Read in : English
சென்னையிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனத்துறைப் பகுதியான பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு ராம்சர் சாசனத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ராம்சர் சாசனம் என்பது 1971இல் ஈரான் நாட்டில் ராம்சர் என்னுமிடத்தில் கையெழுத்தான, உலகம் முழுவதிலுமுள்ள ஈரநிலங்களுக்கான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம். இந்த அங்கீகாரத்தின் விளைவாகத் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கும் 42,978 ஈரநிலங்களின் பொருளாதார மதிப்பு கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மேலும், ஆண்டிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுற்றுச்சூழல் மதிப்புள்ளவை என்று மதிப்பிடப்பட்டிருக்கும் நீர்நிலைகளின் தற்காலத்து வீழ்ச்சியும், சதுப்புநில ஆக்ரமிப்புகளும் கவனத்திற்கு வந்துள்ளன.
ஒருகாலத்தில் பள்ளிக்கரணைச் சதுப்புநிலம் 54 சதுரகி.மீ. பரப்பளவு கொண்டு பரந்து விரிந்து காட்சியளித்தது. இப்போது அது 5.4 ச.கிலோமீட்டராகக் குறுகி, அசல் வடிவத்தின் எச்சமாகக் கிடக்கிறது. அதன் வடிவமே சீர்குலைந்திருக்கிறது. சதுப்புநில ஆக்ரமிப்புகளை, அதில் கொட்டப்படும் குப்பையை, சீர்படுத்தும் நோக்கமற்ற அரசியல் நிர்வாகத்தாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சதுப்பு நிலக் கால்வாய்களைத் தொடர்ந்து ஆக்ரமித்தால் பல ஏரிகளிலிருந்து சதுப்புநிலத்திற்கு வரும் நீர் வருவதற்கான பாதை அடைபட்டு நீர்வரத்து தடைப்பட்டுவிட்டது.
மிச்சமிருக்கும் பள்ளிக்கரணை ஈரநிலத்தைப் பேணிக்காக்கும் பொறுப்பு தமிழ்நாடு வனத்துறைக்கு உள்ளது. இப்போது புதிதாய்க் கிடைத்திருக்கும் ராம்சர் அங்கீகாரத்தால், ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் ஒன்றுபட்ட மேலாண்மைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக அரசு. இந்தச் சதுப்புநிலப் பேணல் திட்டத்திற்கு பசுமை வானிலை நிதியும், தேசிய அனுசரணை நிதியும் மற்றும் நிறுவனச் சமூகப் பொறுப்பு நிதிகளும் உதவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சுற்றிலும் கட்டப்பட்ட மேம்பாலங்கள் உட்படப் பல்வேறு கட்டுமானங்களால் புல்படர்ந்த சுற்றுப்புறச் சூழலமைப்பிற்குள் வருகின்ற நீர்வரத்துத் தடுக்கப்படுகிறது. இது பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு மரண அடியைத் தந்துள்ளது. மக்கள் தீவுகளை உருவாக்கிவிட்டார்கள்
தவறிப்போகும் அபாயம்
“ராம்சர் சாசன அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பாதி வேலை முடிந்தது மாதிரியான விசயம்தான். பள்ளிக்கரணைப் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை ராம்சர் செயலகம் தொடர்ந்து உற்றுநோக்கும். சதுப்புநிலம் சார்ந்த செயற்பாடுகளில் சரியான முன்னேற்றம் இல்லையென்றால், ராம்சர் தந்த புதிய அங்கீகாரம் பறிபோய்விடும். பள்ளிக்கரணை ஈரநிலம் எதிர்மறைப் பட்டியலில் வைக்கப்படும்” என்கிறார் ஜெய்ஸ்ரீ வெங்கடேசன். பள்ளிக்கரணை ஈரநிலத்தை மீட்டெடுத்துப் பாதுகாக்கத் தேவையான விஞ்ஞானத் தரவுகளைத் தந்து பரப்புரை செய்கின்ற ‘கேர் எர்த் டிரஸ்டின்’ நிர்வாக அறங்காவலர் அவர்.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் போனது, பள்ளிக்கரணைச் சதுப்புநிலம் சீரழிந்துபோனதற்கான முக்கியமான காரணம். தமிழக அரசிற்கும், சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையத்திற்கும் (சிஎம்டிஏ) நன்றாகத் தெரியும்படியாகவே அநேக ஆக்ரமிப்புகள் அரங்கேறின. பெருநகரச் சென்னை மாநகராட்சி வேறு பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்தை மாநகரம் குவிக்கும் குப்பையைக் கொட்டும் இடமாக்கிவிட்டது. காலப்போக்கில் இந்தக் குப்பைப் பாரம் பெருங்குடிக்குக் கொஞ்சம் மாற்றப்பட்டது.
ஏன் இப்படி நிகழ்கிறது? பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்தின் கீழைப் பகுதிகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. பாதுகாக்கப்பட்ட இந்த ஈரநிலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதில் வனத்துறைக்கு இருக்கும் சிஎம்டிஏ-விற்கு இருக்கிறதா? அடுக்கடுக்காக உருவாகும் ஆக்ரமிப்புக் கட்டிடங்களை சிஎம்டிஏ இடித்துத் தள்ளவில்லையே; ஏன்?
பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்தை மீட்டெடுக்கவும், மீளுருவாக்கம் செய்யவும், பாதுகாக்கவும் பொறுப்புள்ள அரசு முகமைகளுக்கு, வனத்துறை காட்டும் ஈடுபாடு கூட இல்லை என்று சொல்கிறார் டாக்டர். வெங்கடேசன்.
வறட்சியை நோக்கி நகரும் ஈரநிலம்
பள்ளிக்கரணைச் சதுப்புநிலம் பொதுவாக ஈரநிலம் என்று கொண்டாடப்பட்டாலும், வருடத்தின் பெரும்பாலான நாள்களில் இது வறண்டு கொண்டே இருக்கிறது. “இதை இன்னும் ஈரநிலம் என்றழைக்க முடியுமா?” என்று கேட்கிறார் டாக்டர். எஸ். ஜனகராஜன். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்ஐடிஎஸ்) பணிஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் அவர். ஒருகாலத்தில் 135 ஏரிகளிலிருந்தும், நீர்த்தேக்கங்களிலிருந்தும் நீரைப் பெற்ற ஆகச்சிறப்பான சதுப்புநிலம் இந்தப் பள்ளிக்கரணை என்று நினைவுகூர்கிறார் அவர்.
சுற்றிலும் கட்டப்பட்ட மேம்பாலங்கள் உட்படப் பல்வேறு கட்டுமானங்களால் புல்படர்ந்த சுற்றுப்புறச் சூழலமைப்பிற்குள் வருகின்ற நீர்வரத்துத் தடுக்கப்படுகிறது. இது பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு மரண அடியைத் தந்துள்ளது. “மக்கள் தீவுகளை உருவாக்கிவிட்டார்கள்” என்கிறார் ஜனகராஜன். கடந்த காலத்தில் கடல்மட்டத்திலிருந்து அரை மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை தாழ்வாய்க் கிடந்த பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்தால் மேலான நீரோடைகளின் நீரை உறிஞ்ச முடிந்தது. மேலும், நகராட்சிகளின் குப்பையை இங்குக் கொட்டுவதற்கு முன்பு அந்தக் குப்பையில் விஷத்தன்மையும் மைக்ரோ பிளாஸ்டிக்குகளும் இருக்கின்றனவா என்று ஆராய வேண்டும் என்கிறார் ஜனகராஜன்.
ஒன்றிய அரசிடமிருந்தும், மாநில அரசிடமிருந்தும் சரியான தகவலில்லாத ஒரு கட்டமைப்புதான் ஈரநிலங்களையும், சதுப்புநிலங்களையும் பாழ்நிலமாக்கி விட்டது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். எனினும், நிஜமான பொருளாதாரத்தில் அவற்றிற்குப் பெரும்பங்கு உண்டு.
மேலும் படிக்க:
சர்வதேச அந்தஸ்து பெறும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்
பயோமைனிங்க் திட்டத்தால் குப்பை ஒழியுமா?
ஆகப்பெரும் பொருளாதார மதிப்பு
மக்களுக்குச் செய்யக்கூடிய சுற்றுப்புறச்சூழல் சேவையின் மூலம் பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஆண்டிற்கு ரூ. 217 கோடி வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வாய்ப்பை இழந்திருக்கிறது என்கிறார் எம்ஐடிஎஸ் பேராசிரியர் எல். வெங்கடாசலம். தமிழகத்தில் இருக்கும் 80 ஈரநிலங்களை முற்றிலும் மீட்டெடுத்தால் ஆண்டிற்கு ரூ. 17,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று இந்த ஆராய்ச்சியாளரின் வெளியீடுகள் மதிப்பிட்டிருக்கின்றன. இப்போது கூட, தரம் குறைந்த, எண்ணிக்கை குறைந்த சுற்றுப்புறச் சூழல் சேவைகளின் மூலம் இந்த ஈரநிலங்கள் ஆண்டிற்கு ரூ.4,300 கோடி வருவாய் ஈட்டித் தருகின்றன.
கடந்த காலத்தில் சில திட்டங்கள் பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு அச்சுறுத்தல்களாக இருந்திருக்கின்றன. கோல்ஃப் மைதானத் திட்டம் (ஜெயலலிதா ஆட்சியின் போது உருவாக்கப்பட்டுப் பின்பு கைவிடப்பட்டது), கழிவிலிருந்து தயாரிக்கும் மின்னாலைத் திட்டம் ஆகியவை அவற்றில் சில. நல்ல வேளையாக நீதிமன்றம் மின்னாலைத் திட்டத்தைத் தடுத்துவிட்டது.
டில்லி மற்றும் புனேவில் நிகழ்ந்தது போல, கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் இந்தியாவில் தோற்றுவிட்டன. இந்த ஆலைகளிலிருந்து வெளிவரும் புகையைக் கட்டுப்படுத்த சரியான கட்டமைப்புகள் இல்லாமல், கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் சரியான தீர்வன்று என்கிறார் டாக்டர் இந்துமதி எம். நம்பி. இவர் ஐஐடி-மெட்ராஸ் சுற்றுப்புறச்சூழல் பொறியியல் குழுவைச் சார்ந்தவர். பள்ளிக்கரணையில் கழிவுகொட்ட சரியான இடம் இல்லாததால் கழிவுப் பொருள்கள் சுற்றுப்புறச்சூழலுக்குள் கொட்டப்படுகின்றன. ஐரோப்பாவில் நிகழ்வது போல, மாசுக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு சரியாக உருவாக்கப்பட்டால், கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத் திட்டம் பயனுள்ள யோசனையாக இருக்கும் என்று டாக்டர் இந்துமதி சொல்கிறார்.
பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்தின் பயணம் மிக நீளமான ஒன்று. 1970-களில் உயர்ந்த சதுப்புநிலப் புல்வெளிகளோடு மிக விரிவானவோர் ஈரநிலமாக அது இருந்தது. பின்பு பொதுமக்கள் போராடும் அளவுக்கு, கட்டிட ஆக்ரமிப்புகளும், கொட்டிய குப்பையும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை நாசமாக்கின. இப்போது பாதுகாக்க வேண்டிய தேவையை ராம்சர் அங்கீகாரம் உணர்த்தியிருக்கும் நிலைமைக்கு பள்ளிக்கரணைச் சதுப்புநிலம் வந்திருக்கிறது என்கிறார் வீ. ஸ்ரீனிவாசன். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பாதுகாப்பு அமைப்பின்கீழ் போராடும் ஒரு குடிமை உரிமைப் போராளி அவர்.
சுற்றுப்புறச்சூழலுடன் முற்றிலும் இணைந்து செயல்படும் 80 ஈரநிலங்களால் வருடத்திற்கு ரூ.17,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்றால், தமிழகத்தில் கணக்கிடப் பட்டிருக்கும் 9 இலட்சம் ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் 42,000-க்கும் மேலான நீர்நிலைகளிலிருந்து எவ்வளவு வருவாய் கிடைக்கும்?
ராம்சர் அங்கீகாரம் கிடைத்த பின்னணியில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் எதிர்காலம் பற்றிய இணையவழி விவாதம் ஒன்றை ‘சிட்டிஷன் மேட்டர்ஸ்’ என்னும் அமைப்பு நடத்தியது. அதில் கலந்துகொண்ட குழுவில் டாக்டர் வெங்கடேசன், பேரா. ஜனகராஜன், டாக்டர் நம்பி, மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றனர்.
பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் சக்தி
கடல்மட்ட உயர்வு, வெப்பத் தீவு விளைவுகள், நகர்ப்புற வெள்ளம், வறட்சி, சுற்றுப்புறச்சூழல் இழப்பு ஆகியவை பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளாகும். இந்தப் பின்னணியில் பள்ளிக்கரணைச் சதுப்புநிலத்திற்கு முக்கியமானதொரு பணி இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை மீட்டெடுத்தால் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை மட்டுப்படுத்த முடியும். புகைப்படப் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குநருமான ஷாஜூ ஜான் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் எதிர்காலம் பற்றி ‘ஐ ஆன் தி மார்ஷ்’ என்ற பெயரில் ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் (யூடியூப்பில் ட்ரையிலரைக் காணலாம்).
சுற்றுப்புறச்சூழலுடன் முற்றிலும் இணைந்து செயல்படும் 80 ஈரநிலங்களால் வருடத்திற்கு ரூ.17,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்றால், தமிழகத்தில் கணக்கிடப்பட்டிருக்கும் ஒன்பது இலட்சம் ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் 42,000-க்கும் மேலான நீர்நிலைகளிலிருந்து எவ்வளவு வருவாய் கிடைக்கும்? சிரமமே இல்லாத ஒரு கணக்குதான். ஆனால், ஈர நிலங்களைச் சும்மா தூர்வாருவதை விட, ஆக்ரமிப்புகளை நீக்கி, இயற்கையான சுற்றுப்புறச்சூழல் குணாம்சங்களுடன் ஈரநிலங்களை மீட்டெடுத்து மீளுருவாக்கம் செய்வதே உசிதம். அதற்குத் தீர்க்கமான, சிறப்பான சிந்தனையை வைத்திருக்கிறதா தமிழக அரசு?
Read in : English