Site icon இன்மதி

விஜய், அஜித் – தமிழ் திரையுலகில் யார் சூப்பர் ஸ்டார்?

Read in : English

விஜய், அஜித் ஆகிய இருவரில் சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு திரைப்பட வட்டாரங்களில் பேசப்படும் முக்கியக் பேசுபொருளாக உள்ளது. இந்த கேள்விக்கு இருவரில் ஒருவரது பெயரைச் சொல்வது மட்டுமல்ல, இருவரையும் தவிர்த்து வேறு எவர் பெயரை முன்வைப்பதும்கூட ஒருவகை அரசியலே.

1950 முதல் 1975 வரை எம்ஜிஆர், சிவாஜி இருவரையும் மையப்படுத்தியே திரைப்பட உலகம் இயங்கியது. தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் கூட இவர்களது தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தது. 1975 – 1980 காலகட்டத்தில் எம்ஜிஆர் – சிவாஜி காலம் முடிவடைவதற்குள்ளாகவே கமலும் ரஜினியும் இளைய பட்டாளங்களால் கொண்டாடப்பட்டனர்.

இரண்டாயிரம் தொடக்கங்களில் அவர்களது அலையின் வீச்சு குறைவதற்கு முன்பாகவே, அஜித்தும் விஜய்யும் தலையெடுத்துவிட்டனர்.

எப்படி ரஜினி – கமல் காலத்தில் சிவாஜி கணேசன் படங்கள் வந்து கொண்டாடப்பட்டனவோ, அதே போல கடந்த இருபதாண்டுகளாக ரஜினி கமல் படங்கள் வெளியாகி வருகின்றன. 1999இல் வெளியான ‘படையப்பா’ எப்படி முழுமையாக ரஜினியை ஆராதிக்கச் செய்ததோ, 1996இல் வெளியான ‘இந்தியன்’, ‘அவ்வை சண்முகி’ இரண்டும் கமலை ஆராதிக்க வைத்தனவோ, அப்படிப்பட்ட வெற்றிகளை அதன்பிறகு இருவருமே சந்திக்கவில்லை.

ரஜினியின் ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கபாலி’ பட வெற்றிகளும், கமலின் ‘வேட்டையாடு விளையாடு’, ‘பாபநாசம்’ வெற்றிகளும் இவ்வார்த்தைகளுக்கு உட்பட்டவை. என்னைப் பொறுத்தவரை, இப்போது கமல் பெற்றிருக்கும் ‘விக்ரம்’ வெற்றி கூட, ஒரு காலத்தில் சிவாஜிக்கு கிடைத்த ‘முதல் மரியாதை’ போன்றதுதான்.

எப்படி ரஜினி – கமல் காலத்தில் சிவாஜி கணேசன் படங்கள் வந்து கொண்டாடப்பட்டனவோ, அதே போல கடந்த இருபதாண்டுகளாக ரஜினி கமல் படங்கள் வெளியாகி வருகின்றன

எண்பதுகள் தொடங்கி 2000 வரை ரஜினி நம்பர் 1 என்றால், கமல் நம்பர் 2 என்பது திரைப்பட வர்த்தகர்களின் கணக்கு. அதன் தொடர்ச்சியாகவே ரஜினி ‘சூப்பர் ஸ்டார்’ ஆகவும், கமல் ‘சூப்பர் ஆக்டர்’ ஆகவும் கொண்டாடப்பட்டனர்.

1992 டிசம்பர் மாதம் விஜய்யின் ‘நாளைய தீர்ப்பு’ வெளியானது. 1993 ஜுன், ஜூலை மாதங்களில் அஜித்தின் ‘அமராவதி’, தெலுங்கில் ‘பிரேம புஸ்தகம்’ இரண்டும் வெளியாகின. அந்த வகையில், இருவரில் விஜய்தான் சீனியர். 1995இல் இருவரும் இணைந்து ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் நடித்தனர். அதில் விஜய் நாயகன், அஜித் அவரது நண்பராக நடித்திருந்தார்.

மேலும் படிக்க: வாரிசு Vs துணிவு எனுமொரு டிஜிட்டல் போர்!

’செந்தூரப் பாண்டி’, ‘ரசிகன்’, ‘தேவா’ என்று தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வழிகாட்டுதலில் பி, சி சென்டர்களில் பரவலாக அறிமுகமானார் விஜய். ’பூவே உனக்காக’ படத்திற்குப் பிறகே ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘குஷி’, ‘ப்ரெண்ட்ஸ்’ என்று தனிப்பட்ட வெற்றிகளைத் தந்தார்.

தமிழன், பகவதி, புதிய கீதை ஆகியன ரஜினியைப் போன்று வசூல் நாயகனாக மாறிவிட முடியுமா என்று ஆக்‌ஷன் பார்முலாவை பரீட்சித்துப் பார்த்த படங்கள். ’திருமலை’க்குப் பிறகே அது வெற்றிகரமான பாதைதான் என்ற உறுதிப்பாட்டுக்கு வந்தார் விஜய்.

அதன்பிறகு ‘கில்லி’ தொடங்கி ‘மாஸ்டர்’ வரை சில படங்களுக்கு ஒருமுறை அவரது சம்பளமும் படத்தின் பட்ஜெட்டும் தொடர்ந்து எகிறி வருகிறது; வெற்றிகளின் அளவும் சராசரியும் கூட வெகுவாக அதிகரித்திருக்கிறது.

’ஆசை’, ‘காதல் கோட்டை’ போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் கூட, 1998இல் வெளியான ‘காதல் மன்னன்’ மட்டுமே அஜித்தின் தனிப்பட்ட வெற்றிகளுக்கான தொடக்கம். ‘வாலி’, ‘அமர்க்களம்’ போன்றவை அந்த அடையாளத்தை தனித்துவமாக்கியது.

ஆனால், விஜய்க்கு முன்னதாகவே ஏ.ஆர்.முருகதாஸின் ‘தீனா’வில் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக முன்னிறுத்திக்கொண்டார் அஜித். ’சிட்டிசன்’, ‘வில்லன்’, ‘வரலாறு’ என்று அவ்வப்போது பெருவெற்றிகளைத் தந்த அஜித்தின் திரைவாழ்வில் மாபெரும் வெற்றியைப் பெற்றது ‘மங்காத்தா’. ’வீரம்’, ‘விஸ்வாசம்’ படங்களைத் தந்தபோதும், அந்த வெற்றிக்கு ஈடான ஒன்றை அஜித் இதுவரை எட்டவில்லை.

விஜய் போல சீரான இடைவெளியில் பெருவெற்றிகளைத் தரவில்லை என்றபோதும், கடந்த 20 ஆண்டுகளாக அஜித் தந்த தோல்விப்படங்கள் கூட லாபகரமானவை என்ற கருத்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது

விஜய் போல சீரான இடைவெளியில் பெருவெற்றிகளைத் தரவில்லை என்றபோதும், கடந்த 20 ஆண்டுகளாக அஜித் தந்த தோல்விப்படங்கள் கூட லாபகரமானவை என்ற கருத்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது.

நம்பர் 1 என்ற இடத்தை நோக்கி விஜய் மவுனமாக முன்னேறிய காலகட்டத்தில், வெளிப்படையாகவே ரஜினியின் இடத்தை அடைய விரும்புவதாகப் பேட்டிகள் தந்தவர் அஜித். தங்களது படங்களில் தொடர்ச்சியாக ‘பஞ்ச்’ வசனங்கள் பேசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது அந்த போட்டியை உக்கிரமானதாக மாற்றியது. திரையில் வெற்றியைப் பெறுவதற்கான உத்தியாகவும் மாறியது.

மேலும் படிக்க: தமிழ் சினிமா 2022:தடம் மாறாத பயணம்!

இடையில் மங்கிக் கிடந்த அந்த உத்தியானது வாரிசு, துணிவு வெளியீட்டையொட்டி மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. ‘விஜய் தான் நம்பர் 1’ என்ற வார்த்தைகளை தயாரிப்பாளர் தில்ராஜ் உதிர்த்ததும், ‘வாரிசு’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ’இன்றைய சூப்பர் ஸ்டார் விஜய்’ என்று சரத்குமார் புகழ்ந்ததும் அதன் பிரதிபலிப்புகள் தான்.

விஜய்யோ அல்லது அவர் தரப்பிலோ, இது தொடர்பான கேள்விகளுக்கு எந்த விளக்கமும் வரவில்லை. வழக்கம்போல, அஜித் தரப்பில் எந்த சலசலப்பும் இல்லை. ஆக வாரிசு, துணிவு பெறும் வெற்றியே இக்கேள்விகளுக்கான பதிலாக அமையப் போகிறது.

‘பைரவி’ படத்தின்போது, ரஜினிகாந்தை ‘சூப்பர் ஸ்டார்’ என்று விளம்பரப்படுத்தியவர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அவர் அப்படத்தின் சென்னை நகர விநியோகஸ்தராக இருந்தார். அந்த ‘சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை பெறும் நோக்கிலேயே தொடர்ச்சியாக உழைத்த ரஜினிகாந்த், ‘முரட்டுக்காளை’ உள்ளிட்ட பல வெற்றிகளுக்குப் பிறகே அவ்வார்த்தைக்குத் தகுதியானவராகத் திரையுலகினரால் கருதப்பட்டார்.

அதே காலகட்டத்தில், தெலுங்கில் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவும் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக கொண்டாடப்பட்டார். அந்த ‘ஸ்டார்’ அந்தஸ்தைப் பிரதிபலிக்கும்விதமாக ‘மெகாஸ்டார்’ பட்டத்தை சிரஞ்சீவி, மம்முட்டி உட்பட பலருக்கும் சூட்டி மகிழ்ந்தனர் திரையுலக வர்த்தகர்கள். அப்படித்தான் ‘அல்டிமேட் ஸ்டார்’ ஆனார் அஜித். ரசிகரொருவர் தந்த ‘இளைய தளபதி’ பட்டத்தைச் சூட்டிக் கொண்டார் விஜய். இந்த களேபரங்களுக்கு நடுவே, ‘சூப்பர் ஸ்டார்’ என்று இந்திய அளவில் கொண்டாடப்படுபவராக மாறிப்போனார் ரஜினிகாந்த்.

ரசிகர்மன்றங்களை கலைத்து, தான் ‘அல்டிமேட் ஸ்டார்’ கிடையாது என்று உணர்த்தினார் அஜித். அதேநேரத்தில், ‘இளைய தளபதி’யிலிருந்து ‘தளபதி’யாக மாறினார் விஜய். ரஜினிகாந்த் படங்கள் ஒருகாலத்தில் பெற்ற வெற்றிகளை நோக்கி இருவருமே நடைபோடத் தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது. இன்று, இவர்களது ஓடுதளத்தில்தான் இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் நிற்கின்றனர் என்பதே உண்மை.

எப்படி எம்ஜிஆரை அடுத்து ரஜினியால் அடுத்த ‘புரட்சித் தலைவர்’ ஆக முடியவில்லையோ, அதேபோல ரஜினியை அடுத்து விஜய்யால் ஒருபோதும் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக முடியாது

அதேநேரத்தில், எப்படி எம்ஜிஆரை அடுத்து ரஜினியால் அடுத்த ‘புரட்சித்தலைவர்’ ஆக முடியவில்லையோ, அதேபோல ரஜினியை அடுத்து விஜய்யால் ஒருபோதும் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக முடியாது. விஜய்யை பார்த்து இன்னொருவர் அடுத்த ‘தளபதி’ ஆக ஆசைப்பட வேண்டும்; அதுதான் அவர் நிகழ்த்த வேண்டிய சாதனை. அதனை விடுத்து, ’அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான்’ என்று டையாளப்படுத்திக்கொள்வது நிச்சயம் பெருமை தராது. விஜய், அஜித் இருவருக்குமே இது பொருந்தும்.

குடும்பமே கூடிக் கண்டு களிக்கும் ‘மாஸ் மசாலா’ படங்களைத் தரும் வயதை ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே கடந்துவிட்டார்கள். ஆனால், அந்த தகுதியைக் கொண்டிருக்கிற விஜய்யும் அஜித்தும் அதற்கேற்ற வெற்றிகளைத் தந்திருக்கிறார்களா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.

இன்றைய சூழலில் ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டுமே ‘கேஜிஎஃப் 2’, ‘பாகுபலி’ போன்று கொண்டாடப்பட வேண்டும்; குறைந்தபட்சம் ‘விக்ரம்’, ‘பொன்னியில் செல்வன் 1’ வசூலைப் பின்னுக்குத் தள்ள வேண்டும். அச்சாதனையை நிகழ்த்தாவிட்டால், ஆடியோ வெளியீட்டில் விஜய் சொன்னதுபோல ‘அவர்களது முந்தைய படங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை’ என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் ஒருவரே இப்போதும் நம்பர் 1 என்று சொல்வது கூட அஜித், விஜய் பின்னால் திரளும் தலைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஒரு உத்தியே. பெருவாரியான மக்களின் அபிமானத்தைச் சம்பாதித்தவர் ரஜினிதான் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்டது.

அவர் பின்னால் மக்கள் திரள்வார்கள் என்ற அரசியல் எதிர்பார்ப்பையும் அது தந்தது. அப்படித்தான், இன்று விஜய்யின் பிம்பத்தை பூதாகரமாக்கும் வேலை நடந்து வருகிறது. அதனை மட்டுப்படுத்த, அஜித்தை உயர்த்திப் பிடிக்கும் வேலைகளும் கூட நிகழலாம்.

சர்வநிச்சயமாக அஜித், விஜய் இருவருமே இக்கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லப் போவதில்லை. ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டும் இமாலய வெற்றி பெறுவது மட்டுமே ’யார் நம்பர் 1’ என்பதற்கான பதிலாக அமையும். அதற்கு ரசிகர்களைத் தாண்டி பொதுமக்களும் திரையரங்குக்கு வர வேண்டும். அது நிகழ, இரு படங்களையும் எதிர் தரப்பு ரசிகர்கள் குறை சொல்லாமல் இருக்க வேண்டும்.

அது சாத்தியம் என்றால், இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்பது வெட்டவெளிச்சமாகும்; இவ்விடத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது விளம்பர உத்தியே தவிர வேறெதுவும் இல்லை!

Share the Article

Read in : English

Exit mobile version