Site icon இன்மதி

வன்முறை என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

Read in : English

சில நாள்களுக்கு முன் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் கையில் குழந்தையை வைத்திருக்கும் பாவனையுடன், வாஞ்சையாக ஒரு துப்பாக்கியைப் பிடித்தபடி படுத்திருக்கிறார் அஜீத். சமீபத்தில் மெய் மறந்து கிதார் இசைக்கும் தோரணையில் துப்பாக்கியுடன் ஒரு படத்தில் காட்சியளித்தார் கமல் . தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி பட போஸ்டர், அரிவாள் மற்றும் ரத்தத்துளிகளுடன் வெளியானது. இவையெல்லாம் வன்முறை தொடர்பான உதாரணங்கள்தாம். பெரும் நாயகர்கள் நடிக்கும் படங்கள் அனைத்திலுமே இப்படித் துப்பாக்கி – கத்தி – ரத்தம்தான்.

அதுவும் சமீபமாய் பான் இந்தியா -ஒரு மொழியில் எடுக்கப்பட்டு பிறகு நான்கைந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்கள் – படங்கள் இப்படி முழுக்க முழுக்க வன்முறை, ரத்தம்தான். “இதனால் என்ன?” என்ற கேள்வி சிலருக்கு எழலாம்.

சண்டிகர் நகரில், ஐந்து வயது வயது சிறுமியைக் கடத்திச் சென்று அவளது பெற்றோரிடம் இருபது லட்சம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார் ஒரு கடத்தல்காரர். பிடிபட்ட அந்தக் கடத்தல்காரர் 16 வயது சிறுவர்! விசாரணையில், “திரைப்படங்களில் கடத்தல் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து, பணம் சம்பாதிக்க இது எளிதான வழி என நினைத்தேன்!” என அழுதார், கடத்தல்காரச் சிறுவர்!

சமீபமாக வெளிவரும் பான் இந்தியா, ஒரு மொழியில் எடுக்கப்பட்டு பிறகு நான்கைந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்கள், படங்களில் இப்படியா வன்முறையும், ரத்தமும்தான்.

டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் ஒரு நபரை சிறுவர்கள் மூவர் கத்தியால் குத்திக் கொன்றதோடு, அதை வீடியோவும் எடுத்து வைத்திருந்தனர். பிடிபட்டபோது, “கேங்ஸ்டர் படங்களைப் பார்த்து, கொலை செய்வதோடு அதை வீடியோவாகவும் பதிவுசெய்து, பெரிய டான் ஆகத் திட்டமிட்டோம்” என அழுதனர்

வடநாட்டை விடுங்கள்… இங்கே தமிழ்நாட்டில் ஒரு சம்பவம். சேலம் ஆலமரத்துக்காடு பகுதியில், நாற்பது வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுக் கிடந்தார். காவல்துறை இருவரைக் கைது செய்தது. அவர்களுக்கு வயது முறையே, 23, 24. அவர்கள், “கொலை செய்துவிட்டு எளிதாகத் தப்பிவிடலாம் எனத் திரைப்படங்களைப் பார்த்து நினைத்துவிட்டோம்” என்று கதறினர்.

சிறுவர்களை – இளைஞர்களை சினிமா எப்படிச் சீரழிக்கிறது என்பதற்கு சமீபத்திய – மிகச் சில – உதாரணங்களே இவை. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு முறை கூறியது நினைவுக்கு வந்தது.

மேலும் படிக்க:  திரைப்பட வெளியீடு எந்த நாளில் நடக்கிறது?

“அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ள திரைப்படங்கள் வெளியாகும்போது, திரையரங்கு வாசலில் கூடுதல் காவலர்களை நிறுத்துவோம். படம் பார்க்கச் செல்லும்போது சாதாரணமாகச் செல்லும் இளைஞர்கள், திரும்ப வரும்போது, பட நாயகன் போல முறுக்கேறி வருவார்கள். அங்கே சிறு உரசல் கூடப் பெரும் சண்டையாக, ஏன், வன்முறையாகக் கூட மாறிவிடும்!” என்றார் அந்த அதிகாரி.

மனநல மருத்துவர் ஆந்தனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, “மற்ற எந்த ஒரு ஊடகத்தையும்விடத் திரைப்படம் வலிமையானது. ஐம்புலன்களையும் ஒன்றாக்கிக் கவனிக்க வைப்பது.
இருளில் திரைப்படத்திலேயே கவனமாக இருக்க, க்ளோசப்பில், ரத்தம் தெறிக்க நடக்கும் வன்முறைகள்… அதுவும் பின்னணி இசையுடன் இருப்பது, சிறுவர்கள் – இளைஞர்களை மட்டுமல்ல அனைவரையுமே பாதிக்கும்” என்றார்.

இது முற்றிலும் உண்மை என்பதற்குக் கடந்த காலமே உதாரணம். 70, 80களில், காதல் திரைப்படங்களே அதிகமாக வெளியாயின. நூற்றில் தொண்ணூற்றி ஒன்பதரை (!) படங்களில் நாயகன், நாயகி இருவரும் உருகி உருகிக் காதலிப்பார்கள். இறுதியில் தற்கொலையில் படம் முடியும். அந்தக் காலகட்டத்தில் காதல் தோல்வி தற்கொலை என்ற பத்திரிகைச் செய்திகளைச் சாதாரணமாகப் பார்க்க முடிந்தது.

படம் பார்க்கச் செல்லும்போது சாதாரணமாகச் செல்லும் இளைஞர்கள், திரும்ப வரும்போது, பட நாயகன் போல முறுக்கேறி வருவார்கள். அங்கே சிறு உரசல் கூடப் பெரும் சண்டையாக, ஏன், வன்முறையாகக்கூட மாறிவிடும்!

அதே காலகட்டத்தில், ஆசிரியர்களை காமெடி பீஸ்களாக மாணவர்கள் கிண்டலடிப்பது, ஆசிரியைகளிடம் மோகம் கொண்டு காதல் கடிதம் கொடுப்பது, சக மாணவிகளை டீஸ் செய்வது போன்ற காட்சிகள் அதிகம் இருந்தன; இன்றும் தொடர்கின்றன. இதன் வெளிப்பாடுதான், “ஆசிரிருக்குக் கொலை மிரட்டல் விடுத்த மாணவன்”, “ஆசிரியரை ஆபாசமாகப் பேசிய மாணவன்” என்றெல்லாம் வெளிவரும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.

சமீபத்தில், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்னும் ஆபத்தான நிலைதான். 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1,603 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 48 கொலைகளில் சிறுவர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கைதுசெய்யப்பட்டனர். 2020இல் 1,661 கொலைக் குற்றங்களில் 104இல், சிறுவர்கள் குற்றவாளிகள் எனக் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்” என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த நிலையில்தான், “இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறைக் காட்சி வரும்போது ‘இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் அட்டைக் காகிதங்களில் செய்யப்பட்டவை; சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல வெறும் வண்ணத்தூள்தான்’ போன்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும்” என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் இதை ஏற்கவில்லை.

மேலும் படிக்க: சாதாரண பெண்களைப் பிரதிபலிக்கும் திரை நட்சத்திரம் சாய் பல்லவி!

“சமீபத்தில்தான் சமூக வலைத்தளங்கள் பெருகின. ஆகவே இந்த விசயங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், சில மாணவர்களால் இந்தக் கொடுமைகளை ஏற்கெனவே அனுபவித்து வருகிறோம். அதுவும் மாணவர்கள் பள்ளியில் பணி புரியும் ஆசிரியைகளின் நிலை பரிதாபம். அங்க அவயங்கள் குறித்து மாணவர்கள் காதுபடப் பேசுவதும், கழிவறைச் சுவரில் ஆபாசமாகப் படம் வரைந்து ஆசிரியை பெயரை எழுதுவதும்… நிறையக் கொடுமைகளை அனுபவிக்கிறோம்” என்றார்கள் ஆசிரியப் பெருமக்கள். பெரியவர்கள்கூடத் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் நிஜத்திலும் நல்லவன் எனக் கொண்டாடும் சமுதாயம் இது. குழந்தைகள் – இளைஞர்கள் மனம் மாறுவது நடக்கத்தானே செய்யும்!

வன்முறை தொடர்பாகத் திரைத்துறையினரைக் கேட்டால், “சமுதாயத்தில் நடப்பதைத்தானே காட்சிப்படுத்துகிறோம்” என்கிறார்கள். “எங்கோ ஓரிடத்தில் விதிவிலக்காக நடக்கும் தவறான சம்பவங்களை, காட்சிப்படுத்தி அனைவருக்குமானதாகக் காண்பிக்க வேண்டுமா? நல்ல செயல்கள் நிறைய நடக்கின்றனவே” என்று கேட்டால் பதில் இருக்காது. இந்த நிலையில் திரைப்படத் தணிக்கை வாரியம் குறித்தும் பேச வேண்டி உள்ளது.

ரஜினி நடித்த கபாலி படத்தில் ரத்தம் தெறிக்கும் கொலைக்காட்சிகள் அதிகம். இதற்கு யு சான்றிதழ் – அதாவது, அனைவரும் பார்க்கலாம் – எனத் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்தது. வன்முறை அதிகம் என சிங்கப்பூர் மலேசியா மற்றும் சில அரபு நாடுகளில் கபாலி தடைசெய்யப்பட்டது. பிறகு வன்முறைக் காட்சிகள் நீக்கப்பட்டு வெளியானது. சமீபத்தில் கொடூரக் காட்சிகள் நிறைந்த விஜய் நடித்த பீஸ்ட், அஜித் நடித்த வலிமை ஆகியவற்றுக்கு யு/ ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதாவது பெரியவர்கள் துணையுடன் குழந்தைகள் – சிறுவர்கள் பார்க்கலாம்.

பெரியவர்கள்கூடத் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் நிஜத்திலும் நல்லவன் எனக் கொண்டாடும் சமுதாயம் இது. குழந்தைகள் – இளைஞர்கள் மனம் மாறுவது நடக்கத்தானே செய்யும்!

இந்த விசயத்தில் திரைப்படத் தணிக்கைத் துறை எத்தகைய கொள்கை வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. (இன்னொரு புறம், இதே தணிக்கை வாரியம் ஆபாசம் – வன்முறை இல்லாத அதே நேரம் அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் படங்களைத் தடை செய்வது, காட்சிகளை வெட்டுவது எனத் தீவிரமாக இருக்கிறது. அது குறித்துத் தனியாகப் பார்க்க வேண்டும்.)

சமுதாயத்தின் மீது – குறைந்தபட்சம், தங்கள் ரசிகக் குஞ்சுகளின் மீது – அக்கறையே இல்லாத நாயகர்கள் ஒருபுறம், இது போன்ற சுயநல நாயகர்களைக் கொண்டாடி நிஜத்திலேயே குற்றச் செயல்களில் ஈடுபடும் அப்பாவி இளைஞர்கள் மறுபுறம். இதைத் தடுக்க அரசு, நீதித்துறை, சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலம் இன்னும் பயங்கரமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Share the Article

Read in : English

Exit mobile version