Read in : English
தமிழ்நாட்டுக்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் தொழில் வளர்ச்சியைக் கொண்டுவருவதிலும் திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், புதிதாகத் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் தமிழர்களுக்கு வேலை தராமல் புறக்கணிப்பதாகப் பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
தனியார் தொழிற்சாலைகளாக இருந்தாலும், மாநில அரசின் தொழில் பூங்காவாக இருந்தாலும் திமுக அரசு எதிர்கொள்ளும் கேள்வி ஒன்றுதான். தமிழர்களுக்கு வேலை அளிக்காத தொழில் வளர்ச்சியால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் என்பதே அந்தக் கேள்வி.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நெய்வேலியில் உள்ள பெரிய லிக்னைட் ஆதாரங்களைப் பயன்படுத்தி அந்தப் பகுதியை மாசுபடுத்திய போதிலும், தமிழர்களுக்கு வேலை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன் 299 பொறியாளர்களை நியமித்தது; அவர்களில் யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற குமுறல்கள் எழுந்தன.
இதை அந்த நிறுவனம் கண்டுகொள்ளவில்லை; பதில் சொல்லவும் இல்லை. இதனால் அந்த நிறுவனத்தின் இரண்டாவது விரிவாக்கத் திட்டத்தை ஆளும் திமுகவைத் தவிர எல்லாக் கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன.
இந்தத் திட்டத்துக்காகத் தங்கள் நிலத்தை விட்டுக் கொடுத்தால், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் வலுவாக ஆதரவளிக்கின்றன. அதிமுகவின் போராட்டத்திற்கு அதன் மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்குகிறார்; அதே நேரத்தில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், உள்ளூரில் வலுவாக உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளும் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக் கோரி பேரணியை நடத்தின.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சில மாதங்களுக்கு முன் 299 பொறியாளர்களை நியமித்தது; அவர்களில் யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை
போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன், நிலம் கையகப்படுத்தும் என்எல்சியின் முயற்சிக்கு திமுக நிர்வாகம் ஒத்துழைக்கக் கூடாது என்றார்.இந்த பொதுத்துறை நிறுவனம் வட இந்தியர்களின் ஏகபோக சொத்தாக மாறியுள்ளது என்று குற்றம்சாட்டும் அவர், இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு நிலம் வேண்டுமென்றால் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரினார்.
பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஒருபடி மேலே சென்று, அப்பகுதியின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் இந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள், அதிகாரிகள் தொடங்கி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரை அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.
இதைப் போலவே ஓசூரிலும் மண்ணின் மக்களுக்கு வேலை கேட்டு போராட்டம் நடைபெற்றது. அங்கே தொடங்கப்பட்டுள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தமிழ் தேசப் பேரியக்கம் நடத்திய போராட்டத்தில் அந்தப் பகுதி மக்களும் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களையும் பெண்களையும் புறக்கணித்து வடமாநிலங்களில் இருந்து இந்த நிறுவனம் தொழிலாளர்களைக் கொண்டுவந்துள்ளது என்று அந்த இயக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் குற்றம்சாட்டினார். கடந்த டிசம்பர் 9 அன்று, டாடா நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது.
பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஐடிஐ மட்டுமே கல்வித்தகுதி என்ற நிலையில், டாடா நிறுவனத்தின் மொத்தமுள்ள 18,000 வேலைவாய்ப்புகளில் 1,993 வேலைகள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டதாக மணியரசன் கூறினார். எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த பின்னர் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்ட பின்பே இந்த வேலைவாய்ப்பும் தரப்பட்டது. அந்த நிறுவனம் தமிழர்களுக்கு 80 சதவீத வேலை வழங்குவதாக உறுதியளித்தது என அமைச்சர் கூறினார்,
அனைத்து தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பு என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தனியார் நிறுவனங்களின் வாக்குறுதிகளை திமுக அரசு நம்புவது ஏன்?
ஆனால், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பு என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தனியார் நிறுவனங்களின் வாக்குறுதிகளை திமுக அரசு நம்புவது ஏன் என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும்போது, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்கி நிலம், காற்று, நீர் ஆகியவற்றை எதற்காக மாசுபடுத்த வேண்டும் என்று கேட்கின்றனர்.
கோவைக்கு அருகில் இருக்கும் அன்னூரில், தொழில் பூங்காவுக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா தலையிட்டு போராட்டத்தை முடித்து வைத்தார்.
மேலும் படிக்க: உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு: எதிர்க்கும் தமிழ்நாடு!
விவசாய நிலம் எடுக்கப்பட மாட்டாது என்றும், உள்ளூர் மக்களின் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்குத் தமிழ் மொழித்தாளைக் கட்டாயமாக்கி, தமிழ் மக்களுக்கு மாநில அரசுப் பணி வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்துள்ளது. ஆனால், தனியார் துறையில் தமிழர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுகிறது.
இது போன்ற சட்டம் இயற்றினால் புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்குவதும் தொழில் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். நீதிமன்றத்தில் யாரேனும் வழக்குத் தொடர்ந்தால் சட்டச் சிக்கல் எழும் வாய்ப்பும் இருக்கிறது.
ஆனால், ‘மண்ணின் மைந்தர்களுக்கு’ தனியார் துறையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய பாஜக ஆளும் கர்நாடகா, ஹரியானா மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
கர்நாடகத்தில் இயற்றப்பட்ட கன்னட மொழி மேம்பாட்டுச் சட்டத்தின் ஒரு பகுதியாக மாநில மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் 75 சதவீதத்துக்கும் குறைவான உள்ளூர் ஊழியர்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் கர்நாடக அரசின் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.
மண்ணின் மைந்தர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் நடவடிக்கைகளை பாஜக ஆளும் கர்நாடகா, ஹரியானா மாநிலங்கள் எடுத்து வருவதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன
ஹரியானாவில் பாஜக தலைமையிலான அரசாங்கம், ஹரியானா மாநில உள்ளூர் வேலைவாய்ப்பு சட்டம் 2020ஐ இயற்றியுள்ளது. மாநிலத்தில் 75 சதவீத தனியார் வேலைகளை உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தடை விதித்தது, ஆனால் இந்தத் தடையாணை உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.
இறுதித் தீர்ப்பு வரும் வரை, ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளில் இந்த சட்டத்தைக் காட்டி கட்டாய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையை மட்டும் ஹரியானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
Read in : English