆரோ சிவாஜியோ இப்படி ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஆனால், விஜய் – அஜித் போட்டிக் காலத்திலும் அவர்கள் இருவரும் எதிர்பார்ப்பைத் தரும் நடிகர்களாகவே இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நாயகர்களாக கணக்கைத் தொடங்கிய விஜய், அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதில் விஜய்தான் நாயகன், அஜித் சில காட்சிகளில் இடம்பெற்றிருப்பார். ஆனால், இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் என்னும் வகையில் அதற்கு முக்கியத்துவம் உண்டு.
இருவரும் நட்சத்திரங்களாக கோலோச்சத் தொடங்கியபிறகு அவர்கள் இருவரும் நடித்த படங்கள் ஒரேநாளில் வெளியானது புத்தாயிரத்தில்தான். 2000இல் விஜய் நடித்த குஷியும், அஜித் நடித்த உன்னைக்கொடு என்னைத் தருவேன் படமும் வெளியாயின. குஷி பெரிய வெற்றியைப் பெற்ற அளவுக்கு உன்னைக்கொடு என்னைத் தருவேன் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து ஃப்ரெண்ட்ஸ் Vs தீனா (2001), வில்லன் Vs பகவதி(2002), திருமலை Vs ஆஞ்சநேயா(2003) என்றிருந்த போட்டி, சிறு இடைவேளைக்குப் பிறகு 2006இல் பரமசிவன் Vs ஆதி என்று தொடர்ந்தது. ஆதியும் பரமசிவனும் அடுத்தடுத்த நாளில் வெளியானது. இரு படங்களுமே பெரிய வெற்றியைப் பெறாத படங்களே.
ரஜினி கமல் வந்த பிறகு எம்ஜிஆரோ சிவாஜியோ ஆதிக்கம் செலுத்தியதில்லை; ஆனால், விஜய் – அஜித் போட்டிக் காலத்திலும் இருவரும் எதிர்பார்ப்பைத் தரும் நடிகர்களாகவே இருக்கிறார்கள்
2007இல் போக்கிரியும் ஆழ்வாரும் ஒரே நாளில் வெளியாயின. போக்கிரி பெரிய வெற்றி பெற்றது. ஆழ்வார் தோல்வியையே தழுவியது. ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2014இல் வீரம், ஜில்லா திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாயின. இரண்டுமே வெற்றி என்றாலும் வீரம் முன்னணியில் இருந்தது. அதன் பிறகு இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகவில்லை.
2023இல் மீண்டும் அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
ரஜினியும் கமலும் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலத்தில் திரைப்படங்களைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குக்கு மட்டுமே செல்ல வேண்டியதிருந்தது. அப்போது தமிழ்நாட்டில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. ஆகவே பெரிய நடிகர்கள் அனைவருக்கும் போதுமான திரையரங்குகள் கிடைத்தன.
மேலும் படிக்க: பீஸ்ட்: விஜய் திரைப்படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக் எதற்காக?
அப்போதும் சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு திரைப்படம் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியானது; புறநகர்ப் பகுதிகள், கிராமப்புற திரையரங்குகளில் இரண்டாம், மூன்றாம் முறையாக படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறுவதும் பழைய படங்கள் மீண்டும் வெளியாவதும் நிகழ்ந்தன.
ரஜினி, கமல் படம் வெளியாகும் அதே நாளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற அடுத்த நிலை நடிகர்களது படங்களும் வெளியாகி வெற்றியைச் சுவைத்திருக்கின்றன. தேவர் மகன், பாண்டியன் படங்கள் வெளியான அன்றுதான் சத்யராஜ் நடித்த திருமதி பழனிச்சாமியும் திரைக்கு வந்தது. அந்தப் படமும் பெரிதாக வெற்றி பெற்றது.
பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது இனி வாய்க்கப் போவதில்லை. முன்னணி நடிகர்கள் இருவர் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தால் வசூல் பாதிக்கப்படும் என்று புலம்புவதுதான் இப்போதைய சூழல். இப்படியான நிலையில்தான் திருச்சிற்றம்பலம், லவ் டுடே போன்ற படங்களுக்கு முதல் வாரத்தை விட இரண்டாம், மூன்றாம் வாரங்களில் திரையரங்கு காட்சிகளின் எண்ணிக்கையும் வசூலும் அதிகமானதை ரசிகர்கள் கண்டிருக்கின்றனர்.
பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது இனி வாய்க்கப் போவதில்லை; முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தால் வசூல் பாதிக்கப்படும் என்று புலம்புவதுதான் இப்போதைய சூழல்
அதனால், முதல் சில நாட்களில் வசூலை அள்ளுவதற்கு முக்கியத்துவம் தருவது பின்னாட்களில் திரையரங்கில் கூட்டம் அலை மோதாது என்ற பயமாகவே கருதப்படும். நேர்காணல் ஒன்றில் பேசிய திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்,“தமிழ்ப்பட வசூலில் நாற்பது சதவீதம் தியேட்டரிலிருந்து தான் கிடைக்கிறது” என்றார்.
இப்போது படங்கள் நூறு நாள் ஓடுவதெல்லாம் மிக அரிதாகிவிட்டது. ஓடிடி வெளியீடு, செயற்கைக்கோள் தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு வெளியீட்டு உரிமை என்று பல வகையிலும் சம்பாதிப்பதால் நீண்ட நாள் ஒரு படம் திரையரங்கில் ஓட வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை.
இப்போதைய தகவல்களின்படி வாரிசு, துணிவு இரண்டும் ஒரே நாளில் வெளியாகும் என்றே சொல்லப்படுகிறது. ஒருவேளை ஆதி, பரமசிவன் படங்கள் போல் அடுத்தடுத்த நாள்களில் கூட வெளியாகலாம். ஆனாலும், வாரிசு Vs துணிவு என்னும் சரவெடியின் திரியில் நெருப்பு வைக்கப்பட்டுவிட்டது. இனி அது சமூக ஊடகக் களத்தில் வெடித்துக் கொண்டேயிருக்கும்.
Read in : English