Read in : English
தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு அலுவலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு வேலை தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கை தமிழ் அரசியலைக் கையில் எடுத்துள்ள பாஜகவுக்கு முக்கிய சோதனையாக அமைந்துள்ளது.
இதுவரை இந்தக் கோரிக்கைக்கு பாஜகவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது போன்ற கோரிக்கைகளும் பாஜகவின் மௌனமும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்துக்கு வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது வழக்கமான இந்து முழக்கங்களை வைத்து தமிழ்நாட்டில் முன்னேற முடியாமல் இருக்கும் பாஜக, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழ் வழியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் அரசியலைக் கையில் எடுத்துள்ளது. தமிழ் உலகத்தின் பழமையான மொழி என்று பேசும் பிரதமர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளையும் அவ்வப்போது மேற்கோள் காட்டுகிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவக் கல்வி மற்றும் நர்சிங் போன்ற அனைத்து மருத்துவப் படிப்புகளையும் தமிழில் கற்பிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி வளர்ச்சிக்கு, தமிழில் ஆழமான புரிதல் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது வழக்கமான இந்து முழக்கங்களை வைத்து தமிழ்நாட்டில் முன்னேற முடியாமல் இருக்கும் பாஜக, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழ் வழியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் அரசியலைக் கையில் எடுத்துள்ளது
தமிழ் வழிக் கல்வி பற்றி பாஜக தலைவர்கள் பேசுவது இது முதல் முறையல்ல. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகையின் போது, தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். தவிர, தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்தவும், உத்தரப்பிரதேச மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தவும் காசி நகரத்தில் தமிழ் சங்கமத்தை பாஜக நடத்தியது.
அமித்ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பில் தமிழைப் பயிற்று மொழியாக திமுக அரசு அறிமுகப்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர் தமிழில் மருத்துவம் படிப்பதற்கு புத்தகங்கள் தயாராகி வருவதையும் குறிப்பிட்டார். மேலும், ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழக ஆலைகளில் தமிழர்களுக்கு இடமில்லை!
சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிதாக தமிழ் அரசியலில் குதித்துள்ள பாஜகவிடம் இருந்து இந்தக் கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் வரவில்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளார். மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதிசெய்ய மாநில மொழிகள் அறிந்தவர்கள் ஒன்றிய அரசு நிறுவனங்களில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொழில்நுட்பத்திலும் கல்வியிலும் அதிக அறிவையும் திறனையும் கொண்டுள்ளது என்ற அவர், 2021-22 ஆம் ஆண்டில் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் 4.5 சதவீத ஊழியர்கள் மட்டுமே தென் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு என்று கூறியுள்ளார்.
பிரதமரும், பா.ஜ.க.வும் தமிழின் மீது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அலுவலங்களில் பணியாளர்களை தேர்வு செய்ய, ஸ்டாஃப் செலக்க்ஷன் கமிஷன், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வழங்கக் கோரி திமுகவின் தோழமை கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ் தேசியவாத அமைப்புகளின் போராட்டங்களை தொடர்ந்து ஸ்டாலினின் கோரிக்கை.வந்துள்ளது. ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு எத்தனை சதவீத வேலைகள் அளிக்க வேண்டும் என்று முதல்வரின் கோரிக்கையில் தெளிவாக இல்லை என்று தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் குறை கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75 சதவீதம் பெற்றுத் தருவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பிரச்சினையை ஒன்றிய அரசுக்கு திசை திருப்புகிறார் என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கையை பாஜக கண்டுகொள்ளாமல் இருந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அது திமுகவுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
ஆனால், சட்டம் எதுவும் இயற்றாமல் சுமுகமான முறையில் தனியார் நிறுவனங்களிடம் பேசி தமிழர்களுக்கு அதிக அளவில் வேலை பெற்றுத்தரலாம் என்று திமுகவினர் சொல்கின்றனர். தமிழர்களுக்கு வேலை வழங்கக் கோரி தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் எல்லாக் கட்சிகளையும் அழைத்து திமுக அரசு கூட்டம் நடத்தியதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், அடுத்தகட்ட ஆட்சேர்ப்பில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதாக நிறுவன அதிகாரிகள் உறுதியளித்துள்ளதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சிறிய கட்சிகளிடம் இருந்து தொடங்கினாலும், அதை ஆளும் திமுக கையில் எடுத்து பாஜகவின் பக்கம் திருப்பியுள்ளது. தமிழ் அடையாள அரசியலில் புதிதாக நுழைந்துள்ள பாஜக, மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை கண்டுகொள்ளவில்லை.
மேலும் படிக்க: சாதி அரசியல் பாதையை மாற்றும் பாமக
தமிழர்களுக்கு தனியார் துறையில் வேலை உறுதி செய்யவில்லை என திமுக அரசை குற்றம்சாட்டும் தமிழ் தேசிய கட்சிகள், ஒன்றிய அரசு அலுவலகங்களில், தமிழர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வேலை வாய்ப்பு வழங்க மறுக்கும் பாஜக அரசை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்தவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் கட்டாயத்தை திமுக தலைவர் ஏற்படுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கையை பாஜக கண்டுகொள்ளாமல் இருந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
Read in : English