Site icon இன்மதி

பள்ளி விழாவில் ஆபாசம் தவிர்க்கலாமே!

Read in : English

‘மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதே…
மலம பித்தா பித்தாதே மலம பித்தாதே..’ – பிரபல திரைப்படப் பாடல் பின்னணியில் ஒலிக்க.. பட நாயகி போலவே அங்க அசைவுகளை அளித்து ஆடுகிறார் அந்தச் சிறுமி…!

அடுத்து இன்னொரு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆபாசப் பாடல் – அந்த நடனத்தையும் அச்சுப்பிசகாமல் ஆடுகிறார்!

‘காதல் – காமம்’ பற்றிய புரிதல் வராத வயதிலிருக்கும் அந்தச் சிறுமி, அந்த பாவனைகளை கண்களில், முகத்தில் சம்பந்தப்பட்ட திரை நாயகி போலவே அப்படியே வெளிப்படுத்துகிறார்!

இன்னமும் அதிர்ச்சிகள் இருக்கின்றன.

ஆடுகிற சிறுமி அரசுப்பள்ளி மாணவி. பள்ளிச் சீருடையில் ஆடுகிறார். ஆடப் பயிற்றுவித்தவர் அவரது ஆசிரியர். இந்த ஆட்டத்தை அவரே தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது 28 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது.. இதை ஒரு செய்தியாகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன..

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்திவரும் கலை பண்பாட்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. அதிர்ச்சி அடைந்து அதிர்ச்சி அடைந்து சோர்வானதுதான் மிச்சம்.

பள்ளி ‘கலை’ விழா என்றாலே திரைப்பட ஆபாச குத்தாட்டங்கள்தான் என்கிற நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது; பெரும்பாலும் அவை தனியார் பள்ளிகளில் நடந்தவை

இந்த கலைவிழாவை நல்ல நோக்கத்துடன்தான் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியது. அதற்கான திட்டமிடல்களும் சிறப்பானவை தான். 6 – 8ஆம் வகுப்பு மாணவர்கள், 9 – 10ஆம் வகுப்பு மாணவர்கள், 11 – 12ஆம் வகுப்பு மாணவர்கள் என்று மூன்று பிரிவுகள்.

‘ஓவியம், கையெழுத்து, கதை எழுதுதல்,பேச்சு, கட்டுரை, கைவினைப் பொருட்கள் செய்தல், பாரம்பரிய விளையாட்டுகள், நகைச்சுவை நிகழ்ச்சி, நாடகம், நாளேடுகளுக்குத் தலையங்கம் எழுதுதல் என 37 தலைப்புகளில் போட்டிகள் நடக்கும்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தங்களுக்குள் இருக்கும் படைப்புத்திறனை வெளிக்கொண்டுவர செய்யப்பட்ட அருமையான முயற்சியை சரியாக வெளிப்படுத்திய மாணவர்களும் உண்டு; ஓவியங்கள், பேச்சு, பரதநாட்டியம், கரகாட்டம் என அசத்தி இருக்கிறார்கள் அவர்கள்.

ஆனால் ஆடல், பாடல் என்பதில் ஆகப்பெரும்பாலும் திரைப்பட ஆபாச நடனங்களே அதிகம்.

மேலும் படிக்க:வன்முறை என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

இத்தனைக்கும் மெல்லிசைப் போட்டி பற்றிய குறிப்பு அரசினால் தெளிவாக அளிக்கப்பட்டு உள்ளது. அதில், ‘இனிய மெட்டுக்களில் அமைந்த ரசனைக்குரிய பாடல்களைப் பாட வேண்டும்; ஆசிரியரால் அனுமதிக்கப்படும் திரைப்பாடல்கள் இடம்பெறலாம்’ என்ற குறிப்பு உள்ளது.

ஆனால் ஆசிரியர்கள் பலருக்கே புரிபடாமல் அல்லது புரிந்தும், திரைப்பட ஆபாச நடனம் மற்றும் ஆபாசப் பாடல்களை அனுமதித்து இருக்கிறார்கள். அட, அவர்களே கற்றும் தர ஆரம்பித்து விட்டார்கள்.

பள்ளி ‘கலை’ விழா என்றாலே திரைப்பட ஆபாச குத்தாட்டங்கள்தான் என்கிற நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ( விதிவிலக்கான பள்ளிகள் மிகச்சில உண்டு) ஆகப்பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் நடந்தவை, இப்போது அரசுப் பள்ளிகளில், அதுவும் அரசு அறிவித்த நிகழ்ச்சியின் பெயரால் நடந்துகொண்டு இருக்கிறது.

மனிதரின் வாழ்வில் பதின்ம வயது என்பது மிக முக்கியமான காலகட்டம். மனத்தடுமாற்றம் அதிகமாக இருக்கும். காதல், காமம் பற்றிய புரிதல் ஏற்படாத – உடல் மாற்றங்கள் மற்றும் பாலியல் உணர்வு மெல்ல அரும்பும் வயது அது. இந்த நேரத்தில்தான் சிறுவர் சிறுமியருக்குச் சரியான வழிகாட்டல் வேண்டும். இந்த நிலையில் ‘காதல்’ நாயகனாக / நாயகியாகத் தன்னை நினைத்து ஆடுவது, பாடுவது என்பது அவர்களுக்குப் பெரும் மன பாதிப்பை ஏற்படுத்தும்.

பேருந்து நிறுத்தத்தில் மாணவிக்கு மாணவர் தாலி கட்ட.. இருவரும் மகிழ்ச்சியிடன் போஸ் கொடுக்க.. அந்த காட்சியைச் சமூக வலைதளங்களில் பார்த்து, ‘காலம் கெட்டுவிட்டது’ என்று அங்கலாய்த்தவர்கள் உண்டு. காலம் கெடவில்லை, நாம்தான் கெடுத்தோம்.

‘திரைப்பட ஆபாசங்கள்தான் சிறுவர்கள் மனதைப் பாதிக்கிறதா.. நவீன காலத்தில் பாதிக்கும் வேறு விசயங்கள் இல்லையா’ என்று சிலர் கேட்கக்கூடும். உண்மைதான். தொலைக்காட்சித் தொடர்களில், சில நிகழ்ச்சிகளில் வரும் தறிகெட்ட காட்சிகள் சீரழிவை ஏற்படுத்துகின்றன; மொபைல் மூலமாகக் கொட்டும் ஆபத்துகளும் இருக்கின்றன.

சிறுவர்களை எளிதில் ஈர்ப்பதாக இருப்பவை ஆபாசமான திரைப்பாடல்கள்; ஆகவேதான் திரைப்பாடல்கள் குறித்து கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நிலை

இவற்றுக்கெல்லாம் நுழைவாயிலாக – சிறுவர்களை எளிதில் ஈர்ப்பதாக இருப்பவை ஆபாசமான திரைப்பாடல்கள். அது ஆபாசமா இல்லையா என்பதை அறியாத வயதில், அப்பாடல்களில் ஈர்ப்பு ஏற்படுவதைக் காண்கிறோம். ‘பயிற்சிக்காகப் பார்க்கிறேன்’ என அந்த பாடல்களை, ஆட்டங்களை மொபைலில் தொடர்ந்து பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவேதான் திரைப்பாடல்கள் குறித்து கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நிலை.

இந்த நேரத்தில் ஒரு விசயத்தைக் குறிப்பிடுவது அவசியம். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகளை தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவன ஆய்வு 2018ல் வெளியிட்டது. இதில் முதல் இடத்தைப் பிடித்தது இந்தியா. ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ஏமன், நைஜீரியா, அமெரிக்கா ஆகியன அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. ‘ராய்டர்ஸ் வெளிநாட்டு நிறுவனம்’ என்று சிலர் சமாளிக்கலாம்.

மேலும் படிக்க: தொலைக்காட்சிகளில் குழந்தை நிகழ்ச்சிகள்: பெரியவர்கள் ஆட்டுவிக்க, ஆடும் தோற்பாவைகளா குழந்தைகள்?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ‘தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்’, ” இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன” என்று புள்ளி விபரத்துடன் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தற்போது பள்ளிக்கல்வித் துறை நடத்தி வரும் கலை விழாவின் போக்கு குறித்து ஆசிரியர் சு.மூர்த்தியிடம் பேசினேன். இவர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

“ மாணவர்களை ஆபாச நடனம் ஆடவிட்டு, தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருமானம் பார்க்கும் ஆசிரியர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது மாணவர்களின் கல்வியை மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். அதே நேரம், நான் பணியாற்றும் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் மாணவர்கள் பறை உள்ளிட்ட நமது கலாச்சார ஆட்டங்களில் அசத்தினர். அது பரவலாக வேண்டும்” என்றார்.

இது குறித்து வழக்கறிஞர் அருள்துமிலனிடம் பேசியபோது, “தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி, ஒரு நபரின் அனுமதியின்றி அவர் தொடர்பான வீடியோக்கள் அல்லது ஆடியோக்களை எவரும் வெளியிடக் கூடாது. அதிலும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர் சிறுமியரை ஆபாச நடனம் ஆடவைத்து, ஆசிரியர்களே தங்கள் யூடியூப் சேனலில் வெளியிடுவது கடுமையான குற்றம்” என்றார்.

பள்ளிக்கல்வி ஆணையர் ஆர்.நந்தகுமார் மற்றும் செயலர் காகர்லா உஷா ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றேன். அவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

தற்போது கலைவிழாவில்  பாரம்பரியக் கலைகளான கொன்னக்கோல், வில்லுப்பாட்டு போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன; அந்தக் கலைகளை உரிய கலைஞர்களைக் கொண்டு பயிற்றுவித்தால் நலிந்த கலைஞர்களுக்கு வருமானம் கிடைக்கும்

மாணவர்களுக்குப் படிப்பைத் தவிர கலை, விளையாட்டுகள் அவசியம் தேவை. அவை அவர்களைச் செதுக்குவதாக இருக்க வேண்டுமே தவிர சிதைப்பதாக இருக்கக் கூடாது. ‘பாரம்பரியக் கலைகளான பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கர்நாடக இசை, கிராமிய இசை போன்ற பாரம்பரியக் கலைகள் மட்டுமே விழாக்களில் இடம்பெற வேண்டும்’ என அரசு உத்தரவிட வேண்டும்.

தற்போது கலைவிழாவில் கொன்னக்கோல், வில்லுப்பாட்டு போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சிக்கு உரிய விசயம். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் அவை என்னவென்று புரியுமா என்பது சந்தேகம். ஆகவே அந்தக் கலைகளை மாணவர்களுக்கு உரிய கலைஞர்களைக் கொண்டு பயிற்றுவிக்க வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் நமது பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ளவும், தவறான வழிக்குச் செல்லாமலும் தடுக்கலாம்; இன்னொருபுறம் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நலிந்த கலைஞர்களுக்கு வருமானம் கிடைக்கும்.

2021 அக்டோபர் மாதம் ஒரு காணொளி நிகழ்வில், “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதை அவமானமாக உணர்கிறேன். இந்தப் போக்கினை முற்றிலும் தடுப்பேன்” என நிஜமான ஆதங்கத்துடன் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘பாலியல் சீண்டல்’ என்றால் என்னவென்றே அறியாமல், அதற்கு உடன்படும் நிலையை ஏற்படுத்தும் வல்லமை திரைப்பட ஆபாசப் பாடல்களுக்கு உண்டு. அவற்றைப் பள்ளியிலாவது தடுப்பது அவசியம்.

தற்போது பள்ளிக்கல்வித்துறை நடத்தும் கலைவிழா பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் நிறைவடைந்துவிட்டது. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மாநில அளவிலான போட்டி நடக்க இருக்கிறது. அதற்கான பயிற்சியில் மாணவ மாணவியர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த இறுதிப் போட்டியிலாவது, ‘ஆபாசமான திரைப்பாடல் ஆடல் கூடாது’ என தமிழ்நாடு அரசு உனடியாக உத்தரவிட வேண்டும். இது இறுதி நேரம்.. இப்போதாவது விழிக்க வேண்டும்..!

Share the Article

Read in : English

Exit mobile version