Site icon இன்மதி

கோவை: அச்சான்குளத்தை மீட்டெடுப்போம்!

Read in : English

கோயம்புத்தூர் மாநகரத்தின் புறத்தே இருக்கும் அச்சான்குளம் நீர்நிலை, பல ஆண்டுகளாக வறட்சிக் காலத்திலும் கூட வறண்டு போனது கிடையாது. வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய துறைகளுக்கு ஆகப்பெரிய ஆதரவளிக்கும் இந்த ஆதிமூல நீர்வளத்தைச் சுத்தமாகவும் வறண்டு விடாமலும் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய மாநகரமாக விளங்கும் கோயம்புத்தூர் துரிதகதியில் நகர்ப்புறமயமாகிக் கொண்டிருப்பதால், அதனைச் சுற்றி அமைந்துள்ள அச்சான்குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகள் மாசுபட்டுக் கொண்டிருக்கின்றன. நகராட்சித் திடக்கழிவும், வீடுகளிலிருந்து வடியும் கழிவுநீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளும் அந்த நீர்நிலைகளுக்கு ஆகப்பெரும் அச்சுறுத்தலாகி விட்டன.

சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய மாநகரமாக விளங்கும் கோயம்புத்தூர் துரிதகதியில் நகர்ப்புறமயமாகிக் கொண்டிருப்பதால், அச்சான்குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகள் மாசுபட்டுக் கொண்டிருக்கின்றன

கோயம்புத்தூர் மாநகரத்திலுள்ள சில நீர்நிலைகள் ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ் சமீபத்தில் மீட்டெடுக்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அதுபோலச் செய்ய வேண்டியது இன்னும் ஏராளமாக இருக்கிறது.

நொய்யல் நதிக்கரையில் அமைந்திருக்கும் கோயம்புத்தூர் மாநகரத்தில் குடிநீர் தேவைகளையும் இதர பல தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக ஒருகாலத்தில் 34 ஓடைகள் இருந்தன. ஆனால் இப்போது இருப்பது நான்கு மட்டுமே. 28 ஏரிகளைக் கொண்ட கோயம்புத்தூரை ஏரி மாநகரம் என்றும் அழைக்கலாம். அந்த ஏரிகள் தங்கள் கடந்தகாலப் பெருமையை இழந்து களையிழந்து காணப்படுகின்றன. கழிவுநீர், திடக்கழிவு, ஆக்கிரமிப்புகள், வாரப்படாமல் மண்டிக் கிடக்கும் தூர் ஆகியவை ஏரிகளைக் கோரமாக்கி விட்டன.

அவ்வாறு நொய்யல் நதி வடிகால் பகுதியில் ஓடும் முக்கிய நீர்நிலைகளில் அச்சான்குளமும் ஒன்று.

கோயம்புத்தூர் மாநகரத்திற்கு வெளியே சூலூர் தாலுகாவில் நீலாம்பூர் கிராமத்தருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் தள்ளி அச்சான்குளம் நீர்நிலை அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க: வனத்துறை: பள்ளிக்கரணையில் ஆண்டுக்கு ரூ.217 கோடி வருமான இழப்பு

சூலூர் அச்சான்குளம் அருகே இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகப்படியான சுரண்டலால் மிகவும் தாழ்ந்துவிட்டது. ஒருவேளை அருகே அமைந்துள்ள விமான நிலையமும், இனி வரவிருக்கும் தேசிய பாதுகாப்புத் தாழ்வாரத் திட்டமும் அதற்கான காரணங்களாக இருக்கலாம். இப்போது அந்த நிலத்தடி நீர்மட்டம் 108 சதவீத அளவில் இருக்கிறது என்று கோயம்புத்தூரைப் பற்றி தேசிய நீர்த் திட்ட அறிக்கை சொல்கிறது. ஆதலால் அச்சான்குளம் போன்ற ஆகப்பெரிய நீர்நிலையைச் சுத்திகரித்து மறுவாழ்வு கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வளம் பெருகும்.

ஒருகாலத்தில் 395 ஏக்கர் பரப்பளவு கொண்ட அச்சான்குளம் தற்போது 265.11 ஏக்கர் அளவில் கிடக்கிறது. மூன்று உள்வாய்க்கால்கள் மூலம் பலவிடங்களிலிருந்தும் வருகின்ற நீரை அந்தக் குளம் உள்வாங்கிக் கொள்கிறது. வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கும் இன்னும் பல தேவைகளுக்கும் மூன்று வெளிக் கால்வாய்கள் மூலம் நீர் வெளியே செல்கிறது.

ஒரு கி.மீ. துரம் ஓடும் இருகூர் கால்வாய் இருகூர் குளத்திலிருந்து மிகைநீரைக் கொண்டுவந்து அச்சான்குளத்தில் சேர்க்கிறது. விமானநிலையப் பகுதியிலிருந்தும், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனைப் பகுதியிலிருந்தும் வழிந்தோடும் நீரை ஆனைவாரிப் பள்ளம் கால்வாய் கொண்டு வருகிறது. கேஎம்ஜி பள்ளம் என்று உள்ளூர்வாசிகள் சொல்லும் கால்வாயும் அச்சான்குளத்தோடு இணைந்திருக்கிறது.

ஒருகாலத்தில் 395 ஏக்கர் பரப்பளவு கொண்ட அச்சான்குளம் தற்போது 265.11 ஏக்கர் அளவில் கிடக்கிறது

மாவட்டத்திலே ஆகப்பெரும் நீர்நிலையாக இருக்கும் அச்சான்குளம், அதனைச் சுற்றி 20 கி.மீ. தூரம் வரையிலான பகுதிகளில் வாழும் விவசாயிகளுக்கும் குடிமக்களுக்கும் நீர் வழங்குகிறது. அச்சான்குளத்திலிருந்து நீர்ப்பாசனம் பெறும் வேளாண்மை நிலங்கள் 334 ஏக்கர் இருக்கும். முத்துக்கவுண்டன் புதூர், ராசிப்பாளையம், கரவாளி மதப்பூர், கனியூர், செம்மண்டம்பாளையம், தெக்கலூர், மங்களம் மற்றும் அவிநாசி தாலுகாவின் சில பகுதிகள் அச்சான்குளம் நீரைப் பெற்று பலனடைந்து கொண்டிருக்கின்றன.

வளர்ச்சிப் பணிகளால் பெரும்பாலான கரைப்பகுதிகளை இழந்துவிட்டாலும் அச்சான்குளம் நீர்நிலை இன்னும் வலசைப் பறவைகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட அச்சான்குளத்திற்கு லெஸர் கிரஸ்டட் டெர்ன் மற்றும் சாண்டர்லிங் என்ற இரண்டு தொலைதூர கடலோரத்து வலசைப் பறவைகள் வந்து சேர்ந்ததாக பறவைகள் ஆர்வலர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சூலூர் அருகே அச்சான்குளம் சதுப்புநிலத்திலும், முத்துக்கவுண்டன் புதூர் குளத்திலும் பறவைகள் வந்து சேர்ந்திருக்கின்றன. தற்போதைய குளிர்காலத்திலும், வலசைப் பறவைகளின் பருவத்திலும் அச்சான்குளம் ஏரி நிறைய பறவைகளை ஈர்த்ததாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

மேலும் படிக்க: புவியியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் சென்னையில் என்ன திட்டமிடல் தேவை?

அச்சான்குளத்தை ஒரு பல்லுயிரி ஸ்தலமாகக் கருதலாம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மே காலகட்டத்தில் சுமார் 200 பறவைகள் இங்கே விஜயம் செய்கின்றன.

இந்த நீர்நிலையில் 14 அடிவரை நீர் நிரப்பலாம்; குறைந்தபட்சம் 4.707 டிஎம்சி அடி நீரைத் தேக்கி வைக்கலாம்.

அரசும் மக்களும் ஒத்துழைத்தால், அச்சான்குளத்தை ஒட்டிய அடர்த்தியான காடு சூழ்ந்த தூய்மையான பகுதியில் நடைபாதைகள், சைக்கிள் தடங்கள், படகு ஓட்டுதல், மீன் பிடித்தல், பறவைக் கண்காணிப்பு மற்றும் பிற செயற்பாடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி அதனைச் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட முடியும். இதற்கு முன்பு உள்ளூர் மக்களிடமும் மாணவர்களிடமும் விவசாயிகளிடமும் சுயஉதவிக் குழுக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்பின்பு, அவர்கள் கழிவு மாசுகளிலிருந்து அச்சான்குளத்தைப் பாதுகாக்கப் பிரயத்தனம் செய்வார்கள்.

ஏரியைச் சுற்றி வளரும் ரியல் எஸ்டேட் துறையின் தரமும், குடியிருப்புவாசிகளின் தரமும் இந்த நீர்நிலையின் இயற்கை அழகையும் நன்னிலையையும் சார்ந்திருக்கின்றன. நன்றாகப் பேணிக் காக்கப்படும் நீர்நிலையின் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த, சமூகம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த நற்பலன்கள் பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும்.

அச்சான்குளம் பகுதியில் நடைபாதைகள், சைக்கிள் தடங்கள், படகு ஓட்டுதல், மீன் பிடித்தல், பறவைக் கண்காணிப்பு மற்றும் பிற செயற்பாடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி அதனைச் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட முடியும்

அச்சான்குளம் நீர்நிலையில் சுத்திகரிக்கப்படாத ஆலைக்கழிவுகள் கொட்டப்படுவதை மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நீர்நிலையை மாசுபடுத்துவதில் பெரும்பங்கு வகிப்பவை ஐஓசிஎல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் கோவை மருத்துவ நிலையம், ராயல்கேர் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளும் குறு, சிறு, நடுத்தர தொழில்களும் தான்..

ஒரு பல்முனை அணுகுமுறையின் மூலம் அச்சான்குளம் நீர்நிலையை மீட்டெடுத்து மீளுருவாக்கம் செய்ய வேண்டும். அப்போது உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளும் கிடைக்கும்.

நீண்டகாலம் தாக்குப் பிடிக்கக்கூடிய, அதிதிறன் கொண்ட நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த தீர்வுகளை உள்ளாட்சி அமைப்புகள் கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உயிரிக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளைப் பரவலாக அமைக்கலாம். அந்த ஆலைகளுக்குச் செலவும் அதிகமில்லை; பராமரிப்புச் செலவுகளும் இல்லை. அவை நீண்டநாள் தாக்குப் பிடிக்கக் கூடியவை. ஆதலால் உள்ளாட்சி அமைப்புகள் கள நிலவரத்தைப் புரிந்துகொண்டு இது சம்பந்தமான சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்)

Share the Article

Read in : English

Exit mobile version